செந்நாய் வேட்டை



கழுகு 2 சீக்ரெட்ஸ்

‘‘எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் கிருஷ்ணா. ‘கழுகு’ எனக்கு முதல் படம். அப்படியிருந்தும் அறிமுக இயக்குநரான நான் சொல்றதைக்  கேட்டு நடிச்சார். என் மேல முழு நம்பிக்கை வைச்சார். அந்த சுதந்திரம்தான் அந்தப் படம் வெற்றியடையக் காரணம். இதுக்கு அப்புறம்  வெவ்வேறு ஜானர்ல படங்கள் இயக்க ஆரம்பிச்சு பிசியானேன். சில மாசங்களுக்கு முன்னாடி எதேச்சையா கிருஷ்ணாவை சந்திக்கிறப்ப,  ‘நாம ஏன் ‘கழுகு 2’ ஆரம்பிக்கக் கூடாது’னு சீரியசா கேட்டார்.

அந்த ஐடியா பிடிச்சிருந்தது. அதே வேகத்துல ஸ்கிரிப்ட் ரெடி செஞ்சேன். முதல் பார்ட்ல நடிச்ச ஹீரோ - ஹீரோயின் மட்டும் இதுலயும்  நடிக்கறாங்க. ஷூட்டிங் கிளம்பின வேகத்துல படத்தை முடிச்சுட்டோம். பாடல்கள் மட்டும்தான் பேலன்ஸ்...’’ டப்பிங் பரபரப்புக்கிடையே  நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சத்யசிவா. ‘கழுகு 2’ தவிர தெலுங்கில் ராணா, ரெஜினாவை வைத்து ‘1945’ என்ற பிரமாண்ட பீரியட்  ஃபிலிமையும் இயக்கி முடித்திருக்கிறார் இவர்.

‘‘சூழ்நிலை காரணமா நான் இயக்கின சில படங்கள் ஒரு வருஷம், இரண்டு வருஷங்கள் கூட ஷூட் போயிருக்கு. ஆனா ‘கழுகு 2’வை  வெறும் 28 நாட்கள்ல முடிச்சிருக்கோம். எல்லாரும் அவசர அடியா இருக்குமோனு உள்ளூர பயந்தாங்க. ஆனா, ரஷ் பார்த்ததும் எல்லோரும்  ஹேப்பி!தயாரிப்பாளர் சிங்காரவேலன் சார்கிட்ட போன்லதான் கதை சொன்னேன். நேர்ல கூட அவரைச் சந்திக்கலை. ரஷ் பார்க்க அவர்  வந்தப்பதான் நேருக்கு நேர் சந்திச்சேன். படம் பார்த்துட்டு அவ்வளவு பாராட்டினார். டப்பிங் நடக்கிறப்பவே பிசினஸ் முடிஞ்சதுல  எல்லோருக்குமே ஒரு நிறைவு...’’

திருப்தி யாகப் பேசுகிறார் சத்யசிவா.முதல் பாகத்தோட தொடர்ச்சியா..?

இல்ல. கிருஷ்ணாவும் பிந்துமாதவியும் இதுலயும் இருக்காங்க. இந்தக் கதையும் அடர்ந்த காட்டுக்குள்ள நடக்குது. இதைத்தவிர வேற எந்த  ஒற்றுமையும் இல்ல! ‘கழுகு’ க்ளைமாக்ஸ்ல இரண்டு பேரும் இறந்துடுவாங்க. ஆனா, இதுல க்ளைமாக்ஸ் புதுசா இருக்கும். மூணாறுலதான் நான் வளர்ந்தேன். அங்குள்ள அடர்ந்த காடுகள் எல்லாம் நான் புழங்கின இடங்கள்தான். பார்த்துப் பழகின மனிதர்கள்,  சந்திச்ச அனுபவங்களைத்தான் கதையா கொண்டு வந்திருக்கேன். இதுல மொத்தம் ஆறு கேரக்டர்ஸ்தான். சிம்பிளா சொல்லணும்னா இதுல  ஹீரோ, வில்லன் கான்சப்ட் கிடையாது.

லொகேஷன் ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். மழைக் காட்சிகள் ரசனையா வந்திருக்கு. மூணாறு, மறையூர் பகுதிகள்ல நாங்க ஷூட்  பண்றப்பவே செம மழை. அதை அப்படியே கேப்ச்சர் செய்திருக்கோம். நாங்க படப்பிடிப்பு நடத்தின இடங்கள் இப்ப வெள்ளத்துல  பாதிக்கப்பட்டிருக்கு. விஷயம் கேள்விப்பட்டதும் வருத்தமாகிடுச்சு.இன்னொரு முக்கியமான விஷயம்- இது முழுக்க முழுக்க செந்நாய் வேட்டையைப் பத்தின கதையில்ல. முதுமக்கள் தாழி மாதிரி சில விஷயங்களைச் சொல்லியிருக்கோம். நிஜ செந்நாய்களையும் பயன்படுத்தியிருக்கோம். சில இடங்கள்ல கிராபிக்ஸை உபயோகப்படுத்தியிருக்கோம்.

கிருஷ்ணா, பிந்துமாதவி தவிர காளிவெங்கட், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷ் பெரடி நடிச்சிருக்காங்க. கிருஷ்ணா நடிப்புல மெச்சூரிட்டி  கூடியிருக்கு. அதே நட்போட இயல்பா அன்பா பழகறார். காளிவெங்கட் கூட அவர் வர்ற போர்ஷன் கலகலப்பா இருக்கும். கேட்ட தேதிகளை பல்க்கா அப்படியே தூக்கி பிந்து மாதவி கொடுத்தாங்க. இதுக்காகவே அவங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். இப்ப பிந்துமாதவியும் நடிப்புல பக்குவப்பட்டிருக்காங்க. கேரள காடுகள்ல நாங்க ஷூட் நடத்தின இடத்துக்கு கேரவனால வரமுடியாது. நாலஞ்சு கிலோ மீட்டர் தள்ளிதான் அதை நிறுத்த வேண்டிய சூழல். காஸ்ட்யூம் மாத்த அவ்வளவு தூரம் நடக்கணும். அதனால காட்டுல கிடைச்ச இடங்கள்ல முகம் சுளிக்காம அவங்க காஸ்ட்யூம் மாத்திக்கிட்டாங்க. கிரேட்.

செந்நாய் கான்சப்ட் இந்த கதைக்குள்ள எப்படி வந்தது?


நான் வளர்ந்த மூணாறுல செந்நாய் பண்ணின அட்டூழியங்களைப் பத்தி நிறையவே கேள்விப்பட்டிருக்கேன். பார்க்க ரொம்ப சாதுவா  இருக்கும். ஆனா, ரொம்ப ஆபத்தானது. செந்நாய்கள் தனியா வராது. கூட்டமாகத்தான் வரும். நரி மாதிரி ஊளையிடாது. காட்டுக் கத்து  கத்தும். ஒரு செந்நாய்க் கூட்டம் யானையையே அடிச்சுக் கொன்னு திங்கும்னா பார்த்துக்குங்க. அதே மாதிரி கூட்டத்துல ஒரு செந்நாய்  பயந்தா போதும்... மீதியிருக்கிற எல்லா செந்நாய்களும் பயந்து ஓடிடும். இப்படி நிறைய விஷயங்கள் செந்நாய் தொடர்பா இருக்கு. அதுல  ஸ்கிரிப்ட்டுக்குத் தேவைப்பட்டதை பயன்படுத்தியிருக்கோம்.

ராணா படம் என்ன ஸ்டேஜ்ல இருக்கு..?

‘சிவப்பு’ முடிச்சதும், ராணாவுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை அமைஞ்சது. அவரை அப்ரோச் பண்றதும் எளிதா இருந்தது. கதையைக்  கேட்டதுமே ‘பண்றேன்’னு ரிசல்ட்டையும் சொல்லிட்டார். தமிழ் - தெலுங்குல ஒரே நேரத்துல வெளியாகப் போகுது. தமிழ்ல ‘மடை  திறந்து’னு டைட்டில் வைக்கலாம்னு நினைச்சோம். ஆனா, இப்ப ‘1945’ என்ற தலைப்பையே சூட்டியிருக்கோம். பீரியட் ஃபிலிம். சுபாஷ் சந்திர போஸின் ‘ஐஎன்ஏ’ படை வீரரா ராணா நடிச்சிருக்கார். ரெஜினா, நாசர், சத்யராஜ்னு நிறைய ஆர்ட்டிஸ்ட்கள் கலக்கி யிருக்காங்க. ‘பியார் பிரேமா காதல்’ என்.ராஜராஜன் சார்தான் இந்தப் படத்தை தயாரிக்கறார். தெலுங்குல நான் இயக்கும் முதல் படம் இது. ஷூட்டும் முடிஞ்சிடுச்சு. போஸ்ட் புரொடக்‌ஷன், கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்துட்டிருக்கு.

- மை.பாரதிராஜா