குழந்தை பிறந்த பிறகும் உங்களால் சாதிக்க முடியும்!



செரினா வில்லியம்ஸின் வாழ்க்கை கற்றுத் தரும் பாடம்

விளையாட்டு உலகின் அதிசயிக்கத்தக்க பெயர், ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட் ஸ்லாம்கள், 4 ஒலிம்பிக் தங்கங்கள், 85 மில்லியன்  அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை, நம்பர் ஒன் வீராங்கனையாக 319 வாரங்கள், உலகில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு  வீராங்கனை... என மகளிர் டென்னிஸில் மங்காத புகழுடன் ஜொலிப்பவர் செரினாவில்லியம்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற  டென்னிஸ் பயிற்சியாளர் ரிச்சர்ட் வில்லியம்ஸின் கடைக்குட்டிதான் செரினா. தந்தையே பயிற்சியாளராக அமைந்ததால் மூன்று  வயதிலேயே அவரது கரங்கள் டென்னிஸ் ராக்கெட்டை பிடிக்க ஆரம்பித்துவிட்டன. அவரது விளையாட்டு ஆர்வத்தைப் பார்த்த தந்தை,  பள்ளிக்கு அனுப்பாமல் ஹோம் ஸ்கூலிங் முறையில் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். அவருடன் அக்கா வீனஸும் ஹோம் ஸ்கூலிங்  மற்றும் விளையாட்டில் இணைய, இருவரின் குழந்தைப்பருவமும் டென்னிஸ் மைதானத்தில் மகிழ்ச்சியாகக் கழிந்தது.

டென்னிஸின் சகல நுணுக்கங்களையும் கற்றுக்கொண்ட செரினா, ஜூனியர்களுக்கான தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அள்ளி  வந்த பதக்கங்களும், பட்டயங்களும் ஃபுளோரிடாவில் உள்ள அவரது வீட்டின் வரவேற்பறையை இன்றைக்கும் அலங்கரிக்கின்றன. 10  வயதுக்குள் அவர் பங்கேற்ற 46 போட்டிகளில் 3ல் மட்டுமே தோல்வி. செரினா பால்ய வயதில் நிகழ்த்திய இந்த சாதனையை  இதுவரைக்கும் யாரும் முறியடிக்கவில்லை! செரினாவின் புகழ் அமெரிக்காவின் பட்டி தொட்டியெங்கும் பரவியது. 14 வயதிலேயே  அமெரிக்காவின் புரொஃபஷனல் டென்னிஸ் வீராங்கனையாக விஸ்பரூபம் எடுத்தவர், 36 வயதிலும் அதே வேகத்துடன் விளையாடிக்  கொண்டிருக்கிறார்.

கருப்பினத்தைச் சேர்ந்த பெண் என்பதால் ஆரம்ப காலத்தில் பலரின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளானார். வெளிநாடுகளில் அவரை  இனவெறியுடன் அணுகினார்கள். எதிலும் துவண்டுபோகாமல் டென்னிஸில் தன் முழுத்திறமையை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான  ரசிகர்களைத் தன்வசமாக்கினார். அக்கா வீனஸுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் கபளீகர மாக 14 கிராண்ட் ஸ்லாம்களைத் தட்டி,  யாராலும் வெல்ல முடியாத இரட்டையர்களாக வலம் வருகிறார்கள் இந்த அபூர்வ சகோதரிகள்.கவனம் சிதறாமல் மனமும் உடலும் ஒரே  நேர்கோட்டில் இணைய, வலது கையைப் பின்னால் இழுத்து, முதுகை வில்லைப் போல வளைத்து, ராக்கெட்டை மூன்றுமுறை நன்றாகச்  சுழற்றி, பந்தை எப்போது அடிப்பார் என்று எதிராளியைத் திணற வைத்து, எதிர்பாராத ஒரு நொடியில் 200 கி.மீ வேகத்தில் பந்தை சர்வ்  செய்வது செரினாவுக்கே உரியது.

ஆட்டம் தொடங்கி முடியும் வரை எனர்ஜி குறையாமல் இருப்பது, எதிராளி கணிக்க முடியாத அளவுக்கு பந்தை வெவ்வேறு திசைகளில்  மாற்றி மாற்றி  அடிப்பது, பூமியை அதிர வைக்கும் கிரவுண்ட் ஸ்ட்ரோக், தோல்வி யடைந்தபோதும்கூட புன்னகை மாறாமல், தன்னை  வீழ்த்திய எதிராளியிடம் கைகுலுக்கிப் பாராட்டுவது... என இவரது டிரேட் மார்க்குகள் ஏராளம். அதனாலேயே செரினா விளையாடுகிறார்  என்றால் டிக்கெட்டுகள் கடகடவென தீர்ந்துவிடுகின்றன.டென்னிஸே முழுமூச்சாக வாழ்ந்து வந்ததால் திருமணத்தைத் தவிர்த்து வந்தார்.  2016ல் தொழில் அதிபர் ஒஹானியனைச் சந்திக்க. இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. தன்னைவிட வயது குறைந்த ஒஹானியனைத்  திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகிவிட்டார்.

அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியர் (Alexis Olympia Ohanian Junior) என்பது அக்குழந்தையின் பெயர்.பிரசவத்தின் போது  குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. குழந்தை பிறந்ததற்குப் பின்பு செரினாவுக்கு  இடைவிடாத இருமல். அதனால் நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து செரினாவைக்  காப்பாற்றியிருக்கிறார்கள். கடுமையான ஓய்வு தேவைப்பட்டதால் போட்டிகளில் பங்கேற்காமல் சில காலம் விலகியிருந்தார்.இச்சூழலில்  ஒஹானியனைத் திருமணம் செய்துகொண்டதால், ‘குடும்பம், குழந்தைன்னு செட்டில் ஆகிவிட்டார். இனி செரினா டென்னிஸ் பக்கமே  தலைகாட்ட மாட்டார்...’ என்று பலரும் பலவிதமாக அவரை விமர்சனம் செய்தனர்.

இன்னொரு பக்கம் உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த அவரை 181வது இடத்துக்கு தூக்கியெறிந்தது  டென்னிஸ் கழகம்.நிலைகுலைந்துபோன செரினா, ‘‘என் உடல் மட்டும்தான் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது. மனம் எப்போதும்  டென்னிஸ் மைதானத்திலேயே சுழன்றுகொண்டிருக்கிறது...’’ என்று டென்னிஸ் மீதான தீராத காதலை டுவிட்டியதோடு, தன் மீது விழுந்த  எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, கடந்த மே மாதம் பிரெஞ்சு ஓபனில் களமிறங்கினார். எதிர்பாராத அவரது வருகை  பலரைத் திக்குமுக்காட வைத்தது.

துரதிர்ஷ்டவசமாக காயம் ஏற்பட்டு மூன்றாவது சுற்றில் வெளியேறும் நிலை. சிறிது ஓய்வுக்குப் பின் ஜூலையில் விம்பிள்டன் தொடரில்  பங்கேற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி ரன்னர் கப் அடித்தார். இன்று தரவரிசைப் பட்டியலில் 25-வது இடத்தைக் கொடுத்து செரினாவை  கவுரவித்திருக்கிறது அதே டென்னிஸ் கழகம்.ஒலிம்பியா பிறந்ததிலிருந்து பரிசுப் பொருட்கள் குவிந்து வருகின்றன. டெக்ஸ்டைல்  நிறுவனங்கள் விலையுயர்ந்த ஆடைகளை செரினாவின் குழந்தைக்கு இலவசமாக அனுப்பி வைக்கின்றன. அதையெல்லாம் திருப்பி  அனுப்பிய செரினா, தன் குழந்தைக்கு வேண்டியதை அமேசானில் ஆர்டர் செய்கிறார். ஒலிம்பியா எளிமையாக வளர வேண்டும் என்பது  செரினாவின் விருப்பம்.

‘‘இப்போது களத்தில் இருக்கும்போது ஒலிம்பியாவைப் பற்றியே மனம் அலைபாய்கிறது...’’ என்று தாய்மையில் நெகிழ்கிற செரினாவிடம்,  ‘‘நானிருக்கிறேன். நீ உற்சாகமாக விளையாடு...’’ என்று ஆறுதல் சொல்வதோடு, மைதானத்தில் குழந்தையோடு ஆஜராகிவிடுகிறார் ஒஹானியன்.செப்டம்பரில் ஒலிம்பியாவின் முதல் பிறந்த நாள். அப்போது அமெரிக்க ஓபனில் எதிராளியைப் பதம் பார்க்கும்  முனைப்பில் செரினா விளையாடிக் கொண்டிருப்பார். வலது கையைப் பின்னால் இழுத்து, முதுகை வில்லைப்போல வளைத்து, ராக்கெட்டை  மூன்றுமுறை நன்றாகச் சுழற்றி, பந்தை எப்போதும் போல 200 கி.மீ வேகத்தில் சர்வ் செய்வார். ஆனால், அவரது மனம் முழுவதும்  ஒலிம்பியா நிறைந்திருப்பார். இதுதானே குழந்தையைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு தாயின் நிலை!

-த.சக்திவேல்