கவிதை வனம்



அந்தப் பார்வை

பட படவென
பெய்த மழையில்
கம கமவென மணக்கும்
மண் வாசனையாய்
உள்ளுக்குள்
படர்கிறாய்
அந்த ஒற்றைப்
பார்வையில்.

- சங்கீதா பிரபு

கனவின் நிழல்

நேற்றைய பின்னிரவின்
வாய்புலம்பலற்ற
தூக்கத்தினிடையே
மலர்ந்த கனவில்
பூக்கள் உதிர்ந்து விழுந்தன
அனேகமாக அப்பூக்கள்
நாங்கள் முன்னொரு
காலத்தில் வாழ்ந்த
தாமிரபரணிக்
கரையோர கிராமத்து
பூர்வாங்க வீட்டின்
புறவாசல்
நந்தியாவட்டைகளாக
இருக்கலாம்
நிராதரவான
பெருமூச்சென விடிந்த
வானவிடியலின் வெளிச்சத்தில்
கனவு கலைந்து போய்விட  
உதிர்ந்த பூக்களின்
மகரந்த மணம் மட்டும்
பெயர் தெரியாத
பறவையின் எச்சமாக
கனவின் நிழலாக மனதினுள்
ஒட்டிக்கொண்டிருக்கிறது.

- வே .முத்துக்குமார்