ராஷி.. ராசி..
‘ராசிதான் உன் ராசிதான் உன் முகமே ராசிதான்..!’ கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் ஸாங் இதுதான்!கொஞ்சம் சமந்தா சாயல், கொஞ்சம் காஜல் பாய்ச்சல் என அசரடிக்கிறார் அந்த ராசிக்கார பொண்ணு ராஷி கண்ணா. நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ ரிலீஸ் சந்தோஷம் ஒரு பக்கம் என்றால் ஜெயம் ரவியுடன் ‘அடங்க மறு’, விஷாலுடன் ‘அயோக்யா’, சித்தார்த்துடன் ‘சைத்தான் கா பச்சா’ என சிக்ஸர் ஜிலேபியாக மறுபக்கம்.சற்றே கடலை போடலாம் என தெரிந்த இந்தி, இங்கிலீஷ் வார்த்தைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு போன் அடித்தால், ‘‘எப்படி இருக்கீங்க..?’’ என அழகு தமிழில் கொஞ்சுகிறார்.
 ‘‘சென்னை பிடிச்சிருக்கு. மொழி தெரிஞ்சாதான் நல்ல நடிகையா நீடிக்க முடியும். இது என் நம்பிக்கை. அதனாலயே தெலுங்கு சரளமா கத்துகிட்டு டோலிவுட் போனேன். இப்ப தமிழ். கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, ஈசியா இருக்கு.என் அனுபவத்துல மலையாளம் கத்துக்கறதுதான் சிரமம். அங்க மோகன்லால் சார் கூட ‘வில்லன்’ல சின்ன ரோல் செய்தப்பதான் தமிழ்ல ‘சைத்தான் கா பச்சா’ல கமிட் ஆனேன். ஒரே நேரத்துல தமிழ், மலையாளத்துல அறிமுகமாகறது மகிழ்ச்சியா இருக்கு!’’ மத்தாப்பாக சிரிக்கிறார் ராஷி கண்ணா.
டோலிவுட்ல நீங்கதான் ராக்கிங் ஹீரோயினாமே..?
ரியலி..! கோலிவுட் வரை இந்தத் தகவல் பரவியிருக்கறதுல ஹேப்பி. பட், சும்மா ஒரு ரைமிங்காக அப்படிச் சொல்லியிருப்பாங்க. பூர்வீகம் தில்லி. ஒரேயொரு அண்ணா. பிஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடிச்சிருக்கேன். ஐஏஎஸ் ஆகணும்னு கனவு. நடிகையானது அழகான விபத்து!கூச்ச சுபாவம் கொண்டவளா இருந்தேன். மாடலிங் ஷூட் அப்ப வெட்கப்பட்டு வீட்டுக்கு ஓடி வந்திருக்கேன். இந்தில ‘மெட்ராஸ் கஃபே’ல அறிமுகமானேன். அதனோட ஆடிஷன் அப்பவும் ஷை டைப்பாதான் இருந்தேன். ஆடிஷன்ல சொதப்பவும் செஞ்சேன். ஆக, எதுவுமே தெரியாமதான் சினிமாவுக்கு வந்தேன். கொஞ்சம் கொஞ்சமா இந்த ஃபீல்டை புரிஞ்சுகிட்டேன். ‘மனம்’தான் தெலுங்குல முதல் படம். சின்ன ரோல்தான். ஆனா, பலமான அஸ்தி வாரம். டோலிவுட்ல நடிக்க வந்த புதுசுல என்னை வட இந்தியப் பெண்ணாதான் பார்த்தாங்க. அப்புறம் தொடர்ந்து தெலுங்குப் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சதும் அவங்க வீட்டுப் பெண்ணா ஏத்துக்கிட்டாங்க!
குறிப்பா ‘ஸ்ரீனிவாசா கல்யாணம்’. அச்சு அசல் தெலுங்குப் பெண்ணா அதுல நான் தெரிஞ்சதா எல்லாரும் சொன்னாங்க! வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு... தேங்க்ஸ். ஓரளவு நல்லா பாடுவேன். ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்னா இஷ்டம். பாடகியாகணும்னு லைட்டா ஆசை இருக்கு! ‘தொளி பிரேமா’ தெலுங்குப் படத்துல என்னையே டப்பிங் பேசச் சொன்னாங்க. ஆனா, மத்த படங்களோட ஷூட் தொடர்ந்து இருந்ததால அது முடியாமப் போயிடுச்சு. விரைவில் தமிழ்ல டப்பிங் பேசினாலோ தமிழ்ல பாட்டுப் பாடினாலோ ஆச்சர்யப்படாதீங்க!
 உங்க ரூட் கிளாமரா... ஆக்ஷனா..?
ரெண்டையும் போற போக்குல பண்ணலாம். இதைவிட நல்ல பர்ஃபார்மர்னு பெயர் வாங்கணும்னுதான் நினைக்கறேன். அதனாலதான் மலையாள ‘வில்லன்’ படத்துல சின்ன ரோலா இருந்தாலும் செஞ்சேன். என் நடிப்பை எல்லாரும் அங்க பாராட்டினாங்க. இதுதான் வேணும். கதை சொல்ல வர்றவங்ககிட்ட பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்பேன். என் கேரக்டருக்கு ஸ்கோப் இருக்கானு பார்ப்பேன். மத்தபடி சின்ன ரோல், பெரிய ரோல், மெயின் ரோல், எந்த லாங்வேஜ் படம்... இதெல்லாம் முக்கியமில்ல. நல்ல நடிகைனு பெயர் வாங்கினா போதும்.
‘இமைக்கா நொடிகள்’ல நயன்தாராவும் விஜய்சேதுபதியும் என்ன சொன்னாங்க...?
படத்துல அவங்க ரெண்டு பேரோடயும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இல்ல. இயக்குநர் அனுராக் காஷ்யப், அதர்வா கூடதான் நடிச்சேன். ‘விக்ரம் வேதா’ பார்த்ததும் விஜய் சேதுபதி கூட நடிக்கணும்னு ஆசை வந்துடுச்சு. அதே மாதிரி ‘தெறி’, ‘மெர்சல்’ பார்த்ததும் விஜய்- அட்லீ காம்பினேஷன்ல நடிக்கணும்னு விரும்பறேன்! ‘இமைக்கா நொடிகள்’ கேரக்டருக்கு நேர் எதிரான கதாபாத்திரத்துல ‘அடங்க மறு’ல நடிச்சிருக்கேன். ‘சைத்தான் கி பச்சா’ ஷூட்டிங்கே கலகலப்பா போகுது. ஷாட்லயே நிறைய முறை வாய்விட்டு சிரிச்சிருக்கேன். விஷாலுடன் நடிக்கிற ‘அயோக்யா’ல முக்கியமான ரோல்.
ராஷியோட பர்சனல் பேசலாமோ..?
ம்ம்... பேசலாம்! ஆனா, நீங்க சப்பு கொட்டற மாதிரி எதுவும் இல்ல! தினமும் ஜிம்ல ஒர்க் அவுட் செய்யறேன். ஸ்பைசி யான ஃபுட்ஸ் பிடிக்காது. ‘Eat healthy, Work hard’ இதுதான் என் பாலிசி. கறுப்பும் வெள்ளையும் என் லக்கி கலர்ஸ்.ரகசியமா கவிதை எழுதறேன்! மியூசிக் கேட்பேன். பயணப் பறவை. பைக் அல்லது கார்ல லாங் டிரைவ் போகப் பிடிக்கும். இதுதான்... இது மட்டும்தான் என் பர்சனல்!
-மை.பாரதிராஜா
|