ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 13

கே.என்.சிவராமன்

‘‘நாகர்களின் ஆட்சிப் பகுதியில் ஒருமுறை பூனன் லியோ என்ற பெண்மணி ஆண்டு வந்தார். திருமணமாகாத அவர், அழகே உருவானவர்.  சர்வ லட்சணங்களையும் தன் அங்கங்களில் ஏந்தியவர். பொதுவாக அழகு இருக்கும் இடத்தில் அறிவாற்றல் இருக்காது என்பார்கள். இந்த  மூதுரை பூனன் லியோ விஷயத்தில் பொய்த்தது. அழகுக்கு சமமாக அறிவும் மதியூகமும் அவரிடத்தில் குடிகொண்டிருந்தது. தன் ஆட்சிக்கு  உட்பட்ட பிரதேசத்தை ஒரு குறையும் இன்றி பூனன் லியோ ஆண்டு வந்தார். மக்கள் நிம்மதியாக நடமாடினர். எதிரிகள் அந்நாட்டை  நெருங்கவே அஞ்சினர். இதே காலத்தில் மெளஃபெள என்ற நாட்டில் ஹிவெண்டியன் என்ற ஒரு பக்திமான் இருந்தார்...’’

கரிகாலனும் சிவகாமியும் தன்னை கவனிக்கவேண்டும் என சுவாசத்தை சீராக்கிய ஹிரண்ய வர்மர் அவர்கள் இருவரது நயனங்களையும்  மாறி மாறிப் பார்த்தார். மெல்ல மெல்ல தன்னை நோக்கி அவர்களை வசப்படுத்திவிட்டு மகத்தான வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.‘‘அந்த ஹிவெண்டியன் வழக்கம்போல் ஓரிரவு உறங்கும்போது அந்த தரிசனம் அவருக்குக் கிடைத்தது. அதுவும் கனவு ரூபத்தில் அச்செய்தி  வந்தது. கடவுள் அவர் முன் தோன்றி சர்வ வல்லமை படைத்த ஒரு வில்லைக் கொடுத்து, படகில் ஏறி கடல் கடந்து பயணம் செய்து  நாகர்களின் ஆட்சிப் பகுதிக்குச் செல்லும்படி கட்டளையிட்டார்!

விழித்துக் கொண்ட ஹிவெண்டியன், நிச்சயம் இது தெய்வத்தின் கட்டளைதான் என உறுதியாக நம்பி கோயிலுக்குச் சென்றார். என்ன  ஆச்சர்யம்! கனவில் கண்ட வில் அங்கிருந்தது! இது தெய்வ சங்கல்பம் எனத் தீர்மானித்து அதை கையில் எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றார். படகில் ஏறி, கடவுளின் ஆக்ஞைப்படி புறப்பட்டார்.ஹிவெண்டியன் தன் நாட்டுக்கு வருவதை ஒற்றர்கள் மூலம்  அறிந்த பூனன் லியோ, வெகுண்டார். ஒரு பெண்ணாக, தான் இருப்பதால் தன் நாட்டை அபகரிக்கவே ஹிவெண்டியன் வில்லுடன்  வருவதாக எண்ணினார். வருபவரின் வீரதீரப் பிரதாபங்களை ஒற்றர்கள் விரிவாகவே பூனன் லியோவிடம் விளக்கியிருந்தனர். அவரிடம்  இருக்கும்வில் தெய்வாம்சம் பொருந்தியது என்பதையும் அரசி அறிந்திருந்தார்.எனவே, வருவது ஒற்றை ஆளாக இருந்தாலும், அவர்  வில்லாதி வீரர் என்பதால், தன் நாட்டின் ஒட்டுமொத்தப் படைகளையும் திரட்டி அவரை எதிர்க்க கடற்கரைக்கு வந்தார். கடலையே  பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு புள்ளியாக படகு ஒன்று தெரிந்தது. பார்வையை உன்னிப்பாக மாற்றி அதையே கவனித்தார். படகு நெருங்க நெருங்க அதற்குள் ஓர்  மனிதன் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்தார். வாட்டசாட்டமான உடல்வாகு. மனிதன் என்று சொல்வதைவிட இளைஞன் என்று  அழைப்பதே சாலப் பொருத்தமாக இருக்கும் என்பதை தனக்குள் குறித்துக் கொண்டார். குறிப்பாக, வருபவரின் தோளை அலங்கரித்த  வில்லின் மீது பூனன் லியோவின் பார்வை படிந்தது. அதுதான் தெய்வாம்சம் பொருந்திய வில்... அதனைக் கொண்டுதான் தன் நாட்டை  அபகரிக்கப் போகிறார்...

இந்த எண்ணம் உதித்ததுமே பூனன் லியோ சற்றும் தாமதிக்கவில்லை. கடவுளின் அம்சம் பொருந்திய வில்லை ஏந்தியவராகவே  இருந்தாலும், வருபவர் தன் மக்களை அடிமையாக்க வந்திருப்பவர். எனவே, கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு கடவுளையே  எதிர்க்கத் துணிந்தார்! வரும் படகின் மீதும் அதில் நிற்பவர் மீதும் அம்பு எய்தும்படி தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டார்!அரசியின் கட்டளையை உடனே வீரர்கள் நிறைவேற்றினார்கள். நாணை இழுத்து அம்பு மழையை அப்படகின் மீது பாய்ச்சினார்கள்...’’நிறுத்திய ஹிரண்ய வர்மர், சில கணங்கள் எதுவும் பேசாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். முக்கியமான வரலாற்றுக் கட்டங்களை  விவரிக்கும்போதெல்லாம் இப்படி அவர் இடைவெளி விடுவதும் முன்பின் நடப்பதும் வாடிக்கை என்பதை கடந்த சில நாழிகைக்குள்  உணர்ந்திருந்த கரிகாலனும் சிவகாமியும் அமைதியாக அவரையே பார்த்தவண்ணம் நின்றார்கள்.

சிவகாமிக்குள் உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. குறிப்பாக, நாகர்களை ஆண்டு வந்தது பூனன் லியோ என்ற பெண்மணி என்ற  குறிப்பு அவளைக் கவர்ந்திருந்தது. எத்தனை இடையூறுகளை அந்த அரசி சமாளித்திருக்க வேண்டும் என்பதை நினைக்க நினைக்க  சிவகாமியின் உள்ளம் கடல் அலைகளைப் போல் பொங்குவதும் அடங்குவதுமாக இருந்தது. கடலில் தோன்றும் அலைகள், அக்கடலிலேயே  வடிவதுபோல் இனம்புரியாத வாஞ்சையுடன் மேலெழுந்த அவள் உள்ள உணர்ச்சிகள் அதே மனதுக்குள் வடிந்தன.பூனன் லியோ எந்தளவுக்கு  சிவகாமியிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள கரிகாலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. கற்றாரை  கற்றாரே காமுறுவர். வீராங்கனைகளை வீராங்கனைகளே புரிந்துகொள்வர்! தன் தோளுடன் உரசி நின்ற சிவகாமியின் தோளை தன்  கரங்களால் சுற்றி ஆற்றுப்படுத்தினான்.

சலனமற்று அவனை ஏறிட்ட சிவகாமி, சலனத்தின் பிடியில் சிக்கத் தொடங்கியபோது ஹிரண்ய வர்மனின் குரல் அதைக் கிழித்தது. விட்ட  இடத்திலிருந்து அவர் தொடர ஆரம்பித்ததை கரிகாலனைப் போலவே அவளும் கவனிக்கத் தொடங்கினாள்.‘‘தன்னை நோக்கி வரும் அம்பு  மழையைக் கண்டு ஹிவெண்டியன் திகைக்கவில்லை. மாறாக, அவர் உதட்டோரம் புன்னகை பூத்தது. தன் தோளில் இருந்த வில்லை  எடுத்தார். முதுகுப் பக்கம் இருந்த அம்பாரியிலிருந்து அம்பு ஒன்றை எடுத்து நாணில் பூட்டினார். கடற்கரையில் நின்றிருந்த படைகளை  நோக்கி அதை எய்தார்!அந்த அம்பு குறிபார்த்து பூனன் லியோவின் சிரசில் இருந்த கிரீடத்தைக் குத்தி அதைக் கீழே விழ வைத்தது.  இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஹிவெண்டியன் எய்த அம்புகள் கரையிலிருந்த படைகளைச் சிதறடித்தன.

அதேநேரம் பூனன்களின் படைகள் எய்த அம்புகள், கரையை நோக்கி வந்துகொண்டிருந்த படகைத் தாக்கவும் இல்லை; படகின் மீது  நின்றிருந்த ஹிவெண்டியன் உடலில் சிறு காயத்தையும் ஏற்படுத்தவில்லை.இந்த மாயாஜாலத்தைக் கண்டு பூனன் லியோ திகைத்தார்.  தான் கேள்விப்பட்டதற்கும் மேல் ஹிவெண்டியன் வில்லாளியாக இருப்பதை கண்ணுக்கு நேராகப் பார்த்தார். பெண்ணாக இருந்தும் அதுநாள்  வரை அவர் உடலில் மலராத வெட்கம், அந்த நொடியில் பூத்தது. அங்கங்கள் அனைத்தும் வரும் ஆண்மகனின் தழுவலை எதிர்பார்த்து  விரிந்தன.வருபவர் எதிரியல்ல; தன் மணாளர் என்பதை பூனன் லியோ உணர்ந்து கொண்டார். எனவே, எவ்வித எதிர்ப்பையும்  தெரிவிக்காமல் படகில் இருந்து இறங்கிய ஹிவெண்டியரிடம் சரணடைந்தார்.

தன் முன் நாணத்துடன் நின்ற பூனன் லியோவைக் கண்டதும் ஹிவெண்டியர் மனதுக்குள்ளும் மொட்டு மலர்ந்தது. இவை எல்லாமே தெய்வ  சங்கல்பம்தான் என்ற முடிவுக்கு வந்த ஹிவெண்டியர், மனமுவந்து பூனன் லியோவையும் ஏற்றுக்கொண்டார். மன்னராக முடிசூட்டிக்  கொண்டு நாகர்களின் தேசத்தையும் ஆளத் தொடங்கினார். இவர்களுக்கு அழகான ஆண்மகன் ஒருவன் பிறந்தான். தனக்குப் பிறகு தன்  மைந்தனுக்கு ஹிவெண்டியர் முடிசூட்டினார்.இப்படித்தான் பூனன்களின் ஆட்சி தோன்றி, வலுப்பெற்று நிலைத்தது. கரிகாலா! சிவகாமி! ஒரு  விஷயம் தெரியுமா? இந்த பூனர்களுக்கும் மகாபாரதத்துக்கும் தொடர்பிருக்கிறது!’’ சொன்ன ஹிரண்ய வர்மர் மகிழ்ச்சிக்கு அறிகுறியாக  வாய்விட்டுச் சிரித்தார்.கரிகாலனும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘‘திகைக்க வேண்டாம். உங்கள் செவியில் நான் பூச்சுற்றவில்லை. கல்வெட்டு ஆதாரங்களுடன்தான் சொல்கிறேன்...’’ உற்சாகத்துடன்  அவர்கள் இருவரையும் ஹிரண்ய வர்மர் நெருங்கினார்.‘‘பிராமணர்களில் சிறந்தவர் என கவுண்டின்யர் அறியப்படுகிறார். அதனாலேயே  இவரது வம்சாவளியினரும் உறவினர்களும் இவர் பெயரைத் தாங்கிய கோத்திரத்துடன் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட கவுண்டின்யர்,  துரோணரின் மகனான அஸ்வத்தாமனிடம் இருந்து ஈட்டி ஒன்றைப் பெற்றார். அதை எடுத்துக் கொண்டு படகில் ஏறி, கடல் கடந்து வந்து  நாக நாட்டிலுள்ள பவபுரத்தில் நட்டார். அத்துடன் நாக மன்னரான சோமரின் மகளையும் மணந்தார்.இவை எல்லாமே எங்கள் வம்சத்தைக்  குறித்த கதைகள்; சரித்திரம். பூனர்களின் மரபைத் தோற்றுவித்த ஹிவெண்டியரின் வம்சம் காலப்போக்கில் மங்கி அழியத் தொடங்கியது.  அப்போது தன்னை ஹிவெண்டியரின் பரம்பரையைச் சேர்ந்தவன் என்று கூறிக் கொண்டு இன்னொரு மனிதன் படகில் வந்து இறங்கினான்.  அவனை தங்கள் மன்னராக மக்கள் ஏற்றுக் கொண்டனர். இந்திரவர்மன், ஜெயவர்மன், ருத்திரவர்மன்... என இந்த வம்சம் தொடர்ந்து ஆட்சி  செய்தது.

இந்த இடத்தில்தான் முக்கியமான மறைபொருள் மறைந்திருக்கிறது. கரிகாலா! சிவகாமி! இதை மட்டும் நீங்கள் கவனித்துவிட்டால்  எல்லாமே புரிந்துவிடும்...’’ என்று நிறுத்தினார் ஹிரண்ய வர்மர்.‘‘தந்தையே! ‘வர்மன்’ என்ற பெயரைத்தானே குறிப்பால் உணர்த்த  வருகிறீர்கள்..?’’ சட்டென்று சிவகாமி கேட்டாள்.‘‘உன்னை ஏன் தன் வளர்ப்பு மகளாக என் சகோதரன் பரமேஸ்வர வர்மர் கருதுகிறார் என  இப்போது புரிகிறது! கெட்டிக்காரி...’’ புருவத்தை உயர்த்தி அவளைப் பாராட்டிய ஹிரண்ய வர்மர், தொடர்ந்தார்.‘‘சிவகாமி ஊகித்தது சரிதான்.  ‘வர்மன்’ என்ற பெயர்கள் சத்திரியர்களுக்கு மட்டுமே சொந்தமானவை! அதுவும் பல்லவர்களுக்கு உரியவை! ஆம். இரண்டாவது  ஹிவெண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் பல்லவ வம்சத்தைச் சேர்ந்த சிம்ம வர்மரின் இரண்டாவது மகனான பீம வர்மர்! அதாவது  என் பாட்டனார். சிம்ம வர்மரின் முதல் மகனான சிம்ம விஷ்ணுவின் வழித்தோன்றல்கள் தமிழகப் பகுதிகளை ஆள... அவர்களுக்கு  இடையூறு வழங்க வேண்டாம் என பீம வர்மர் கடல் கடந்து சென்று தனக்கென ஒரு நாட்டை ஏற்படுத்திக் கொண்டார்...’’

ஹிரண்ய வர்மர் இப்படிச் சொன்னதும் சிவகாமி முதல்முறையாக இடைமறித்தாள். ‘‘அப்படியானால் பூனர்களின் ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த  ஹிவெண்டியர் யார்..?’’‘‘சிவகாமி... இன்னுமா புரியவில்லை? சோழர் வம்சத்தைச் சேர்ந்தவர்தான் ஹிவெண்டியர். அரச மரபில் பிறந்தும்  இளையவராக இருந்ததால் ராஜ்ஜியம் ஆளும் பேறு அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, கடல் கடந்து  சென்று நாக மன்னரின் மகளை  மணந்து அந்நாட்டுக்கு அரசரானார். பூனர்களின் வம்சத்தைத் தோற்றுவித்தார்!இப்படி சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் பல நூற்றாண்டு  களாக விட்ட குறை தொட்ட குறையாக ஓர் உறவு நீடிக்கிறது.

அதனால்தான் சோழர்கள் தாழ்ந்து பல்லவர்கள் கோலோச்சும்போதும் சிற்றரசுக்கு மேம்பட்ட ஸ்தானத்தை சோழர்களுக்கு அளித்து  கவுரவிக்கிறார்கள். இதே நிலை நாளையே சோழர்கள் தலையெடுத்து பல்லவர்கள் தாழும்போதும் நிலவும். ஏனெனில் ரத்த உறவு அந்தளவுக்கு இருவருக்கும் இடையில் பலமாக நிலவுகிறது!போகிறபோக்கில் இதைச் சொல்லவில்லை சிவகாமி. பல்லவர்களின்  கட்டடக்கலை மரபை கடல் கடந்து நாங்கள் வளர்க்கிறோம். நாளை சோழர்கள் இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவார்கள். விதை  ஒன்றுதான். அது தமிழ் மண்! அதனாலேயே அந்நியர் பிடியில் இப்பரப்பு சிக்காமல் பாதுகாக்கும் பொறுப்பு கடல் கடந்து வாழும்  எங்களுக்கும் இருக்கிறது. இதன் காரணமாகவே நாக விஷங்கள் தோய்த்த ஆயுதங்களை சிறுகச் சிறுகக் கொண்டு வந்து இங்கு  சேகரித்திருக்கிறோம்...’’உணர்ச்சிப் பிழம்புடன் ஹிரண்ய வர்மர் இப்படிச் சொல்லி முடித்த அடுத்த கணம் அந்தக் குரல் ஓங்கி  ஒலித்தது.‘‘அதற்காக சாளுக்கிய தேசம் உனக்கு நன்றி தெரிவிக்கிறது ஹிரண்ய வர்மா!’’ கம்பீரமாக அறிவித்தபடி அலட்சியமாக  சுரங்கத்துக்குள் நுழைந்தார் சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர்!

(தொடரும்)
ஓவியம்: ஸ்யாம்