நேர்மையானவனுக்கு இன்னொரு பெயர் திமிரு புடிச்சவன்!
‘‘படத்தோட பெயர் ‘திமிரு புடிச்சவன்’. இதுதான் கதைக்குப் பொருத்தமாக இயக்குநர் கணேஷா சொன்ன தலைப்பு. மற்றபடி வேண்டி விரும்பியெல்லாம் இதுமாதிரி தலைப்பு வைக்கிறதில்லை. சில ஸ்கிரிப்ட்தான் நம்மை உள்ளே கொண்டு போய் நிறுத்தும். ‘துருதுரு’னு இருந்து ஆழமாக இறங்கிப் பார்க்கச் சொல்லும். இயக்குநருக்குச் சில ஆரம்பப் புள்ளிகள் கிடைச்சு, அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும். அப்படிப் பார்த்தால் இது நல்ல கமர்ஷியல். சீன்கள் விறுவிறுன்னு போனது. சரின்னு முடிவு பண்ணி உடனே இறங்கிட்டேன். இப்ப த்ரில்லரில் கூட காமெடியை எதிர்பார்க்கிறாங்க. இந்தக் காலத்துக்கு ஏற்றபடி சகல அம்சங்களும் நிறைந்த களம்னு ‘திமிரு புடிச்சவனை’ச் சொல்லலாம்...’’ அருமையாகப் பேசுகிறார் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமா இயக்குநர்களின் விருப்பப் பட்டியலில் தொடர்ந்து பயணிப்பவர்.
 எக்கச்சக்க போலீஸ் படங்கள் இருக்கு. நீங்களுமா..?
இது வேற கதை; வேற கலர். நீங்க சொன்ன ஒவ்வொருத்தரும் அவங்களுக்குரிய கேரக்டர் நடிப்பை அதில் வைச்சாங்க. காதல், ஆக்ஷன், வேகம், எமோஷன், குட்டியா புதுமைனு எல்லாமே ‘திமிரு புடிச்சவன்’ல இருக்கு. அடிதடியா, அதிரடியா, ஆக்ஷனா ஒரு படம் பண்ணணும்னு ஆசை. போலீஸ் கதையா 100 படம் பார்த்திருப்பீங்கதான். ‘திமிரு புடிச்சவன்’ ட்ரீட்மென்ட்டில் பின்னியெடுக்கிற கதை. தீப்பிடிக்கிற ரகத்தில் திரைக்கதை இருக்கு.
நான் உறுதியாக நினைக்கிற ஒரு விஷயம், நம்ம கையிலே ஒண்ணுமே இல்லை. ஹீரோ நினைச்சு ஒரு படம் ஓடப் போறதில்லை. அது நல்லாயிருந்து, பார்க்கிறவங்க மனசுக்குப் பொருந்தி இருந்தாதான் ஓடும். எல்லாமே டைரக்டர் கொடுக்கப்போகிற விதம்தான். அந்தக் கோர்வைதான். மத்தபடி நடிகர்கள் எல்லாம் பொம்மைகள்தான். இந்த மாதிரி போலீஸ் கதைக்கு உடற்பயிற்சி அவசியம்னு பட்டது. அதில் தீவிரமாக இருந்திருக்கேன். இது போலீஸ்தானான்னு சந்தேகப்படுகிற மாதிரி இருந்திடக்கூடாது. மத்தபடி அதற்காக தீவிரமாக ஹோம் ஒர்க் செய்திருக்கேன் என்பதெல்லாம் இல்லை. நான் போலீஸாக இந்தால் எப்படியிருக்கும்... அப்படித்தான் இருக்கும் ‘திமிரு புடிச்சவன்’. நல்ல கதை கையில் இருக்கும்போது, காத்துக் கிடக்க வேண்டிய அவசியமில்லை பாருங்க... அதனால் உடனே இறங்கி படத்தை முடிச்சிட்டேன்.
 ‘திமிரு புடிச்சவன்’ எப்படி இருப்பான்?
இப்ப நீங்களே பாருங்க, போலீசை யாரும் சுத்தமாக மதிக்கிறதில்லை. நம்ம எல்லோருக்கும் ஒரு நெருக்கடி, அபாயம், பிரச்னைன்னா அவங்கதான் வந்து முதலில் நிற்கிறாங்க. ஏன், நமக்கே பாதுகாப்பு வேணும்னா அவங்ககிட்டே போய்த்தான் நிக்கணும். குறைந்த சம்பளம் வாங்கிட்டு வெயில், மழை, குளிர்னு அவங்க சளைக்காமல் நின்னு வேலை பார்க்கிற கஷ்டத்தை அவங்களாக இருந்து பார்த்தால்தான் தெரியும்.
வில்லனுக்கு தப்பு பண்றது மட்டும்தான் வேலை. அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். போற போக்கில் வயித்துல கத்தியை இறக்கிட்டு போறது எல்லாம் இப்ப சர்வசாதாரணம். அவங்களைத் தேடுறது, இனம் காண்றது, அலைஞ்சு திரியுறது பெரும்பாடு. கார்ல வந்திட்டு போற பெரிய போலீஸ் அதிகாரிகளைப் பத்தி இந்தப் படம் பேசலை. அதற்கடுத்து அடித்தட்டு போலீஸுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கு. அவங்க அதிக வேலை செய்தும், கஷ்டப்பட்டும், அதற்கான மரியாதை இல்லை.
இங்கே வில்லன் கெத்தா இருக்கான். வில்லன்களுக்கு பயப்படுகிறவங்களுக்கு போலீஸ்காரங்க கிட்டே பயம் இல்லை. ஒரு நல்ல போலீஸ் எப்படி இருப்பான், மக்கள்கிட்டே இருந்து பெரிய மரியாதையைப் பெற என்ன பண்ணுவான், இவன் எவ்வளவு நேர்மையானவன்னு காட்டுறதுதான் ‘திமிரு புடிச்சவன்’. நீங்க ஒரு இடத்துல கூழைக்கும்பிடு போடாம, ஜால்ரா அடிக்காம, தன்னிச்சையா செயல்படுங்க... உங்களைக் கூட ‘திமிரு புடிச்சவன்’னு சொல்வாங்க. நேர்மையானவனுக்கு இன்னொரு பெயர் ‘திமிரு புடிச்சவன்’.
 போலீஸாக நடிக்கிறது சுலபமாக இருக்கா?
எனக்கு போலீஸ் உடையை மாட்டிவிட்டால், நானே போலீஸாக இருந்தால் எப்படியிருக்கும்! அப்படியிருக்கு. நீங்க வெளியே பார்க்கிற போலீஸ்காரங்க அவங்க வேலையை பார்த்துக்கிட்டேதானே இருக்காங்க. நடிச்சுக்கிட்டா இருக்காங்க? அப்படித்தான் இதில் போலீஸாக, அவங்க வாழ்க்கையை கொஞ்சம் வாழ்ந்து பார்த்திருக்கேன். எனக்கு வராத விஷயங்களை நான் இப்பெல்லாம் முயற்சி பண்ணி பாக்கிறதில்லை. நான் நானாகவே ஒரு போலீஸ்காரனாக இருந்திருக்கேன். டைரக்டர் சொன்னபடி உடம்பை இறுக்கி, முறுக்கி, மீசையைச் செதுக்கி நின்னேன்.
ஹீரோயின் நிவேதா பெத்துராஜ்...
இதில் அவர் தேவைப்பட்டார். ரொம்ப அருமையாக அவங்க வேலையை முடிச்சுக் கொடுத்தாங்க. ஷூட்டிங்கிற்கு வந்தோம், நிறைவாக நடிச்சு கொடுத்திட்டுப் போனோம்னு இருக்காங்க. நிச்சயம் அவங்க இன்னும் ஒரு பெரிய ரவுண்ட் வருவாங்கன்னு தோணுது. எங்களுக்கான பாடல்கள் இருக்கு. இசையை நானே கவனிச்சிருக்கேன். படத்தின் ஒவ்வொரு இடமும் மனதிற்குள் இருப்பதால் தேவையான இடங்களில் பாடல்களை அனுமதிக்க முடிந்தது. மனதிற்கு இசைவான பாடல்களை ஏக்நாத்தும், அருண்பாரதியும் கொடுத்திருக்கிறார்கள். பாடல்களுக்கான ரிச்னஸை நாங்கள் காட்சிகளில் கொடுக்க வேண்டியதாயிற்று. கேமரா மேன் ரிச்சர்டின் உழைப்பு அப்படியே ஃப்ரேமில் கண்கூடாகத் தெரியுது. ‘நல்ல துவக்கமே பாதி வெற்றிக்குச் சமம்’னு சொல்வாங்க. அப்படித் துவங்கி, முழுவதுமாகப் பயணமாகி, வெற்றிக்கு அருகிலிருக்கோம். ஒரு நல்ல போலீஸ்காரனின் அருமையான இடத்தை காட்டியிருக்கோம். மக்கள் பார்த்திட்டு சொல்லணும். அந்த நாளுக்காக காத்திருக்கோம்.
-நா.கதிர்வேலன்
|