சந்தோஷமா இருக்கு...நெகிழ்கிறார் மாரிச்சாமி அர்ச்சகர்

இந்தளவுக்கு ஒரு மகிழ்ச்சி தமிழகத்தில் இதற்கு முன் ஏற்பட்டதில்லை. போலவே இந்தளவுக்கு கலைஞருக்கு அஞ்சலியும் கிடைத்திருக்க  வாய்ப்பில்லை.ஆம். எந்த சமூகநீதிக்காக இறுதி வரை கலைஞர் போராடினாரோ அந்த சமூகநீதியின் ஒரு பகுதி அவர் மறைவதற்கு சில  நாட்களுக்கு முன் அமலுக்கு வந்திருக்கிறது! மதுரை அழகர்கோயிலுக்கு உட்பட்ட ஐயப்பன் கோயிலில் மாரிச்சாமி அர்ச்சகராக  நியமிக்கப்பட்டுள்ளார்.அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது பெரியாரின் கனவு. அதை நிறைவேற்ற 2006ம் ஆண்டு, தான்  முதல்வராக இருந்தபோது கலைஞர் அரசு அரசாணை பிறப்பித்தது. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36  ஆயிரம் கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் அர்ச்சகருக்குப் படித்து  அர்ச்சகராகலாம் என கலைஞர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. ஆகம பயிற்சிகள் அளிக்கப்பட்டன.  தங்குமிடம், உணவு, உடை இலவசம். அத்துடன் மாதம் ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட வகுப்பைச்  சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள்,  இதர வகுப்பைச் சேர்ந்த 46 மாணவர்கள் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றனர். இதனை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின்  ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கமும், தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபையும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து  இடைக்காலத் தடை வாங்கினர்.

பின்னர் மேல் முறையீடு செய்யப்பட்டு ஆகம விதிப்படி பயிற்சி பெற்ற எவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்பைப் பெற்றிருக்கின்றனர். இதனையடுத்து மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமி, மதுரை அழகர் கோயிலுக்கு உட்பட்ட ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக  நியமிக்கப்பட்டுள்ளார்.“மதுரைதான் பூர்வீகம். விவசாயக் குடும்பம். சின்ன வயசுலேந்தே நான் சிவபக்தன். கூடவே தமிழ்ப் பற்றும் அதிகம்.  அதனாலேயே பி.ஏ தமிழ் படிச்சேன். கல்லூரிக் காலங்கள்ல மதுரை மத்திய நூலகத்துக்குப் போவேன். பக்தி நூல்களைப் படிப்பேன்.  திருவாசகம் என்னைப் புரட்டிப் போட்டது. வேதங்களைப் படிக்கணும் என்கிற ஆர்வம் வந்தது.

இந்த நேரத்துலதான் கலைஞர் ஐயா, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்  என்கிற சட்டத்தை இயற்றினார். சந்தோஷமா பயிற்சி  நிலையத்துல சேர்ந்தேன்...’’உற்சாகத்துடன் சொல்லும் மாரிச்சாமி, அரசாணைக்கு இடைக்காலத் தடை கிடைத்தபோது தவித்திருக்கிறார்.  வேறு வேலைக்குச் செல்ல விருப்பமில்லாமல் கடவுள் பணியைச் செய்யக் காத்திருந்தாராம். ‘‘ஒரு பக்கம் சங்கம் அமைச்சு மேல்முறையீடு  செஞ்சு போராடிட்டு இருந்தோம். மறுபக்கத்துல ஆகம புத்தகங்களைத் தேடித் தேடிப் படிச்சு என் அறிவை வளர்த்துக்கிட்டேன்.  உச்சநீதிமன்றத்துல சாதகமான தீர்ப்பு வந்ததும் நம்பிக்கை பிறந்தது.

போன வருஷம் பிப்ரவரி மாசம் தல்லாகுளம் ஐயப்பன் கோயில் அர்ச்சகர் பணிக்கான விளம்பரத்தைப் பார்த்தேன். சாதி தடையில்லை, 8ம்  வகுப்பு படிச்சிருந்தா போதும், அர்ச்சகர் பயிற்சி சான்றிதழ் வைச்சிருக்கணும்னு அதுல குறிப்பிட்டிருந்தாங்க.விண்ணப்பிச்சேன்.  நேர்காணலுக்கு அழைச்சாங்க. போனேன். என்னையும் சேர்த்து அஞ்சு பேர். அதுல பிராமண வகுப்பைச் சேர்ந்தவங்க மூணு பேர். நானும்  இன்னொருத்தரும் அர்ச்சகர் சான்றிதழ் பெற்றவங்க.எங்களை அழகர்கோயில் துணை ஆணையர், ரங்கராஜ பட்டர், தமிழ் ஆசிரியர்கள்  நேர்காணல் செஞ்சாங்க. கடைசியா என்னை அர்ச்சகரா நியமிச்சாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ நெகிழ்கிறார் மாரிச்சாமி.

இதே மகிழ்ச்சி அர்ச்சகர் சங்கத் தலைவரான ரங்கநாதனிடமும் காணப்படுகிறது. ‘‘பெரிய வெற்றியா இதை நினைக்கறோம். படிக்கிறப்பவே  பல எதிர்ப்புகள். படிச்சு முடிச்சதும் சான்றிதழ் வழங்கப்படலை. உச்சநீதிமன்ற வழக்கும் இதுகூட சேர்ந்தது. பல சமூகத்தைச்  சேர்ந்தவங்களும் எங்களுக்கு எதிரா நின்னாங்க.பொறுமையா சட்டப்படி போராடி வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனாலும் இது முழு வெற்றி  இல்ல. ஏன்னா, ஆகமம் இல்லாத கோயில்லதான் மாரிச்சாமியை அர்ச்சகரா நியமிச்சிருக்காங்க. இந்த நிலை மாறி ஆகமமுள்ள  கோயில்கள்லயும் பிராமணர்கள் அல்லாதவர்கள் அர்ச்சகராகணும். வாரிசு முறை ஒழிக்கப்படணும். பயிற்சி முடிச்ச மத்தவங்களுக்கும்  வேலை கிடைக்கணும். பல பயிற்சி மையங்கள் தொடங்கப்படணும்...’’ என்கிறார் ரங்கநாதன்.  

- திலீபன் புகழ்