ரஜினியின் ஆச்சரியம்...மகேஷ்பாபுவின் கிஃப்ட்...அக்‌ஷய்குமாரின்டைமிங்..!



பேட்ட ஆர்ட் டைரக்டர் சுரேஷ் செல்வராஜன் சொல்லும் சுவாரஸ்யங்கள்

பாலிவுட்டின் டாப் மோஸ்ட் கலை இயக்குநராக வலம் வருகிறார் தமிழரான சுரேஷ் செல்வராஜன். இந்தியில் சல்மான்கான், அக்‌ஷய்குமார், தெலுங்கில் மகேஷ்பாபு என டாப் ஹீரோக்களுக்கு பிடித்த ஆர்ட் டைரக்டர் இவர்தான். சாபு சிரிலிடம் வித்தை பயின்றவர். ‘எந்திரனி’ல் உதவி கலை இயக்குநராக பணியாற்றியவர் இப்போது ‘பேட்ட’யில் கலை இயக்குநர் + தயாரிப்பு வடிவமைப்பாளர்!   

‘‘விக்ரம் சாரின் ‘இருமுகன்’லதான் புரொடக்‌ஷன் டிசைனரானேன். ‘பேட்ட’க்குள்ள நான் வரக் காரணமே ஒளிப்பதிவாளர் திரு சார்தான். ‘இருமுகனை’ முடிச்சுட்டு தெலுங்கில் மகேஷ்பாபுவின் ‘பரத் அனே நேனு’வுக்கு போயிட்டேன். அந்த படத்தின் 40 சதவிகித ஒளிப்பதிவை திரு சார்தான் பண்ணினார்.

அவர் ‘பேட்ட’யில் கமிட் ஆனதும் என்னைக் கூப்பிட்டார். சாதாரணமாதான் போனேன். ஆனா, ‘ரஜினி சார் படத்துக்கு ஆர்ட் டைரக்‌ஷன் பண்றீங்களா’னு கேட்டதும் ஆடிப் போயிட்டேன்! அதிர்ஷ்டம் தேடி வர்றப்ப எப்படி வேண்டாம்னு சொல்லத் தோணும்!லைஃப் டைம் ட்ரீம் நனவாகிடுச்சு! என்னதான் பாலிவுட்ல பெரிய பெரிய புராஜெக்ட்ஸ் பண்ணியிருந்தாலும் ஊர்ல பெயர் வாங்குறதுலதான் தனி சந்தோஷமே இருக்கு!’’ பிரமிப்பு குறையாமல் பேசுகிறார் சுரேஷ் செல்வராஜன்.

இந்த துறையை தேர்ந்தெடுத்ததன் ரகசியம்..?
அடிப்படைல நான் ஓவியர். பூர்வீகம் சிதம்பரம். பிறந்தது, ஸ்கூல் படிப்பு முடிச்சது எல்லாமே அங்கதான். அப்பா, அரசு ஊழியர். சின்ன வயசுல எனக்கு படிப்பு ஏறலை! கவனமெல்லாம் ஓவியம் வரையறதுலதான். நான் செய்த புண்ணியம்... வீட்ல யாரும் கோபப்படலை! என்னை புரிஞ்சுக்கிட்டாங்க. ‘உனக்கு டிராயிங் நல்லா வருதுடா...’னு சந்தோஷப்பட்ட அப்பா, என்னை பாண்டிச்சேரி ஃபைன் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்துவிட்டார்.

அங்க படிப்பு முடிச்சதும் ஆர்ட் டைரக்டர் சாபுசிரில்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். தொடர்ந்து பத்து வருஷங்கள் அவர் கூடவே இருந்தேன். 20 படங்கள் அவரோடு ஒர்க் பண்ணினேன். இடைல கே.கதிர் சார்கிட்ட ‘அருள்’ல வேலை பார்த்தேன். மத்தபடி சாபுசிரில் சார்தான் எல்லாமே!

பாலிவுட்ல ‘ராஒன்’, ‘ஓம் ஷாந்தி ஓம்’, ‘கட்டாமிட்டா’, ‘பில்லு பார்பர்’, ‘ஜானேமான்’, ‘கோயான்கி’னு ஒரு டஜன் படங்கள்ல உதவி கலை இயக்குநரா வேலை பார்த்ததுல அங்க என்ன ஸ்டைல் தேவைனு புரிபட்டது.

ஹிர்த்திக் ரோஷனின் ‘கிரீஷ் 3’ மூலம் ஆர்ட் டைரக்டரானேன்! தயாரிப்பு வடிவமைப்பாளரா நான் உயர்ந்தது ‘பிரதர்ஸ்’ இந்திப் படத்துல. ரூ.100 கோடி பட்ஜெட் படம் அது. என்னை முழுக்க நம்பி ஒப்படைச்சாங்க. பேய்த்தனமா உழைச்சேன். அதுக்கான பெரிய அங்கீகாரமும் கிடைச்சது.

சல்மான்கானின் ‘கிக்’, அக்‌ஷய்குமாரின் ‘பேபி’, ‘ஹவுஸ்ஃபுல் 3’ படங்கள்ல ஸ்பெஷல் ப்ராபர்ட்டி டிசைனராக ஒர்க் பண்ணினது தனி அனுபவம்.
ரஜினி, மகேஷ்பாபு, அக்‌ஷய்குமார்னு அசத்தறீங்க..?

நல்ல படங்கள் அமைஞ்சது உண்மைலயே என் அதிர்ஷ்டம்தான். சூப்பர்ஸ்டாரோடு ஒர்க் பண்ணணும்னு எல்லாருக்குமே ஒரு கனவு இருக்கும். 1999ல ‘படையப்பா’வை தியேட்டர்ல ஒரு ரசிகனா போய்ப் பார்த்தேன். அப்ப ரஜினி சார் கூட ஒர்க் பண்ணுவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. 2009ல ‘எந்திரன்’ல அது நிறைவேறிச்சு. அவரோடு ஒர்க் பண்ணினேன்.

‘பேட்ட’ ரொம்பவே ஸ்பெஷல். மறக்க முடியாத சந்தோஷமான அனுபவம். டார்ஜிலிங்குல முதல் நாள் என்னை அவர்கிட்ட அறிமுகப்படுத்தினாங்க. அந்த நொடியை என் ஆயுசுக்கு மறக்க மாட்டேன்!ஒரு ஊர்ல ஷூட்டிங் நடக்கும்போதே அடுத்த ஊர்ல அடுத்த செட்டுக்கான வேலைகள்ல நாங்க இறங்கிடுவோம். சர்ச் செட் ரஜினி சாருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது! ‘ஆர்ட் டைரக்டர் கலக்கியிருக்கார்’னு என்னை அவர் மனசாரப் பாராட்டினதா யூனிட்ல சொன்னாங்க. வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி! வானத்துல பறந்தேன்!

ஒருநாள் அவர்கிட்ட நான் ‘எந்திரன்’ல ஒர்க் பண்ண விஷயத்தை புரொடக்‌ஷன்ல இருந்த ஒருத்தர் சொல்லியிருக்கார். உடனே என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்; தன் மகிழ்ச்சியை தெரிவிச்சார்! அதேபோல மகேஷ்பாபு சார் கூட வேலை பார்த்ததும் ஸ்வீட் மொமென்ட். ஸ்பாட்ல அவர் அதிகம் பேசமாட்டார்.

‘பரத் அனே நேனு’ல ஒரு கோயில் செட்டும், சட்டசபை செட்டும் போட்டிருந்தேன். ரெண்டுமே ரியலிஸ்ட்டிக்கா இருக்குனு பாராட்டினார். ‘நிஜமாவே அசெம்ப்ளிக்குள்ள நான் போற மாதிரி இருந்தது’னு சொல்லி ரொம்ப காஸ்ட்லியான ஐபேடை எனக்கு பரிசளிச்சார்! நுணுக்கமான வேலைகளை உன்னிப்பா கவனிச்சு பாராட்டறதுல மகேஷ்பாபு சாரை அடிச்சுக்க ஆளே இல்ல!

நான் உதவி கலை இயக்குநரா இருந்த காலத்துல இருந்தே அக்‌ஷய்குமார் சார் கூட நட்பு உண்டு. செம புரொஃபஷனல். பங்கச்சுவாலிட்டியை எல்லா சூழல்லயும் கடைப்பிடிப்பார். அவரை மாதிரி டைம் மெயின்டெயின் பண்ணமுடியாது. எல்லார்கிட்டயும் கேஷுவலா பழகுவார். ஹியூமர் சென்ஸ் அதிகம். எப்பவும் செட்டை கலகலனு வைச்சிருப்பார்.

ஹிர்த்திக் ரோஷன் ரொம்பவே எளிமையானவர். எப்பவும் என்னை ‘ஜீனியஸ்’னுதான் கூப்பிடுவார். கூச்சமா இருக்கும்!

என்ன சொல்றார் உங்க குரு சாபுசிரில்?

சாபு சார் ரொம்பவே பிராடிக்கலானவர். கடினமா உழைப்பதை அவர்கிட்டதான் கத்துக்கிட்டேன். ரொம்பவும் என்கரேஜ் பண்ணுவார். தன்னோட அசிஸ்டென்ட்ஸ் எல்லாருக்கும் அவர் சொல்ற அட்வைஸ் ஒன்றே ஒன்றுதான். ‘எப்பவும் உன்னோட ஒர்க்கை மட்டும் கவனி. பணம் தன்னால உன்னைத் தேடி வரும்..!’

இது எவ்வளவு பெரிய உண்மைனு இப்ப அனுபவபூர்வமா உணர்றேன்!  எந்த இண்டஸ்ட்ரியில் ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஸ்கோப் அதிகம்?
எல்லா இண்டஸ்ட்ரியிலும்தான்! ஒரு படத்துக்கான கலையை கதையும், களமும்தான் தீர்மானிக்குது. ஒரு காலத்துல படங்கள்ல செட் தெரிஞ்சாலே ஆர்ட் டைரக்டர்கள் சந்தோஷப்படுவாங்க. ‘பெரிய பெரிய செட் போட்டிருக்காங்க. நிறைய செலவு பண்ணியிருப்பாங்க’னு ஆடியன்ஸும் அப்ப பாராட்டினாங்க!

இப்ப செட் போட்டாலும், அது செட் மாதிரி தெரியாம ஒர்க் பண்ணணும்! ரியலிஸ்டிக்கா இருக்கணும். என்ன... இதைப் பார்த்து இப்ப ரசிகர்கள் ‘கிராஃபிக்ஸ் போல இருக்கு’னு ஈசியா சொல்லிடறாங்க! ஆனா, இதுவும் காம்ப்ளிமென்ட்தானே?!

பாலிவுட்ல ஒரு படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி பக்காவான ப்ளானிங் இருக்கும். இந்த விஷயத்துல ஹாலிவுட் சிஸ்டத்தை அப்படியே ஃபாலோ செய்யறாங்க.

அமீர்கான் சார் இதுல கலக்கறார். அவர் படங்கள்ல ஒவ்வொரு நாளும் ‘நிகழ்ச்சி நிரல்’ மாதிரி ஷெட்யூல் டைமிங் இருக்கும். ‘லகான்’ல இருந்து இப்படித்தான் அவர் ஒர்க் பண்றார்.டோலிவுட்லயும், கோலிவுட்லயும் இப்பதான் ‘புரொடக்‌ஷன் டிசைனர்’ பத்தி பேசுறோம். பாலிவுட்ல ஸ்பெஷல் ப்ராபர்டி டிசைனருக்கான தேவை இருக்கு. நாம பணம் கொடுத்தும் வெளியே கிடைக்காத, வாங்க முடியாத பொருட்களைத்தான் ஸ்பெஷல் ப்ராபர்ட்டினு எங்க மொழில சொல்றோம்!

பீரியட் ஃபிலிம் பண்ணும்போதுதான் அதுக்கான தேவை அதிகமா இருக்கும். சல்மான்கானின் ‘கிக்’ல அவரோட 3 டி மாஸ்க் நான் வடிவமைச்சதுதான்! கரெக்டான ப்ளானிங் இருந்ததாலதான் ‘பேட்ட’யை திட்டமிட்டதை விட 17 நாட்களுக்கு முன்னாடியே முடிக்க முடிஞ்சது! ஒரு ஆர்ட் டைரக்‌டரா அதில் எனக்கும் பங்கு இருக்கு!  

மை.பாரதிராஜா