கவிதை வனம்



பூ

சாலையோரப்
பூக்களோடு
தானும் ஒன்றென
நினைத்திருந்தது
அன்று பூத்த
தண்டவாளப்
பூவொன்று,
அந்த ரயில்
கடந்து
செல்லும் வரை.

- கிருத்திகா தாஸ்

தனித்திருந்த இரவு


அரபிக்கடல் இவ்விரவில்
யாருக்கும் தெரியாமல்
இம்மாநகருக்குள் நடந்து
என் அறை வந்து
கதவு தட்டுகிறது
அறைக்கதவு திறந்ததும்
உள் நுழையும் கடல்
கட்டிலில் பக்கத்தில் அமர்ந்து
கண்களைத் துடைத்து விடுகிறது
எனக்காக சில மீன்களையும்
யாரோ செய்து
விட்டுவிட்டுப்போன
சில காகிதக்கப்பல்களையும்
தந்துவிட்டு
என் தனிமைகளை
எடுத்துக்கொண்டு
வந்த வழியே
திரும்ப நடக்கிறது
சட்டென நதியென மாறி
கடல்போன திசையில்
ஓடத்துவங்குகிறேன்

- சௌவி