சங்கரன் கோவில் சிவகாசிநாடார் மெஸ்



சாதாரண மெஸ்தான். ஆனால், அசாதாரணமான வரலாற்றை தன்னகத்தே கொண்டது. அதனால்தான் ‘சிவகாசி நாடார் மெஸ்’ தமிழக  உணவகங்களில் தனித்துவமாக இன்றும் ஜொலிக்கிறது.உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கும் சரித்திரம்தான். சங்கரன்கோவில் கடை  வீதியில் இருந்த உணவகம் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மட்டும் வெளியே அமர வைத்து உணவு  பரிமாறினார்கள். தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை, கோயிலில் அனுமதி மறுப்பு... என தீண்டாமை 1940களில் தலைவிரித்து  ஆடியது.

இதைக் கண்டு வெகுண்டு எழுந்தார் முத்தையா நாடார். ஆங்கிலேயர் காலத்தில் அரசு அதிகாரியாக இருந்த அவர், தம் மக்கள் அமர்ந்து  சாப்பிடுவதற்காக சங்கரன்கோவில் கடை வீதியில் ‘சிவகாசி நாடார் மெஸ்’ என்ற பெயரில் ஓர் உணவகத்தைத் தொடங்கினார். கொந்தளித்துப் போன ஆதிக்க சாதியினர் இந்த மெஸ்ஸுக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார்கள்.  அத்தனை அடக்கு முறைகளையும் மீறி கடந்த 85 வருடங்களாக இயங்கி வருகிறது ‘சிவகாசி நாடார் மெஸ்’.

சமூக மாற்றத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட மெஸ்தான். அதற்காக ஏனோதானோ என்று உணவை சமைத்துப் பரிமாறுவதில்லை. ருசியும்  ஆரோக்கியமான செய்முறையும் இவர்களது அடையாளம். அதனால்தான் ஆட்டுக்கறி பிரியாணிக்கும், கறிக்குழம்புக்கும் இந்த மெஸ்  புகழ்பெற்று விளங்குகிறது. மூன்றாவது தலைமுறையாக அண்ணன், தம்பி மேற்பார்வையில் கோலோச்சுகிறது. ‘‘1946ல எங்க தாத்தா  முத்தையா நாடார் இந்த மெஸ்ஸை ஆரம்பிச்சாரு. மெயின் ரோடுலதான் மெஸ் இருந்தது. சில காரணங்களால இடம் மாற  வேண்டியிருந்தது. அப்ப இடம் தர யாரும் முன்வரலை. அதுக்காக பின்வாங்கவும் அவர் தயாரா இல்ல. ஒரு கட்டத்துல நாங்க  தங்கியிருந்த வீட்டையே மெஸ்ஸா மாத்திட்டார்!

தாத்தாவுக்குப் பிறகு அப்பா வேல்ராஜ் அதே சுவை, பக்குவத்தோட மெஸ்ஸை நடத்தினார். இப்ப அவங்க வழிகாட்டுதலோடு நாங்க  பொறுப்பேத்திருக்கோம்.எங்க மெஸ்ஸோட ருசி மாறாம சுவையா இருக்கக் காரணம் எங்க பாட்டி தங்க துரைச்சி அம்மாள். அசைவத்துக்கு  தேவையான மசாலா ஃபார்முலாவை அவங்கதான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப வரை அந்த ஃபார்முலாவைத்தான்  கடைப்பிடிக்கறோம். இப்பவும் அம்மிலயும் உரல்லயும்தான் இடிக்கறோம். விறகடுப்புலதான் சமைக்கறோம்...’’ என்கிறார் மூன்றாம்  தலைமுறையில் மூத்தவரான தங்கரத்தினம்.  மெஸ்ஸின் சுவரில் கவியரசு கண்ணதாசன் சாப்பிடும் படத்தை பெரிதாக மாட்டி  வைத்திருக்கிறார்கள். சங்கரன் கோவிலுக்கு  நாடகம் போட வரும்போதெல்லாம் கண்ணதாசன் இங்குதான் சாப்பிடுவாராம். இங்கு  சமைக்கப்படும் வெள்ளாட்டுக் கறி பிரியாணிக்கு அவர் ரசிகராம். போலவே கடைசியாக தவறாமல் இங்கு வைக்கப்படும் ரசத்தை  சாப்பாட்டில் ஊற்றி சப்புக்கொட்டி சாப்பிடு வாராம். அந்தளவுக்கு இந்த மெஸ்ஸின் ரசப் பிரியர் அவர். விளைவு, இந்த ரசத்தை பாடு  பொருளாக வைத்து கவிதை ஒன்றையே இயற்றிவிட்டார்!

சமைப்பது, சப்ளை செய்வது என அனைத்து வேலைகளையும் குடும்ப உறுப்பினர்களே மேற்கொள்கிறார்கள். வெளி ஆட்களை வேலைக்கு  வைத்துக் கொள்வதில்லை. மதிய உணவு மட்டும்தான். தினமும் காலை 11.30க்கு தொடங்கி மாலை 4.30 வரை மெஸ் இயங்குகிறது. ‘‘முதல் தரமான பொருட்களைச் சேர்த்தாலே தனி ருசி கிடைச்சுடும். வெள்ளாட்டு இறைச்சிக்கு மருத்துவ குணம் உண்டு. கறியும் பஞ்சு  மாதிரி இருக்கும். வீட்டுல சமைக்கிற மாதிரியே அக்கறையோடுதான் சமைக்கிறோம்...’’ என்கிறார் இளையவரான ராஜேஷ். உணவை  குழைய வேக வைக்கிறார்கள். எனவே இறைச்சியைப் போட்டுப் பிசையும்போது கறி வாசம் முழுமையாக சம்பா அரிசியில் கலக்கிறது.  பொதுவாக பிரியாணியில் பெயருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கறித்துண்டுகள் இருக்கும். ஆனால், இங்கு ஒரு கிண்ணம்  சோற்றுக்கு சமமாக ஒரு கிண்ணம் கறித்துண்டுகளைத் தருகிறார்கள்! ஒரு பிரியாணியின் விலை ரூ.120தான்.

பிரியாணி தவிர கறிக்குழம்புடன் சாப்பாடு, மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி வறுவல், மீன் வறுவல், ஈரல் பிரட்டல்... என வீடு கட்டி  அடிக்கிறார்கள்! இத்துடன் இவர்களது ஸ்பெஷலான கரண்டி ஆம்லெட், நெய் சுக்கா எல்லாவற்றையும் சுத்தமான எண்ணெய்யில்தான்  பொரித்து எடுக்கிறார்கள். வேறெங்கும் கிடைக்காத கரண்டி ஆம்லெட், இந்த மெஸ்ஸின் தனித்த அடையாளம். நீளமான குழிக்கரண்டியை  விறகடுப்பில் வைத்து கடலை எண்ணெய்யில் சின்ன வெங்காயத்தை தனியாக வதக்கி சில நிமிடங்கள் கழித்து கலக்கிய முட்டையை  ஊற்றி பாயும் தீயில் அப்படியே அடுப்பில் வைக்கிறார்கள்.

கரண்டியைக் கடந்து முட்டையிலும் தீ பற்றுகிறது. சில நொடிகளில் பிரட்டிப் போட்டு உப்பிய வடிவத்தில் ஆவி பறக்க இலையில்  வைக்கின்றனர். அதே போல நெய் சேர்த்து ஆட்டுக்கறியில் செய்யப்படும் நெய் சுக்காவும் தனி ரகம். சாப்பாடு வாங்குபவர்களுக்கு  இறுதியில் தேன் கலந்த தயிரைத் தருகிறார்கள்! ‘‘உணவகங்களின் பெயருடன் சாதிப் பெயரைச் சேர்க்கக் கூடாதுனு தமிழக அரசு சட்டம்  இயற்றினப்ப கூட இந்த மெஸ் பெயரை நாங்க மாத்தலை. அந்த வழக்கு இப்பவும் நிலுவைல இருக்கு. தீண்டாமைக் கொடுமை  தலைவிரிச்சு ஆடினப்ப இந்த மெஸ்ஸை தாத்தா தொடங்கினார். இது வெறும் மெஸ் மட்டு மல்ல... சரித்திரம். தாத்தா நினைச்சிருந்தா  அப்பவே பெயரை மாத்தியிருக்கலாம். ஆனா, அவர் செய்யலை. ஏன்னா, யார் வேணும்னாலும் மெஸ் ஆரம்பிக்கலாம். ஆனா, நாடார்  மெஸ்ஸை தாத்தாவால மட்டும்தான் ஆரம்பிக்க முடிஞ்சுது. இந்தப் பெயர்தான் எங்க சொத்து!’’ உணர்ச்சியுடன் சொல்கிறார் தங்கரத்தினம்.                      


- திலீபன் புகழ்
படங்கள் : ரவிச்சந்திரன்

ஆட்டுக்கறி பிரியாணி

வெள்ளாட்டுக்கறி - அரைக்கிலோ.
சீரக சம்பா அரிசி - அரைக்கிலோ.
தேங்காய் - 1.
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்.
நறுக்கிய தக்காளி - 100 கிராம்.
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி.
மிளகாய்த்தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்.
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்.
புதினா, கொத்தமல்லி - தலா கைப்பிடி.
நெய், கடலையெண்ணெய் - தலா 100 மில்லி.
உப்பு - தேவைக்கு.
வறுத்து பொடிக்க:
பட்டை - 1 சிறு துண்டு.
கிராம்பு - 3.
ஏலக்காய் - 2.
சோம்பு - 1 டீஸ்பூன்.
கசகசா - 1/2 டீஸ்பூன்.
தாளிக்க:
பிரிஞ்சி இலை - 2.
கிராம்பு - 2.
ஏலக்காய் - 1.
சோம்பு - 1/2 டீஸ்பூன்.
பட்டை - சிறு துண்டு.

பக்குவம்:

அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பொடிக்க கொடுத்துள்ளவைகளை அடி கனமான வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும். அடி அகலமான பாத்திரத்தில் எண்ணெய், நெய்யை அதிகமாக சேர்க்கவும். இந்த பிரியாணியின் சிறப்பே எண்ணெய் வாசம்தான். கூடவே  தாளிக்க கொடுத்துள்ளவைகளைச் சேர்த்து, குறைந்த அளவு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து  வதக்கவும்.பிறகு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி வெள்ளாட்டுக் கறியைச்சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பின் வறுத்து பொடித்த  பொடியைச் சேர்த்து நன்கு கிளறவும். தேங்காயுடன் 200 கிராம் நீர் சேர்த்து அரைக்கவும். அரைக்கும்போது சிறிது இஞ்சி, பூண்டு சேர்த்து  பால் எடுத்து அதனுடன் கலந்து கொதிக்க விடவும். நீர் கொதித்ததும் புதினா, கொத்தமல்லி, சீரகசம்பா அரிசியைச் சேர்க்கவும். இறுதியாக  எலுமிச்சை சாறு. தண்ணீர் சுண்டி வரும்போது தோசைக்கல்லை வைத்து அதன்மீது பாத்திரத்தை வைத்து மூடி 30 நிமிடங்கள் தம்மில்  போடவும். தம்மில் கிடைக்கும் அனலில்தான் பிரியாணி வேகவேண்டும்.