நான் பாலகுமாரன் உதவியாளன்!
பெருமையுடன் அறிவிக்கிறார் சன் டிவியின் முதல் மெகா தொடரான ‘சக்தி’யை இயக்கிய ஜெகநாத் நடராஜன்
சன் டிவியின் முதல் மெகா தொடரான ‘சக்தி’யை இயக்கியவர் ஜெகன். எழுத்துச் சித்தர் பாலகுமாரனிடம் பத்தாண்டு காலம் உதவியாளராக இருந்த அனுபவத்தோடு சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர். ‘‘சினிமால வெற்றிகரமா ஜொலித்த பானுப்ரியா, ஷோபனா (‘சக்தி’), சுகன்யா, மீனா (‘நீதி’) எல்லாம் சீரியல்களுக்கு வந்தப்ப என் கதை, திரைக்கதைலதான் நடிச்சாங்க...’’ என பெருமிதப்படும் ஜெகன், ‘கஸ்தூரி’, ‘மகாலட்சுமி’ உட்பட பல தொடர்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார்; எழுதி வருகிறார்.
 ‘‘1996ல ‘சக்தி’ ஒளிபரப்பாச்சு. 500 எபிசோடுகள் போன முதல் தொடர் அதுதான். அந்த சீரியலுக்கு கிடைச்ச வரவேற்பை மறக்க முடியாது. இந்தத் தொடர் வந்தப்ப கே.பாக்யராஜ் சாரோட மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு. அவரை ஆஸ்பிடல் கூட்டிட்டுப் போக பாக்யராஜ் சாரும், பூர்ணிமா மேமும் தயாரானாங்க. ‘நான் கார்ல வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க மாமா’னு சொல்லிட்டு பாக்யராஜ் சார் கார்ல காத்திருந்தார். அரைமணி நேரமாகியும் யாரும் வரலை.பதறிப்போய் வீட்டுக்குள்ள வந்த பாக்யராஜ் சார் ஷாக்காகிட்டார். ஏன்னா அவர் மாமனார் டிவி முன்னால உட்கார்ந்திருந்தார்! ‘அஞ்சே நிமிஷம் மாப்ள... சீரியல் முடிஞ்சுடும்’னு சொல்லியிருக்கார்.
இந்த இன்சிடென்ட்டை பல மேடைகள்ல பாக்யராஜ் சாரே சொல்லி ஆச்சர்யப்பட்டிருக்கார். இதைவிட எனக்கு வேறென்ன பெருமை வேணும் சொல்லுங்க...’’ மலர்ச்சியுடன் சொல்லும் ஜெகன், இப்போது தன் பெயரை நியூமராலஜிப் படி ஜெகநாத் நடராஜன் என மாற்றிக் கொண்டிருக்கிறார்.‘‘இனியாவது அதிர்ஷ்டம் வரட்டும்னுதான் பெயர் மாத்தினேன். அந்த ராசி, இதோ நீங்க பேட்டி எடுக்கறீங்க...’’ சிரிக்கும் ஜெகநாத் நடராஜன், நெல்லைக்காரர். ‘‘தென்காசி பக்கம் ஊர்மேனிஅழகியான் கிராமம்தான் பூர்வீகம். அப்பா நடராஜன், விவசாயி. அம்மா சங்கரி, இல்லத்தரசி. வீட்ல நான் மூத்த பையன். ஒரு தம்பி. ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. ஸ்கூல் படிக்கிறப்ப கவிஞர் கலாப்ரியாவின் மனைவி சரஸ்வதி டீச்சர்தான் எனக்குப் பாடம் எடுத்தாங்க. கவிதைகள், கதைகள் மேல எனக்கு ஆர்வம் வர அவங்களும் காரணம்.
சிவகாசில சிவில் என்ஜினீயரிங் படிச்சேன். இந்த நேரத்துலதான் பாலகுமாரன் சார் நாவல்கள் அறிமுகமாச்சு. நானும் கவிதைகள், துணுக்குகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிட்டிருந்தேன். வலம்புரிஜானின் ‘தாய்’ வார இதழ்ல என் துணுக்குகள் வெளியாகியிருக்கு. படிப்பை முடிச்சதும் சிதம்பரத்துல பொதுப்பணித்துறைல டெக்னிகல் அசிஸ்டென்ட்டாக வேலைக்குச் சேர்ந்தேன். பாலகுமாரன் சார் எழுத்து மேல தீவிர காதல் வந்தது. கடிதங்கள் வழியா அவர் கூட தொடர்பை ஏற்படுத்திக்கிட்டேன். அப்ப அவர் கே.பாலசந்தர் சார்கிட்ட ஒர்க் பண்ணிட்டு, தனியா படம் இயக்குற முயற்சில இருந்தார். அவர்கிட்ட உதவியாளரா சேர விரும்பினேன்.
மனசுக்கு பிடிக்காத வேலையை உதறிட்டு சென்னை வந்து பாலகுமாரன் சாரை சந்திச்சேன். ‘மொதல்ல தங்கவும், சாப்பாட்டுக்கும் ஒரு வேலையைத் தேடிக்க. நான் படம் இயக்கறப்ப உன்னைக் கூப்பிடறேன்’னு சொன்னார். சர்வைவலுக்காக சோழா ஷெரட்டன் ஹோட்டல்ல கிடைச்ச வேலையைப் பார்த்தேன். சினிமா பிரபலங்கள் அங்க நிறைய வருவாங்க. எனக்குள்ள சினிமா ஆசை தீவிரமாச்சு. மறுபடியும் பாலகுமாரன் சாரை சந்திச்சேன்.சில சூழல்களால அவர் இயக்குநராக முடியாமப் போச்சு. அதுக்காக அவர் கவலைப்படல. தொடர்ந்து எழுத்துல தீவிரமா இயங்கப் போறதா சொன்னார். அதோட ‘என் கூடவே இரு’னு என்னை சேர்த்துக்கிட்டார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அவர் கூடவே பயணப்பட்டேன். இடைல பாலகுமாரன் சாரை விமர்சிச்சு சி.மோகன் ஒரு பத்தி எழுதியிருந்தார். அதைத் தட்டிக் கேட்கப் போனேன். ஆனா, சி.மோகனுக்கு நண்பனானேன்! இலக்கியம் பத்தின தெளிவை அவர் எனக்கு ஏற்படுத்தினார். அவர் வழியா வண்ணநிலவன், கோணங்கினு பலரின் நட்பு கிடைச்சது. பாலகுமாரன் சார் கூட இருந்துட்டு நானும் கதைகள் எழுதினா சரியா இருக்காதுனு மொழிபெயர்ப்புல ஆர்வம் காட்டினேன். இடைல ‘கணையாழி’ குறுநாவல் போட்டில என்னோட இரு குறுநாவல்கள் தேர்வாகி பரிசு பெற்ற அதிசயமும் நடந்தது!’’ கண்சிமிட்டும் ஜெகநாத் நடராஜன், சின்னத்திரைக்கு வந்தது சுவாரஸ்யமான கதை.‘‘ஒருநாள் எம்ஜிஆரோட உறவினர் மதுமோகன் சார் நட்பு கிடைச்சது. தூர்தர்ஷனுக்காக பிரபல எழுத்தாளர்களின் கதைகளை படமா தயாரிக்க நினைச்சார். அவருக்காக பாலகுமாரன் சாரோட ‘இரும்புக்குதிரைகள்’ கதையை 13 வாரத் தொடரா இயக்கினேன். அதான் சின்னத்திரைல என் முதல் பயணம்.
அப்புறம் என் நண்பர் விவேக் மூலமா நிம்பஸ் நிறுவனம் மெகா தொடர் தயாரிக்கப் போறதா கேள்விப்பட்டு அவங்களை சந்திச்சு ‘சக்தி’ கதையைச் சொன்னேன். பிடிச்சுப் போய் தயாரிச்சாங்க. முதல் மெகா தொடரான இது மெகா ஹிட்டும் ஆச்சு. நான்கு மொழிகள்லயும் ஒளிபரப்பாச்சு. அப்புறம் பொன்வண்ணன், வடிவுக்கரசி நடிப்புல ‘பெண்’ தொடரை இயக்கினேன். பிறகு தெலுங்கு, மலையாளத்துல சில சீரியல்களை டைரக்ட் செஞ்சேன். பாக்யராஜ் சார் திரைக்கதைல ‘தூக்கணாங்குருவி’யை இயக்கும் வாய்ப்பும் அமைஞ்சது. அதுல வினோதினி ஹீரோயின். முழு சீரியலையும் ஏற்காட்டுலதான் படமாக்கினோம். அப்ப அவுட்டோர் ஷூட் ரொம்ப பெரிய விஷயம்...’’ என்று சொல்லும் ஜெகநாத் நடராஜன் மேலும் கூறியது.
 ‘‘இயக்குநர்கள் ஜெயபாரதி, டி.ஆர்.ராமண்ணா, ஜே.டி.ஜெர்ரி, வசந்த்னு பலர்கிட்ட அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணி யிருக்கேன். மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவின் ‘12பி’ படத்துக்கு வசனம் எழுதினேன். அதுல சில கசப்பான அனுபவங்கள். அதனால டயலாக்ல என் பெயர் இடம்பெறாம போயிடுச்சு.அப்புறம் இயக்குநர் வசந்த் தயாரிச்ச ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ சீரியல் பண்ணினேன். எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின தொடர் அது. இதுக்கு அப்புறம் கதை, திரைக்கதை எழுதறதுல மட்டும் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ‘காத்துகருப்பு’, ‘புதுக்கவிதை’, ‘தலையணைப்பூக்கள்’, ‘லட்சுமி வந்தாச்சு’, ‘கஸ்தூரி’, ‘மகாலட்சுமி’ (150 எபிசோடுகள் வரை)... இப்படி என் எழுத்துல வந்த தொடர்கள்னு ஒரு நீளமான பட்டியல் இருக்கு.
இப்ப சின்னத்திரைல இயக்குநர், ஸ்கிரிப்ட் ரைட்டர்களா ஜொலிக்கிற பலர் என்கிட்ட உதவியாளரா இருந்தவங்கதான்...’’ பெருமையாகச் சொல்லும் ஜெகநாத் நடராஜனின் ஒர்க்கிங் ஸ்டைல் தனி. ‘‘எந்த ஒரு பிரச்னைக்குமே வன்முறை தீர்வாகாது. சரணாகதி வழியாதான் மன அமைதியைத் தேட முடியும். இது என் குருநாதர் பாலகுமாரன் சாரின் நம்பிக்கை. அவர்கிட்ட கத்துக்கிட்டதாலயோ என்னவோ நானும் என் சீரியல்கள்ல வன்முறையைப் புகுத்தினதில்ல. அழுத்தமான கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.சீரியல் தவிர, மொழிபெயர்ப்புல ஆர்வம் இருக்கு. ஸ்பானிஷ் ரைட்டர் கார்லோஸ் ஃபுயண்ட்ஸ் எழுதின நாவலை ‘ஒளரா’னு தமிழாக்கம் செய்திருக்கேன். இப்ப இயக்குநர் ஹிட்ச்காக்கின் ரேடியோ உரையாடல் ஒண்ணை ‘அம்ருதா’ இலக்கிய மாத இதழ்ல தொடரா எழுதிட்டிருக்கேன்...’’ என்று சொல்லும் ஜெகநாத் நடராஜனுக்கு பார்வதி என்ற மனைவியும் சக்தி, பகவதி என்ற மகள்களும் இருக்கிறார்கள்.
-மை.பாரதிராஜா படங்கள் : ஆ.வின்சென்ட் பால்
|