சயின்ஸ் பிக்ஷன் ஃபேன்டஸியா, அமானுஷ்ய ஃபேன்டஸியா : அலாவுதீனின் அற்புத கேமரா சஸ்பென்ஸை உடைக்கிறார் மூடர்கூடம் நவீன்
ஒரே ஒரு படம் ‘மூடர்கூடம்’. தமிழின் மிக அரிதான ‘ப்ளாக் ஹியூமரி’ல் இயக்கி ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தவர் டைரக்டர் நவீன். அதே மாதிரி சென்றாயனுக்கு லாஜிக் வகுப்பெடுத்த நடிகர் நவீனையும் மறக்க இயலாது.இப்போது மறுபடியும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ வழியாக கவனம் பெறுகிறார் நவீன்.‘‘‘மூடர்கூடத்’தை நானே தயாரிச்சேன். அடுத்த படம் பண்ணும்போது ‘மூடர்கூடம்’ மாதிரி இருக்கக்கூடாது. அந்தப் படம் ஓர் இடத்தில் உட்கார்ந்து இருந்தது என்றால், இந்தப் படம் ஓடிக்கிட்டே இருக்கணும். அது ஒரு வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தால், இது உலகத்தைப் பார்க்கணும். அதனால் ஐரோப்பாவில் ஏழு நாடுகளுக்கு மேலே போனோம். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை படம் திகுதிகுன்னு ஓடும்...’’ மாறாத புன்னகையில் பேசத் தொடங்குகிறார் நவீன்.
 ‘மூடர் கூடத்’தில் கதைக்குள்ள கதை இருந்தது. வசனங்கள் புகழ்பெற்றது...
‘மூடர்கூடம்’ நிறைய சமூகம் சார்ந்து இருக்கும். அதில் நான்கு மூடர்கள் ஆளுக்கு ஆள் அவங்களுக்குத் தகுந்தபடி பேசினார்கள். கதாபாத்திரம் இடம் கொடுத்தால் நாம் பேசலாம். சென்றாயனுக்குள் புகுந்து நான் ஒண்ணும் பேசிட முடியாது. அதே மாதிரி நான் வைச்சிருக்கிற எல்லா கருத்தையும் சென்றாயன் வழியாகப் பேசிட முடியாது. இந்த ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ ஃபேன்டஸி, அட்வென்ச்சர், த்ரில்லர். இதில் வசனங்களே குறைவுதான். வாய்ப்பு கிடைத்த இரண்டு மூணு இடத்தில் கதாபாத்திரம் மூலம் நறுக்குன்னு பேசியிருக்கேன். மற்றபடி கதையை மையமாக எடுத்துக்கிட்டு அதை நோக்கி ஓடுகிற படமாகவே இருக்கும்.
‘ஸ்பைடர்மேன்’ படத்தை இங்கே பார்க்கும்போது, அதை லாஜிக்கா எந்தக் கேள்வியும் கேட்க மாட்டீங்க. அது வேற தேசம், வேற சூழ்நிலையில் நடப்பதால் அப்படி நாம் உணரு கிறோம். மெட்ராஸில் பிறந்து, ஸ்பைடர்மேன் வளர்ந்திருந்தால் அவனை எப்படிப் பார்த்திருப்பாங்கன்னு தெரியலை. சில விஷயங்கள் அந்நிய மண்ணில் நடக்கும்போது, கதையை மட்டும் கவனிப்போம். ‘ஸ்பைடர்மேன்’ இங்கே வந்தால் சென்னையிலிருந்து செங்கல்பட்டு எப்படி போய்ச் சேர்ந்திருப்பார்னு கேள்வி எழும். சயின்ஸ் பிக்ஷன் ஃபேன்டஸியா, அமானுஷ்ய ஃபேன்டஸியான்னு படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க. ஆனால், ‘அலாவுதீனின் அற்புத விளக்கி’ல் இருக்கிற பூதம் எல்லாம் இதுல வராது. மாயாஜாலமும் இல்லை.
அறிமுகப் படத்தில் நடிச்சதோட இதிலும் நடிக்கறீங்க...
ஆமாம்; போன தடவை செலக்ட் பண்ணி வைச்சிருந்த ஹீரோ ஷூட்டிங்கின்போது வரலை. வேற வழியில்லாமல், யோசிக்க நேரம் இல்லாமல் நானே நடித்தேன். ‘மூடர்கூடம்’ முடித்தபிறகு எட்டு படங்களுக்கு மேல் ஹீரோவாக வாய்ப்பு வந்தது. எல்லாத்தையும் மறுத்தேன். டைரக்டர் ஆகணும் என்பதற்காக சென்னைக்கு வந்தேன். புரடியூசர், டைரக்டராக இருப்பது வசதி. நடிகரா இருந்தால் உடம்பை பூ மாதிரி வைச்சுக்கணும். நேரத்திற்கு தூங்கி, நேரத்திற்கு உடற்பயிற்சி செய்து, பளீர்னு இருக்கணும். இந்தப் படம் முழுக்க நான் கருப்புக் கண்ணாடி போட்டிருக்கேன்.
ஐரோப்பிய தேசங்களில் ராத்திரி முழுக்க சரியாகத் தூங்காமல், அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கான தயாரிப்பில் இருப்போம். இயக்கி, தயாரிச்சு கூடவே நடிக்கிறது கஷ்டமான வேலை. முழிச்சி, முழிச்சி கண்ணு வீங்கியிருக்கிறதை மறைக்கத்தான் இந்த கருப்புக் கண்ணாடி. எனக்கு இனிமேல் ஒரு ஹீரோவைப் பிடிச்சு கதை சொல்ல நேரமில்லை. கேமரா, மத்த செட்அப் கைவசம் இருந்தது. உடனே புறப்பட்டு விட்டோம். ‘கயல்’ ஆனந்தி கதையைக் கேட்டு, உணர்ந்து வந்தாங்க. அந்தப் பொண்ணு பாடல் காட்சிகளுக்கு மட்டும் ஐரோப்பா வரலை. சரிசமமான கதையின் நாயகி. டைரக்டர் நவீனுக்கும், தயாரிப்பாளர் நவீனுக்கும் ரொம்ப comfort லெவலில் இருந்த ஹீரோ இந்த நவீன்தான். அவன் கேரவன் கேட்கப் போறதில்லை. மதிய சாப்பாடு லேட்டாகி விட்டதுன்னு கோபிக்கப் போறதில்லை. மேலும் இவன் இரண்டு லைட்டை தூக்கிட்டுக்கூட நடப்பான். அதனால்தான் டைரக்டரும், தயாரிப்பாளரும் ஆன நவீன், இந்த நவீனைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.
 டீசரைப் பார்த்தால் வேறு வழியின்றி நடிச்ச மாதிரி தெரியலை...
இயக்குநர் நவீனுக்கு, நடிகன் நவீனை நல்லாவே தெரியும். காலையிலிருந்தே அவர் கூடத்தான் இருக்கான். எப்ப இவன் கேவலமாக இருப்பான், எதை செய்ய முடியாதுன்னு தெரியும். அதனால் அவனுக்கு எது தெரியுமோ, அதை மட்டும் அழகாக செய்ய வைத்து ஒப்பேத்தியிருக்கார். ‘96’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் அண்ணன்தான் வில்லன். அவர்தான் படத்தில் The Boss ஆக வருகிறார். க்ளைமேக்ஸில் ஒரு நடையிலேயே அவர் கைதட்டல் வாங்கி விடுவார். மத்தபடி நிறைய நடிகர்களுக்காக ஐரோப்பாவில் வசிக்கும் ஈழத்தமிழர்களைப் பயன்படுத்திக் கொண்டோம். இரண்டு வெளிநாட்டுப் பயணங்களில் படம் முடிந்தது.
இது மாதிரியான த்ரில்லருக்கு இசை முக்கியமாயிற்றே...
‘மூடர்கூடத்’தில் புலவர்களையோ, கவிஞர்களையோ எழுத வைக்க பணம் இல்லாமல் நானே பாடல்களை எழுதத் துணிந்தேன். இப்போது அண்ணன் யுகபாரதி அருமையான மூன்று பாடல்களை அளித்திருக்கிறார். நடராஜன் சங்கரனின் பின்னணி இசை பற்றி படம் பார்த்த அத்தனை நண்பர்களும் உச்சி மோந்து பேசுகிறார்கள். ஆங்கிலப் படங்களுக்கு இணையான அல்லது தொட்டு விடும் அளவில் செய்திருக்கார்.
‘அலாவுதீனின் அற்புத கேமரா’ன்னா...
கதை நாயகனுக்கு கையில் ஒரு கேமரா கிடைச்சிடும். அது வந்தவுடன் அவன் வாழ்க்கை, வேற இடத்திற்கு திசை மாறும். இதிலும் கேங்ஸ்டர்கள் இருக்காங்க. அதிவேகம் இருக்கும். விட்டலாச்சாரியா படம் பார்க்கும்போது எனக்கு என்ன பிடிக்கும்னா, கதாநாயகன் ரொம்ப சாதாரணமானவனாகவும், அப்பாவியாகவும் இருப்பான். அவன்கிட்டே ஒரு விஷயம் இருக்கும். அதனால் வஞ்சிக்கோட்டை மாதிரியான ஒரு இடத்திற்குக் கூட போக முடியும். அங்கே நாக கன்னிகள் இருப்பாங்க. அதுமாதிரி இங்கே எல்லாமே இருக்கும். புல்லட் ரயில், டிராம், கப்பல் எல்லாம் வரும். ஒரு தீவு கூட கதையில் வருது. ஹாலிவுட்டில் இருக்கிற பாட்ஷா கேமராவை கையாண்டார். முதல் ஃப்ரேமிலிருந்து அவர் காட்டின பிரமிப்பு இருக்கு. இன்னும் சொல்லணும்னா, வெள்ளித்திரையில் படமே பார்த்திருங்களேன் சகோ!
- நா.கதிர்வேலன்
|