விஸ்வாசம் ஒளிப்பதிவாளர் வெற்றியின் வெற்றிப்பயணம்



லைஃப்  டிராவல்

ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல நான் விவசாயி!


ஒளிப்பதிவாளர்களிலேயே வித்தியாசமானவர் வெற்றி. ‘விஸ்வாசம்’ இயக்குநர் சிவா இவரைப்பற்றி குறிப்பிடும்போதெல்லாம், ‘‘வெற்றி ஸ்பாட்டுலதான் கேமராமேன். படப்பிடிப்பு முடிஞ்ச அடுத்த நாளே அவர் விவசாயி!’’ எனப் பெருமை பொங்க சொல்லி மகிழ்வார்.

அஜித் - சிவாவின் குட்புக்கில் இந்த ‘வெற்றி’க்கு தனியிடம் உண்டு. ‘விஸ்வாசம்’ ரிலீஸ் மகிழ்ச்சி, ‘காஞ்சனா - 3’யின் ஒளிப்பதிவை முடித்துவிட்ட திருப்தி, அடுத்து தெலுங்கில் ஐந்தாவது முறையாக கோபிசந்துடன் இணையும் படத்துக்கான லொகேஷன் தேடல்... என பர
பரக்கிறார் மனிதர். சினிமா தவிர கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவராகவும், ஏர்முனை இளைஞர் அணியின் தலைவராகவும் இயங்கி  வருகிறார் வெற்றி.

பூர்வீகம் பல்லடம் பக்கம் நாதகவுண்டம்பாளையம். சின்ன வயசுல இருந்து சினிமா பிடிக்கும். சினிமா பைத்தியம்னே சொல்லலாம்! அப்பா பழனிசாமி, கல்லூரில ஆங்கிலப் பேராசிரியரா இருந்தவர். தவிர கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் நிறுவன தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கார்.ஒரு அண்ணன், ஒரு அக்கா. எல்லாருமே பெரிய படிப்பாளிங்க. யாருக்கும் சினிமா இண்டஸ்ட்ரி பத்தி தெரியாது. அவங்க யாருமே ஒருநாள் கூட என்னை ‘நீ படம் பார்க்கக்கூடாது. தியேட்டர் பக்கமே போகக்கூடாது’னு தடுத்ததில்ல.

அப்ப ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு தனி மரியாதை இருந்தது. ‘செந்தூரப்பூவே’, ‘ஊமைவிழிகள்’, ‘புலன்விசாரணை’னு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கின படங்களுக்கு தனி மரியாதை இருந்தது. ஒளிப்பதிவுத் துறையை நான் தேர்ந்தெடுக்க இந்தப் படங்கள்தான் காரணம்.
ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல ஒளிப்பதிவு குரூப் எடுக்கணும்னா ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூல அறிவியல் குரூப் எடுத்திருக்கணும்னு நண்பன் மோகனசுந்தரம் மூலம் தெரிஞ்சுகிட்டேன்.

நான் 10வது முடிச்ச நேரத்துல எங்கப்பா எம்எல்ஏ ஆகியிருந்தார். அதனால சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஹாஸ்டல்ல அவருக்கு தனி ரூம் இருந்தது.அப்பாவைப் பார்க்கற சாக்குல அடிக்கடி சென்னை வந்தோம். இங்கயே படிக்க விரும்பினோம். கோடம்பாக்கத்துல ஓர் அறை எடுத்து ப்ளஸ் ஒன் சயன்ஸ் குரூப் எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்.

உண்மையை சொல்லணும்னா நான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சேர எங்க குடும்பமே உதவிச்சு! அப்புறம் வடபழனி வந்தோம். இன்ஸ்டிடியூட்ல எங்க கிளாஸ்ல மொத்தமே 12 பேர்தான். ஸோ, அத்தனை பேரையுமே நல்லா தெரியும். அங்கதான் ‘விஸ்வாசம்’ இயக்குநர் சிவா எனக்கு அறிமுகமானார்! அவர் என் கிளாஸ் மேட். அவருக்கும் வீடு வடபழனிலதான். நாங்க தரமணி டூ வடபழனி ‘5டி’ பஸ்ல தினமும் போயிட்டு வருவோம். பயணம் முழுக்க சினிமா பத்தி பேசுவோம்.

அப்ப தரமணில ஃபிலிம் சிட்டி இருந்தது. அங்க தினமும் சினிமா ஷூட்டிங் நடக்கும். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்பதால் யாரும் நாங்க வேடிக்கை பார்க்கறதை தடுக்க மாட்டாங்க. ரஜினி சார், கமல் சார், அஜித் சார்னு அத்தனை டாப் ஹீரோக்கள் படப்பிடிப்பையும் வேடிக்கை பார்த்திருக்கோம்!

அஜித் சாரின் ‘வாலி’, ‘ஆசை’, ‘காதல்கோட்டை’ படப்பிடிப்புகளை இப்படித்தான் நானும் சிவாவும் வேடிக்கை பார்த்தோம்! பின்னாடி அவர் படங்களை இயக்கற வாய்ப்பு சிவாவுக்கும் அதை ஒளிப்பதிவு பண்ற சான்ஸ் எனக்கும் கிடைக்கும்னு நாங்க நினைச்சுக்கூட பார்க்கலை!
இன்ஸ்டிடியூட்ல படிக்கறவங்க வெளிய ஃப்ரீலான்ஸா ஒர்க் பண்ணலாம். அப்படி ஒளிப்பதிவாளர் சரவணன் சார்கிட்ட ‘சங்கமம்’ல ஒர்க் பண்ண போனேன்.

என் நல்லநேரம், அவருக்கு என்னை பிடிச்சுப் போச்சு. தொடர்ந்து அவர்கிட்ட ‘ஆஹா’, ‘ஒருவன்’, ‘வல்லரசு’, ‘மாயி’னு ஆேறழு படங்கள் ஒர்க் பண்ணினேன். பி.சி.ராம் சார் கிட்ட ஒர்க் பண்ணின அத்தனை பேரும் ஒளிப்பதிவாளர்களா ஆனது போல சரவணன் சார் கிட்ட இருந்த விஜய் மில்டன், மணிகண்டன், மதி, மனோஜ் பரமஹம்சானு அத்தனை பேரும் கேமராமேன் ஆகிட்டோம்!

நான் அசிஸ்டென்ட் ஆக ஒர்க் பண்ணின காலம் பொற்காலம். ஃபிலிம்லதான் ஷூட் பண்ணுவோம். மானிட்டர் பார்க்கும் வசதி கிடையாது. என்ன ஷாட் எடுத்திருக்கோம் என்பதே இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் மட்டுமே தெரியும்! 2001ல ஆரி435 கேமரா வந்த பிறகுதான் மானிட்டர் வசதியே வந்தது!

தமிழ்ல ‘அரவிந்தன்’ படத்தை இயக்கின நாகராஜ் அடுத்து நந்தாவை வச்சு ‘அகரம்’ படத்தை இயக்கினார். என் 24வது வயசுல அதுல ஒளிப்பதிவாளராக அறிமுகமானேன். ஏகப்பட்ட கனவு. ஆனா, நினைச்ச மாதிரி அங்க எதுவும் நடக்கல. சில கசப்பான சூழல்களால படத்தை முடிக்கவே மூன்றரை வருஷங்களாச்சு.

இந்தப் படத்தோட முதல் ஷெட்யூலுக்கு திருநெல்வேலி போனோம். போன வேகத்துலயே ஷூட்டிங் நிற்கக்கூடிய நிலை. யாருக்கும் பேட்டா காசு கொடுக்க பணம் இல்லாம படப்பிடிப்பு நின்னுடுச்சு. அந்தப் படத்தை விட்டு வெளிய வர்ற வழியும் தெரியலை. உதவி ஒளிப்பதிவாளரா பெரிய பெரிய படங்கள்ல ஒர்க் பண்ணிட்டு முதல் படமே இப்படி ஆன விரக்தில ஊருக்கே திரும்பிடலாம்னு கூட நினைச்சேன்! நல்லவேளையா அதுக்குள்ள ‘அகரம்’ ரிலீஸ் ஆச்சு!  

ரெண்டாவதா ஒர்க் பண்ணின படம், ‘தெனாவட்டு’. அதோட இயக்குநர் வி.வி.கதிர், ‘மாயி’லயே நட்பானவர். அப்ப நான் அப்கமிங் டெக்னீஷியன். ஆர்.பி.சௌத்ரி சார்கிட்ட எனக்காக சரவணன் சாரே சிபாரிசு பண்ணினார்! ‘வெற்றி நல்ல பையன். அவருக்கு நான் உத்தரவாதம் தர்றேன். அவர் சரியில்லைனா, நானே வந்து ஒர்க் பண்ணித் தரேன்’னார்!

இதுக்கு அப்புறம்தான் அந்தப் பட வாய்ப்பு கிடைச்சது. கேப் விட்டு கேப் விட்டு ‘தெனாவட்டு’ படப்பிடிப்பு நடந்ததால அது வெளியாக ரெண்டே முக்கால் வருஷங்களாச்சு. இப்படி முதல் இரண்டு படங்களுக்காகவே ஆறு வருடங்கள் போச்சு. சன் பிக்சர்ஸ் ‘தெனாவட்டு’ ரிலீஸ் செஞ்சாங்க. படம் சூப்பர் ஹிட்.

இந்த நேரத்துல சிவா தெலுங்குல டாப்மோஸ்ட் கேமராமேனா பிசியா இருந்தார். ‘நான் டைரக்ட் பண்ணினா, நீதான் ஒளிப்பதிவாளர்’னு என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பார். அதேமாதிரி திடீர்னு ஒருநாள் சிவா கூப்பிட்டார். ‘தெலுங்குல கோபிசந்த் நடிக்கிற ‘சௌரியம்’ படத்தை இயக்கப் போறேன். நீதான் படத்துக்கு ஒளிப்பதிவு’னு சொன்னார்!

எனக்கோ பயம். கோபிசந்த் சார் என்னை ஒர்க் பண்ண விடுவாரா... இல்ல டோலிவுட்ல டாப் ஆளுங்கதான் கேமரா பண்ணணும்னு சொல்வாரானு லேசா பயம் இருந்தது. ஆனா, அவர் ஜென்டில்மேன். என்னை சந்தோஷமா வரவேற்றார்! இப்ப ஐந்தாவது முறையா அவரோடு ஒர்க் பண்ணிட்டிருக்கேன்!

‘சௌரியம்’ பெரிய அளவுல ஹிட். தொடர்ந்து சிவா ‘சங்கம்’, ‘தருவு’ படங்களை இயக்கினார். ஒளிப்பதிவு நான்தான். இடைல தமிழ்ல ‘மாசிலாமணி’, ‘வேலூர் மாவட்டம்’ படங்கள் பண்ணினேன்.ஹரி சாரின் ‘வேங்கை’ பட வாய்ப்பு வந்தது. ஹரி சார்னாலே ப்ரியன் சார்தான் கேமரா பண்ணுவார். அவர் ‘வேலாயுதம்’ படத்துக்கு போனதால ‘வேங்கை’ எனக்கு கிடைச்சது. அவரோடு ஒரு படம்தான் ஒர்க் பண்ணியிருக்கேன்.

ஆனாலும் இப்ப வரை நல்ல நட்போடு இருக்கார். என் ஒவ்வொரு பட ரிலீஸ் அப்பவும் அவர்கிட்ட இருந்து பாராட்டு வரும். ‘விஸ்வாசம்’ வரை அது தொடருது!இதுக்கு அப்புறம் ராகவா லாரன்ஸ் சாரோடு ‘காஞ்சனா’ல ஒர்க் பண்ணினேன். என் ஒர்க் அவருக்கு பிடிச்சது. ‘காஞ்சனா 2’விலும் கொஞ்சம் ஒளிப்பதிவு பண்ணினேன். இப்ப ‘காஞ்சனா 3’. அதுவும் ரிலீசுக்கு தயாரா இருக்கு!

‘காஞ்சனா’ முடிச்சதும் சிவாவுக்கு ‘வீரம்’ கிடைச்சது. அஜித் சார் படம். ‘கண்டிப்பா பெரிய கேமராமேன்தான் கமிட் பண்ணுவாங்க. சிவாவுக்கு நல்ல லைஃப் கிடைச்சிருக்கு’னு சந்தோஷப்பட்டேன். சிவாகிட்ட ‘ஒளிப்பதிவை யார் பண்றாங்க’னு அஜித் சார்  கேட்டிருக்கார். உடனே என்னைப் பத்தி சொல்லியிருக்கார். ‘உங்களுக்கு கம்ஃபர்ட்டானவர்னா அவரையே கமிட் பண்ணிடுங்க’னு க்ரீன் சிக்னல் காட்டியிருக்கார்!

‘வீரம்’ ப்ரீ புரொடக்‌ஷன் ஒர்க் மூணரை மாசம் போச்சு. இந்தக் காலத்துல ஒருநாள் கூட ‘ஒளிப்பதிவாளரை பார்க்கணும்’னு அஜித் சார் அழைச்சதே இல்ல! ஷூட்டிங் தொடங்குறதுக்கு ஒரு நாளுக்கு முன்னாடிதான் என்னை அவர்கிட்ட சிவா அறிமுகப்படுத்தினார்.

‘ஒருத்தர் மேல் நம்பிக்கை வச்சா, அவரை அஜித் சார் முழுசா நம்புவார்’னு அந்த நொடில தெரிஞ்சுக்கிட்டேன். அஜித் சார் - சிவா கூட்டணில ஒர்க் பண்ற சூழலே ரம்மியமா இருக்கும். ஒவ்வொரு நாள் ஷூட் முடிஞ்சு திரும்பறப்பவும் மனசு அவ்வளவு உற்சாகமா இருக்கும். ஒருநாளும் யாருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டதில்ல. அந்தளவுக்கு ஸ்பாட்ல ஒரு நல்ல சூழலை சிவா உருவாக்குவார். அஜித் சார் ஒவ்வொருத்தரையும் கேர் எடுத்து பார்த்துப்பார்.

கேமரால எனக்கு என்னவெல்லாம் டெக்னிக்கலா தெரியுமோ அத்தனையும் அஜித் சாருக்கும் தெரியும்! அப்படியிருந்தும் ‘அந்த ஷாட்டை இப்படி வைச்சிருக்கலாமே’னு ஆலோசனையா கூட சொன்னதில்ல! உண்மைல சிவாவின் நட்பு கிடைச்சது எனக்குக் கிடைச்ச கிஃப்ட். அஜித் சார் கூட தொடர்ந்து நான்கு படங்கள் பண்ணினது வரம்!அப்பா மறைவுக்குப் பிறகு அவர் ஆரம்பிச்ச விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவராகவும், ஏர்முனை இளைஞரணி என்ற அமைப்பின் தலைவராகவும் பொறுப்புல இருக்கேன்.

2010ல ‘காஞ்சனா’ படப்பிடிப்பு நடந்தப்பதான் எனக்கு திருமணம் ஆச்சு. மனைவி கலைச்செல்வி காங்கேயத்துக்காரர். எங்களுக்கு மகிழ் பிரபாகரன், தீரன் திலீபன்னு ரெண்டு பசங்க. சந்தோஷமா இருக்கோம்.                         

மை.பாரதிராஜா