டேனியல்



‘‘காலைல இருந்து உங்களை எங்கெல்லாம் தேடுறது?”

கேஷ்புக்கின் க்ளோசிங் பேலன்ஸை கால்குலேட்டரில் தட்டி சரிபார்ப்பதில் மும்முரமாயிருந்த ஜனனி, டேனியலின் குரலுக்கு கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள். இடுப்பில் கைவைத்தபடி, ஒரு பெரும் போர்ப் படைக்குத் தலைமையேற்பவனைப் போல கேபினுக்கு முன் நின்றிருந்தவனைப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள். கோபத்தைக்கூட சிணுங்கலாக வெளிப்படுத்த ஒருசிலரால் மட்டுமே முடிகிறது.

‘‘ரெஜிஸ்டர் முடியப்போகுது, ஸ்டாக் என்ட்ரி போட்டு எடுத்துட்டு வரப்போனேன். ஏன்டா?”

விறுவிறுவென கேபினுக்குள் வந்து கண்ணாடி மேஜைமீது இரண்டு உள்ளங்கைகளையும் ஊன்றியபடி ஜனனியின் கண்களை உற்றுப்பார்த்தவனின் முகத்தில் ஏகப்பட்ட குழப்பக்கீற்றுகள். நெற்றி சுருக்கி ‘‘என்ன?” என்பதாக செங்குத்தாக தலை உயர்த்தினாள்.

‘‘போன சனிக்கிழமை காஜல் போட்ருந்தீங்களாக்கா?”

முறைத்தாள். ‘‘எருமமாடு, இதக் கேக்கத்தான் முத்தம் குடுக்குறவன் மாதிரி அவ்ளோ கிட்டக்க வந்து பாத்தியா?”

‘‘ப்ச்... சொல்லுங்கக்கா...”‘‘ஆமா. அதுக்கென்ன இப்போ?”

ஜனனி சொன்னதுதான் தாமதம், கட்டைவிரலையும் நடுவிரலையும் அழுத்தி சொடுக்கிட்டுக்கொண்டே ‘‘அதான பாத்தேன்!” என்றான். பிறகு எதையோ யோசித்தவன் ‘‘அன்னைக்கு அழகா இருந்தீங்கக்கா! திடீர்னு ஞாபகம் வந்துச்சு...” என்றபடி பதிலுக்குக் காத்திராமல் கேபினைவிட்டு வெளியேறினான்.

டேனியல் எப்போதும் அப்படித்தான். ‘‘இந்த நெய்ல்பாலீஷ் உங்களுக்கு நல்லாயிருக்குக்கா...” என்பவனிடம், ‘‘நாலு நாளா இதேதான்டா போட்ருக்கேன்!” என்கிற ஜனனியின் பதில், எவ்விதப் பின்வாங்கலையும் ஏற்படுத்துவதில்லை. அசட்டையாய் தோள் குலுக்கி ‘‘அதனாலென்னக்கா! நல்லாருக்கு!” என்பான்.

‘‘என்ன டேனியல், உங்கக்காவுக்கு கிறிஸ்மஸ் கேக் வாங்கித் தரலையா?” என்ற அலுவலகக் கிண்டல்களுக்கு, கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ‘‘அக்காவுக்கு இல்லாததா?” எனச் சிரித்தவாறு மறுநாளே டப்பாவை நீட்டுவான்.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாளன்று ‘‘ஜாய்னிங் ரிப்போர்ட் இங்கிலீஷ்ல எழுதணும், கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களாக்கா?” என்றதில் ஆரம்பித்த அறிமுகம், ‘‘அந்த சார்கிட்ட பேசாதீங்கக்கா... அவர் ஒரு மாதிரி...” என்று எச்சரிப்பதில் வந்து சேர்ந்திருந்தது.இதுதான் பேசவேண்டும் என்கிற வரையறைகளுக்குள் டேனியல் எப்போதும் பொருந்துவதில்லை. கேன்டீனில் கூட்டத்தினூடே முந்திக்கொண்டு டீ கப்புடன் காத்திருந்தவன், மூன்றாவது மிடறில் ‘‘சுயமைதுனம் செய்யறப்ப ஒரு பக்கமா தலைவலிக்கிதுக்கா!” என்பான்.

‘‘சனியனே மெதுவா பேசித்தொலையேன்...” என்றால், ஐந்தாவது மிடறுக்கு அதே டெசிபலில் ‘‘விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் ஆல்பமெல்லாம் இப்ப கிடைக்கறதே இல்லேலக்கா...” என்பான். டேனியலுக்கு எப்போதும் பதில்கள் அவசியப்படுவதே இல்லை.ஒரு திங்கட்கிழமை ‘‘எனக்கு நிச்சயதார்த்தம்க்கா, கண்டிப்பா வந்துடணும்!” என்று வெட்கத்துடன் சொன்னவன், மேடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தவாறே ‘‘இந்த நீளப்பொட்டு உங்களுக்கு அழகாயிருக்குக்கா...” என்று சத்தமாகக் கத்துவானென யாருமே எதிர்பார்க்கவில்லை!

புது வருடக் கொண்டாட்டமெல்லாம் முடிந்து அலுவலகம் நுழையும்போதே புன்னகையுடன் எதிர்ப்பட்டு, ‘‘ஹேப்பி நியூ இயர்க்கா, பேனா வச்சிருக்கீங்களா?” என்றவனுக்கு, கைப்பையைத் திறந்து ஸ்கை-ப்ளூ பால்பாய்ன்ட்டை எடுத்துக் கொடுத்தாள் ஜனனி. அட்டண்டன்ஸில் கையெழுத்துப் போட்டுக்கொண்டே ‘‘கோண உச்சி எடுத்து சீவுங்கக்கா, உங்க முகத்துக்கு செமையா இருக்கும்!” என்றபடி சட்டை பாக்கெட்டிற்குள் வைத்துக்கொண்டான்.

‘‘காலேலயே ஆரம்பிச்சிட்டியாடா?” என்பதாய் பியூன் தலையிலடித்துக்கொண்டார்.ஓர் உணவு இடைவேளையின்போதுதான் முதன் முதலில் அந்த உரையாடலை நிகழ்த்தினாள் ஜனனி. ‘‘கொஞ்சம் நாசூக்காத்தான் பேசிப்பழகேன்டா...” என்று அதட்டியவளிடம், ‘‘ஏன்னெல்லாம் தெரியல. எதுனாலும் உங்ககிட்ட ஓடிவரணும்னு தான்க்கா தோணுது. உங்களை கவனிக்கிறது பிடிச்சிருக்கு. இதுலென்னக்கா இருக்கு?” என்று மிகத்திருத்தமாகக் கூறிவிட்டு எழுந்தவனை விசித்திரமாகத்தான் பார்த்தாள் ஜனனி.

ஜனனியைப் பொறுத்தவரையில் டேனியல் எந்தத் தராசுக்கும் பொருந்தாதவன். அவனுக்கு ‘‘மாலாக்கா ஐ லவ் யூ!” என்ற ‘றெக்க’ பட விஜய்சேதுபதி கணக்காகத்தான் அன்பை வெளிப்படுத்தத் தெரிந்திருந்தது. இது எந்தமாதிரியான உறவுச்சிக்கல் என்பது பற்றியெல்லாம் டேனியலுக்கு எவ்விதச் சிரத்தையுமில்லை. காதலின் வெளிப்பாடா, மரியாதையா, நட்பா, மிகைப்படுத்தலா என்கிற ஆய்வுக்கெல்லாம் அவன் ஒருபோதும் தன்னை உட்படுத்திக்கொண்டதில்லை.

‘‘இதுலென்னக்கா இருக்கு?” என்கிற ஒற்றை தோள் சிலுப்பலில் சர்வத்துக்கும் பதில் கொடுத்துவிடுவான்.‘‘‘அவள் அப்படித்தான்’ படம் பார்த்திருக்கியா?” பக்கத்து கேபின் வசுந்த்ரா, ஜனனியின் கவனம் கலைத்தாள். ‘‘ஏன்? அந்தப்படத்துக்கு என்ன?”‘‘ப்ரியாவும் அந்த ஆபீஸ்பாய் பையனும் வர்ற சீன் ஒண்ணு... அவன்கூட இதே மாதிரிதான் அக்கா அக்காம்பான்!”

ஜனனிக்குப் புரிந்தது.‘‘யூ மீன் திட்டமிட்ட தற்செயல்கள், ரைட்?”

‘‘அதேதான்! கொஞ்சம் கவனமாவே இரு ஜனனி. ‘அக்கா’ங்குறது இவங்களுக்கெல்லாம் ஒரு கேடயம் மாதிரி!”மனிதர்களின் மீதான அபிப்ராயங்கள் மட்டும் மாறுவதேயில்லை. அது பெரும்பாலும் ‘அவன் சரியில்லை’ என்பதாகவோ, ‘தன் அளவுக்கு அவன் நல்லவனில்லை’ என்பதாகவோதான் எப்போதும் இருக்கும்.

லன்ச் முடித்த கையோடு வசுந்த்ரா சொன்ன காட்சியை யூ ட்யூபில் ஓடவிட்ட ஜனனிக்கு, டேனியலும் ஒருவேளை இந்தப்படம் பார்த்திருப்பானா என்கிற சந்தேகம் எழுந்து அடங்கியது. பிறகு அப்படி நினைத்ததற்காக தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.அலுவலகம் விட்டு கிளம்பும்போதே மழை இருட்டிக்கொண்டு வந்தது. ஷேர் ஆட்டோ ஏற வேண்டியிருப்பதை நினைத்துச் சலித்துக்கொண்ட ஜனனி, கைப்பையிலிருந்த வெந்தய மஞ்சள் நிற குடையை தயாராய் வைத்துக்கொண்டு படியிறங்கினாள்.

‘‘ச்சே இந்தப் பாலத்தை எப்பதான் முடிப்பானுகளோ, பஸ் போகாததால ஆட்டோவுக்கே எம்புட்டுதான் அழுகுறது...” சக காத்திருப்பாளரின் புலம்பலுக்கு உடன் நின்றுகொண்டிருந்த மூவரும் தலையாட்டினர். தங்கள் புலம்பல்களுக்கு இன்னொருவர் தலையசைப்பது மனிதர்களுக்கேயுரிய பெரும் ஆறுதல்.சரியாகப் பதினேழாவது நிமிடத்தில் ஷேர் ஆட்டோ ஒன்று, அங்கிருந்தவர்களைத் திணித்துக்கொள்ள வந்து சேர்ந்தது.

உள்ளே கம்பியின் ஓரமாய் ரெயின்கோட் ஆசாமி ஒருவர் உட்கார்ந்திருக்க, அடுத்து ஜனனியும் இன்னொரு பெண்ணும் ஏறிக்கொண்டனர். நடுவில் மாட்டிக்கொண்டதால் ரெய்ன்கோட் ஆசாமியை நெருக்கி உட்காரச்சொல்லி மழை ஜனனியிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தது.

கெண்டைக்காலுடன் ஒட்டிக்கொண்ட பச்சை காட்டன் புடவையை ஈரம்சொட்ட இழுத்துவிட்டபடி, கைப்பையை மடியோடு அணைத்துக்கொண்டாள்.

‘‘இந்தப் பக்கம்தான் உங்க வீடுங்களா மேடம்?”
பழக்கப்பட்ட குரல்கேட்டுத் திரும்பினாள். ரெய்ன்கோட் ஆசாமியாக அக்கவுண்டன்ட் இளங்கோவன் தன் சிங்கப்பல் தெரிய சிரித்துக்கொண்டிருந்தார்.
‘‘அ.. ஆமா சார். நீங்க என்ன இந்தப்பக்கம்?”

‘‘லாயர் வெங்கட்ராமன் இந்த ஏரியாதான். ஒரு வேலையா வந்தேன்...” என்றவர் அப்படியே ‘‘நல்லா நனைஞ்சுட்டீங்க போல!” என்றார்.இருவர் தொடைகளும் உரசும்படி உட்கார்ந்திருந்தது அப்போதுதான் ஜனனிக்கு ஞாபகம் வந்தது.

நெருக்கடி காலங்களில் முகம் தெரியாதவர்களுடன் மேற்கொள்ளும் பயணச் சுதந்திரம், பரிச்சயமான மனிதர்களிடம் கிடைப்பதில்லையென்பது அந்நெருக்கத்தின் அசௌகர்யத்தில் ஜனனிக்குப் புரிந்தது.

கூடுமானவரை உடலை உள்ளிழுத்துக்கொண்டு, இடைவெளிவிட்டு உட்கார முயற்சித்துத் தோற்றுக்கொண்டிருந்தாள். மழை, தன் வேகத்தை அதிகரித்தது.

‘‘டேனியலுக்கு கல்யாணம் முடிவாகிடுச்சாமே!”
‘‘ஆமா சார், ரெண்டு மாசம் கழிச்சு கல்யாணம்னு சொன்னான்...”
‘‘ம்ம்... நிச்சயதார்த்தத்துக்கு போயிருந்தீங்கள்ல? நான் அன்னைக்கு லீவு, போக முடியாம போச்சு!”

‘‘ஓ!”பேச ஏதும் இல்லாதவளைப்போல மழைப்பக்கம் திரும்பிக்கொண்டாள். இளங்கோவனின் உரசல்களில் செயற்கைத்தனம் கூடியிருந்தது.
‘‘நீங்க மூத்தவங்களா போயிட்டீங்க, இல்லனா உங்களை பொண்ணு கேட்ருப்பான்... இல்ல?”

மெல்லிய சூடொன்று ஜனனியின் தலைக்கேறியது. ஏதோ அசிங்கத்தை மிதித்துவிட்டதுபோன்று நெளிந்தாள். அடி மனக்குரூரம் என்பது அத்தனை பேருக்கும் இருக்கும்போல. ஏதோ சொல்ல வாயெடுத்து பின் அமைதியானாள். இளங்கோவனின் சிங்கப்பல் கோரமாய்க் காட்சியளித்தது. வீடு சேர்ந்து புடவையிலிருந்து சாக்லேட் ப்ரவுன் நைட்டிக்கு மாறியவள், இரவு உணவு முடித்துவிட்டு வழக்கம்போல வாட்சப், ஃபேஸ்புக் என வலம்வந்து கொண்டிருந்தாள்.

‘‘நீங்க மூத்தவங்களா போயிட்டீங்க, இல்லனா...” மீண்டுமொருமுறை இளங்கோவனின் சிங்கப்பல் தோன்றி மறைந்தது. இடது தொடையின் எரிச்சலை கைவைத்துத் தேய்த்துக் கொண்டாள்.

‘‘ராஸ்கல்..!”
அலைபேசியின் வைப்ரேஷன் கட்டிலை அதிரச்செய்ய, எடுத்துப்பார்த்தாள். டேனியல்தான். சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்துக்கொண்டு தொடுதிரையின் பச்சை நிறத்திற்கு விரலைத் தள்ளினாள்.

‘‘என்னக்கா அட்டண்ட் பண்ணிட்டீங்க?”

குரலில் பதற்றம் தெரிய,ஞாபகம் வந்தவளாக ‘‘ஓ ஸாரிடா...” என்றபடி படக்கென கட் செய்தவள், ரீசன்ட் கால் லிஸ்ட்டில் ‘டேனி’ என்று பதிந்திருந்த நம்பரைத் தட்டினாள். இவனிடமே கேட்டுவிடலாமா என்கிற ஆர்வம் எழுந்து, பின் அதைக் கைவிட்டாள்.
‘‘ஊரே அன்லிமிடட் பேக் போட்டுகிட்டு இருக்கு. நீ இன்னும் மிஸ்டுகால் குடுத்துகிட்டு திரி!” எடுத்த எடுப்பிலேயே கடிந்துகொண்டு பின் ‘‘சொல்லு...” என்றாள்.

‘‘மழை பெஞ்சுகிட்டு இருந்துச்சே, எப்டி வீட்டுக்குப் போனீங்க? சாயந்தரமே போன் பண்ணலாம்னு நெனச்சேன். மேட்ச் பாத்துகிட்டு இருந்ததுல மறந்துட்டேன்...”‘‘குடை இருந்துச்சு. ஒண்ணும் பிரச்னையில்ல...” என்றபடி கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்தாள்.

‘‘சரிங்கக்கா நாளைக்கு பாப்போம்!”
‘‘டேனியல்... ஒண்ணு கேக்கணுமே...”
‘‘சொல்லுங்கக்கா...”

தயங்கினாள். எவனோ கேட்டதற்கு இவனை எதற்கு சங்கடத்தில் ஆழ்த்த வேண்டுமென்கிற அகக்கேள்வியைப் புறம் தள்ளிவிட்டுத் தொடர்ந்தாள்.‘‘ஒருவேளை நீ என்னைவிட மூத்தவனா இருந்திருந்தா இதே மாதிரி பேசியிருந்திருப்பியா?”
சட்டென ஒரு மௌனம் இருவருக்கும் நடுவே ஆட்கொண்டது.

‘‘ஒண்ணு சொல்லவாங்கக்கா? சமீபத்துல இதே கேள்வியை நானும் யோசிச்சிருக்கேன்...”திக் என்றது ஜனனிக்கு. பக்கத்து கேபின் வசுந்த்ராவும் அக்கவுண்டன்ட் இளங்கோவனும் ஈனஸ்வரத்தில் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ‘‘என்னானு யோசிச்ச?” கோபமும் ஆர்வமும் ஒருசேர, அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதற்காகக் காத்திருந்தாள்.

டேனியல் பேச ஆரம்பித்தான். ‘‘நிச்சயதார்தத்தம் முடிஞ்சதுலர்ந்து எப்ப போன் பேசினாலும் உங்களைக் கேட்டுகிட்டே இருக்காக்கா. ஏன் அவங்ககிட்ட ஓவரா உரிமை எடுத்துக்குறனு ஒருமுறை எங்கூட சண்டையே போட்டா. நல்லவேளைங்கக்கா... நீங்க மூத்தவங்களா பிறந்தீங்க. இல்லனா சுத்தமா உங்ககிட்ட பேசக்கூடாதுனு கண்டிஷன் போட்ருப்பா..!’’ சிரித்தாள். மழை ஓய்ந்திருந்தது.                                    

கொச்சியில் சுனாமி!

‘என்னடா படங்கள்ல பார்க்கவே முடியறதில்ல... ஒருவேளை மார்க்கெட் அவுட்டா..?’ என சன்னி லியோன் குறித்து பேசி நாம் மகிழலாம். ஆனால், அம்மணி இன்றும் தனது வாழ்க்கை வரலாறு தொடர்பான வெப் சீரிஸ், தனது தயாரிப்பில் வெளிவரும் அழகு சாதனப் பொருட்கள்... என பிசியாகத்தான் இருக்கிறார்.

இதுதவிர ஈவன்டிலும் கலந்து கொண்டு வெளுத்து வாங்குகிறார். சில வருடங்களுக்கு முன் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதாக இருந்து கடைசி நேரத்தில் ‘எங்களால் போதுமான பாதுகாப்பை வழங்க முடியாது...’ என காவல்துறை பின்வாங்கியதால் கேன்சல் ஆனது நினைவிருக்கலாம்.

போலவே சில மாதங்களுக்கு முன் கேரளாவில் இருக்கும் ஒரு கடைத் திறப்புக்கு அவர் வருகை தர கடலென ரசிகர்கள் குவிந்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்ததையும்! இப்போது வரும் காதலர் தினத்தை முன்னிட்டு கொச்சியில் நடைபெறும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறார். இம்முறை சுனாமி நிச்சயம்!

இந்த டிரெஸ்ஸுக்கு அர்த்தம் தெரியுமா..?

என்ன வேண்டுமானாலும் ராய் லட்சுமி குறித்து சொல்லிக் கொள்ளுங்கள்! ஆனால், தன்னளவில் அவர் சின்சியராக இருக்கிறார். அதாவது இன்ஸ்டாவில் தன்னைப் பின்தொடரும் 1.8 மில்லியன் ரசிகர்களுக்கு!எனவேதான் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றி அவர்கள் அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராய் லட்சுமி பதிவேற்றிய படம்தான் இது! எந்த இடத்தில் இதை எடுத்தார்... புத்தாண்டை எங்கு கொண்டாடினார் என்றெல்லாம் அவர் சொல்லவில்லை.மாறாக, ‘பெண்களின் அழகை வெளிப்படுத்தும் சிறந்த உடை அவர்களது தன்னம்பிக்கைதான்!’ என்று மட்டும் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்!

முதல் பிரேக் அப்!

‘‘ஒன்பதாவது படிக்கிறப்ப என்னை விட ஒரு வயசு மூத்தவனை முதன் முதலா காதலிச்சேன்! நானா போய் என் காதலை சொன்னப்ப ‘சாரி... 10வது எக்சாம்ல நான் கான்சன்ட்ரேஷன் செய்துட்டு இருக்கேன்...’னு என்னை ரிஜக்ட் பண்ணிட்டான்!என்னால அதை தாங்கிக்கவே முடியல. அப்ப செல்போன் கிடையாது. தினமும் பப்ளிக் பூத்திலிருந்து ‘என்னை ஏன் ரிஜக்ட் செய்த’னு அவனுக்கு போன் செஞ்சு அழுவேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா எல்லாம் சிரிப்பா இருக்கு!’’பளீரென்று புன்னகைக்கிறார் டாப்ஸி.

இந்திரா த/பெ ராஜமாணிக்கம்