COFFEE TABLE




அனுஷ்கா 13

படங்கள் கைவசம் இல்லையென்றாலும் ஆனந்தத்தில் மிதக்கிறார் அனுஷ்கா. சினிமாத் துறையில் வெற்றிகரமாக 13 ஆண்டுகள்  நிறைவடைந்த சந்தோஷ மிதப்பு அது. ‘‘ரசிகர்களின் திக்குமுக்காட வைக்கும் அன்பும், ஆதரவாலும்தான் இத்தகைய நீண்ட பயணம் எனக்கு  சாத்தியமாச்சு...’’ என சமூக வலைத்தள பக்கங்களில் சிலிர்த்திருக்கிறார் அனுஷ்கா. ‘‘அதுசரி, உங்க மேரேஜ் எப்போ மேம்..?’’ என்ற  ரசிகர்களின் குறும்பு கமென்ட்டுகளும் அங்கே துள்ளி விளையாடுகின்றன.

சானியா இப்ப அம்மா

‘‘விரைவில் நான் அம்மாவாகப் போகிறேன்...’’ என சானியா மிர்சா டுவிட்டியிருந்தார். இப்போது இன்ஸ்டா பக்கத்தில் அதை இன்னும்  ஸ்ட்ராங்காக அறிவித்திருக்கிறார். தன் வீட்டு ஹாலிலிருந்து பால்கனியை ரசித்தபடி ரிலாக்ஸாக அவர் அமர்ந்திருக்கும் அந்தப்  புகைப்படத்தைப் பார்த்தாலே அது புரியும். இந்த இனிய தருணத்தை க்ளிக்கியிருப்பவர் பாலிவுட்டின் புகைப்படக் கலைஞர் ரோஹன்  ஷ்ரேஷ்டா.

அபேஸ்


‘‘இந்தியாவில் நிகழ்ந்த டெபிட், கிரெடிட் கார்டு மோசடிகளில் அதிகளவில் பாதிக்கப்பட்டது ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள்தான்  என்றாலும், இந்த மோசடிகளில் அதிகமான பணத்தை இழந்தது சிட்டி யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள்...’’ என்கிறது சமீபத்திய  ஆய்வு.ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்தவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.கடந்த நான்கு வருடங்களில் மட்டும் இந்த மோசடியில் சுமார் 2,468 கோடி ரூபாய் புழங்கியிருக்கிறது. இவையெல்லாம்  மக்களின் பணம் என்பதுதான் துயரம்.

பட்ஜெட் டேப்லெட்


கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறையில் ராட்சஷனான ‘லெனோவா’  நிறுவனம், பட்ஜெட் டேப்லெட்டுகளை இந்தியவாடிக்கையாளர்களுக்காகவே  ஸ்பெஷலாக வரும் அக்டோபரில் அறிமுகப்படுத்தப் போகிறது. ‘E7’, ‘E8’, ‘E10’, ‘P10’, ‘M10’ என ஐந்து மாடல்கள். 16ஜிபி முதல் 64ஜிபி  வரை ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்ட் 8.1 இயங்குதளம், 7.3 இன்ச் டச் ஸ்கிரீன், 1024 X 600 பிக்ஸல் ரெசல்யூசன் என லேட்டஸ்ட்  டெக்னாலஜியில் இதை வடிவமைத்திருக்கிறார்கள். விலை ரூ.4,900 - ரூ.10,000.                             l

சர்ஃபிங் dog

சீறி வரும் கடல் அலையை எதிர்த்து பலகையில் நின்றவாறு சறுக்கி விளையாடும் சாகச விளையாட்டு சர்ஃபிங். உலகம் முழுவதும் இந்த  விளையாட்டுக்குத் தனி மவுசு. இப்போது கலிபோர்னியவாசிகள் தங்களது செல்ல நாய்களுக்கும் சர்ஃபிங் பயிற்சி கொடுத்து அசத்தி  வருகின்றனர். எஜமானர்களின் சொல்படி சாகச விளையாட்டில் களமிறங்கியிருக்கும் நாய்களுக்கான சர்ஃபிங் போட்டி, பசிபிக்  கடற்கரையில் கோலாகலமாக நடந்தது. இதை வீடியோவாக்கி வெளியிட, கோடிக்கணக்கில் ஹார்ட்டின்கள் குவிகின்றன.   
                     
-குங்குமம் டீம்