காட்ஃபாதா் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 69

அது 1993ஆம் ஆண்டின் பிற்பாதி. எல்லாம் வல்ல பாப்லோ எஸ்கோபாரே, தன்னைக் காத்துக்கொள்ள தடுமாறிக் கொண்டிருந்தார்.  கிட்டத்தட்ட அவர் தனிமைப்பட்டிருந்த காலம் அது.தன்னுடைய குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.  கொலம்பியா முழுக்கவே தொலைபேசி அழைப்புகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. மொபைல் போனில் பேசி முடித்த  அடுத்த சில நிமிடங்களிலேயே, இடத்தை சரியாகக் கண்டுபிடித்து கமாண்டோ படை சுற்றி வளைத்து நிற்கும்.பாப்லோவின் சகாக்கள்  பெரும்பாலும் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டு விட்டார்கள். மீதியிருந்த சிலரும் சிறையில் இருந்தனர். பல்லாயிரம் கோடி ரூபாய்  பணத்தை ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்தார். இன்னமும் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் அவரது பெயர் நீடித்துக்  கொண்டிருந்தது.

ஆனால், அந்தப் பணத்தை பாப்லோவால் பயன்படுத்த முடியாத அளவுக்கு நெருக்கடி. ஆற்றிலே அவ்வளவு நீர் ஓடினாலும், அள்ளிக்கூடக்  குடிக்க முடியாத அவஸ்தை.இனியும் அரசோடு ஓர் ஒப்பந்தத்துக்கு வருவதற்கான வாய்ப்பு துளி கூட இல்லை என்பதை பாப்லோ  உணர்ந்தார். மெதிலின் நகர் முழுக்கவும் வலைவீசி கொலம்பியா, அமெரிக்கா இரு நாடுகளோடு இணைந்து அவரது எதிரிகளும் தேடிக்  கொண்டிருந்தனர்.பாப்லோவின் மனைவி மற்றும் குழந்தைகள் ஓர் நட்சத்திர விடுதியில் அரசாங்கத்தால் தங்கவைக்கப்பட்டு கைதிகளாக  மாறிப்போயிருந்தார்கள். தன்னை விலையாகக் கொடுத்து, அவர்களையாவது மீட்க முடியுமா என்று ஒரு சராசரி குடும்பத் தலைவனாக  அவர் பரிதவித்துக் கொண்டிருந்தார்.“நிபந்தனை விதிக்கக்கூடிய இடத்தில் நீங்கள் இல்லை. முதலில் சரணடையுங்கள். பிறகு, மற்ற  விஷயங்களைப் பேசிக் கொள்ளலாம்...” என்று கொலம்பிய அதிபர் கறாராகச் சொல்லிவிட்டார்.

ஒருவேளை சரணடைந்தாலும், தன் குடும்பத்தின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்குமா என்கிற சந்தேகம் பாப்லோவுக்கு  இருந்து வந்தது.அரசாங்கத்தோடும், எதிரிகளோடும் போரிட்டு மடிவதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்பதை உணர்ந்தார். தான், ஒரு  போதைக் கடத்தல்காரனாக இருப்பதால்தான் கேள்வி வரைமுறையின்றி தன்னை அரசாங்கம் வேட்டையாடுகிறது, எனவே, மக்களுக்கான  போராளியாகத் தன்னை மாற்றிக்கொண்டால், சேகுவேராவைப் போன்று பெயரெடுக்கலாம்; தன் மீது கைவைக்க அமெரிக்காவே அஞ்சும்  என்றும் திட்டமிட்டார்.‘அமெரிக்க அரசின் அடிவருடியாக மாறி, மக்களை அலைக்கழிக்கும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும்  கொலம்பியாவுக்கு எதிராகப் போரிடுவோம்...’ என்று திடீரென முழங்கினார். போர் உத்தியாக, சேகுவேரா பாணியில் ஒரு கொரில்லா  இயக்கத்தைக் கட்டமைத்தார். இந்த அமைப்புக்கு Antioquia Rebelde என்று பெயர். இந்த இயக்கத்தின் மூலமாக இளைஞர்களை ஒன்று  சேர்த்து அரசுக்கு எதிரான கலகங்களை நடத்தி, தன்னை புரட்சி கரமான தோழராக நிலைநிறுத்திக் கொள்வதே அவரது திட்டம்.

‘‘ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அலை அலையாக எங்கள் கொரில்லாக்கள் போரிடுவார்கள்...’’ என்று வீரமுழக்கமிட்டார்.“நாம் சுதந்திரமான  கொலம்பியாவை நிறுவ இருக்கிறோம். அந்த நாட்டில் அமெரிக்காவின் தலையீடு கொஞ்சம்கூட இருக்காது. நம் சுதந்திர நாட்டில் வறுமை  என்கிற சொல்லுக்கே அர்த்தமில்லை. அந்த நாட்டின் அதிபராக, மக்களை பொன்னுலகில் வாழவைப்பேன்...” என்று வாக்குறுதி அளித்தார்  பாப்லோ எஸ்கோபார்.“இப்படிப்பட்ட கிரிமினல் இயக்கங்கள் அரசியலில் ஈடுபடுவதை, கொலம்பிய அரசு விரும்பவில்லை...” என்று  ஆரம்பத்திலேயே கொலம்பிய அதிபர் இந்த முயற்சியைக் கிள்ளியெறிய முனைந்தார்.

யாரெல்லாம் எஸ்கோபாரின் பின்னால் அணிசேருகிறார்கள் என்பதை உளவுத்துறையினர் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக்  கடுமையான மிரட்டல்கள் தரப்பட்டன.பாப்லோ அப்போது மெதிலின் நகரின் கால்பந்து மைதானம் ஒன்றை ஒட்டியிருந்த ஒரு  மிகச்சாதாரணமான அபார்ட்மென்டில் தங்கியிருந்தார். டாக்ஸிகளில் பயணிக்கும்போது மட்டுமே மொபைல் போனை பயன்படுத்துவார்.  இதனால் எந்த இடத்திலிருந்து பேசுகிறோம் என்கிற சிக்னல் சரியாகக் கிடைக்காமல் தப்பிக்க முடியும்.பாப்லோவுக்கு கூட மாட  ஒத்தாசையாக இருந்தவர் லிமோன் என்கிற வயதானவர். இவர்தான் அவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார். வெளியே  அழைத்துச் செல்வதில் தொடங்கி, அத்தனை ஏற்பாடுகளையும் லிமோன்தான் செய்துவந்தார்.

அடிப்படையில் லிமோன் ஒரு மாந்திரீகர். ஸ்பானிய மொழியில் அடிக்கடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருப்பார். பில்லி, சூனியம்,  பேய் ஓட்டுதல் போன்ற விஷயங்களில் அவர் கில்லாடி. பாப்லோ, ஒவ்வொரு செயலைச் செய்யத் தொடங்கும்போதும் நேரம், காலம்  பார்த்து சகுனம் சொல்லிக் கொண்டிருப்பார். தேவையான பரிகாரங்களையும்சொல்வார். பாப்லோவுக்கு இதிலெல்லாம் பெரிய ஈடுபாடு  இல்லை. அவர் லிமோனை சீரியஸாகவும் எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், லிமோன் மனம் புண்படக்கூடாது என்பதில் மட்டும்  கொஞ்சம் கவனமாகவே இருப்பார்.

1993, நவம்பர் மாதத்தின் கடைசி நாள்.பாப்லோ, நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். கருவண்டு ஒன்று அவரைச் சுற்றிச் சுற்றி வந்து,  ரீங்கரித்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.முதலில் பாப்லோ அந்தவண்டினைத் துரத்த கையை இப்படியும் அப்படியுமாக  அசைத்தார். வண்டோ கொஞ்சமும் அசராமல் பாப்லோவின் முகத்தையே சுற்றிவர ஆரம்பித்தது.உடனே பேப்பரை நான்காக மடித்து  வண்டினை வேட்டையாட எழுந்தார். இவருடைய தாக்குதலில் இருந்து லாவகமாக வண்டு தப்பித்துக்கொண்டே இருந்தது.ஒரு சாதாரண  வண்டு, காட்ஃபாதர் பாப்லோவை அலைக்கழிப்பதா என்று சிரித்தவாறே எழுந்தார். வண்டை விரட்டத் தொடங்கினார். சிறுவயதில் பட்டாம்  பூச்சிகளை வேட்டையாடிய நினைவுகள் பாப்லோவுக்கு வந்தது. அந்நிமிடங்களில் சிறுவனின் குதூகலத்துடன் அவர்  செயல்பட்டார்.சமையலறைக்குள் இருந்து இந்த கூத்தினைக் கண்ட லிமோனின் முகம் இருளடைந்தது.

“உங்களைக் கருவண்டு சுற்றி வருவது சரியல்ல. இது துரதிருஷ்டத்துக்கான அடையாளம்...” என்று முணுமுணுத்தார்.பாப்லோ,  வழக்கம்போல லிமோனைக் கண்டு சிரித்தார். “உங்களுக்கு எல்லாத்துக்கும் ஏதோ ஒண்ணு சொல்லிக்கிட்டே இருக்கணும்...”மறுநாள் தான்  பாப்லோவின் நாற்பத்தி நான்காவது பிறந்தநாள்.முந்தைய ஆண்டுகளில் எல்லாம் திருவிழா மாதிரி, மெதிலின் நகரம் அல்லோல  கல்லோலப் படும். இப்போதோ பாப்லோ, எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத பராரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.அரசாங்கத்தின் கண்ணில் மண்ணைத் தூவி, அவருடைய குடும்பத்தாரின் வாழ்த்து மட்டும் கடிதவடிவில் வந்து சேர்ந்திருந்தது.“நீங்கள் எங்களுடன் இப்போது இல்லை. ஆனால், எப்போதுமே உங்கள் இதயத்தில் நாங்கள் இருப்போம்...”நெகிழ்ந்து போனார் பாப்லோ.  அந்தக் கடிதத்தில் லிப்ஸ்டிக் வாயிலாக முத்தம் வைத்து அனுப்பியிருந்தார் அவரது மனைவி.அன்றிரவு, சிறிய அளவில் லிமோன் மற்றும்  லுஸ்மிலா என்கிற உறவுக்காரப் பெண்ணுடன் தன் பர்த்டே பார்ட்டியை சந்தோஷமாக ஷாம்பெயின் மது அருந்திக் கொண்டாடினார்.  நான்காவது ஒரு கிளாஸை டேபிளில் வைத்து, அதில் கொஞ்சமாக மதுவை ஊற்றினார் பாப்லோ.

“இது யாருக்கு?” என்று கேட்டார் லுஸ்மிலா.“என்னுடைய குடும்பத்துக்கு...” சொல்லும்போதே பாப்லோவின் கண்களில் கண்ணீர்.மூவரும் ‘சியர்ஸ்’ சொல்லி தங்கள் கைகளில் இருந்த கிளாஸ்களை மோதவிட்டனர். அப்போது சட்டென லிமோனின் கைகளில் இருந்த  கிளாஸ் மட்டும் நழுவிக் கீழே விழுந்தது.“ஏதோ மோசமா ஒரு சம்பவம் நடக்கப் போவுது. இது அதுக்கான முன்னெச்சரிக்கை...” என்றார்  லிமோன்.“நாம ஒண்ணும் இன்னைக்கு நைட்டே செத்துடப் போறதில்லை. வேற கிளாஸ் எடுத்து சரக்கை ஊத்திக் கொண்டாடுங்க  லிமோன்...” என்றார் எஸ்கோபார்.லிமோனின் அச்சம் அர்த்தம் நிறைந்தது. மறுநாள் அவர் அச்சப்பட்ட சம்பவம் நிகழ்ந்தே விட்டது.

(அடுத்த இதழில்
மிரட்டல் ஓயும்)
ஓவியம் : அரஸ்