கட்டுப்பாடு கட்டுப்பாடு
எஸ்.ராமன்
செய்தி: வாட்ஸ்அப் மெசேஜுகளை ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடு.ரைட். வேறு எதற்கெல்லாம், இந்த மாதிரி கட்டுப்பாடுகளைப் புகுத்தி செக் வைக்கலாம்?
 கெடுப்பது ஒழி
அதிக நாள்கள் ஃப்ரிஜ்ஜில் வைக்கப்படும் உணவு சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என கூலாக அறிவுரை சொன்னாலும், விடாப்பிடியாக, தங்கள் சமையல் படைப்புகளுக்கு தாங்களே தண்டனை அளித்து அவைகளை ஜாமீனில் வெளிவரமுடியாத பாத்திரங்களில் அடைத்து குறைந்தது ஐம்பது நாட்களாவது குளிர் சிறையிலிட்டு வேடிக்கை பார்க்கும் பெண்களுக்கு ஒரு செக் தேவை! ஐந்து பரிமாறுதல்களுக்கு மேல் மீந்து போன உணவுப் பொருள்களை ஃபிரிஜ்ஜுக்குள் சிறையிலிடு பவர்கள் அந்த குளிர் சேவைக்கு தனி ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்று ரூல் போட்டால் ஃபிரிஜ் இன்ஸ்பெக்டர்கள் என்ற பதவி உருவாக்கப்பட்டு அதற்கான வேலை வாய்ப்புகள் பெருகும். ஆண்களின் மனம் குளிரும். இதற்காக, ஒவ்வொரு சமையல் படைப்பின் மீதும், மருந்துகள் போல் தயாரிப்பு தேதி குறிப்பிடப்பட வேண்டும்!
செய்வன திருந்தச் செய்
கணவன் தேய்த்துக் கழுவிய பாத்திரங்களை மேற்பார்வையிடும் மனைவி எந்த பாத்திரத்திலாவது எண்ணெய் கறை காணப்பட்டால் அதை சுட்டிக் காட்டி கணவனைக் கழுவி ஊற்றுவது குடும்பங்களில் வாடிக்கையான ஒன்று.ஆனால், அந்த ‘கழுவி ஊற்றுவது’ நாள் முழுவதும் தொடர்ந்து கணவனை பேயாக விரட்டி இம்சைப் படுத்தும். அதற்கு செக் வைக்க ஒரு குற்றத்துக்கு ஐந்து முறைக்கு மேல் கணவனைக் கழுவி ஊற்றக்கூடாது என மனைவிக்கு ரூல் போடலாம்.
இதற்காக, க.ஊ. கணக்குப் புத்தகம் ஒன்றை கணவன் மெயின்டெயின் செய்யவேண்டியது அவசியம். இம்மாதிரி தொடர் பேரிடிகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக அளவுக்கு அதிகமாக சோப்பு திரவங்களை பயன்படுத்தி கணவன் பாத்திரங்களை துலக்க முற்படும்போது சோப்பு நுரை, கடல் அலையாக கிச்சன் முழுவதும் புரண்டோடி அதற்கு இன்னொரு தொடர் க.ஊ. காத்திருக்கும் என்பது தனி எபிசோட். என்றாலும் இதனால் பாத்திரங்கள் கழுவும் சோப்புகளின் உற்பத்தி பெருகி அந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் ‘பளிச்’சென்று கூடும்.
 தூக்கி வினை செய்
கடந்த வருட நவராத்திரி கொலு சமயத்தில் வீட்டுக்கு வந்தவருக்கு தனக்கு இன்னொருவர் சில வருடங்களுக்கு முன்பு பரிசாக அளித்த ரவிக்கை பிட்டை வெற்றிலை பாக்கோடு பரிசாகக் ொடுத்து மகிழ்ந்திருப்போம். ஆனால், அதே ரவிக்கை பிட் இந்த நவராத்திரியின் போது இன்னொருவரிடமிருந்து நமக்கே பரிசாகத் திரும்பி வருவதைக் கண்டு திருதிருவென விழிப்போம்!
பண்டிகைக் காலங்களில் இம்மாதிரி மன அதிர்ச்சிகளை தவிர்க்க ஒரு ரவிக்கை பிட் ஐந்து பேர்களுக்கு மேல் சுழற்சி முறையில் பரிசாக பாஸ்ஆன் செய்யப்படக்கூடாது; அப்படி செய்யப்பட்டால், அது தெய்வ குற்றமாகிவிடும் என்ற செய்தியைப் பரப்பலாம்!இதனால், ஜவுளி தயாரிக்கும் மில்களின் தயாரிப்பு அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகும். கண்காணிப்புக்காக, பரிசாக அளிக்கப்படும் ஒவ்வொரு ரவிக்கை பிட்டிலும் மறுசுழற்சி எண் குறிப்பிடப்பட வேண்டியது அவசியம்.
ஏற்பது இகழ்ச்சி
காசு கொடுத்து பேப்பர் வாங்காமல் ஓசியில் படித்தால்தான் செய்திகளின் சுவாரசியம் கூடும் என்று நினைப்பவர்கள் நிரம்பிய உலகம் இது. பஸ்ஸில் பயணம் செய்யும்போது ஒருவர் பேப்பர் வாங்கி படிக்க ஆரம்பித்தவுடன் அதை பக்கம் பக்கமாகப் பிரித்து ஓசி கேட்டு படித்து ரசிப்பவர்கள் ஏராளம்.
பயணம் முடியும்போது செய்தித் தாளின் ஒரு பக்கம் கூட அதை காசு கொடுத்து வாங்கியவர் கையில் இருக்காது.இதனால், பத்திரிகைகளின் சர்குலேஷன் குறைகிறது!இதற்கு செக் வைக்க, ஒரு செய்தித் தாளை ஐந்து பேருக்கு மேல் படித்தால் அதிலுள்ள எழுத்துகள் மறைந்துவிடும் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதனால், ஐந்தில் ஒருவராவது காசு கொடுத்து பேப்பர் வாங்கும் பழக்கம் வளரும். இந்த வளர்ச்சியால் பத்திரிகைகளின் பிசினஸ் வளர்ந்து அந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்!
ஊக்கமது கைவிடேல்
வகுப்புகளில் பாடங்களை ஃபாலோ பண்ணாமல் ஃபிகர்களை ஃபாலோ செய்து காதல் கோட்டை கட்டும் மன்மத ராசாக்கள் தேர்வுகளில் கோட்டை விட்டு வண்டி வண்டியாக அரியர்ஸ் சேமிப்பதற்கு செக் தேவை. இதற்காக ஒரே சப்ஜெக்ட்டில் ஐந்து முறைக்கு மேல் ஃபெயிலாகும் ராசாக்கள் எந்த ராணியையும் ஃபாலோ பண்ணக்கூடாது என்ற ரூல் போடலாம்.
பிரபோஸ் செய்யும் ராசாக்களிடம் அவர்களின் அரியர்ஸ் ஷீட்டுகளை கேட்டு வாங்கி சரி பார்க்க வேண்டியது ராணியின் பொறுப்பு! இம்மாதிரி அவமானங்களைத் தவிர்க்கவாவது இரவு பகலாக டீ போட்டுக் குடித்து ஃபெயிலான பேப்பரை கிளியர் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதனால், அஸ்வகந்தா, அதிமதுரம், இஞ்சி போன்ற நாட்டு மருந்துகளின் உற்பத்தியும் அதனுடன் கூடிய டீத்தூள் தயாரிப்பும் பெருகி அந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும்!
பின்குறிப்பு
மேற்கூறிய ஆத்திச்சூடி யோசனைகள் அனைத்திலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதாவது நாட்டுக்குத் தேவையான வேலை வாய்ப்புகள் ஒவ்வொரு யோசனையிலும் மறைந்திருக்கின்றன!
|