ஜூங்கா
டான் அப்பா இழந்த சொத்தை சாமர்த்தியமாக மீட்க சகல வழிகளிலும் போராடும் மகன் விஜய் சேதுபதி, அதை சாதித்தாரா என்பதே ‘ஜுங்கா’.காவலில் வைக்கப்பட்டிருக்கும் விஜய் சேதுபதியை என்கவுண்டரில் போட்டுத்தள்ள உத்தரவு வருகிறது. அதை சிரமேற்கொண்டு செய்ய இரண்டு பேர் அடங்கிய போலீஸ் படை புறப்படுகிறது. உயிர் எடுக்கச் சென்றவர்கள், சேதுபதியின் சோகக் கதைகேட்டு உயிர் பறிக்க மறக்கிறார்கள். அந்தக் கதை ஃப்ளாஷ்பேக்காக நமக்கும் விரிகிறது.
 சேதுபதியின் அப்பாவும், தாத்தாவும் செய்த செலவுகளால் குடும்பத்துக்குச் சொந்தமான தியேட்டர் அபகரிப்புக்கு உள்ளாகிறது. சேதுபதி பணத்தோடு வில்லனிடம் போனால் அவர் சொத்தை திரும்பத் தர மறுக்கிறார். அவரின் மகள் சாயிஷா பாரீஸில் இருப்பதை அறிந்து, அவரைக் கடத்த பாரீஸுக்கே போக, அங்கே காதல் மலர்கிறது. அவருடைய கனவான தியேட்டரை மீட்டாரா என்பதே மீதிக் கதை.முதல் பாதி திரைக்கதையில் அசரடிக்கிறது கோகுலின் இயக்கம். தாதாவாக சேதுபதி நல்ல பொருத்தம். கண்டக்டராக அவர் செய்யும் அதகளம் நூற்றுக்கு நூறு சிரிப்பு வகை. கஞ்சத்தனமும், காமெடியோடு விறைப்பும் முறைப்புமாக கேரக்டருக்கு அட்டகாசமாக உயிர் கொடுக்கிறார் சேதுபதி. முதன் முதலில் மடோனாவோடு அவர் போடுகிற குத்தாட்டம் பரபரக்கிறது.
ஆனாலும் சேதுபதியின் முதுகில் அதிக சுமையை ஏற்றியிருக்கிறார்கள். சுரேஷ் மேனனோடு முதல் சந்திப்பு, சாயிஷாவோடு காதல் பகிர்வது, அம்மா சரண்யாவோடு ஃப்ளாஷ்பேக் கேட்பது என மூன்று தருணங்களில் அவர் நடிப்பு அப்ளாஸ் அள்ளுகிறது.கூடவே இருந்து அவருடன் ஈடுபாட்டோடு உழைக்கிறார் யோகிபாபு. வகைதொகையில்லாமல் அவர் சேதுபதியை கிண்டல் செய்யும் போதெல்லாம் காமெடி கலகலப்பில் தியேட்டர் தெறிக்கிறது. இரண்டு பாடல்கள் இனிமை. நடக்கும் சூழ்நிலைக்கு ஏற்றபடி டோன் மாற்றியதில் ஈர்க்கிறது சித்தார்த்த் விபினின் பின்னணி இசை. பாரீஸின் பிரமாண்டம், பரபரக்கும் சேஸிங் காட்சிகள் என நிலவரத்தின் கலவரத்தைப் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துகிறது டட்லியின் ஒளிப்பதிவு.மாமனார், கணவர் செய்த அட்ராசிட்டிகளை வரிசைப்படுத்தி சரண்யா பொன்வண்ணன் சேதுபதியிடம் சொல்வதும், பாட்டி விஜயா அதை ஆமோதிப்பதுமாக தொடரும் காட்சிகள்... ஆசம்.
ஒற்றை ஆளாக பாரீஸ் போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சேதுபதி விரைவது, கொல்லும் பனியில் ஆற்றில் நீந்துவது, குற்றவாளியாக அத்தனை வெளிநாட்டு போலீஸுக்கும் தண்ணி காட்டுவது, ஒரு கோடி ரூபாயை ஜஸ்ட் லைக் தட் புரட்டுவது எல்லாம் பூ சுற்றல். முன்பாதி திரைக்கதையைப் போல பவர்ஃபுல்லாக பின்பாதியைக் காட்டியிருக்கலாம். பாரீஸுக்கு ஃப்ளைட் ஏறும்போது விட்டுப் போனது கதை என புலப்படுகிறது.காமெடியில் கரை சேர்கிறான் இந்த ‘ஜுங்கா’.
- குங்குமம் விமர்சனக்குழு
|