எழுத்துச் சிகரம்
கலைஞர் அவர்களைப் போன்ற எழுத்துச் சிற்பி இனிமேல் பிறந்து வளர வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. அவர் நமக்குத் தந்திருக்கும் வரலாற்றுக் காவியங்களில் தமிழ் மணக்கும். அது இன்றைய வாசகர்களுக்கும் புரியும். அதோடு அதில் தொன்மையும் தெரியும்.நான் முதன்முதலில் கலைஞர் அவர்களின் நாவலுக்கு ஓவியம் வரையும் வாய்ப்பினைப் பெற்றது ‘ராணிமுத்து’வில் வெளியான ‘வெள்ளிக் கிழமை’யில்தான்.
 ‘இளைய சமுதாயம் எழுகவே!’ என்ற அவருடைய நெடுங்கட்டுரைக்கும் ஆரம்பக் காலத்தில் வரைந்திருக்கிறேன்.வரலாறு சார்ந்த நாவல்களுக்கு திரு. சாண்டில்யன் அவர்களின் மறைவுக்குப் பிறகு எங்கே போவது என்று வாசகர்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கலைஞர் அவர்களின் சரித்திர நாவல்கள் மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்து வந்தன. ஒன்றா... இரண்டா! ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘பாயும்புலி பண்டாரக வன்னியன்’, ‘ரோமாபுரிப் பாண்டியன்’, தவிர ‘தொல்காப்பியப் பூங்கா’, ‘சங்கத் தமிழ்’, ‘குறளோவியம்’ ஆகிய அவரது படைப்புகளுக்கு ஓவியம் தீட்டும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். தொல்காப்பியம் என்றால் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை என்று சொன்னவர்களுக்கு அது புரியும் வகையில் எடுத்துச் சொன்னவர் கலைஞர்.
 குறள்களுக்கு விளக்கம் - பள்ளியில் படிக்கும்போது எனக்குப் புரிந்ததை விட அருமையாக விளக்கம் தந்திருக்கிறார்.அவருடைய படைப்புகளில் வீரம் இருக்கும்; காதல் இருக்கும்; நகைச்சுவையும் ராஜதந்திரமும் கவர்ந்திழுக்கும்.அப்படிப்பட்ட ஒரு கவிதைச் செம்மல், எழுத்துச் சிகரம் நம்மிடமிருந்து பிரிந்துவிட்டதின் கேவல்களில் இருந்து எனக்குக் கிடைத்த பெரிய ஆறுதல் என்ன தெரியுமா?அவருடைய சிறிய நாவல்களுக்கும் கருத்துக்களுக்கும் நான் ஓவியம் தீட்டியிருக்கிறேன் என்பதுதான்!தமிழகத்தின் அரசியல் சிற்பிகலைஞர் தான் என்பதை சொல்லவும் வேண்டுமா? ஐந்து முறை முதல்வராக இருந்தவராயிற்றே! நம் நெஞ்சைவிட்டு அவர் அகலவே மாட்டார். தன் படைப்புகளின் வழியே என்றும் நம்மோடு இருப்பார்!
(தன் கைப்பட ஓவியர் ஜெயராஜ் அவர்களே எழுதித் தந்தது...)
|