கண்சிமிட்டுகிறார் சத்யா



கார்த்திக் சுப்புராஜ் என்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணினப்ப ஒரேயொரு கேள்விதான் கேட்டேன்...

‘பேட்ட’, ரஜினி ரசிகர்களையும் சினிமா விரும்பிகளையும் ஆனந்தத்தில் தள்ளி குத்தாட்டம் போட வைத்திருக்கிறது. எனில் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜின் மனைவி சத்யாவை எந்த அளவுக்கு மகிழ்ச்சியில் ஆட்படுத்தியிருக்கும்? “நிஜமாவே நம்ப முடியாத பயணம். ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘மெர்குரி’, ‘பேட்ட’! அவருடைய பயணத்துல நானும் இருக்கேன்னு நினைக்கும் போது சந்தோஷமாவும், நிறைவாவும் இருக்கு. இப்ப நினைச்சாலும் அந்த முதல் மீட்டிங் ரொம்ப புதுசுதான்!’’ கண்களைச் சிமிட்டுகிறார் சத்யா.

செல்வி சத்யா யாரா இருந்தாங்க?

திருமதி - செல்வி... ரெண்டுக்குமே பெரிய வித்யாசம் இல்ல. அப்ப எப்படியோ இப்பவும் அப்படித்தான்! எனக்காக அவரோ, அவருக்காக நானோ எதனையும் இழக்கலை; மாத்திக்கலை. நானாக இருப்பதைத்தான் அவர் விரும்பறார். அவரா இருக்கறதைத்தான் நான் நேசிக்கறேன். இதுதான் எங்க வாழ்க்கை சக்சஸ்!

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கர்நாடகா கேஜிஎஃப்ல. அம்மா கர்நாடகா, அப்பா மதுரைக் காரர். அப்பா வேலைக்காக பெங்களூரு வந்திருந்தப்ப மீட்டிங், சாட்டிங், லவ்விங்! அப்பறம் அண்ணா, அக்கா, நான் பொறந்தோம்!நான் பல் மருத்துவர். கொஞ்சம் சர்வீஸ் மைண்டட். அதான் மெடிக்கல்.

நினைச்ச மார்க் எடுத்திருந்தா ஜெனரல் டாக்டர் ஆகியிருப்பேன். அப்பா பணம் கொடுத்து சீட் எடுக்கலாம்னு சொன்னாரு. மெரிட்ல கிடைச்சா ஓகே, இல்லைனா வேண்டாம்னு டென்டிஸ்ட்ரி எடுத்தேன். புத்தகப் புழு. அதனாலயே எனக்கும் இந்த காதல் ரொமான்ஸுக்கும் ரொம்ப தூரம்!
அப்போ எப்படி கார்த்திக் - சத்யா சந்திப்பு ஏற்பட்டது?

என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் சுரேந்திரன், சுமதி. பெங்களூருல ஒரு கம்பெனில சுரேந்திரன் வேலை செய்துட்டு இருந்தார். அவர் கூட வேலை செய்தவர்தான் கார்த்திக்! சுரேந்திரன் - சுமதி கல்யாணத்துல கார்த்திக் என்னை பார்த்திருக்கார். அந்த நொடில இருந்து என்னைப் பத்தி அதிகமான நலம் விசாரிப்புகள், அக்கறை... இப்படி இருந்திருக்கு! இவங்களும் என் கிட்ட நடக்கற எல்லாத்தையும் சொல்லிட்டே இருப்பாங்க!

நான் படிப்பு, மெடிக்கல்னு இருந்ததால இதையெல்லாம் பெரிசா காதுல வாங்கிக்கலை. இந்த நேரத்துல அம்மா திடீர்னு காலமானாங்க. அப்புறம் அக்கா கல்யாணம். இது முடிஞ்சதும் என் திருமணம் பத்தி வீட்ல பேச ஆரம்பிச்சாங்க.அப்பதான் ‘‘நாளைய இயக்குநர்’ல கார்த்திக் படம் வருது பாரு’னு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. ஆனா, பார்க்க முடியாமப் போயிடுச்சு. இந்த நேரத்துல சுரேந்தரும் சுமதியும் ‘கார்த்திக் உன்னை கல்யாணம் செய்துக்க விரும்பறார். உனக்கு ஓகேனா நாங்க மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யறோம்...’னு என்கிட்ட சொன்னாங்க.  

யாரையோ கல்யாணம் செய்துக்கதானே போறோம்... அது ஒருவேளை கார்த்தியாதான் இருக்கட்டுமேனு ‘சரி மீட் பண்ணுவோம்’னு சொன்னேன். சந்திப்புக்கு ஏற்பாடு செய்தாங்க. அப்ப கார்த்திகிட்ட ஒரே கேள்விதான் கேட்டேன். ‘ஒருவேளை சினிமா வாய்ப்பு கிடைக்கலைன்னா அடுத்த ஸ்டெப் என்ன?’ அதுக்கு அவர், ‘அப்ப என் முயற்சிய மாத்துவேன். புதுப் பாதைல சான்ஸ் தேடுவேன்’னு சொன்னாரு.

அந்த பதில் என்னை இம்ப்ரஸ் செய்தது. அந்த தன்னம்பிக்கை பிடிச்சிருந்தது. வீட்ல சொன்னேன். சந்தோஷமா எங்க திருமணத்தை நடத்தி வைச்சாங்க!ஒருவேளை ‘உனக்காக வேலைல சேர்ந்திடுவேன்’னு சொல்லியிருந்தார்னா நிச்சயம் ‘பை’ சொல்லியிருப்பேன்!
அதென்னா கார்த்திக் ஃபிரேம் ஃபார் சத்யா..? இண்டஸ்ட்ரி முழுக்க பேச்சா இருக்கு..?

அவருடைய எல்லா படங்கள்லயும் ஒரு சீன்ல நான் இருப்பேன்! ‘இறைவி’ல தோழியா படம் முழுக்க நடிச்சிருக்கேன்! என்ன... தலைவர் கூட நடிச்ச கொசுவும் ஃபேமஸ் ஆகிடும் என்பது மாதிரி ‘பேட்ட’ல ரீச் ஆகியிருக்கேன்! கார்த்திக் ஒரு கதையை உருவாக்கினதும் அதைக் கேட்கற முதல் ஆள் நான்தான்! சரியா சொன்னா ‘பீட்சா’ல வந்த பேய்க் கதை சொல்ற பொண்டாட்டியே நான்தான்! நிறைய கற்பனை, ஹாரர் விரும்பி.

‘இறைவி’ கதை சொன்னப்ப ‘பெரிய சப்ஜெக்ட். ஜாக்கிரதையா பண்ணு’னு சொன்னேன். அவர் நம்பிக்கையா இருந்தாரு. அதுபோலவே படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது!‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ அப்ப ஏன் அவ்வளவு பிரச்னைகள்? கார்த்திக் மனநிலை அப்ப எப்படி இருந்தது?

ரைட்ஸ் பிரச்னைனு மட்டுமே எனக்குத் தெரியும். தவிர திட்டமிட்டு பிரச்னைகள் சூழ்ந்துட்டு இருக்குனு புரிஞ்சது. அந்த நேரம் கார்த்திக் ரொம்ப அப்செட் ஆனார். ஆனா, எல்லாமே ஒரு பெரிய வெற்றிக்கான அறிகுறியாதான் நாங்க பார்த்தோம். நிறைய சீனியர்ஸ் இருக்கற துறை இது. எவ்வளவோ பேர் எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி வந்திருக்காங்க; வந்திருப்பாங்க. அதனால இவருடைய வளர்ச்சி சிலருக்கு சுலபமா தெரிஞ்சிருக்கலாம்.

ஆனா, ஷார்ட் ஃபிலிம் எடுத்த உடனே சட்டுனு டைரக்டர் சீட்ல உட்காரலையே... நிறைய கஷ்டங்களை, ஏமாற்றங்களை கார்த்திக் சந்திச்சிருக்கார். அதை எல்லாம் கூட இருந்து பார்த்தவ நான்! ‘பேட்ட’ சான்ஸ் கிடைச்சதை எந்த தருணத்துல எப்படி உங்க கிட்ட சொன்னார்?

நான் அப்ப காசில இருந்தேன். எங்களுக்கு ஆன்மீக நம்பிக்கை அதிகம். எனக்கு போன் செஞ்சு ‘நானும் காசி வரேன்... சார்கிட்ட பேசினேன். கன்பார்ம் பண்ணியாச்சு’னு சொன்னார். எனக்கு வார்த்தையே வரலை! ஏன்னா அவரு சின்ன வயசுல இருந்தே ரஜினி ஃபேன். அவருடைய படத்துல தலைவரே நடிக்கிறார்னா அவருடைய சந்தோஷம் எப்படி இருக்கும்னு என்னால உணர முடிஞ்சது!

ஆனாலும் முறைப்படி அறிவிப்பு வரும்வரை நாங்க அமைதியா இருந்தோம். பயம்தான் காரணம். எங்க பேரன்ட்ஸ் கிட்டயே நாங்க சொல்லலை!

‘பேட்ட’ பட ஷூட்டிங் ஆரம்பிச்சதும், முடிஞ்சதும் காசிலதான்! முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும் என்கிற என் கனவு ‘பேட்ட’ல நிறைவேறுச்சு! ‘பீட்சா’ துவங்கி இப்ப வரை எங்களுக்கு ஒரு பழக்கம். ஊர் ஊரா போய் ஒவ்வொரு தியேட்டர்லயும் படிக்கட்டு, இருட்டுல மறைஞ்சு நின்னு ரசிகர்களுடைய ரியாக்‌ஷன்ஸை கவனிப்போம்.

அப்ப காசி தியேட்டர் எங்க ஆபீஸ்ல இருந்து பக்கம்தானேனு ‘பேட்ட’ பார்க்க நடந்து போனோம். வாவ்! என்னா வரவேற்பு... பட்டாசு! முழுக்க அனுபவிச்சேன்!சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார்?லைஃப்ல நான் பார்த்த சிறப்பான பாசிட்டிவ் வைப்ரேஷன் கொண்டவர் அவர்தான். அவரு பக்கத்துல இருந்தாலே அந்த இடம் அவ்வளவு பாசிட்டிவா இருக்கு! ஒரு நார்மல் ஃப்ரேம் நாங்கள் எல்லாம் நின்னு பார்ப்போம். ஆனா, அதே ஃப்ரேம்ல அவர் வந்து நின்னதும் அது வேற லெவலா மாறிடுது!

டார்ஜிலிங் ஷூட் அப்ப என்னை உட்கார வெச்சு ரொம்ப நேரம் பேசினார். அந்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் சீன் எடுக்கும்போது என்னை யாரோனு நினைச்சுட்டு நடிச்சார். ஷாட் முடிஞ்சதும்தான் என்னைப் பார்த்து ‘ஹேய்! நீங்க’னு உற்சாகமா பேசினார்.
கார்த்திக்கின் அடுத்த படம்..? உங்களுக்கு கதை தெரியுமே..?

தனுஷ் கூடதான்! முழுக் கதையும் தெரியும். பக்கா கமர்ஷியல் படம். அது மட்டும்தான் இப்போதைக்கு! உங்களுக்கு சினிமா ஆசை உண்டா?இல்லாம இருக்குமா?! இப்ப எங்க அம்மாவை அடிப்படையா வைச்சு இரு நாவல் எழுதிட்டு இருக்கேன்.
அதை முடிச்சுட்டு திரைக்கதைல கவனம் செலுத்துவேன். ஆனா, டைரக்‌ஷன்..? அதை அவரே பார்த்துக்கட்டும்!
                                   
ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்