சம்பாதிப்பதற்காக போதைப் பொருளோ, கள்ளச் சாராயமோ விற்க முடியாது!



அழுத்தமாகச் சொல்கிறார் மேற்குத் தொடர்ச்சி மலை இயக்குநர் லெனின்பாரதி

நா.கதிர்வேலன்

லெனின்பாரதிக்கு ராயல் சல்யூட்!இளகிய மனத்தோடு ஈரமாய் சொன்ன ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யை எல்லோரும் உச்சி முகர்ந்து  பாராட்டுகிறார்கள். வேர்களின் விலாசம் தெரியாமலேயே நனைத்து விட்டுப் போகிற மழையாய்... விழிகளின் முகவரி தெரியாமலேயே  துடைத்துவிட்டுப் போகிற விரலாய் வாழ்வதுதான் மனிதம். அப்படி ஒரு வாழ்க்கையைக் காட்டி இயக்குநர் லெனின்பாரதி தமிழ்  சினிமாவிற்கு ஒளியேற்றுகிறார். அவரின் மனதில் நுழைந்தால், வெளிச்சம் பரவுகிறது.

‘‘நிச்சயமாக நான் சாதித்து விட்டதாக நினைக்கவில்லை. இன்னும் நாம் திரும்பிப் பார்க்காத இடம், மனிதர்கள்னு இங்கே நிறையவே  இருக்காங்க. தமிழ் சினிமாவில் புற உலகமும், மகிழ்ச்சிக் கணங்களும்தான் மிக அதிகமாக சித்தரிக்கப்படுது. துக்கத்தின் வேர்களைச்  சென்றடைகிற பயணங்கள் இங்கே குறைவு. சினிமாவிற்கு வந்த பிறகுதான் அதன் தாக்கத்தை உணர்ந்தேன். அது ஒரு பொழுது  போக்குத்தான். ஆனால், அதுக்குள்ளே ஒரு தரம் வேணும். சமூகத்தின் இழிவுகளுக்கு நாம் காரணமாக ஆகிவிடக்கூடாது.வாழ்க்கையின்  பதிவை சினிமாவில் கொண்டுவரணும். அதே நேரத்தில் பணம் போட்ட வங்களுக்கு பணம் திரும்பி வரணும். படைப்பாளிக்கு அவ்வளவு  பொறுப்பு இருக்கு. அதை மறந்திட்டு, சம்பாதிப்பதற்காக போதைப் பொருளோ, கள்ளச் சாராயமோ விற்கமுடியாது. ஆனால், அப்படித்தான்  இங்கே இருக்கு. மிக மலிவான விஷயங்களைக் கொடுத்திட்டு இருக்கோம்.

நா.முத்துக்குமார் மரணத்திற்கு போயிருந்தேன். அவரை கடைசியாய் பார்க்க சினிமாக்காரங்க வரும்போது ‘ஹே... ஹே...’னு கத்தி  உற்சாகமாக படம் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. அப்ப, மரண வீட்டில் இருக்கிற அந்த உறவினர்களின் வலியை உணர்ந்தோமா? எனக்கு  ரொம்ப வெட்கமா இருந்தது. அந்த மக்கள் மேலே கோபம் வரல. இந்த மனநிலையைத்தான் சினிமா வளர்த்திருக்கு.நம்ம படங்களில்  வாழ்க்கையின் மாதிரிகள் இருக்கணும். கிளிஷே வரக்கூடாது. எனது அறிவை காட்டக் கூடாது. கலை, கலையாகவே இருக்கணும். அதுதான்  அழகு. சொல்ல வருகிற எதிலும் வாழ்க்கையை எளிதில் பின்னிப் பிணைத்துவிட்டால், அது பலமடங்கு உள்வாங்க வைக்கும்.

இந்த சமூகம் ஆரோக்கியமாக இருக்கிறதுக்கு நாம் ஒரு துரும்பையாவது கிள்ளிப் போடணும். நாம் வாழ்றதுக்கான அத்தியாவசியம்,  தேவைன்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு மேலே நாம் ஆசைப்படறதுதான் அதிகம். அந்தப் போட்டிக்குள்ளே நான் போகவே இல்லை. எத்தனையோ பேர் நம் பார்வையில் படாமல் இருந்துகிட்டு நல்ல விஷயங்கள் செய்துகிட்டுத்தான் இருக்காங்க. சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு  நல்லது நடந்திட்டு இருக்கு. அதுக்கு என் கையளிப்பாக ஏதாவது செய்யணும்னு நினைச்சதுதான் இந்தப் படம்.

என்னைத் தொந்தரவு செய்கிற விஷயங்களைத்தான் இனிமேலும் செய்யப் போறேன். காதல் படம் பண்ண, பழிவாங்க, ஹீரோவை உற்பத்தி  பண்ண நிறையப்பேர் இருக்காங்க. கலைப் பதிவா சமூகத்திற்கு எதையாவது விட்டுப் போகணும். இதைப் பாத்திட்டு நாலு பேர் அவங்க  பங்கிற்கு அவங்க பார்த்த வாழ்க்கையை எடுத்துக் காட்டணும். அவங்களுக்கு இந்தப் படம் ஒரு சின்ன வழிகாட்டலாக, கதவைத் திறந்து  விட்டால் போதும். ரொம்ப நாள் கழிச்சு இது நடக்கும். சின்னச்சின்ன அசைவுகளாகச் சேர்ந்து பெரும் திசையில் போய் முடியும்.

அப்போ  மலிவானதையெல்லாம் காலம் அடிச்சிட்டு போயிடும்.விஜய்சேதுபதி தயாரிக்காவிடில், இந்தப் பதிவுக்கான அடையாளமே இருந்திருக்காது.  என் தலைக்குள்ளே காட்சிகளாய் உறைஞ்சு போயிருக்கும்.என்னைப் பொறுத்தவரை பேரன்பிலேயே விளைகிறது மனிதநேயத்திற்கான  நிரந்தர ஈரம். நான் இன்னும் ஒண்ணும் செய்யவே இல்லை. இன்னும் நல்ல சினிமா, பொறுப்புள்ள சினிமா எடுக்க இந்தப் பாராட்டும்,  நெகிழ்ச்சியும் என்னைப் பண்படுத்துமே தவிர வேறில்லை...’’ என கனிந்த அன்பில் கரம் பற்றுகிறார் லெனின்பாரதி.