கேரள வெள்ளத்திலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்!



‘‘மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கிமீ தூரத்தைப் பாதுகாக்க வேண்டும். அங்கே குவாரிகள்,  சுரங்கங்கள் அமைப்பதை தடை செய்ய வேண்டும். காடுகளை அபகரித்துக் கட்டடம் கட்டக்கூடாது...’’ என்று பல்வேறு கோரிக்கைகள்  அடங்கிய அறிக்கையை 2011ல் வெளியிட்டிருந்தார் மாதவ் காட்கில். மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றிய ஆய்வுக்குழுவின் தலைவர்  இவர். காட்கிலின் அறிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது துரதிர்ஷ்டம்.

‘‘அந்த அறிக்கையைக் கொஞ்சம் பரிசீலனை செய்திருந்தால் கேரளாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது...’’ என்று அண்மையில் வருந்திய  காட்கில், ‘‘இதே நிலை தொடர்ந்தால் அடுத்து கோவாதான்...’’ என்று பீதியைக் கிளப்பியிருக்கிறார். இந்நிலையில் காட்கிலின்  அறிக்கைக்குப் பிறகு நடந்ததைக் குறித்துப் பேச ஆரம்பித்தார் வெற்றிச்செல்வன். ‘பூவுலகின் நண்பர்கள்’ எனும் சுற்றுச்சூழல் அமைப்பின்  நிர்வாகிகளில் ஒருவர் இவர்.

‘‘மலையை ஒட்டிய பகுதிகளை மூன்று மணடலங்களாகப் பிரித்து, முதல் மண்டலத்தில் கையே வைக்கக்கூடாது, இரண்டாவதில் வீடு  போன்ற சிறு கட்டடங்களைக் கட்டிக்கொள்ளலாம், மூன்றாவதில் சில நடவடிக்கைகளை அனுமதிக்கலாம் என்று காட்கில் தன்  அறிக்கையில் தெளிவுபடுத்தி யிருந்தார். ஆனால், அதை யாரும் கேட்கவில்லை. தங்களின் இஷ்டத்துக்கு இயற்கையைச் சுரண்டினார்கள்.  மட்டுமல்ல, பல ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவைப் பாதுகாப்பு வளையமாகக் குறிப்பிட்டிருந்தது காட்கிலின் அறிக்கை. இதில் கொஞ்சம்  திருத்தம் செய்து, பரப்பளவைக் குறைத்து ‘கஸ்தூரிரங்கன்’ என்ற குழு இன்னொரு அறிக்கையை வெளியிட்டது.

கேரளா இந்த இரண்டாவது அறிக்கையை ஏற்றுக்கொண்டாலும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் இந்த அறிக்கையையும்  கேரளா எவ்வளவு பின்பற்றியது என்றும் தெரியவில்லை. மத்திய அரசு இந்த அறிக்கை தொடர்பாக இப்போதுதான் கேரளாவிடம் பதில்  கேட்டிருக்கிறது.பருவநிலை மாற்றம் காரணமாக வெள்ளம் வந்துவிட்டது. ஆனால், வெள்ளம் வெளியேறக்கூடிய வடிகால்கள் சீராக  இருக்கவேண்டுமே... கல்குவாரிகள் மூலம் சாலைகள் போடப்பட்டதால் இயற்கையான வடிகால்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. இதுதவிர அங்கே சுரங்கத்தொழிலும் ஜோராக நடந்திருக்கிறது.

இவையெல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கையான வழிகளை அடைத்திருக்கலாம். தவிர, அணைக்காக மலைகளையும்  நிலங்களையும் குடையும்போது மலை சார்ந்த நிலத்தின் இறுக்கம் குறைந்துவிடும். இதனாலும் கேரளத்தில் வெள்ளத்தின் பாதிப்பு  அதிகம்.இதுபோக மத்திய அரசின் தணிக்கைக் குழு இந்தியாவின் அணைகள் தொடர்பாக ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் 4800  அணைகளை ஆய்வு செய்ததில் 350 அணைகள் மட்டுமே வெள்ளம் வந்தால் மேலாண்மை செய்யக்கூடிய திறனை ஓரளவுக்குக்  கொண்டிருக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த 350 அணைகளில் கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த ஒன்றுகூட இல்லை. தவிர, வெள்ளத்தைக் கண்காணித்து அதை தடுப்பதற்காக  மத்திய அரசு நிதி கொடுக்கிறது. இந்த நிதி எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சரிபார்க்கத்தான் இந்த ஆய்வு. ஆனால், கேரளத்திலும்  தமிழகத்திலும் வெள்ளத்தைக் கண்காணிக்கவும், அதைத் தடுப்பதற்கும் எந்த அமைப்பும் இல்லை என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.  இதிலிருந்தே வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ளலாம். கேரளா மட்டுமல்ல,  தமிழகமும் மழையால் ஏற்படும் பாதிப்பு களைக் குறைக்க வேண்டும் என்றால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் துரித  கதியில் இறங்க வேண்டும்...’’ என்று வெற்றிச்செல்வன் முடிக்க, கேரள வெள்ளத்துக்கான காரணம் குறித்து விளக்கினார் சுற்றுச்சூழல்  பாதுகாப்பு பற்றி தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் நக்கீரன்.

‘‘முதல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கேரள அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டவில்லை.  குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளை அழித்து அங்கே அதிகமான தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியது.  இதை வெள்ளத்துக்கு முக்கிய காரணமாகச் சொல்லலாம். சோலைக் காடுகளின் விசேஷம் என்னவென்றால், மழைக்காலங்களில் நீரைச்சேமித்து வைத்து, தேவையானபோது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசியவிடும். இந்தக் கசிவுதான் கேரளாவை வருடம் முழுவதும்  பசுமையாக வைத்திருக்கிறது. சோலைக் காடுகள் நூறு சதவீதம் மழையைச் சேகரிக்கிறது என்றால் தேயிலையானது வெறும் ஒரு சதவீத  மழையைத்தான் சேமித்து வைக்கும்.

இதனால்தான் தேயிலைத் தோட்ட மலைகளால் நீரைப் பிடித்துவைக்க திராணியில்லாமல் போனது. அடுத்து புவி வெப்பமயமாகுதல்.  அதனால் உருவாகும் பருவநிலை மாற்றம், முப்பது நாட்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே நாளில் கொட்டித்தீர்ப்பது போன்ற  காரணங்களால் கேரளாவில் மழை வெள்ளமாகக் கோரமாடியது...’’ என்று நக்கீரன் சொல்ல, காட்கில் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்த  கேரளாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிவியலாளரான விஜயன் காட்கில் அறிக்கையின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.‘‘காட்கில் அறிக்கை கேரளாவில் உள்ள அணைகளுக்கு வரும் நீர்பிடிப்புப் பாதைகளைச் சுற்றியுள்ள காடுகளை அழிக்கவோ,  ஆக்கிரமிக்கவோ கூடாது என்று கறாராகச் சொன்னது. அதை யாரும் கேட்கவில்லை.

கேரளாவில் வெள்ளம் நேரடியாக நீர்பிடிப்புப் பாதையிலிருந்து அதிகமாக வந்ததைக் காட்டிலும் நீர்பிடிப்புப் பாதைகளைச் சுற்றியுள்ள  காடுகளிலிருந்து அதிகமாக வந்ததால் அணைக்கு எவ்வளவு நீர் வரும் என்று கூட அரசால் கணிக்கமுடியாமல் போனது. இது  வெள்ளத்துக்கான முக்கியமான காரணமாகிவிட்டது. இதேபோல் ஆறுகள், ஏரிகள், குளங்களைச் சுற்றிய காடுகளும் அழிக்கப்பட்டிருக்கிறது.  ஆகவே, காடுகளை வளர்ப்பதுதான் அரசின் முக்கிய கடமையாக இனி இருக்கவேண்டும். தவிர, இரும்பு மற்றும் கிரானைட் கற்களுக்காக  மலைகள் தோண்டப்பட்டிருக்கிறது. காட்கில் கமிட்டி மலைகளில் எந்த இடத்தில் சுரங்கம் தோண்டலாம், எந்த இடத்தில் தோண்டக்கூடாது  என்றெல்லாம் சிபாரிசு செய்திருந்தது. ஆனால், அதையும் அவர்கள் கேட்காமல் சென்சிடிவ் ஏரியாக்களில் எல்லாம் சுரங்கங்களைத்  தோண்டியிருக்கிறார்கள். இனிமேலாவது காட்கில் அறிக்கையை அரசு பின்பற்ற வேண்டும்...’’ என்ற வேண்டுகோளுடன் முடித்தார்
விஜயன்.

-டி.ரஞ்சித்

பருவநிலை மாற்றம்

இந்தியாவில் பருவநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளது. 2014ல் ஸ்ரீநகர், 2015ல் சென்னை, 2017ல் பெங்களூர், கடந்த ஜூலையில்  புவனேஸ்வர், சில வாரங்களுக்கு முன் தில்லியில் நிகழ்ந்த வெள்ள சேதத்தை வைத்து பருவநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளதைப்  புரிந்துகொள்ளலாம். இதை தீவிர பருவநிலை மாற்றம் என்றே விஞிகள் குறிப்பிடுகின்றனர். இதன் முக்கிய பாதிப்பு - குறைந்த நேரத்தில்  அதிக மழை!‘‘தீவிர பருவநிலை மாற்றத்துக்கு புவியின் வெப்ப அளவு உயர்வே காரணம்...’’ என்று காந்தி நகரில் உள்ள ஐஐடியின் ஆய்வு  நிறுவனம் சொல்கிறது.

அதாவது புவியின் வெப்ப நிலை சுமார் 1.5 முதல் 2 டிகிரி வரை உயரும்போது இந்த தீவிர பருவநிலை மாற்றம் ஏற்படும். 3 மணி  நேரத்தில் தொடர்ச்சியான மழை என்றால் வழக்கத்தைவிட 25 சதவீத மழை அதிகமாக இருக்கும். இதற்கு ஏற்ப நாம் நகரமைப்புகளில்  ஈடுபடவேண்டியது அவசியமாகும். கேரள வெள்ளம் இந்த தீவிர பருவநிலை மாற்றத்தின் முக்கிய சாட்சி. இதை தமிழகமும் ஒரு பாடமாக  எடுத்துக் கொள்ளவேண்டும். பருவநிலை மாற்றத்தை எப்படி குறைப்பது, பருவநிலை மாற்றத்தால் நிகழும் விளைவுகளை எப்படி  எதிர்கொள்வது என்பதை கேரளா, தமிழகம் என்றில்லாமல் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் கற்க வேண்டும். இது தொடர்பான  நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கவேண்டும்.

தீவிர பருவநிலை மாற்றம் அதிகமாக நகரங்களையே பாதிக்கும். காரணம், நகரங்களில்தான் வடிகால் அமைப்புகள் மிகவும் மோசமான  நிலையில் உள்ளது. தவிர, நகர்ப்புறங்களில் வெப்பமானது குறிப்பிட்ட இடங்களில் தேங்கி நிற்கக்கூடிய அபாயம் உண்டு. இது வெப்ப  சலனங்களுக்குக் காரணமாகி அதிக மழையை உண்டுபண்ணலாம். தவிர, கடலின் நீர்மட்டம் சில செ.மீட்டர் உயர்ந்தாலே கடற்கரையை  ஒட்டிய சென்னை போன்ற நகரங்களின் பொருளாதாரத்தையே மழை புரட்டிப்போட்டுவிடும். இனிமேல் மழையின் சராசரி அளவு, சுழற்சி  முறைகளை வைத்து மழையைக் கணிப்பது அவ்வளவாக உதவாது.

காரணம், இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு. சராசரி அல்லது சுழற்சி முறைகள் வெப்ப சலனத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதில்லை. வெப்ப நிலைகள், அதனால் ஏற்படும் வெப்ப சலனங்களையும் இனிமேல் மழை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். அதேபோல்  தீவிர பருவநிலை மாற்றத்துக்கு இடையேயான இடைவெளிகளில் ஏற்படும் மாற்றங்களையும் கணக்கில் எடுத்து இனி மழையின்  மாதிரிகளை உருவாக்கி ஆய்வு செய்யவேண்டும். இவை எல்லாவற்றையும் செய்யும்போதுதான் மழையால் ஏற்படும் பாதிப்புகளை  ஓரளவாவது நாம் குறைக்க முடியும்...’’ என்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’  அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன்.