COFFEE TABLE
அமெரிக்காவில் அஞ்சலி
ஆனந்தத்தில் மிளிர்கிறார் அஞ்சலி. தமிழிலும், தெலுங்கிலும் கணிசமான படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர், தனது பிறந்த நாளை அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். இந்த பர்த் டே ஸ்பெஷலாக இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை தட்டிவிட, ஆயிரக்கணக்கில் லைக்குகளும், வாழ்த்துகளும் அஞ்சலிக்குக் குவிந்துள்ளன.
 இந்தியர்களின் அடையாளம் கண்ணாடி!
இந்தியாவில் மூக்குக் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு. ‘‘வேலையின் நிமித்தம் அதிக நேரம் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்திருப்பது, எந்நேரமும் ஸ்மார்ட்போனில் மூழ்கிக் கிடப்பது, தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றால் மிக இளம் வயதிலேயே இந்தியர்கள் கண்ணாடியை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்...’’ என்கின்றனர் மருத்துவர்கள். ‘‘இன்னும் சில வருடங்களில் கண்ணாடி அணியாதவர்களை விட, கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருக்கும்...’’ என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
பிகினியில் ஆப்தே
இன்ஸ்டாவில் பத்து லட்சம் ஃபாலோயர்களைத் தாண்டிவிட்டார் ராதிகா ஆப்தே. தனது ரசனைக்குரிய விஷயங்களை வெளிப்படையாகப் பேசி வருவதே அத்தனை லட்சம் ரசிகர்களை ஈர்க்க காரணம். கூடவே, அடிக்கடி நீச்சலுடை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது அவரது வாடிக்கை. சமீபத்தில் அப்படியொரு போஸை தனது நெருங்கிய தோழியுடன் கொடுக்க, ஒரே நாளில் 60 ஆயிரம் லைக்குகளைத் தாண்டி வைரலாகி விட்டது அந்தப் புகைப்படம்.
 உலகின் யங் மேன்!
யேன் பெட்கோவ் செய்த சாதனைதான் பல்கேரியாவில் ஹாட் டாக். உலகின் பழமையான, ஆழமான ஏரிகளில் ஒன்றான ஓக்ரித் ஏரியில் 3,380 மீட்டரை அசால்ட்டாக நீந்திக் கடந்திருக்கிறார் யேன். இதிலென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? எல்லோரையும் போல ஜாலியாக யேன் நீந்தவில்லை. அவரது கை, கால்களைக் கட்டி கோணிப்பைக்குள் வைத்து ஏரியில் போட்டுவிட்டனர். அந்தப் பைக்குள் இருந்தபடியே கை, கால்களை மெதுவாக அசைத்து இவ்வளவு தூரத்தைக் கடந்திருக்கிறார்! இது கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றுவிட்டது. யேனுக்கு வயது 64 என்பதுதான் இதில் ஹைலைட்.
வந்தாச்சு மினி புரொஜெக்டர்
சினிமா காதலர்களுக்காக ‘சோனி’ நிறுவனம் ‘MP-CD1’ என்ற புரொஜெக்டரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 280 கிராம் எடை, 5,000mAh பேட்டரி திறன், 854 X 480 ரெசல்யூசன் என்று பல்வேறு வசதிகளுடன் இந்தியர்களுக்காகவே இதனை வடிவமைத்திருக்கிறது ‘சோனி’. ஸ்மார்ட்போன், லேப் டாப் உடன் இதை கனெக்ட் செய்துகொள்ள முடியும். ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் போதும், இரண்டு மணி நேரம் இடைவிடாமல் இயங்கும். இதன் விலை ரூ.29,990.
-குங்குமம் டீம்
|