ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்
கே.என்.சிவராமன் - 16
ஓவியம்: ஸ்யாம்
வாளைச் சுழற்றியபடியே தன் புரவியை சிவகாமி திருப்பினாள். அவளுக்குப் பக்கவாட்டில் இருந்த குதிரையின் மீது முண்டமாக ஒருவன் சாய்ந்தான்... தரையில் விழுந்தான். கழுத்திலிருந்து பெருகிய குருதி புற் களைச் சிவப்பாக்கியது.அவனைத் தொடர்ந்து வந்த நான்கு வீரர்களை சில கணங்களில் கரிகாலன் செயலிழக்க வைத்து விரட்டினான். ஆயுதங்களைப் பறிகொடுத்து தலைதெறிக்க அவர்கள் குதிரைகளில் பறப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.இருவரும் தத்தம் புரவிகளில் அமர்ந்தபடி வட்டமாகச் சுற்றினார்கள். சருகுகள் மிதிபடும் ஓசையைத் தவிர அமைதியே அங்கு நிலவியது. பறவைகள் ஏதும் சடசடவென மிரண்டு பறக்கவில்லை. கரிகாலன் புன்னகையுடன் சிவகாமியை ஏறிட்டான். ‘‘நளினமும் ரவுத்திரமும் உன் வாள் வீச்சில் தெரிகிறது!’’‘‘பெருமை எல்லாம் கற்றுத் தந்த ஆசானுக்குப் போய்ச் சேர வேண்டும்...’’ பதிலளித்த சிவகாமியின் குரலிலும் முகத்திலும் ஒருசேர கடுமை பரவியது.
 கொதிப்பவளை ஆற்றுப்படுத்த புரவியுடன் நெருங்க முற்பட்டான். ஆமாம், முயன்றான். அதற்குள் அவனைச் சுமந்த குதிரையும் சிவகாமி அமர்ந்திருந்த புரவியும் ஒருசேர தலையை உயர்த்தி கனைத்தன.இருவருக்கும் வரும் சிக்கல் புரிந்தது. அவர்களது புரவிகள் அதை உணர்த்தின. தங்களுக்கு வரும் ஆபத்தை மட்டுமல்ல, பருவநிலை மாற்றங்களையும் தாவரங்களாலும் விலங்குகளாலும் உணர முடியும். தங்கள் ‘சகஹிருதயர்களுக்கு’ அவற்றைத் தெரிவிக்கவும் முடியும்.படைப்பின் ரகசியம் இது. இத்தனைக்கும் தாவரங்களின் வேர்கள் தனித்தனிதான். இரு மரங்கள் போதுமான இடைவெளிவிட்டு ஒன்றை ஒன்று தொடாமல், நெருங்காமல் வளர்ந்திருக்கும்தான். என்றாலும் ஒரு மரம் வெட்டப்படும்போது, தனக்கு வந்திருக்கும் ஆபத்தை குறிப்பிட்ட தொலைவு வரை வளர்ந்திருக்கும் அனைத்து மரங்களுக்கும் அது அறிவிக்கும். அதுநாள்வரை, தான் சேமித்து வைத்திருந்த சக்திகளை உடனே மற்றவற்றுக்கு கடத்தும். அவற்றைத் தப்பிக்கச் சொல்லி செய்தி அனுப்பும்.
இதே தன்மை விலங்குகளுக்கும் உண்டு. குறிப்பாக, மனிதர்களால் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு. இவை தங்களுக்கு வரும் ஆபத்தை மட்டுமல்ல... தங்கள் எஜமானர்களுக்கு வரும் சிக்கல்களையும் முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கும். போலவே, தங்களைப் போன்ற சக விலங்குகளுக்கு ஓர் ஆபத்து அல்லது நோய் என்றால் அதை முதன்முதலில் உணர்பவையும் இவைதான்.கரிகாலனும் சிவகாமியும் அமர்ந்திருந்த புரவிகள் அந்த நேரத்தில் கனைத்தது இதன் ஒருபகுதிதான். இருவருமே அசுவசாஸ்திரிகளாக இருந்ததால் குதிரைகளின் மொழி அவர்களுக்குப் புரிந்தது. எனவே, வருவது ஆபத்தல்ல... மாறாக, ஏதோ ஒரு புரவிக்கு சிக்கல் எழுந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு இறங்கினார்கள். தங்கள் வாட்களை இடுப்பில் சொருகிக் கொண்டார்கள். உன்னிப்பாகத் தங்களைச் சுற்றிலும் நோட்டமிட்டார்கள்.
கணங்கள் கடந்தன. அவர்கள் ஏறி வந்த புரவிகள் நிலைகொள்ளாமல் தவித்தன. எட்டு கால்களையும் முன்னும் பின்னுமாக நகர்த்தின. கனைப்பின் வேகம் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தன.கரிகாலனும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘இரு... என்னவென்று பார்த்து வருகிறேன்!’’ அவளிடம் சொல்லி விட்டு அடர்ந்த வனத்துக்குள் அவன் நகர முற்பட்டபோது, எதிரே இருந்த புதர் பக்கம் சலசலப்பு எழுந்தது. இருவரும் தங்கள் பார்வையை அந்தத் திக்கில் பதித்தார்கள். தள்ளாட்டத்துடன் குதிரை ஒன்று மெல்ல மெல்ல இரண்டாள் உயர செடி, கொடிகளை விலக்கியபடி வந்தது. அதன் மீது வயதான ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். வயது அறுபதுக்கு மேல் இருக்கும். மார்பு வரை வெண்மை நிறத் தாடி புரண்டிருந்தது. அதனுடன் போட்டி போடும் வகையில் வெள்ளை நிற தலைக் கேசம்.
அவர் கண்களில் மரணபயம் தென்படவில்லை. ஆனால், தான் அமர்ந்திருக்கும் புரவியின் நிலை அவருக்குப் புரிந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் தன்னை அது தரையில் தள்ளிவிடலாம் என்பதை உணர்ந்திருந்தார். அக்குறிப்பு அவர் வதனத்தில் நீக்கமற நிறைந்திருந்தது.கண் எதிரே சற்றே வெட்டவெளி தென்படுவதையும், ஆணும் பெண்ணுமாக இருவர் புரவிகளுடன் அங்கிருப்பதையும், இருவரது தோற்றமும் பல்லவர்கள் போல காணப்பட்டதும், அவர்களது இடுப்பிலிருந்த மெல்லிய கூர்மையான வாளும் அந்தப் பெரியவருக்கு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். கைகளை உயர்த்தி, ‘‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா - மோ...’’ எனக் கத்தினார்.
கரிகாலனும் சிவகாமியும் அதிர்ந்தார்கள். இது ரகசியச் சொல். செ - லி என்றால் ஸ்ரீ. நா - லோ - செங் - கியா என்றால் நரசிம்ம. பா - தோ - பா - மோ என்றால் போத்தவர்மன். மொத்தமாகச் சேர்த்தால் ஸ்ரீநரசிம்ம போத்தவர்மன். இரண்டாம் நரசிம்ம வர்மரான பல்லவ இளவல் ராஜசிம்மரை சீனர்கள் இப்படித்தான் அழைப்பார்கள். இதையேதான் சங்கேதச் சொல்லால் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளவும், பரஸ்பர நம்பிக்கையுடன் பணியாற்றவும் பல்லவ நலம் விரும்பிகள் தங்களுக்குள் உபயோகித்தார்கள். அதனால்தான் கரிகாலனை முதன்முதலில் சந்தித்தபோது சிவகாமி இதையே உச்சரித்தாள். இதற்குக் கட்டுப்பட்டுத்தான் எந்த வினாவும் தொடுக்காமல் அவளுடன் பயணப்படுகிறான்.
அந்தளவுக்கு சக்தி மிக்க அச்சொல்லை புரவியில் அமர்ந்திருந்த பெரியவர் உச்சரித்ததும் கரிகாலனும் சிவகாமியும் தாமதிக்கவில்லை. எந்த மனிதராக இருந்தாலும் ஆபத்துக் காலத்தில் உதவுவது மனிதப் பண்பு என்று நினைக்கும் அவர்கள் இருவரும் தங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தபிறகு சும்மா இருப்பார்களா..?பாய்ந்து சென்று கைத்தாங்கலாய் அப்பெரியவரை இறக்கினார்கள்.‘‘புரவிக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. திடீரென்று அது தள்ளாட ஆரம்பித்தது...’’ சுட்டிக் காட்டியபடி சொன்ன பெரியவர், ‘முதலில்அதைக் கவனியுங்கள்... பிறகு நாம் உரையாடுவோம்...’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.ஆனால், பெரியவர் இப்படிச் சொல்வதற்கு முன்பாகவே, அவரைத் தரையில் இறக்கிய கையோடு சிவகாமி அப்புரவியை நெருங்கி யிருந்தாள்.
அடர் மாநிறப் புரவி. மூக்கு வரை தண்ணீருக்குள் மூழ்கி நீரைக் குடிக்கும். பலமான தேகம். அச்சு அசல் சத்திரிய சாதிக் குதிரை என பார்த்ததுமே தெரிந்தது. எனில் பராக்கிரமும் கோபமும் சம அளவில் இதற்கு இருக்கும். எதிரிகளுடன் போர் செய்ய ஏற்றது. தன் எஜமானருக்கு வெற்றியைத் தேடித் தரும் வல்லமை படைத்தது. சத்ருக்களிடம் தன் எஜமானரைச் சிக்க விடாது. ஒருவேளை அகப்படும் சூழல் வந்தால் தன் முன்னங்கால்களை உயர்த்தி எதிரிகளைத் தடுத்து நிறுத்தும். பற்களால் சத்ருக்களின் தேகத்தைக் கடித்துக்குதறும்; துண்டாக்கும். இதுபோன்ற புரவி கிடைப்பது அதிர்ஷ்டம்.
மெல்ல அதைத் தட்டிக் கொடுத்தாள். அதன் நெற்றியைத் தடவி தன் அன்பை சிவகாமி பகிர்ந்துகொண்டாள். ஆரம்பத்தில் முரண்டு பிடித்த புரவி இதன்பிறகு அவளுக்குக் கட்டுப்பட்டது. குழந்தையைப்போல் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் துணை புரிந்தது.தனக்கு அப்புரவி வசப்பட்டதும் அதன் நாடித் துடிப்பை அறிய முற்பட்டாள். மனிதர்கள் போலவேதான் அசுவங்களும். எப்படி மனிதர்களின் நோய்களை நாடித் துடிப்பின் வழியே கண்டறிகிறோமோ அப்படி புரவிகளுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதியின் தன்மை அறிய அசுவசாஸ்திரிகள் அதன் நாடியைப் பார்ப்பார்கள். அதாவது குதிரையின் செவி, கண்கள், வாய், அக்குள் ஆகிய நான்கையும் பரிசோதிப்பதுதான் அதற்கு நாடி பார்ப்பது. நகுல சகாதேவர் அருளிய ‘அசுவ சாஸ்திரம்’ பயின்றிருந்த சிவகாமிக்கு இச்சிகிச்சை எல்லாம் தண்ணீர்பட்ட பாடு. தன் பெரு விரலைத்தவிர மற்ற நான்கு விரல்களையும் வரிசையாக ஒன்றாகச் சேர்த்து அப்புரவியின் செவியை மெதுவாக சிவகாமி பார்த்தாள். அப்பகுதி சூடாக இருந்தால் ஜுரம். குளுமையாக இருந்தால் சீதளம். சூடும் குளுமையும் கலந்திருந்தால் நோயும் கலந்திருக்கிறது என்று அர்த்தம்.
கண்களைச் சுருக்கி ஒரு கணம் யோசித்த சிவகாமி, பிறகு குதிரையின் கண்களை விரித்துப் பார்த்தாள். இரத்தம் வெளுத்து தண்ணீர் அங்கு ததும்பிக் கொண்டிருந்தால் புரவிக்கு வெட்டை அதிகரித்து சூடேறியிருக்கிறது என்று பொருள். மாறாக, கண்கள் மஞ்சள் நிறத்திலோ வான நிறத்திலோ கலந்து தோன்றினால் அதற்கு பித்த ஜுரம் என்று அர்த்தம். அதுவே பச்சை இரத்தம் புள்ளியாக விழுந்திருந்தால் ஜன்னி பிடித்திருப்பதாகக் கொள்ளலாம். கண்கள் இரத்தச் சிவப்பாகக் காணப்பட்டால் வாயு அதிகரித்திருக்கிறது என்றும்; கண்கள் சிவந்து கீழ்வயிறும் அண்டமும் வீங்கியிருந்தால் ஜகர்பாத்து உண்டாகி இருக்கிறதென்றும் பொருள்.
இதை ஆராய்ந்துவிட்டு சிவகாமி முழங்காலிட்டு புரவியின் வாய் பக்கம் வந்தாள். உதடு வெளுத்து பச்சை நரம்புகள் விம்மி கால்களில் எந்த ஓரு அசைவுமில்லாமல் நீண்டு கண்களில் நீர் இருந்தால் ஜவுகீறா பிறந்திருப்பதாகவும்; வயிறு வீங்கி மலசலங் கட்டுப்பட்டுப் படுப்பதும் எழுந்திருப்பதுமாக இருந்தால் பர்கீறா பிறந்திருப்பதாகவும்; தாகம் அதிகரித்து கொள்ளும் புல்லும் கொஞ்சமாகத் தின்று பெருமூச்செறிந்தால் ஆப்கீறா பிறந்திருக்கிறது என்றும்; தேகம் முழுவதும் சூடேறி மார்பு கனத்து புற்களைத் தின்னாமல் கண்களில் நீர் ததும்பிக் கொண்டு தலையைக் கீழே போட்டுவிடுமானால் குளுமை பிறந்திருக்கிறது என்றும் உணர வேண்டும் என்கிறது ‘அசுவ சாஸ்திரம்’.
அந்த வெட்ட வெளியில் தண்ணீருக்கும் கொள்ளுக்கும் வாய்ப்பில்லை. ஆனால், புற்கள் நிறைந்திருக்கின்றன. அதைக் கொண்டு அப்புரவிக்கு வந்திருக்கும் நோயின் தன்மையை அறிய முற்பட்ட சிவகாமி இறுதியாக அக்குள் பக்கம் வந்தாள்.இதற்காக கிட்டத்தட்ட தரையில் படுத்து அக்குதிரையின் முன்னங்கால் இடுக்கை நெருங்கி அதன் துடிப்பைக் கண்காணித்தாள். மெலிந்து மெதுவாகத் துடித்தால் குளிர்மை; வேகமாக துடித்தால் சூடு. இரண்டு முன்னங்கால் இடுக்கிலும் - அக்குளிலும் - மெலிந்து மெதுவாகத் துடித்தால் அதிக குளிர்மை; இரு அக்குளிலும் வேகமாகத் துடித்தால் அதிக சூடு. நடக்கவே முடியாமல் புரவி தள்ளாடும்...தெளிவுடன் லாவகமாகப் படுத்தவாறே அசைந்து குதிரைக்கு வெளியே வந்த சிவகாமி எழுந்து நின்றாள். ‘‘குணப்படுத்தி விடலாம்... ஒன்றும் பிரச்னையில்லை...’’ என்று சொன்னபடியே தன் பின்னால் திரும்பி கரிகாலனையும் அப்பெரியவரையும் பார்த்த சிவகாமி அதிர்ந்தாள்.காரணம், கரிகாலனின் பார்வை அந்தப் பெரியவரின் இடுப்பில் பதிந்திருந்தது. அங்கு வாள் ஒன்றை பெரியவர் சொருகியிருந்தார். அந்த வாள், சற்று முன்னர் சுரங்கத்தில் அவர்கள் பார்த்த நாக விஷம் தோய்ந்த வாட்களில் ஒன்று!
(தொடரும்)
 வலியில்லா பெருவாழ்வு!
வலியில்லா வாழ்க்கையை வாழவே மனிதன் விரும்புகிறான். எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் வலி என வந்துவிட்டால் மெல்ல மெல்ல அவனும் கோழையாகிறான்.குறிப்பாக மூட்டு தேய்மானம், முதுகு வலி, தலை / முகத்தில் ஏற்படும் வலி, கேன்சரால் ஏற்படும் வலி... இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் சக்தி எந்த மனிதனிடமும் இல்லை.இதற்கான தீர்வு அறுவை சிகிச்சைதான் என பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன அலோபதி மருத்துவ முறை மூலம் வலி நிவாரணம் செய்கிறார்கள்.அதே வழிமுறை இப்போது சென்னையிலும் கிடைக்கிறது. ஆம்; அறுவை சிகிச்சை இல்லாமல் அனைத்து வலிகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம். மூட்டு களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காகவே பிறந்திருக்கிறது ‘பீனிக்ஸ் வலி நிவாரண மையம்’. ஜெர்மனியில் படித்த மருத்துவரான கே.விஜயராகவன் தலைமையில் சிறப்பான சிகிச்சையைப் பெறலாம். தொடர்புக்கு: 8822882285
|