விதைப்பதை விட வீட்டில் நாற்று நடுங்கள்!



ஹோம் அக்ரி - 21

மன்னர் மன்னன்


முன்பே பார்த்தபடி சில செடிகளை நேரடியாக நிலத்தில் விதைத்து வளர்க்கலாம். பல செடிகளை நாற்றுகள் தயாரித்து பிறகு அவற்றை நடலாம். கொத்தவரை, வெண்டி போன்ற காய்கறிச் செடிகளை நேரடியாக விதைக்கலாம். ஆனால், கத்திரி, தக்காளி, மிளகாய் போன்றவற்றை நாற்று மூலமாக பயிர் செய்யவேண்டும். பூசணி, சுரை, அவரை, பீர்க்கை, பாகல் போன்ற பெரும்பாலான கொடி வகைகள் நேரடி விதைப்பின் மூலமாக செய்யப்படுகின்றன. பெரும்பாலான மர வகைகள் நாற்றுகள் மூலமாகவே நடப்படுகின்றன.தானியப்பயிர்களில் பெரும்பாலானவை நாற்று மூலமாகவும்; மானாவாரியில் பயிரிடும் சிறு தானியங்கள் நேரடியாகவும் விதைக்கப்படுகின்றன.

ஆக, வீட்டுத்தோட்டத்தின் செடிகளில் எவைகளை நாற்று மூலமாக பயிர் செய்யவேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தக்காளி,  மிளகாய் போன்ற செடிகள் நேரடி விதை மூலமாக வளரும் என்றாலும், நாற்றாக நடுவதில் பல அனுகூலங்கள் இருக்கின்றன. வளமான மண்ணில் - தீங்கு தரும் வைரஸ், பாக்டீரியா இல்லாத மண்ணில் - விசேஷமான கவனத்தோடு வளர்வதால் நாற்றுகள்  ஆரோக்கியமாக இருக்கின்றன. தவிர ஆரோக்கியமான நாற்றுகளை மட்டுமே நாம் நடுவதால் பயிர்காப்பும் எளிதாக இருக்கும். இதனால்  விதைகளையும் சேமிக்க முடியும்.

இன்று கடையிலிருந்தே விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டி இருக்கிறது. விதைகளைச் சேமிப்பது, பகிர்ந்து கொள்வது போன்ற  பழக்கங்கள் இப்போது இல்லை. இப்படிச் செய்வதும் இன்று சட்ட விரோதம்.முதல் தர கலப்பின விதைகளின் விலை அதிகம். சில விதைகள் 10 கிராம் 2000 ரூபாய் என்ற கணக்கில் விற்கப்படுகின்றன. ஆக, விதைகளை கவனமாகவும், குறைவாகவும் உபயோகிக்க வேண்டிய தேவை இருக்கிறது. வீட்டுத்தோட்டத்தைப் பொறுத்தவரை ஆழம் குறைவான சிறிய டிரேக்களில் நாற்றங்கால் தயாரிக்கலாம். இதற்காகவே கிடைக்கும் குழியுள்ள டிரேக்களிலும் நாற்று பாவலாம்.

டிரேக்களில் வளர்க்கும் போது சேதாரங்கள் குறையும். விதை மிச்சமாகும். இந்த குழி டிரேக்களில் வெறும் தென்னை நார் கழிவிலோ,  மண்புழு உரத்திலோ கூட விதை பாவலாம். இப்படிச் செய்யும்போது இந்த ஆதாரப் பொருளும் வந்து விடுவதால் வேர் பாதிக்காமல் எல்லா நாற்றுகளுமே காப்பாற்றப்படும். வணிக ரீதியில் வீரிய ஒட்டு விதைகளிலிருந்து நாற்று தயாரித்து விற்பவர்கள் இந்த முறையையே பின்பற்றுகிறார்கள். தென்னை நார் கட்டிகளும், மண்புழு உரமும் பொதுவாக தீங்கு செய்யும் நுண்ணுயிர்கள் இல்லாமலேயே இருக்கின்றன. இந்தக் காரணத்தினாலும் சில சமயங்களில் நாற்று உற்பத்தியில் மண் தவிர்க்கப்படுகிறது.

மண்ணை ஆதாரமாகக் கொண்டு பைகளிலும், நிலத்திலும், தொட்டியிலும், வேறு டிரேக்களிலும் நாம் நாற்றங்கால் தயார் செய்யும்போது  சாதாரண மண்கலவையைக் காட்டிலும் கூடுதலான கரிமப் பொருட்களும், வேப்பம் புண்ணாக்கு, பூச்சிக்கொல்லிகள், பூஞ்சாண  கொல்லிகளும் கலக்கப்படும். அதிகப்படியான ஊட்டத்துக்கு கடலைப் புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு இவைகளையும் சேர்த்துக்  கொள்ளலாம்.தோட்டத்தில் காய்கறி பயிர்களுக்கான நாற்றங்கால் தயாரிப்பவர்கள் பொதுவாக மேட்டுப்பாத்தி முறையைக் கையாளுவார்கள். இந்த முறையில் சற்றே மேடான பகுதியில் நல்ல வளமான மண் சேர்க்கப்பட்டு, அதிகமான குப்பை மற்றும் மணல் சேர்த்து  பொலபொலவென்றும், நல்ல வடிகால் வசதியோடும் இருக்குமாறு அமைக்கப்படும். பொதுவாக நாளின் பெரும்பாலான நேரம் மர நிழல்  இருக்கும்படியாகத் தேர்வு செய்யப்படும். நாற்றங்கால்களுக்கு நேரடியாக நீர் பாய்ச்சவோ, ஊற்றவோ கூடாது. நீர் தெளித்தோ, மேட்டுப்பத்தி நனையும் படி வாய்க்காலில் நீர் பாய்ச்சியோ மண்ணை ஈரமாக வைத்திருக்க வேண்டும்.  

(வளரும்)

Q&AQ&AQ&AQ&A


எங்கள் வீட்டில் ஒரு வில்வ மரம் உள்ளது. பூஜைக்கு உபயோகிப்பதைத் தவிர இதை வேறு எதற்காவது பயன்படுத்தலாமா?
- ரமா அய்யர், திருவானைக்காவல்.

வில்வ மரம் விசேஷமான மருத்துவ பலன்கள் கொண்டது. இதை சிவலிங்க பூஜையில் சம்பந்தப் படுத்தியிருப்பதில் இருந்தே இதன்  மருத்துவப் பலன்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்துமத நம்பிக்கையின்படி வில்வ இலைகளை சிவ அம்சமாகவும்; முட்களை சக்தி  அம்சமாகவும்; கிளைகள், வேர்களை வேதங்களாகவும், தேவர்களாகவும் குறிக்கிறார்கள். இதன் இலைகள் மும்மூன்றாக இருப்பது மனிதனின் வாத, பித்த, கப தோஷங்களைக் குறிப்பதாகக் கொள்கிறார்கள். இதன் இலைகளை முதல் நாள் இரவில் நீரில் ஊறவைத்து, மறுநாள் குடிப்பதன் மூலம் பலவிதமான ரோகங்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக மலச்சிக்கல், ரத்த அழுத்தம், நீரழிவு இவைகளுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

இதன் பழத்தை வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பல கோளாறுகளிலிருந்து விடுதலை பெறலாம். ஆனால், சிலருக்கு  பழத்தை சாப்பிட்ட உடனேயே குமட்டும், வாந்தி வரும். தீராத வயிற்று வலி, வயிற்றுப்புண்ணுக்கு (Ulcer) வில்வம் சிறந்த மருந்து. வில்வத்தின் வித்தியாசமான குணம் என்னவென்றால், அது மலச்சிக்கலுக்கும் சிறந்த மருந்து. அதே சமயத்தில் நிற்காதவயிற்றுப் போக்கையும் நிறுத்தும். என்ன காரணத்தாலோ இதன் பலன்கள் இன்னும் பரவலாகாமலேயே இருக்கின்றன.இதன் வேர்கள் குழந்தையின்மையைப் போக்க தயாரிக்கும் மருந்துகளில் பயன்படுகின்றன. வீடுகளில் வில்வ மரம் வளர்க்கக்கூடாது என்ற மூட நம்பிக்கை உள்ளது. இது தவறு. வில்வத்தை வீட்டில் வளர்ப்பதால் ஒரு அசுவமேதயாகம் செய்ததற்கான பலன்கள் கிடைப்பதாகவும், பல்லாயிரம் பேருக்கு அன்னதானம் செய்ததற்கான புண்ணியம் கிடைப்பதாகவும் பெரியவர்கள் சொல்வது இந்த மகத்தான மருத்துவப்பயிர் அழியக்கூடாது என்பதற்காகத்தான்.

வெங்காயம் சாப்பிடும் போது ஏன் மிகவும் காரமாக இருக்கிறது? இந்தக் காரம் எப்படி மூக்கு, கண்களுக்கெல்லாம் போகிறது? இது நல்லதா?
- தர்ஷனா, மதுரை.

வெங்காயம் மற்றும் பூண்டில் கந்தகம் (sulphur) இருக்கிறது. இதுவே இதன் காரத்துக்கும் மற்ற மருத்துவ பலன்களுக்கும் காரணம்.சித்த வைத்தியத்தில் நாத பிந்து தத்துவம் என்ற ஒன்று இருக்கிறது. குணபாடத்தில் ஒவ்வொரு வஸ்துவையும் பஞ்ச பூதங்களோடு  சம்பந்தப்படுத்துவதைப்போல, ஒன்றுகொன்று சத்ருவா மித்ருவா என்று வகைப்படுத்துவதைப்போல, சில பொருட்களை நாதமா பி(வி)ந்துவா என்றும் வகைப்படுத்துவது உண்டு.

இதில் பாதரஸம் பி(வி)ந்துவாகவும், கந்தகம் நாதமாகவும் கொள்ளப்படுகிறது. கந்தகத்தை தாய் மருந்தாகக் கொள்கிறோம்.வெங்காயம் / பூண்டை வெட்டும் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவை காற்றில் பரவக்கூடிய கந்தகம் நிறைந்த ஒரு வேதிப் பொருளை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதிப் பொருளால் நமக்கு காரம் தெரிகிறது. கண்ணில் எரிச்சலும், கண்ணீரும் இதனாலேயே ஏற்படுகின்றன.

இந்த ‘அலிசின்’ என்கிற காற்றில், நீரில் கரையும் வேதிப்பொருள், தோல் வழியாகவும் உடலுக்குள் செல்லும். இது எல்லாவிதமான வைரஸ்  / பாக்டீரியா போன்ற கிருமிகளையும் கொல்லக்கூடியது. மிகச்சிறந்த கிருமிநாசினி. வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடலாம், இது சிறந்த ‘anti-oxidant’ ஆகவும், கிருமிநாசினியாகவும் அமையும். ஆயுர்வேத சாஸ்திரங்கள்படி வெங்காயம் ஆண்மைக்கும், போக சக்திக்கும் மிகச்சிறந்த மருந்தாகச் சொல்லப்பட்டுள்ளது. அது உண்மையும் கூட.ஆனால் பூண்டை சமைக்காமல் உண்ணக்கூடாது. வாயுத்தொல்லையை குறைக்க அவசரத்துக்கு சாப்பிட வேண்டுமானாலும் குறைந்த பட்சம் நெருப்பில் வாட்டி உண்ணவேண்டும். அதிக ரத்த அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கவேண்டுமென்றால் பச்சை பூண்டை இடித்து தலையில் வைத்து தேய்க்கலாம். இது உடனடியாக ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.