மேற்குத் தொடர்ச்சி மலை



தமிழின் பெருமித சினிமா இந்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’.மேற்குத் தொடர்ச்சி மலையின் ஏற்ற இறக்கத்தில் பதுங்கிக்கிடக்கும் துயர  வரலாற்றையும், எளிய மனிதர்களின் பிரியங்களையும் இந்த சமூகம் காவு கொள்வதை வீரியமாக விதைத்ததற்காக அறிமுக இயக்குநர்  லெனின்பாரதிக்கு வாழ்த்துகள்!காணி நிலம் வேண்டும் என்கிற எளிய மக்களின் கனவை நிர்மூலமாக்கும் அரசியலின் இருண்ட பக்கங்களை  ‘இதோ இதோ’ என திறந்து காட்டுகிறார் இயக்குநர் லெனின்பாரதி. ஏராளமான நம்பிக்கைகளோடு, விடியாத கனவுகளோடு அந்த மக்கள்  வாழ்ந்து கொண்டிருப்பதை மிக எளிய ட்ரீட்மென்டில், ஆனால், வலிமையான உணர்வுகளோடு சொன்ன லெனினுக்கு hats off! தயாரித்த  விஜய் சேதுபதியும் நிஜ ஹீரோவாகிறார்.

சுமை தூக்கும் ‘வனகாளி’ பாண்டி இன்னொரு முழுநீள படத்திற்கான கருவானார். வீடு துறந்து தொழிலாளர்களின் உரிமை பேசும் ‘சகாவு  சாக்கோ’ அபுவை மறக்க முடியுமா! கங்காணியாக அந்தோணி வாத்தியார். அவரிடம் இருக்கிற அன்பு, ஆதுரம், அப்பாவித்தனம் சேர்ந்த  ஆதங்கம் சேர்த்து எத்தனை அழகு! கடைசிவரை இயல்பு மாறாமல், வாணிபம் தலைகாட்டாமல், மக்கள் நலன் பேணி, ஆனால், நம்மை  நிமிர்ந்து பார்க்க வைக்கிற விதம் எவ்வளவு முக்கியமானது.முழுக்க முழுக்க அறிமுகங்கள்... புதுமுகங்கள். அதுதான் படத்தின் நம்பகத் தன்மைக்கான நங்கூரம். அந்த கைலியும், தளர்ந்த சட்டையுமாகத் திரிகிற, துண்டு நிலம் வாங்கத் துடிக்கிற ‘ரெங்கசாமி’யான  ஆண்டனி... நிச்சயமாக அவர் அற்புதமே. அவரோடு வாழ்க்கையைப் பகிரும் ‘ஈஸ்வரி’யான காயத்ரி கிருஷ்ணா அப்படியே பொருத்தம்.

அப்பா செய்த உழைப்புக்காக மகனுக்கு நிலம் தரத் துடிக்கும் மீரான் என்கிற மனிதர்தான் எவ்வளவு அப்பழுக்கற்றவர். யானை மிதித்துத்  துவைத்த புருஷனையும், மகளின் திருமணத்திற்குச் சேர்த்த காசையும் தேடி தரை மண் வீசி பழிக்கும் அந்த ‘கிறுக்கு கிழவி’யான  பாண்டியம்மா மனதைக் கலக்கி எடுக்கிறார். இப்படி அத்தனை பேர் நடிப்பிலும் உயிர்த் ததும்பல்.உயிர்த்துடிப்போடும் நேர்மையுமாக  வசனங்கள். சிறிய வார்த்தைகளில் பெரிய உண்மைகளை எழுதிய ராசி தங்கதுரை சிறப்பு.தன் மண்ணின் வாசமறிந்து இசைத்திருக்கிறார்  இளையராஜா. வாழ்க நீ எம்மான்! மழை அடிக்கும் முற்றம், இருள் விலகாத இருட்டு, வளைந்தோடும் உயர மலை, வானத்தின் நீல வெளி,  வலிக்கும் நடையோடு இஞ்ச் இஞ்சாக பயணமாகிறது தேனி ஈஸ்வரின் கேமரா.  அடுக்கிச் சேர்த்த அழகிற்கு மு.காசி விஸ்வநாதனுக்கு  புன்னகை பரிசு. இறுதி வரை கோலிவுட் இலக்கணத்தில் சிக்காத நேர்த்தி பேரழகு.உலக அரங்கில் கிடைத்த விருதுகளுக்கு மேல் தமிழ்  மக்கள் கொண்டாட வேண்டிய நல் சினிமா.l

- குங்குமம் விமர்சனக்குழு