நவீனமாக மாறிய மெட்ராஸ் போலீஸ்



தலபுராணம்

மெட்ராஸ் கப்பல்துறையில் முறைகேடுகளும், கடத்தல்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்தவண்ணம் இருந்தன. அதனால், கடற்கரையில்  இருந்த போலீஸ் கிளை அலுவலகத்தை மரைன் போலீஸ் பிரிவாக மாற்றினர்.தொடர்ந்து நகர காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு  பணிகள் ஒப்படைக்கப்பட்டன. குறிப்பாக, பாஸ்போர்ட் வழங்குவதும், சந்தையில் பொருட்களின் எடை, தரம், அளவு ஆகியவை சரியாக  இருக்கிறதா என்பதைக் கண்காணித்தலும், முத்திரை துறையை மேற்பார்வையிடுதலும் முக்கிய பணிகளாக இருந்தன.

இந்நிலையில், 1820ம் வருடம் தனியாக உளவுப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதற்காக நிறைய ஒற்றர்கள் பணியமர்த்தப்பட்டனர்.  இவர்கள் நகரில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தியதுடன், ரகசியமாக செய்திகளைச் சேகரித்துக்  காவல் கண்காணிப்பாளருக்கு அளித்தனர்.இதன்பிறகு அட்வகேட் ஜெனரலாக இருந்த ஜார்ஜ் நார்ட்டன் தலைமையில் போலீஸ்  சீர்திருத்தங்களுக்கென மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

ஆனால், சில எதிர்ப்புகளால் இந்தக் குழுவின் பரிந்துரைகள் முதலில் அமலுக்கு வரவில்லை. பிறகு, நார்ட்டனால் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய திருத்தங்களுடன் அமலுக்கு வந்தது.1839ம் வருடம் மெட்ராஸ் காவல் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.  முதல் பிரிவில் கருப்பர் நகரமும்; இரண்டாவது பிரிவில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மீர்சாகிப்பேட்டை, நரசிங்கபுரம்,  வாலாஜாபேட்டை, சேப்பாக்கம் பகுதிகளும்; மூன்றாவது பிரிவில் சாந்தோம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, அடையாறு  முகத்துவாரத்திலுள்ள தீவுப் பகுதிகளும்; நான்காவது பிரிவில் சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோமலேஸ்வரன் கோவில், புதுப்பேட்டை,  நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு பகுதிகளும்; ஐந்தாவது பிரிவில் பெரியமேடு, வேப்பேரி, சூளை, புரசைவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி  பகுதிகளும்; ஆறாவது பிரிவில் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, சுங்கிவீரையன்பேட்டை, ராயபுரம், காக்ரேன் கால்வாய்  பகுதிகளும் அடங்கும்.

இந்நிலையில், மெட்ராஸ் நகர காவலின் தலைமையகம் வேப்பேரியிலிருந்து எழும்பூர் பாந்தியன் சாலையில் இருந்த அருணகிரி  முதலியாரின் பங்களாவில் மாதம் 165 ரூபாய் வாடகைக்குச் சென்றது. 1856ம் வருடம் போலீஸ் சட்டம் இயற்றப்பட்டதும் நிலையான  போலீஸ் அமைப்பு நடைமுறைக்கு வந்தது.மெட்ராஸின் முதல் காவல் ஆணையராக லெப்டினன்ட் கர்னல் ஜெ.சி.போல்டர்சன்  நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவியாக துணை ஆணையர்களும், உதவி ஆணையர்களும், மற்ற காவலர்களும் நியமிக்கப்பட்டனர்.மட்டுமல்ல, அருணகிரி முதலியார் கட்டடத்தைக் காவல்துறையே 21 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி, அதில் நகர காவல் ஆணையர்  சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இந்நேரம், மாகாணத்தின் காவல் தலைவர் பதவியும் உருவாக்கப்பட்டது. அவர் தலைமை காவல் ஆணையர் என்றழைக்கப்பட்டார். இதுவே  பின்னாளில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் என்றானது.  பிறகு, காவல் சட்டத்தில் மேலும் சில கோரிக்கைகள் சேர்க்கப்பட்டு  1859ம் வருடம் மெட்ராஸ் போலீஸ் நவீனமாக உருவாக்கப்பட்டது. முதலில், மெட்ராஸ் நகர் இரண்டு மாவட்டங்களாகவும், அதில் பல்வேறு  பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதிக்கும் ஓர் ஆய்வாளர் நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக தலைமைக் காவலர் மற்றும்  காவலர்கள் காவல்நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர்.

1876ம் வருடம் மாகாண அரசு உதவி ஆய்வாளர் என்ற பதவியை நகருக்குள் புதிதாக உருவாக்கியது. இவர்களுக்கு உளவுப்பணிகள்  தரப்பட்டன. ஆய்வாளர்களுக்கும், சர்ஜென்ட்டுகளுக்கும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும்  குதிரைகள் தரப்பட்டன. அவசரத் தேவைக்காக பயிற்சி அளிக்கப்பட்ட ஆயுதப்படைகளும் தயாராகவே இருந்தன.20ம் நூற்றாண்டு  அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் சென்றது. 1902ம் வருடம் போலீஸ் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி இன்ஸ்பெக்டர்  ஜெனரல் ஆஃப் போலீஸ் பதவி கொண்டு வரப்பட்டு அவருக்குக் கீழ் ஆணையர் வந்தார்.

இந்நிலையில் 1914ம் வருடம் முதல் உலகப் போரின்போது ஜெர்மன் கப்பல் எம்டன் மெட்ராஸில் குண்டு மழை பொழிய ஒரு காவலர்  உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இந்நேரம் நகரில் கொள்ளைச் சம்பவங்களும், கலவரங்களும் அதிகரித்தன.  பொருட்கள் தட்டுப்பாட்டால் விலைகளும் உயர்ந்தன.அப்போது துணை காவல் ஆணையராக இருந்த திவான் பகதூர் பி.பராங்குசம் நாயுடு  பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். பொதுமக்களுக்கு போலீஸே அரிசி விநியோகம் செய்தது.  இதனால், 1919ல் பராங்குசம் நாயுடு காவல் ஆணையராக பதவி உயர்த்தப்பட்டார். மெட்ராஸின் முதல் இந்திய காவல் ஆணையர்  இவர்தான்.

இதற்கிடையில் நகரில் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. மகாத்மா காந்தி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் மெட்ராஸ்  மாகாணத்திலும் பரவியது. தொழிற்சாலையில் சுதந்திர வேட்கை கொண்ட பணியாளர்கள் ஒருபுறமும், தொழிற்சாலைக்கு விசுவாசமாகப்  பணியாற்றிவர்கள் மறுபுறமுமாக நிற்க கலகம் வெடித்தது. இதனால், காவல்படை குவிக்கப்பட்டு துப்பாக்கிச் சூட்டின் வழியாகக் கலவரம்  ஒடுக்கப்பட்டது.இதேநேரத்தில் காங்கிரஸும் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியது. பத்திரி கைகளும் தங்கள் பங்குக்கு ஐரோப்பிய  அதிகாரிகளால் சுரண்டப்படுவதைப் பற்றி எழுதின. காங்கிரஸ் கட்சி, ‘காவலர்கள் மற்றும் ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் வேலையை  ராஜினாமா செய்துவிட்டு காலனிய அமைப்புகளை ஒடுக்க வாருங்கள்’ என நேரடியாக அறைகூவல் விடுத்தது.

மெட்ராஸில் இரண்டு உதவி ஆய்வாளர்களும், ஒரு காவலரும் மட்டும் இதற்கு செவிசாய்த்து ராஜினாமா செய்தனர். இதனால், அரசு காவல்துறைக்கு கூடுதல் சலுகைகளும் சம்பளங்களும் வாரி வழங்கி காவலர்களைத் தக்க வைத்தது.இருந்தும் சுதந்திரப் போராட்ட வீரர்கள்  மெரினா கடற்கரையில் கூடி, போராட்டத்தில் இணையும்படி போலீஸிற்கு அழைப்பு விடுத்தனர். இதனால், அரசு ‘அதிருப்தியைத்  தூண்டுதல்’ என்ற சட்டத்தை மெட்ராஸில் மட்டும் பிரகடனப்படுத்தியது. இந்தச் சட்டத்தைக் கொண்டு மெரினாவில் துப்பாக்கிச் சூடு  நடத்தியதுடன் சத்தியாக்கிரகம் நடத்தியவர்களை அடித்து விரட்டியது. பின்னர், ஆயுத பாதுகாப்புப் படை, ‘பிரசிடென்ஷியல் ஜெனரல்  ரிசர்வ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

1929ம் வருடம் மெட்ராஸ் காவல் ஆணையராக சிறிது காலமே இருந்த சார்லஸ் பி. கன்னிங்ஹாம் காவல்துறையில் புதிய  அணுகுமுறைகளைப் புகுத்தினார். அதாவது, காவல்துறையைச் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து என மூன்றாகப் பிரித்தார்.  இன்று வரை காவல்துறை இந்தமுறையிலேயே செயல்பட்டு வருகிறது. பிறகு,  காவலர்கள் அணிந்து வந்த ஊதா கலர் சீருடைகள், காக்கி  யாக மாற்றப்பட்டன.சுதந்திரத்துக்குப் பிறகு பல்வேறு சீர்திருத்தங்களும், தொழில்நுட்பங்களும் புகுத்தப்பட்டு காவல்துறை மேலும்  நவீனமாக்கப்பட்டது.           

-பேராச்சி கண்ணன்/ராஜா

சுதந்திரத்துக்குப் பிறகு...     
                                                                                                                 
* 1951ல் இந்தியாவில் முதல்முறையாக குற்றங்களைக் கண்டறிய மெட்ராஸ் போலீஸில்தான் மோப்ப நாய் பிரிவு உருவாக்கப்பட்டது.
* 1971ல் இந்தியாவில் முதல்முறையாக காவல்துறையில், ‘போலீஸ் கம்ப்யூட்டர் விங்’ பிரிவை மெட்ராஸ் போலீஸ் தொடங்கியது. இதே  வருடம் சிஐடி சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டு தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. இதுவே பின்னாளில் க்யூ பிராஞ்ச்  என்றானது.
* 1973ல் முதல்முறையாக பெண் காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் தமிழக காவல்துறையில் பணியமர்த்தப்பட்டனர்.
* 1979ல் காவல்துறையின் ஒட்டுமொத்தத்துக்கும் தலைமையாக டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் என்ற பதவி உருவாக்கப்பட்டது.  இ.எல்.ஸ்ட்ரேசி என்பவர் முதல் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
* 1992ல் முதல் மகளிர் காவல்நிலையம் மெட்ராஸ் ஆயிரம் விளக்கில் உருவாக்கப்பட்டது. இதற்குத் தலைமையாக ஒரு பெண்  ஆய்வாளரும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் வந்தன.
* 2010ல் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக லத்திகா சரண் பொறுப்பேற்றார்.
* 2013ல் எழும்பூரிலிருந்து வேப்பேரியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திற்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மாறியது.