கொலப்பசியில் இருக்கு புலி!



நியூஸ் வியூஸ்

“ஒரு புலி இன்னொரு புலியைக் கொல்லுவதில்லை. மனிதர்கள் மட்டுமே ஒருவரை ஒருவர் வேட்டையாடிக் கொல்லுகிறார்கள்...” என்றெல்லாம் இனிமேல் தத்துவபூர்வமாக சினிமாக்களில் வசனம் வைக்க முடியாது.ஏனெனில் - கரண்ட் நியூஸ் அப்படி.

இந்தியாவிலேயே புலிகள் அதிகளவில் வசிப்பதால் ‘புலிகள் மாநிலம்’ என்று கம்பீரமாக சொல்லிக்கொள்ளும் மத்தியப் பிரதேசத்தில் ஒரு பெண் புலி, ஆண் புலியால் கொன்று தின்னப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
மிகவும் அரிதிலும் அரிதான நிகழ்வு இது.

ஒருவகையில் வறுமை என்றுகூட சொல்லலாம்.காட்டின் இயல்பு குலைந்து வருகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.புலி என்பது வெறும் புலி அல்ல. அது இந்தியாவின் தேசிய விலங்கு. தேசத்தின் பெருமை.கிழக்கு ஐரோப்பாவில் தொடங்கி, தென் கிழக்கு ஆசியா வரையிலான காடுகளில் வாழும் உயிரினம்.கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் ஒரு இலட்சம் புலிகள் இருந்ததாக தகவல்.

இப்போது உலகில் 4 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே புலிகள் இருக்கின்றன. தேசிய விலங்கு அந்தஸ்து பெற்றிருக்கும் இந்தியாவில் 2,250க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கின்றன.

புலித்தோலுக்காக, மருத்துவப் பயன்பாடுகளுக்காக, பணக்கொழுப்பு எடுத்துப் போனவர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்துவதற்காக வேட்டை என்று எத்தனையோ சப்பைக் காரணங்களால் கடந்த நூற்றாண்டில் புலிகளின்எண்ணிக்கையை மனிதர்களாகிய நாம் கணிசமாகக் குறைத்திருக்கிறோம். மேலும் அவற்றின் வாழ்விடமான காடுகளை அழித்து, மனிதர்கள் வசிக்க ஊர்களையும், நகரங்களையும் உருவாக்கி விட்டோம்.

புலி பசித்தாலும் புல்லை மட்டுமல்ல, சக புலியையும் தின்னாது. இப்போது மத்தியப் பிரதேசப் புலி மட்டும் ஏன் புலிவேட்டை ஆடியிருக்கிறது என்கிற கேள்வி எழலாம். காடுகளின் தன்மை மாறி, உணவு, நீரின்றி அந்த ஆண் புலி வாடியிருக்கலாம். உயிரிகளின் முதன்மைத் தன்மை என்பதே ‘எப்படியாவது உயிர் வாழ்வது’ என்பதுதான்.

அத்தகைய இக்கட்டான சூழலில்தான் இந்த புலிக்கொலை நடந்தேறியிருக்க முடியும்.புலிகளைப் பற்றி நிறைய எதிர்மறையான பிம்பங்களை மசாலா சினிமாக்களும், பரபரப்பு ஊடகங்களும் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றன.உண்மையில் புலிகள் இல்லையேல் காடுகள் இல்லை.

இது என்ன புதுக்கதை என்று கேட்காதீர்கள்.மாமிசபட்சிணியான புலிகள், தாவரங்களைப் புசித்து வாழும் சைவப்பட்சிணி விலங்குகளை வேட்டையாடி சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொள்ளாவிட்டால் காடுகள் முற்றிலுமாகவே அழிந்துவிடும்.கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

உதாரணத்துக்கு புலிகளே இல்லாத காடு ஒன்றை கற்பனை செய்துகொள்ளுங்கள். மான், யானை, காட்டெருமை மாதிரி ‘வெஜிட்டேரியன்’ விலங்குகள் இம்மாதிரி காட்டில் நிறைய உண்டு, நிறைய இனப்பெருக்கம் செய்து பெருகிவிட்டால் என்ன ஆகும்?

அவற்றின் உணவுத்தேவைக்காக ஒட்டுமொத்த காடுகளையும் உண்டு செரித்துவிடும். அதன் காரணமாக அவ்விலங்குகளே வசிக்க காடின்றி அழிந்தும் விடும்.காடுகளுக்கு இத்தகைய நெருக்கடி உருவாகக்கூடாது என்பதால்தான் புலிகளைப் போன்ற ‘நான் வெஜிட்டேரியன்’ விலங்குகள், இயற்கையால் படைக்கப்பட்டன.

‘நேஷனல் ஜியாக்ரபி’ டிவியில் மட்டுமே காடுகளை தரிசிக்கும் தலைமுறைக்கு இந்த தர்க்க நியாயம் சரிவர புரிபடாது. ‘வயக்காடெல்லாம் எதுக்கு வீணா, லே-அவுட் போட்டு ரியல் எஸ்டேட் பண்ணலாமில்லே?’ என்று கேட்கும் ஊரில், வனங்களின் அவசியத்தை எடுத்துச் சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான்.

தமிழக, கேரள மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளின் காடுகளில் பல்லாண்டுகளாக காட்டுயிர் ஆராய்ச்சியாளராக சேவை புரிந்தவர் கர்நாடகாவைச் சார்ந்த உல்லாஸ் கரந்த். வனவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அவருடைய ஆய்வுகள் மற்றும் செயல்பாடுகளைப் பாராட்டி இந்திய அரசு, பத்ம பட்டம் வழங்கி கவுரவித்திருக்கிறது.

இவரை புலிகளின் காதலர் என்றே சொல்லலாம். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கணிசமாகக் குறைந்த புலிகளின் எண்ணிக்கை காரணமாக ஏற்படக்
கூடிய சுற்றுச்சூழல் ஆபத்துகளை இந்திய அரசுக்கு அலாரம் அடித்துத் தெரிவித்தவர் அவர்தான்.மேலும் -காடுகளில் வாழும் புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாகக் கணக்கிடுவது, அவற்றை அவற்றின் போக்கிலேயே வாழவைப்பதற்கான வழிமுறைகள் போன்றவற்றையெல்லாம் அறிவியல்பூர்வமாக பரிந்துரைத்தவர்.

உல்லாஸ் கரந்த், தன்னுடைய காட்டுயிர் வாழ்க்கையில் கண்டு அதிசயித்த ‘புலி’மையான அனுபவங்களை ‘The Way of the Tiger’ என்கிற நூலாக எழுதி வெளியிட்டு, உலகம் முழுக்க இருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் புலிகளின் இருப்பு குறித்த அவசியத்தை எடுத்துரைத்தார்.

இம்மாதிரியான தனிநபர் மற்றும் ஆர்வலர்களின் அமைப்புகள் முன்னெடுத்த முயற்சிகளின் காரணமாகவே அரசாங்கங்கள் புலிகளைக் காக்கவேண்டிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின.

தமிழிலும் அந்நூலை மொழி பெயர்த்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ‘கானுறை வேங்கை : இயற்கை வரலாறும் பராமரிப்பும்’ என்கிற அந்நூலை வாசிப்பவர்களுக்கு புலி மீது மட்டுமல்ல, தமிழ் மீதும் அளப்பரிய பிரியம் ஏற்படும் என்பது உறுதி.

மொழிபெயர்த்த சுற்றுச்சூழல் ஆய்வாளரும், எழுத்தாளருமான சு.தியடோர் பாஸ்கரன், இதுநாள்வரை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த பல்வேறு சொற்களுக்கு தமிழில் கலைச்சொற்களை உருவாக்கி இருக்கிறார்.புலிகளைப் பற்றி முழுமையாக அறியவும், அவற்றை அழிவிலிருந்து எப்படியெல்லாம் காக்க முடியும் என்பதை உணரவும் உல்லாஸ் கரந்த் எழுதிய நூலை நீங்கள் வாசித்தால் போதும். நம் தேசிய விலங்கு குறித்த பெருமிதத்துக்கு உள்ளாவீர்கள்.

கடமா தொலைச்சிய கானுறை வேங்கைஇடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும்  இடமுடையவானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்மானம் அழுங்க வரின்- என்கிறது நாலடியார்.தெளிவுரை வாசித்து இதற்கு அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள். மத்தியப் பிரதேசத்து புலிக்கொலை உங்களைப்பதற வைக்கும்.     
                   
யுவகிருஷ்ணா