அகத்தின் அழகு ஆர்கானிக் செருப்பில் தெரியும்!



கேவலம் செருப்புதானே என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு ஜோடி செருப்பு நம் வாழ்வையே மாற்றிவிடும் என்பதற்கு சிண்ட்ரெல்லா கதை மிகப்பெரிய சான்று!அது கதைதான்! ஆனால், எழுதியவர் கதை விடவில்லை! அதிலிருக்கும் மையம் சத்தியமான உண்மை. இதற்கு வாழும் உதாரணமாக இருவர் திகழ்கிறார்கள்.

யெஸ். திரிஷ்லா குரானா மற்றும் ராஜீவ் குரானா ஆகியோரின் செருப்புகள்தான் அவர்களது வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது! திரிஷ்லா குரானாவின் சொந்த ஊர் பூனே. காமர்ஸில் டிகிரி, கமர்சியல் ஆர்ட் படிப்பு என முடித்துவிட்டு ஃபேன்ஸி நகைகளை டிசைன் செய்யத் தொடங்கினார்.

ஆரம்பம் முதலே தொண்டையில் சிக்கிய முள்ளாக அவரை ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது. அது, வெளிநாடுகளில் பிராண்டட் செருப்புகள் இருப்பதைப் போல் ‘மேட் இன் இந்தியா’ செருப்புகள் ஏன் இல்லை என்ற வினாதான்!இதற்கான விடையாக உருவானதே ‘கலர்மிமேட்’ செருப்புகள்! 

‘‘ஒரு நாள் என் பொண்ணு கப்கேக்ஸ், ஐஸ்கிரீம்ஸ் எல்லாம் பேப்பர்ல வரைஞ்சுட்டு இருந்தா. இந்த கிரியேடிவிட்டியை அப்படியே விட்டுடக் கூடாதுனு தோணிச்சு. என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப ஓர் எண்ணம் ஸ்பார்க் ஆச்சு.

அவளுக்குனு ஒரு செருப்பை டிசைன் செஞ்சோம். அதுல அவ வரைஞ்ச படங்களை அப்படியே பிரிண்ட் செஞ்சோம். மை காட்... அசந்துட்டோம்! நாங்களே இந்தளவுக்கு கலர்ஃபுல்லா வரும்னு எதிர்பார்க்கலை! அந்தளவுக்கு கிரியேடிவ்வா இருந்தது!அப்பதான் இதையே ஏன் கான்செப்ட் ஆக்கக் கூடாதுனு தோணிச்சு.

அப்படி உருவானதுதான் இந்த ‘கலர்மிமேட்’. 2014ல சின்னதா யோசிச்சு 2016ல ஆன்லைன் விற்பனை தளத்தை ஆரம்பிச்சோம்.பலரும் இந்த காலணிகள்ல அப்படி என்ன ஸ்பெஷல்னு கேட்கறாங்க. சைவம் மட்டுமே விரும்பி சாப்பிடுற நபர்களால உணவுல மட்டும்தான் வெஜ்ஜை கடைப்பிடிக்க முடியுது. மத்த விஷயங்கள்ல சைவமா இருக்க முடியறதில்ல.

உதாரணமா பட்டு, ஹேண்ட்பேக், செருப்புகள்னு சைவ பிரியர்கள் பயன்படுத்தற உடைல இருந்து சகலத்துலயும் ஏதோ ஒரு வகைல அசைவம் கலந்துடுது. இந்த இடத்துலதான் எங்க பிராண்ட் செருப்புகள் முக்கியத்துவம் பெறுது. இது முழுக்க முழுக்க ஆர்கானிக் காலணிகள்! தவிர இதை போட்டுட்டு நடக்கும்போது அவ்வளவு ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவீங்க. பாதங்கள் எந்த வகையிலும் சேதாரம் ஆகாது.

அதாவது உச்சி முதல் பாதம் வரைனு சொல்றோம் இல்லையா... பாதத்துல சின்ன குத்தல் ஏற்பட்டாலும் அது முழு உடம்புலயும் எதிரொலிக்குது இல்லையா... இதையெல்லாம் மனசுல வைச்சு பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட கான்செப்ட்தான் ‘ஹேப்பி ஃபீட்’. ஒரே வார்த்தைல சொல்லணும்னா மூட்டுவலி, பாத வலி இருக்கறவங்களுக்கு இது அருமருந்து. மத்தவங்களுக்கு இது பக்கா ஸ்டைல்!’’ உற்சாகமாகச் சொல்லும் திரிஷ்லா குரானா, முழுக்க முழுக்க மரத்துண்டுகளால்தான் காலணிகளை உருவாக்குகிறார்.

‘‘தக்கைனு சொல்வோம் இல்லையா... அதுலதான் இந்த செருப்புகளை தயாரிக்கறோம். மரத்துல உருவாக்கினாலும் காலுக்கு  வசதியா, அதே சமயம் கலர்ஃபுல்லா, உங்களுக்குப் பிடிச்ச டிசைன்களை நீங்களே தேர்வு செஞ்சு பிரிண்ட் வாங்கிக்கலாம். ஏன்னா, கலர்ஃபுல்லான பேட்டர்ன்ஸ்தான் எங்க ஸ்பெஷல்...’’ கண்சிமிட்டும் திரிஷ்லாவின் கணவர் ராஜீவ் குரானாதான் ‘colourmemad.com’ தளத்தின் நிர்வாகியாகவும், கமர்ஷியல் தலைமையாகவும் இருக்கிறார்.

ஷாலினி நியூட்டன்