இவ்வளவு தாமதமாக அரசியலுக்கு வந்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்! சொல்கிறார் கமல்ஹாசன்



பரபரக்கிறது கமல் அலுவலகம். ‘விஸ்வரூபம் - 2’வின் சில முக்கிய இடங்களை, உருவாகிய விதத்தை, விரைந்து பறக்கும் டிரைலரை  காண்பிக்கிறார் கமல். இரண்டு முக்கிய வேடங்களில் அவர் எப்படியிருப்பார்? எக்கச்சக்க சஸ்பென்ஸில் காத்திருக்கிறது தமிழ் சினிமா.  மகா கலைஞன் கமலோ அனுபவமும் அபாரதிறமையும் கொண்டு உருவாக்கிய ‘விஸ்வரூபம் - 2’வோடு காத்திருக்கிறார். வெயில் பகல்...  குளிர் அறை... சூடான காபி கோப்பைகள்... நடந்தது சந்திப்பு. அப்புறமென்ன கமல் சாரல்தான்!

அத்தனை கண்களும் எதிர்பார்க்கின்றன... படம் எப்படி வந்திருக்கு?


உலக அமைதியை நான் சலனமற்ற குளமாகப் பார்க்கிறேன். அதில் ஒரு சின்ன கூழாங்கல் அடிச்சாலும் அலை அடுத்த பக்கம் வந்தே  தீரும். கொஞ்ச நேரம் கழிச்சு வருமா, அடுத்த செகண்டே வருமா தெரியாது. ஆனால், வரும். டிரம்ப்பின் முடிவு நம்மைப் பாதிக்கும். ஈரான்  எடுக்கிற முடிவு கச்சா எண்ணெய் விலையில் தெரியும். இங்கே மதங்களுக்காக நடக்கிற போரில் நியாயங்களை எதிர்பார்க்க முடியாது.  புத்தர் பேசியது ஞானம்; மதம் அல்ல. பிறகு புத்தரே மதமாகப் போறார்னு அவருக்கே தெரிஞ்சிருக்காது. ‘பட்டாம்பூச்சி’ வந்தபோது ‘அகில  இந்திய கமல்ஹாசன் ரசிகர் மன்றம்’னு ஒருத்தர் பேர் வச்சாரு. அப்போ தமிழ்நாட்டிலே என்னைத் தெரியப்படுத்துறதே பெரிய வேலை.  பிளாட்பாரத்தில ஏழை தன் குழந்தையை ‘ராசா’ன்னு கொஞ்சின மாதிரிதான் இது.

‘சகலகலா வல்லவன்’ வந்தபோது ‘அகில உலக கமல்ஹாசன் மன்றம்’னு சொன்னாங்க. உலகத்தில் என்னை யாருக்குத் தெரியும்?  அப்படித்தான் நான் வளர்ந்து தெரிந்து கொள்ளும்போது, அதை கதையாக, கலையாக வடித்து அதிலிருந்து வந்திருக்கிறேன். ‘விஸ்வரூபம் - 2’ அமைதியை வலியுறுத்துகிறது. ஒரு புன்னகை நிராகரிக்கப்பட்டால் போர் வெடிக்கும். அதைத்தான் முதல் பாகத்தில்  சொல்லியிருக்கேன். ‘விருமாண்டி’ மாதிரி நான் முரட்டு கமல்ஹாசன் கிடையாது. ‘நாயகனி’ல் வந்த மாதிரி முழு நேர கடத்தல்காரன்  கிடையாது. திரையில் மட்டும் அவ்விதம் வாழ்ந்து பார்த்திருக்கேன். இதில் முஸ்லீம்களுக்கு எதிரான எந்த அணுகலும் கிடையாது.  படத்தைப் பாருங்கள்... புரியும். என் மேலான எண்ணம் கண்ணிலும், கருத்திலும் படும். இந்தப் படத்தில் நிறைய நல்ல விஷயங்கள்  நடந்திருக்கு. ஒரு நல்ல படம் செய்த சந்தோஷம் எனக்கும் இருக்கு. மக்களுக்கும் இருக்குமேயாயின் இது ஒரு வெற்றிப் படம்.

நல்ல சினிமா, அருமையான இலக்கியம், தெளிவு எல்லாம் வைச்சுக்கிட்டு, சினிமாவை விட்டுட்டு அரசியலுக்கு ஏன் போறீங்கன்னு  எல்லாரும் கேட்கிறாங்க...

மத்தவங்களுக்கு தோன்றியிருக்கும். நானும் நினைச்சேன். இது யாத்திரைங்க. என் பயணத்தை பயமில்லாமல் சில பேர் கையைப் பிடிச்சு  கூட்டிட்டுப் போனாங்க. பல பேர் முதுகிலே சுமந்தாங்க. இதுல அக்கிரமம் என்னன்னா, நான் குருக்களை தேடிக்கூட போகலை. நான் நல்ல  ஏகலைவன் இல்லை. எனக்குக் கிடைச்ச எல்லாருமே விரல் கேட்காத வாத்தியார்கள். அத்தனை பேரும் எனக்கு காசையும் கொடுத்து  கலையையும் கத்துக் கொடுத்தாங்க. இவ்வளவு தாமதமாக அரசியலுக்கு வந்ததற்காக மன்னிப்பு கேட்கிற சூழ்நிலையில்தான் நான்  இருக்கேன். காந்தி பாரிஸ்டராகவும், ராஜாஜி நினைத்திருந்தால் TTK-யாகவும் மாறி பெருசா பணம் சம்பாதித்திருக்கலாம். அவங்க அதை  செய்யலை. கக்கன் நினைச்சிருந்தால் ஒரு பெரிய நிலச்சுவான்தாராக மாறியிருக்கலாம். அவரும் அதைச் செய்யலை.

அவங்களை ஏதோ ஒரு குரல் இடைவிடாமல் அழைச்சிருக்கு. அப்படி ஒரு குரல்தான் என்னையும் அழைச்சு ஆட்டியும் வைச்சு 25  வருடங்களுக்கு மேலே ஆச்சு. நீங்க சொன்னது மாதிரி இவ்வளவு படிச்சேன், எழுதினேன். நடனம் கத்துக்கிட்டேன். நல்ல வாத்தியார்கள்  கிடைச்சாங்க. சிவாஜி என்னைக் கூப்பிட்டு ‘நல்லா நடிக்கிறடா...’னு சொன்னாரு. இதையெல்லாம் விட்டுட்டு வரணுமான்னு நினைச்சேன். ‘அரசியலில் குதிக்க மாட்டேங்கிறீங்க...’னு கேட்டதற்கு, ‘இவ்வளவு உயரத்திலிருந்து குதிச்சால் கால் அடிபடும். நான் நல்ல உயரத்தில்  இருக்கேன்...’னு முன்னாடி சொன்னேன். அப்படிச் சொன்ன ஆளுதான் இப்ப இறங்கி வந்திருக்கேன். ‘தேவர் மகனி’ல் ‘வெளிநாட்டிற்குப்  போறேன். காட்டு மிராண்டிங்க. இவங்களோடு இருக்க முடியாது...’ எனச் சொன்ன டயலாக்கே பிறகு என் வாழ்க்கையில் நடந்தது. ‘இந்த  ஊர்ல இருக்க முடியாது போலிருக்கே...’னு அப்புறமா சொன்னேன்.
 
இப்ப இங்கே கால் பதிக்க வேண்டிய கட்டத்திற்குச் சூழல் என்னை ஆளாக்கிவிட்டது. சொத்தைக் காப்பாத்துவதற்காக இங்கே வரலை.  சினிமாவிற்காகவே சொத்தை எழுதி வைக்க ரெடியாகிட்டேன். ‘சினிமாவிற்காக இத்தனை பண்ற நீ, நாட்டிற்காக என்ன  பண்ணியிருக்கிறாய்...?’   என்ற கேள்வி எனக்கு வந்திருக்காதா! ஒரு படம் வெற்றிப்படமானால் மூன்று கோடிப் பேர் பார்ப்பாங்க. அதையும்  மூணு மணி நேரம் மட்டும் பார்க்கப்போறாங்க. என் பேரன் பேத்திகள் வாழ்கின்ற உலகத்தை சிறந்த உலகமாகப் பண்ணவேண்டிய  கடமையை விட்டுவிடுவோமா என்ற பதட்டத்தில்தான் வந்தேன். பொறுப்பு இன்னும் அதிகமாகும்போது சினிமாவை நிறுத்திக்குவேன்னு  நினைக்கிறேன்.

ஊழல் வேரூன்றின இடத்தில் உங்களால் அதை ஒழிக்க முடியுமா?

ஒரு கமலால் முடியும்னு நான் சொல்லவே இல்லையே. உங்களையும் சேர்த்துதானே அழைக்கிறேன். மாற்றம் என்பது கமல்ஹாசனால்  முடியும் என நினைத்தால் நீங்கள் என்னை கடவுளாக்கப் பார்க்கறீங்க. ஆதிமூலமே என கத்தினால், முதலையின் கழுத்தை சக்கரத்தை  விட்டு அறுக்கிற கடவுள் இல்லை நான். பத்துப்பேரோட சேர்ந்து, அடித்துத்தான் யானையைக் காப்பாத்த முடியும். தனி ஆளாகச் செய்ய  நான் மந்திரவாதி கிடையாது. தலைமையிலிருந்தும், கீழ்மட்டத்திலிருந்தும் ஒரே சமயத்தில் ஆரம்பிக்கணும். அப்போதுதான் ஊழலை  குறைக்க முடியும்.

கொஞ்சம் லேட்டாகி படம் வருதேன்னு கவலை உண்டா?

என் வாழ்க்கையே அதுதானே! சிலதை சொல்லக்கூடாது. ஒரு படத்தை நான் எடுக்காமல் நிறுத்திட்டுப் போனா, அது மாதிரி ஆறு படம்  வந்திடும். வேலை செய்த டெக்னீஷியன்கள் எனக்கிருந்த ஆர்வம் மாதிரி ‘நல்ல ஐடியா, இவரும் எடுக்க மாட்டேங்கிறாரு...’னு வேற பக்கம்  கொடுத்திடுவாங்க. ஏன்னு அதட்ட முடியாது. அது ஒரு எண்ண ஓட்டம். ஒரு கவிதையில் ஒரு வரியை கண்ணதாசன் எழுதலைன்னா நான்  எழுதிடுவேன். படிச்சும் காட்டிட்டாருன்னா, இது எப்ப பாட்டா வரும்னு நினைச்சபோது, அவர் அதை கசக்கிப் போட்டுட்டா எடுத்திட்டு வந்து  அதை என்னுதுன்னு எழுதிடுவேன் நான். அதில் ரெண்டு மூணு மாற்றங்கள் செய்தால் என்னுடையது என சுலபமாகச் சொல்லிவிடலாம்.  கொஞ்சம் எச்சில் சாப்பாடுதான். பரவாயில்லைன்னு சாப்பிடுறாங்க.

‘ஹேராம்’, ‘விருமாண்டி’, ‘விஸ்வரூபம்’ வந்தபோது பிரச்னை இருந்தது. இப்ப அமைதியான சூழல். அரசியலுக்கு வந்ததாலா?


‘விருமாண்டி’யில் வந்த அரசி யல் தொல்லை எல்லாம் ஓர் இடத்திலிருந்து வந்தது. எனக்குத் தான் புரிய தாமதமாச்சு. என் கருத்துகளில்  உண்மை தெறித்ததுதான் காரணம். அந்தக் கருத்துகளை என்னால் மாத்திக்க முடியாது. என் தகப்பனோடு எதிர்க்குரல் கொடுத்திருக்கேன்.  அண்ணன் பேசும்போது கூடச் சேர்ந்து பேசியிருக்கேன். கலைஞர் பேசினதற்கு முரணான கருத்து சொல்லியிருக்கேன். ‘ஏன் அப்படிச்  சொன்னாய்’னு கேட்டதற்கு என் பக்கத்து காரணங்களைச் சொல்லியிருக்கேன். மன்றத்தில் மூணு லட்சம் பேர் ‘உடற்பயிற்சி செய்ததோடு,  தற்காப்புப் பயிற்சியும் எடுத்துக்கிறோம்...’னு சொன்னாங்க. ‘சரி...’னு சொல்லிட்டேன். எம்ஜிஆர் கூப்பிட்டு ‘அந்த மூணு லட்சம் பேரும்  தற்காப்புக் கலையில் விற்பன்னர் ஆகிட்டா போலீஸ்க்கு என்ன வேலை? இதில் பிரச்னை ஏற்பட்டால் பொறுப்பு ஏற்பியா...’ன்னு கேட்டார்.  நானும் யோசிச்சு நிறுத்திட்டேன். ‘விருமாண்டி’யில நேரே அவங்க சந்திக்க விரும்பினாங்க. பார்த்தேன். அதற்குப் பிறகும் தொல்லை.  ‘விஸ்வரூபம்’ இப்ப நடந்ததுதானே, அதில் நடந்தது என்னன்னு அனைவருக்கும் தெரியுமே.

இதில் இயக்குநர் கமலுக்கும் நடிகர் கமலுக்கும் இருந்த சவாலான விஷயங்கள் என்ன?

இயக்குநர் கமலுக்கு சவாலாக இருந்தது நட்சத்திரக் கமல். அவருக்கு சவாலாக இருந்தது, தான் சொன்னபடிதான் எல்லாம் நடக்கணும்னு  நினைக்கிற டைரக்டர் கமல். முதலில் கதைதான். அதற்கு அடுத்து டைரக்டர். அப்புறம் நடிகன். எழுத்தாளன்தான் முதலில் நிற்கிற ஆள்.  அவர் எழுதிக் கொடுத்திட்டு, மாத்தி எடுத்தால் கை காலை ஒடச்சிடுவேன்னு மிரட்டிட்டுப் போவார். இந்த மும்முனைத் தாக்குதல்  அத்தனையையும் கூடவே இருந்து அப்ப அண்ணன் சந்திரஹாசன் தாங்கிட்டு இருந்தார். அது எப்படின்னா காலையில் குழந்தையைக்  கழிப்பறையில் கூட்டிப்போய் கழுவி விடுகிற ஆயா, அதற்குப் பிறகு சமையல்கார ஆயா, அப்புறம் ஸ்கூலுக்குக் கொண்டு போற ஆயா,  ராத்திரி ஹோம்ஒர்க் சொல்லிக் கொடுக்கிற போலீஸ்காரியா மாறுற அம்மா மாதிரி. இப்படி மாறி மாறி பழகிட்டால் இந்த ரோல்  அத்தனையும் இயற்கையாக வந்திடும்.         

- நா.கதிர்வேலன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்