சித்ரா அக்கா!



சரியான உதட்டு அசைவுகள் கிடையாது. பாடலுக்கு ஏற்ற முகபாவங்களை வெளிப்படுத்தவும் இல்லை. ஆனாலும் சித்ரா அக்கா அளவுக்கு  இணைய சங்கீத உலகில் புகழ்பெற்றவர்கள் யாருமே இல்லை!ஆம். இவர் நடித்து பதிவேற்றியதும் சரசரவென ஆயிரக்கணக்கான  லைக்குகள் விழுகின்றன. லட்சக்கணக்கில் ஷேர் செய்யப்படுகின்றன!போதாதா? ‘மியூசிக்லி குயின்’ என போற்றப்படுகிறார் சித்ரா காஜல்.‘‘15 வயசுல இருந்து சினிமா கனவு. யாரைப் போய் பார்க்கணும், எப்படி வாய்ப்பு கேட்கணும்னு கூடத் தெரியாது. ஆனாலும் சினிமால  நடிக்கணும்னு விரும்பினேன். இப்பதான் அது நிறைவேறியிருக்கு. ‘காஞ்சனா 3’ல நடிக்கறேன்...’’ என்று சொல்லும் சித்ரா காஜலின் சொந்த  ஊர் பாண்டிச்சேரி. +2 முடித்திருக்கிறார். சேலை, சல்வார் வியாபாரம் செய்து வந்தவர் மொபைல் ஆப் குறித்து அறிந்தது தன் மகன்  வழியாக.

‘‘ஒரு லீவு நாள் அப்ப மியூசிக்லி appஐ என்கிட்ட காட்டினான். பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு. ‘எனக்கும் இன்ஸ்டால் செஞ்சு கொடுடா’னு  கேட்டேன். கொடுத்தான். அதுக்குப் பிறகுதான் என் வாழ்க்கையே மாறிச்சு! இதுல நான் வீடியோ பண்ணா அது ஷேர் ஆகும்... மத்தவங்க  பார்ப்பாங்கனு எல்லாம் எனக்குத் தெரியாது. என் பையன் ஷேர் செஞ்சான். நைட்டில மேக்கப் இல்லாம சும்மா வீட்ல நான் நடிச்சுப்  பார்த்தது.அப்புறம் பார்த்தா ஏகப்பட்ட லைக்... ஷேர்ஸ். ஒண்ணுமே புரியலை. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் எல்லாம் அவ்வளவா பழக்கமில்ல.  இந்த சூழல்ல வீடியோதான் எல்லா சமூக வலைத்தளங்களுக்குள்ளயும் என்னை இழுத்துட்டு வந்துச்சு...’’ வியக்கும் சித்ரா காஜல், கேலி  கிண்டல்களை பாசிடிவ் வாகவே எடுத்துக் கொள்கிறார்.

‘‘ஆரம்பத்துல வருத்தப்பட்டேன். சில நாட்கள் அழுதிருக்கேன். ‘கிழவி’னு சிலர் சொன்னப்ப வருத்தமா இருந்துச்சு. ஆன்ட்டினு கூப்பிடலாம்.  இல்ல அக்கானு அழைக்கலாம். கிழவினு சொல்றது தப்பில்லையா? என்னைனு இல்ல யாரையுமே அப்படிக் கூப்பிடாதீங்க. 20 வயசுப்  பெண்ணுக்கு என்ன எனர்ஜி இருக்கோ அது என்கிட்டயும் இருக்கு! யோசிச்சுப் பார்த்தப்ப ஏன் வருத்தப்படணும்னு தோணிச்சு. இது என்  மொபைல். நான் டவுன்லோட் செஞ்ச appஐ பயன்படுத்தறேன். என்னைக் கிண்டலடிக்கறது மூலமா எல்லாரும் சந்தோஷமா  இருக்காங்க!இதை நினைக்கிறப்ப வருத்தமெல்லாம் போயிடுச்சு. இப்ப என்னைக் கிண்டலடிச்சு பண்ற வீடியோக்களை பார்த்து நானே  சிரிக்கறேன்.

பாராட்டோ திட்டோ கிண்டலோ... எல்லாருக்கும் என்னை தெரிஞ்சிருக்கு.சாதாரண குடும்பம், வெகு சாதாரண வியாபாரம்னு இருந்தேன்.  இப்ப செலிபிரிட்டி ஆகியிருக்கேன். போதாதா..?’’ என்று கேட்கும் சித்ரா காஜலுக்கு நடிகர் ராகவா லாரன்சையும் நடிகை காஜல்  அகர்வாலையும் ரொம்பப் பிடிக்குமாம். ‘‘சமீபத்துல லாரன்ஸ் சாரை சந்திச்சேன். அம்மாவுக்கு கோயில் கட்டியிருக்கிற பெரிய மனுஷன்.  அடுத்த ஜென்மத்துல அவருக்கு அம்மாவா நான் பொறக்கணும்!’’ என்று சொல்பவர், மியூசிக்லி appஐ புகழ்ந்து தள்ளுகிறார்.‘‘ரொம்ப நல்ல  app. யாரு வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் தங்களோட நடிப்புத் திறமையைக் காட்டலாம்!’’ என்கிறார் சித்ரா காஜல் என்கிற சித்ரா  அக்கா!         

- ஷாலினி நியூட்டன்