வறண்டாய் வாழி பாலாறே...என்று பாட வேண்டுமா..? கொந்தளிக்கும் வட தமிழக மக்கள்



ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வட தமிழகத்தை வளப்படுத்திய நதிகளில் பிரதானமானது பாலாறு. கர்நாடக மாநிலத்தின் நந்திக் குன்றுகளில்  உற்பத்தியாகி கோலார் வழியாக ஆந்திரத்தில் நுழைந்து, தமிழகத்துக்கு வருகிறது. கர்நாடகாவில் 93 கி.மீ. தூரமும் ஆந்திராவில் 33 கி.மீ.  தொலைவும் தமிழகத்தில் 222 கி.மீட்டரும் பாயும் குன்றா வளங்கொண்ட பெருநதி இது. ஆனால், இந்த நதி இன்று குற்றுயிரும் குலை  உயிருமாகத் தன் இறுதி மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு ஊர்கிறது. ஆங்காங்கே குட்டையாகத் தேங்கியும், ஓடையாகச் சிறுத்தும்,  சாக்கடையாகப் பொசிந்தும் தவழ்கிறது.

தமிழகத்தில் பாலாறு பாழாகப் போனதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, எல்லா தமிழக நதிகளுக்கும் நேர்ந்த சோகமான மணல்  கொள்ளை. இன்னொன்று, பாலாற்றுக்கே பிரத்யேகமான தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள். தமிழகத்தில் நுழையும் பாலாறு  வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, ராணிப்பேட்டை, அணைக்கட்டு, செய்யாறு, செங்கல்பட்டு வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கிறது. இவை  அனைத்துமே பாலாற்றின் படுகைகள்தான். செய்யாற்றில் பாலாற்றின் ஏழு துணை நதிகள் சங்கமித்துப் பிரவாகிக்கும். இந்த மொத்தப்  படுகையும் அரை நூற்றாண்டு தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் சூழல் கெட்டு மழையை இழந்துவிட்டது.

விளைவு, பெரும் பாலையாகிப்போனது பாலாற்று மணல் படுகை. கடந்த இருபது ஆண்டுகளாக மணல் கொள்ளையர்களால் ஒட்டச்  சுரண்டப்பட்டாயிற்று. இந்தப் பகுதி விவசாயத்தின் ஆதார பாசனமாக இருந்த பாலாறு இல்லாமல் போனதால் விவசாயமும்  அருகிப்போயிற்று.தோல் பதனிடும் தொழில் இந்தியாவுக்கு அந்நியச் செலாவணியை வாரி வழங்கும் பிரதான தொழில்களில் ஒன்று.  உலகம் முழுதும் தோல் பொருட்களுக்கான சந்தை நாள்தோறும் பெருகிக்கொண்டே இருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா,  அர்ஜெண்டினா, தாய்லாந்து, வங்க தேசம் ஆகிய நாடுகளில்தான் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.

இந்திய அளவில் சுமார் எழுபத்திரண்டு சதவீதம் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் அமைந்துள்ளன. இவற்றில்  வாணியம்பாடி மற்றும் வேலூருக்கு இடையிலான பாலாற்றுப் படுகையில் மட்டும் எழுநூறுக்கும் மேற்பட்ட மிகப்பெரிய தோல் பதனிடும்  தொழிற்சாலைகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பாலாற்றுப் படுகையில் மட்டும் எழுபது சதவீதம்  உள்ளன.எழுபது வருடங்களாகப் பாலாற்றுப் படுகையில் தோல் பதனிடும் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. பாலாற்றில் கிடைத்த வளமான  தண்ணீரோடு இயற்கையான பொருட்களைக் கொண்டு விலங்குகளின் தோலைச் சுத்தம் செய்து பதப்படுத்தும் முறைதான் ஆரம்பகால  வழக்கமாக இருந்தது.

அதிகமான தண்ணீர் தேவைப்படும் முறையாக இருந்தாலும் இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரிய கேடுகள் ஏதும் நேரவில்லை. தொடக்க காலத்தில் இருந்த தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ப செமி ஃபினிஷ்டு லெதர்களே இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.  தொழில்துறை வளர வளர இங்கு ஃபுல் ஃபினிஷ்டு லெதர்களையும் உற்பத்தி செய்தனர். செயற்கையான வேதிப் பொருட்கள் கலந்து பதப்படுத்தும் முறையும் உருவானது.இன்று தோல் பதனிடும் வேலையானது பல்வேறு கட்டங்களில் நடைபெறுகிறது. சோடியம் குளோரைடு,  சோடா, சோடியம் சல்பேட், சல்பியூரிக் ஆசிட், குரோமியம் சல்பேட் என நூற்று எழுபதுக்கும் மேற்பட்ட ரசாயனங்களைப்  பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோ தோலைப் பதப்படுத்த சராசரியாக முப்பத்தைந்து லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இப்படிப்  பயன்படுத்தப்பட்ட தண்ணீர், கழிவு நீராகிறது. இந்த மொத்தத் தண்ணீரையும் பாலாற்றில்தான் திறந்துவிடுகிறார்கள்.

தோல் பதனிடும் தொழிற்சாலையின் டேனரியிலிருந்து திறந்துவிடப்படும் கழிவு சுற்றுவட்டாரத்தில் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு  நிலத்தின் வளத்தைப் பாதிக்கிறது. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள மண் மலடாகிவிடுகிறது. நிலத்தடி நீர் கானலாகிறது. மழைக்  காலங்களில் இதன் பாதிப்பு இன்னமும் வீரியமாகிறது. நெல், வாழை, கரும்பு, தென்னை எனப் பாலாற்றின் படுகையை நம்பி இருந்த பயிர்  சாகுபடியும் படிப்படியாகக் குறையத் தொடங்கின. பாலாற்றுப் படுகையில் மழைப்பொழிவு குறைந்ததால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக்  குறைந்தது. இன்று இந்தப் பகுதியில் ஆயிரம் அடிகள் போர் போட்டாலும் குடிப்பதற்குக் கூட நீர் கிடைக்காத நிலை சில இடங்களில்  நிலவுகிறது. இவை அனைத்துமே தோல் தொழிற்சாலைகள் தந்த பரிசுதான்.

கடந்த 1975ம் ஆண்டு பாலாற்றுப் படுகையில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான வேதிப் பொருட்களைத்  தயாரிக்க ராணிப்பேட்டை சிப்காட்டில் க்ரோமேட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை தமிழக அரசு நிறுவியது. இங்கு, சோடியம்  பை குரோமேட், குரோமியம் சல்பேட், சோடியம் சல்பேட் போன்ற மோசமான விளைவு களை உருவாக்கும் வேதிப் பொருட்கள்  தயாரிக்கப்பட்டன. இந்த ஆலையில் இருந்து ஒரு காலத்தில் அன்றாடம் முப்பது டன் கழிவுகள் வெளியானது. இந்தக் கழிவுகளை இந்தத்  தொழிற்சாலை வளாகத்திலேயே கொட்டினர். இப்படியான, கழிவு களை அப்புறப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதும் அப்போதும் அரசிடம்  இல்லை; இப்போதும் அது இல்லை.

இன்று அந்த அரசு நிறுவனம் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் ஊற்றி மூடப்பட்டுவிட்டது. ஆனால், இன்றும் அந்த இடத்தில் கழிவுகள்  அப்படியே எஞ்சியிருக்கின்றன. மழை வரும் காலங்களில் எல்லாம் அந்த வேதிக் கழிவுகள் அதன் சுற்றுவட்டாரம் முழுதும் நிலத்தில்  பரவிக் கலந்து கொண்டே இருக்கின்றன. இந்தக் கழிவுகள் மண்ணைக் கெடுத்து வளத்தை அழிப்பதோடு நிலத்தடி நீரையும்  பாழாக்குகின்றன. சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே ராணிப்பேட்டை நகரம் மனிதர்கள் வாழத் தகுதியில்லாத நகரங்கள்  பட்டியலில் சர்வதேச இடத்தைப் பிடித்துவிட்டது. அமெரிக்காவின் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய புள்ளிவிவரம் இதைத்  தெரிவிக்கிறது.

சுமார் நூற்று இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவுள்ள பாலாற்றின் படுகையை தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கபளீகரம்  செய்துள்ளன. இதனால் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல கிராமங்கள் சாகுபடிக்கு  மட்டுமல்ல, குடிப்பதற்கே நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலாற்றுப் பிரச்னை தொண்ணூறுகளில் பெரிதாக வெடித்தபோது உச்சநீதி  மன்றத்துக்கு வழக்கு சென்றது. பாலாற்றின் நிலைக்குக் கவலை தெரிவித்த உச்சநீதி மன்றம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு  வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அத்துடன் தமிழக அரசு இந்த கழிவு நீரை முறையாக அப்புறப்படுத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதன்படி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில்  ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்தக் குழு இன்று வரை பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்  சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.l

-இளங்கோ கிருஷ்ணன்