இணைய குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கலாம்



வழிகாட்டும் சைபர் தடய அறிவியல் புத்தகத்தை பொறியியல்
மாணவர்களுக்காக எழுதியிருக்கிறார் ஐஜி முருகன்


தடய அறிவியல் துறையைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை  நுணுக்கமாக ஆராய்ந்து உண்மையை வெளியே கொண்டுவர உதவும் துறை இது. ஆனால், சைபர் தடய அறிவியல் பற்றிக்  கேட்டிருப்போமா? தமிழகத்தில் முதல்முறையாக துறை சார்ந்த அனுபவங்களுடன் சைபர் தடய அறிவியல் பற்றி பி.இ. கம்ப்யூட்டர்  சயின்ஸ் மாணவர்களுக்கென, ‘சைபர் ஃபாரன்சிக்ஸ்’ என்ற நூலை எழுதியிருக்கிறார் போலீஸ் அதிகாரியான முருகன் ஐ.பி.எஸ்.! இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராகவும் ஐ.ஜி.யாகவும் இருக்கும் இவர், சைபர் க்ரைமில் முனைவர் பட்டம் பெற்றவர்.  இவரது நூலை ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ளது.

அதென்ன சைபர் ஃபாரன்சிக்ஸ்?
‘‘மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் சார்ந்து நடக்கும் குற்றங்கள் எல்லாம் சைபர் க்ரைம்னு சொல்லப்படுது. இந்தக் குற்றங்களை  உணரத்தான் முடியுமே தவிர தொட்டுப் பார்க்க முடியாது. இன்றைய நவீன டிஜிட்டல் உலகத்துல இந்த சைபர் குற்றங்கள் அதிகமாகிடுச்சு.  அதுல சரியான தடயங்களைத் தேடி குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறதுனு சொல்றதுதான் ‘சைபர் ஃபாரன்சிக்ஸ்’...’’ என்று சின்ன  இன்ட்ரோ கொடுத்த முருகன், தொடர்ந்தார்.‘‘பிரெஞ்சு சயின்டிஸ்ட் எட்மண்ட் லோகார்டுதான் தடய அறிவியலின் தந்தை என்று  அழைக்கப்படுபவர். இவரது தியரி, ‘எந்தவொரு குற்றத்துக்குப் பின்னாலும் நிச்சயம் ஒரு தடயம் இருக்கும்...’ என்பதே! இது இணைய  குற்றத்துக்கும் பொருந்தும். இந்தப் புத்தகத்தின் நோக்கமே எலெக்ட்ரானிக் தகவல்தொடர்பு சாதனங்கள்ல கிடைக்கிற  தடயங்களை எப்படி  சேகரிச்சு சைபர் லேப்புக்கு அனுப்புறாங்க; அதிலிருக்கும் தடயங்களை எப்படி பிரித்தெடுக்கிறாங்க; பிறகு அதைக் குற்றத்துடன் எப்படி  இணைக்கிறாங்க என்பது போன்ற விஷயங்களைச் சொல்றதுதான்.

இந்நூலை நான் மட்டும் தனியா எழுதல. திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்துல பணியாற்றுகிற டிஜேனு ஒரு பேராசிரியையும்  சேர்ந்து எழுதி யிருக்காங்க.அவங்க கம்ப்யூட்டர் தொடர்பான சில அடிப்படை விஷயங்கள்ல கவனம் செலுத்தினாங்க. நான், சைபர்  சட்டங்கள், நடைமுறை அனுபவங்கள்னு எல்லாத்தையும் கலந்து கொடுத்திருக்கேன். நான் கடந்த பதினெட்டு வருஷங்களா சைபர் க்ரைம்  புலனாய்வுத்துறையை உன்னிப்பாகக் கவனிக்கறேன். இந்தியா முழுவதும் நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள்னு பலருக்கும் சைபர்  குற்றங்கள் புலனாய்வு தொடர்பாக வகுப்பு எடுத்துட்டு இருக்கேன். அமெரிக்காவுல இதுக்காக பயிற்சியும் எடுத்திருக்கேன். அங்க கொடுக்குற  சான்றிதழ் முக்கியமானது.

அது மூணு வருஷங்கள் மட்டுமே செல்லுபடியாகும். ஏன்னா, அடுத்த மூணு வருஷத்துல மின்னணு தொழில்நுட்பம் முன்னேறியிருக்கலாம்.  அதுல குற்றங்களும் வேறு மாதிரி நடக்கலாம். ஸோ, அதை அப்டேட் செஞ்சிட்டே இருக்கணும். அதுக்காகத்தான் இந்த மாதிரியான  நடைமுறையெல்லாம் அங்க வச்சிருக்காங்க...’’ என்றவர், தனது நூல் உருவான கதையை விவரித்தார். ‘‘ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி  பிரஸ்ல இருந்து சைபர் ஃபாரன்சிக்ஸ் பற்றி புத்தகம் எழுதறவங்க வேணும்னு ஒரு செய்தி அனுப்பியிருந்தாங்க. இன்னைக்கு பெரும்பாலான  கல்லூரிகள்ல சைபர் ஃபாரன்சிக்ஸ் விருப்ப பாடமா மட்டுமே இருக்கு. சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்லதான் ஒரு கோர்ஸா  வைச்சிருக்காங்க.

அதனால, இது சம்பந்தமான புத்தகங்களும் குறைவு. அப்படியே இருந்தாலும் வெளிநாட்டு ஆசிரியர்கள்தான் அதிகம் எழுதி யிருக்காங்க.  நம்மூர் சார்ந்த விஷயங்கள் அதுல இருக்காது. அதனால, நான் இதுக்கு விண்ணப்பிச்சேன். அதேநேரம் டிஜே மேடமும்  விண்ணப்பிச்சிருக்காங்க. எங்க ரெண்டு பேர்கிட்டயும் ஆக்ஸ்ஃபோர்டு பிரஸ் கலந்து பேசி இந்தப் புத்தகத்தை எழுதச் சொன்னாங்க. இதுல  சைபர் க்ரைம்னா என்ன? நெட்வொர்க் பாதுகாப்பு, சைபர் க்ரைம் இப்பவும், வருங்காலத்துலயும் எப்படி இருக்கும்? சைபர் ஃபாரன்சிக்ஸ்னா  என்ன? டிஜிட்டல் எவிடென்ஸ் எப்படி சேகரிக்கணும்? என்பது போன்றவற்றை அலசியிருக்கோம்.

தவிர, இந்தியா மற்றும் சர்வதேசத்துல உள்ள சைபர் சட்டங்கள், வழக்குகள் பற்றியும் விரிவா சொல்லியிருக்கோம். மொத்தம் பதினான்கு  உள்பிரிவுகள்ல இந்தப் புத்தகம் வந்திருக்கு...’’ என்ற முருகனிடம், புத்தகத்தில் இருக்கும் சில அனுபவ வழக்குகளைப் பற்றிக் கேட்டோம். ‘‘நாலு வருஷத்துக்கு முன்னாடி வடசென்னையில இருந்த ஒரு வங்கியோட ஏ.டி.எம்.ல தொடர்ந்து பணம் காணாமல் போயிட்டே  இருந்துச்சு. அப்ப நான் சிபிஐல இருந்தேன். அந்த வழக்கு எங்களுக்கு மாற்றப்பட்டுச்சு.

அந்த ஏ.டி.எம்.ல பணம் போடுற ரகசிய கோடுனு சொல்ற டபுள் கீ மேனேஜருக்கும், கேஷியருக்கும் கொடுக்கப்பட்டு இருந்துச்சு. மேனேஜர்  கேஷியரை நம்பி பணத்தை உள்ள வைக்கச் சொல்றது வழக்கம். இந்தக் கேஷியர் பணத்தை வைக்கும்போது கம்ப்யூட்டர்ல இத்தனை  நோட்டுகள்னு எழுதிட்டு சில நோட்டுகளை தன்னுடைய பாக்கெட்டில் போட்டுட்டு இருந்திருக்கார். கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய்  அடிச்சிட்டார். ஒருநாள் மொத்தமா கணக்கு பார்க்கும்போது விஷயம் தெரிஞ்சிருக்கு. பணம் திருடு போயிருச்சுனு புகார் தந்தாங்க. முதல்ல  உள்ள போனதும் ஏ.டி.எம்.ல எல்லாத்தையும் செக் பண்ணினோம். கேஷியர்கிட்டயும் விசாரிச்சோம்.

எந்தத் தடயமும் கிடைக்கல. ஆனா, லோகார்டு தியரிப்படி தடயம் இருக்குமில்லையா? அப்பதான் கண்காணிப்பு கேமராவை கவனிச்சோம்.  ஏ.டி.எம். தொடங்கறப்ப இருந்த மேனேஜர் மிஷின் மேலயும் ஒரு கண்காணிப்பு கேமராவைப் பொருத்தி இருந்தது வசதியா போச்சு.  இப்படியொரு கேமரா இருக்கறது யாருக்குமே தெரியாது. அந்த கேமரா ஒவ்வொரு மாசமும் படம் எடுக்கும். பிறகு, தானாகவே அழிச்சிடும்.  நான் அந்தக் கேமராவை எடுத்து சோதிச்சேன். கேஷியர் மாட்டிக்கிட்டார்.

இதேமாதிரி இன்னொரு வழக்கு சென்னையிலுள்ள பிரபல ஜவுளி நிறுவனம் சம்பந்தப்பட்டது. இதுவும் நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்த  கதை. திருப்பூர்ல ஒருத்தன் ஆன்லைன் வழியா யார் மூலமாகவோ கிரெடிட் கார்டு நம்பர் ஒண்ணை வாங்கி யிருக்கான். அதை வச்சு 50  ஆயிரம் ரூபாய்க்கு இந்த நிறுவனத்துல ஜவுளி வாங்குறான். அப்ப OTP நம்பர் எல்லாம் கிடையாது. பணம் கிரெடிட் ஆனதும் ஜவுளியை  கொரியர் பண்ணிடுவாங்க. பொதுவா கொரியர் வீட்டுல வந்து கொடுப்பாங்க. அப்படி வர்றதே சரிபார்ப்புக்குத்தான். ஆனா, இவன் நேரடியா  கொரியர் நிறுவனத்துக்குப் போய் வாங்கியிருக்கான். அந்நேரம், அந்தக் கிரெடிட் கார்டு வச்சிருந்த வெளிநாட்டுக்காரன் அவன் வங்கியில  சொல்லி பணத்தை பிளாக் பண்ணிட்டான்.

ஸோ, ஜவுளி நிறுவனத்துக்கு பணம் வரல. உடனே எங்களுக்குத் தகவல் வந்தது. எந்த கொரியர் வழியா பொருள் போனதோ அந்த  கொரியருக்கு போன் பண்ணி அவன் அட்ரஸை வாங்கி தூக்கிட்டோம். உள்ளூர் என்பதால் கொரியர் முகவரி வச்சு பிடிச்சிட்டோம். இதுவே,  வேறு மாநிலமாகவோ, வேறு நாடாகவோ இருந்தா ஐ.பி. முகவரிதான் நமக்கு உதவும். அதனால, சாதாரண புலனாய்வுல தடயங்களைத்  தேடுற மாதிரி இணைய குற்றங்கள்ல தடயங்களைத் தேடிக் கண்டுபிடிக்கணும். அதுக்கு இந்த மாதிரியான வழக்குகள உதாரணமா  கொடுத்திருக்கோம். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல,  காவல்துறை இளம் அதிகாரிகளுக்கும்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...’’ -  நம்பிக்கையோடு முடிக்கிறார் ஐ.ஜி. முருகன்!                              

- பேராச்சி கண்ணன்
படங்கள் :ஆ.வின்சென்ட் பால்