கலப்பட நீர் இனி குடிநீர்!
பீகாரிலும் மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களைப் போலவே தீவிர குடிநீர் மாசுபாடு பிரச்னை உண்டு. பீகாரிலுள்ள சுலப் நிறுவனம் ‘சுலப் ஜல்’ திட்டத்தின் அடிப்படையில் கலப்பட நீரை குடிநீராக்க முயற்சித்து வருகிறது. இலவசமல்ல; ஒரு லிட்டர் குடிநீர் 50 பைசா என்ற விலையில். தினசரி ஏரி அல்லது குளங்களிலிருந்து பெறப்படும் மாசுபட்ட நீரை சுத்திகரித்து மிகக் குறைந்த விலையில் விற்பதே சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் பிண்டேஸ்வர் பதக்கின் உயரிய நோக்கம். தினசரி 8 ஆயிரம் லிட்டர் நீர் என்பது இப்போதைய இலக்கு. 20 லட்ச ரூபாயில் இதற்கான தொழிற்சாலை அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
 கங்கையின் மகன்!
உத்தராகண்ட் மாநிலத்தின் தேவ்பிரயாக் பகுதியைச் சேர்ந்த அர்விந்த்சிங் ஜியால், கங்கையைச் சுத்தப்படுத்தும் செயல்பாட்டில் 20 பேர் கொண்ட தன்னார்வலர் டீமுடன் ஓராண்டுக்கும் மேலாக உழைத்து வருகிறார். நமாமி கங்கே திட்டத்தின் கீழ் கங்கையை சுத்தப்படுத்தும் செயல்பாடு (NMCG) இது. ஆற்றின் படுகையிலிருந்து குப்பைகளை அகற்றுவது, மரக்கன்றுகளை பதியமிடுவது, சூழல் பட்டறைகளை நடத்துவது என அர்விந்தின் பணிகள் பரபரக்கின்றன. 427 பேர் கொண்ட பிரகாரி எனும் தன்னார்வலர்கள் குழு, உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய கங்கை வழித்தடங்களிலுள்ள மாநிலங்களிலும் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பான்கார்டு சீர்திருத்தம்!
விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் வளர்ப்புக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் பெண்கள்,பான்கார்டுகளில் முன்னாள் கணவர் அல்லது தங்கள் தந்தை பெயரை பயன்படுத்த அவசியமில்லை என்ற சீர்திருத்தத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகாகாந்தி நிதித்துறையிடம் முன்மொழிந்துள்ளார். நிதியமைச்சர் பியூஷ் கோயலுக்கு மேனகா காந்தி எழுதி யுள்ள கடிதத்தில் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். பெண்கள்நல அமைச்சகத்தின் முயற்சிக்கு தேசிய பெண்கள் கமிஷனைச் சேர்ந்த ரேகா சர்மா, பெண்களை முன்னேற்றும் முயற்சி என்று கூறி பாராட்டியுள்ளார் .
-தொகுப்பு: ரோனி
|