தலபுராணம்



கந்தகோட்டமும், காளிகாம்பாளும், கச்சாலீஸ்வரரும்...

‘‘கிபி 1673ம் வருடம். வேளூர் மாரிச்ெசட்டியார், பஞ்சாளம் கந்தப் பண்டாரம் என்கிற இரு முருக பக்தர்கள் ஒவ்வொரு கிருத்திகை அன்றும் திருப்போரூர் கந்தனைத் தரிசித்து வந்தனர். மார்கழி கிருத்திகைக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவர்கள் செங்கண்மால் ஈஸ்வரன் கோயில் (பழைய மாமல்லபுரம் சாலை) அருகேயிருக்கும் குளக்கரையில் ஓய்வு எடுக்க அமர்ந்தவர்கள் அசதியில் தூங்கிவிட்டனர்.

அப்போது கனவில் தோன்றிய முருகன், ‘நீங்கள் ஏன் வருத்தப்பட்டுக்கொண்டு வருகிறீர்கள். இதோ, இந்தப் புற்றிலிருக்கும் என்னை எடுத்துச் சென்று நீங்கள் வசிக்கும் சென்னப்பட்டணத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்...’ என்றாராம்! அதன்படி அதிலிருந்த சிலையை எடுத்து வந்து இங்கே செங்கல்லினால் ேகாயில் அமைத்தார்கள். பின்னர், கருங்கல்லால் கோயில் அமைக்க ஆயிரவாள் வெகுசனம் நிச்சயித்து உண்ணாழி, அந்தராளம், மகாமண்டபம் ஆகியவை எடுப்பித்தார்கள்...’’

- பார்க் டவுனிலுள்ள கந்தசாமி கோயில் எனப்படும் கந்தகோட்டத்தின் 1858ம் வருட கல்வெட்டு ஒன்று இப்படி கோயிலின் வரலாற்றைத் தெளிவாகச் சொல்கிறது!சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பரபரப்பான பார்க் டவுனின் ராசப்ப செட்டித் தெருவில் எட்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். மூலவர் கந்தசாமி என்றும், உற்சவர் முத்துக்குமாரசுவாமி என்றும் அழைக்கப்படுகின்றனர். இருவரும் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கின்றனர். உள்ளேயே ஒரு தெப்பக்குளமும் உள்ளது.

சரி, முருகனின் சிலை எப்படி புற்றுக்குள் சென்றது? இதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு நடந்த படையெடுப்பு ஒன்றில் கோயில்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டன. அப்போது, பக்தர்கள் சிலர் திருப்போரூர் முருகன் சிலையைக் காக்கும் பொருட்டு புற்றுக்குள் மறைத்து வைத்தனர். சில காலத்திற்குப் பிறகு, சிலை இருந்த இடம் தெரியாமல் புதிய சிலையை பிரதிஷ்டை செய்துவிட்டனராம். இதுவே, அந்த இரு முருகபக்தர்களின் கனவிலும் முருகப்பெருமான் சொல்லி சென்னப்பட்டணத்திற்கு வந்த கதை.

இந்த முருகனை திருவருட்பாவில் உருகி உருகிப் பாடியிருக்கிறார் வள்ளலார். அவர் மெட்ராஸில் வாழ்ந்த நாட்களில் கந்தகோட்ட முருகனை தினமும் தரிசனம் செய்துள்ளார். ‘‘ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவுவேண்டும்...’’ என்ற பாடலில்
‘‘தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலம்ஓங்கு கந்தவேளே...’’ - என்கிறார். மட்டுமல்ல; திருப்போரூர் சிதம்பரசுவாமி
களும், பாம்பன் சுவாமிகளும் கந்தகோட்ட முருகனைப் பற்றி பாடியுள்ளனர்.

‘‘1869ம் வருடம் வையாபுரி செட்டியார் என்பவர் இக்கோயிலுக்கு 66 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார். இவர் கோயிலுக்காக ஒரு தேர் செய்வித்தார். 1880ம் ஆண்டில் அக்கம்மாபேட்டை கோவிந்த செட்டியார், நாராயணச் செட்டியார் என்பவருடன் சேர்ந்து கோயிலின் அருகே இருந்த நிலத்தைக் கோயிலுக்கு அளித்தனர்.

அங்குதான் வசந்த மண்டபம் கட்டப்பட்டது. கோயிலின் ராஜகோபுரம் 1901ம் வருடம் காளிரத்தினச் செட்டியார் அளித்த 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையைக் கொண்டு எழுப்பப்பட்டது...’’ என ‘மதராசபட்டினம்’ நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் நரசய்யா.

காளிகாம்பாள் கோயில்:
மெட்ராஸின் மற்றுமொரு அடையாளம் காளிகாம்பாள் கோயில். இக்கோயில் இப்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பே இருந்ததாகச் சொல்லப்படுகிறது.இதனால் கோட்டையம்மன் என்றும், செந்தூரம் சாத்தி வழிபட்டதால் சென்னியம்மன் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன குறிப்புகள். இதிலிருந்தே சென்னை என்கிற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.பின்னர், 1640ம் வருடம் கோட்டை கட்டத் தொடங்கியதும் இப்போதுள்ள தம்புச் செட்டித் தெருவில் முத்துமாரி ஆச்சாரி என்பவர் காளிகாம்பாள் கோயிலை நிர்மாணித்தார்.

இங்கே அன்னை காமாட்சியே காளிகாம்பாளாக மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வீற்றிருக்கிறார். திருவடியில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சக்கரம் அர்த்தமேருவாக அமைந்துள்ளது. சிவபெருமான் கமடேஸ்வரராகக் காட்சி தருகிறார்.தவிர, வடமேற்குப் பகுதியில் சித்திபுத்தி விநாயகரும், அகோர வீரபத்திரசாமியும், மாகாளியும், வடகதிர்காம முருகனும் உள்ளனர். இந்த முருகனை நினைத்துதான் 1952ம் வருடம் அன்னை ஆண்டவன் பிச்சி, ‘உள்ளம் உருகுதடா...’ என்ற பாடலை எழுதினார். இதுவே பின்னாளில், ‘உள்ளம் உருகுதைய்யா...’ என டி.எம்.எஸ் குரலில் தமிழகம் முழுவதும் ஒலித்தது. கோயில் கோபுரம் 1983ல் கட்டி முடிக்கப்பட்டது.

தெற்கு நோக்கி படையெடுத்து வந்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி 1677ம் வருடம் இந்தக் கோயிலில் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதேபோல மகாகவி பாரதியார் ‘சுதேசமித்திர’னில் வேலை பார்த்த போது தினமும் காளிகாம்பாளை வந்து வணங்குவாராம். ‘யாதுமாகி நின்றாய் காளி..!’ என்ற பாடலை அவர் காளிகாம்பாளை மனதில் நினைத்தே எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

கச்சாலீஸ்வரர் கோயில்:
கடந்த அத்தியாயத்தில் இடக்கரச் சாதியினரும் ஒரு கோயிலைக் கட்டினர் என முடித்திருந்தோம். ஆர்மேனியன் தெருவிலுள்ள கச்சாலீஸ்வரர் கோயில்தான் அது.அன்று வலங்கை, இடங்கை பிரச்னை தலைவிரித்தாடியது.அதாவது, வேளாண்மையைச் சாராத தொழிலாளர்கள், வணிகர்கள், தோல் பதனிடுபவர்கள் இடங்கை என்றும்; வேளாண் சார்ந்த விவசாயிகள், தானிய வணிகர்கள், பானை செய்பவர்கள் வலங்கை என்றும் இருபிரிவுகளாகப் பிரிந்திருந்து சண்டையிட்டுக் கொண்டனர்.

இந்தப் பிரிவினை மன்னர்கள் காலத்தில் இருந்தே தொடர்வதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.ஏகாம்பரேஸ்வரர் கோயில் வலக்கரச் சாதியினருக்கு எனக் கம்பெனி முடிவெடுத்ததால் இந்தக் கோயில் எழுப்பப்பட்டதா... எனத் தெரியவில்லை. ஆனால், அன்று இக்கோயிலின் ஒருபகுதி வலக்கரப் பிரிவினரின் இடத்திற்குள் வந்துவிட்டதென ஒரு பெரிய பிரச்னையே வெடித்தது.

இக்கோயில் 1725ம் வருடம் கம்பெனியின் பழைய தோட்டத்திற்குப் பின்னால் இருந்த இடக்கரப் பிரிவைச் சேர்ந்த கலவைச் செட்டி என்பவரின் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டது. அதில்தான் ஒருபகுதி வலக்கரப் பிரிவினர் இடத்திற்குள் வந்துவிட்டதாக சர்ச்சை. பின்னர், கம்பெனி ஒரு நடுவர் குழுவை அமைத்து கோயிலுக்கு புதிய வழியை ஏற்படுத்துவதென முடிவெடுத்தது.

இந்தக் கோயிலை, கிழக்கிந்தியக் கம்பெனியில் ‘துபாஷ்’ ஆகப் பணியாற்றிய தளவாய் செட்டியார் என்பவர் கட்டினார்.
‘‘இவர் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் மீது மாறாத பக்தி கொண்டவர். தினமும் அவரைக் காஞ்சிபுரம் சென்று வணங்கிவிட்டுத்தான் மெட்ராஸில் தனது பணியைத் தொடர்வார். ஒருநாள் அப்படி காஞ்சிபுரம் சென்றுவிட்டு பணிக்குத் திரும்புகையில் பெருமழையில் மாட்டிக்கொண்டார். இதனால் மனவருத்தம் அடைந்தவரின் கனவில் கச்சபேஸ்வரர் தோன்றி, மெட்ராஸிலேயே கோயில் அமைக்கப் பணித்தார்.

இப்படியாக 1725ம் வருடம் மனைவி சுந்தரியம்மாளின் துணையுடன் கோயில் கட்டத் தொடங்கி 1728ல் குடமுழுக்கு நிகழ்த்தினார்.
கச்சபம் என்றால் ஆமை. திருமால் ஆமை உருக்கொண்டு பூசித்த ஈசன், கச்சபேசன். அதனால், இத்தலம் கச்சபேஸ்வரர் என்பதே! காலப்போக்கில் உருமாறி கச்சாலீஸ்வரர் என்றானது. மூலவர் கச்சபசேன் ஐந்து ஆசனங்கள் (கூர்மாசனம், அஷ்ட நாகாசனம், சிம்மாசனம், யுகாசனம், கமல-விமல ஆசனம்) மேல் அமர்ந்தும், அம்மன் செளந்தராம்பிகை நின்ற கோலத்திலும் காட்சி தருகின்றனர்...’’ என்கிறது கோயில் தல வரலாறு.

இக்கோயிலின் மற்றொரு தனிச்சிறப்பு உள்ளிருக்கும் ஐயப்பன் சன்னதி. 1950ம் வருடம் சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயில் புதிதாக மறுநிர்மாணம் செய்யப்பட்டபோது இன்றுள்ள ஐயப்பனின் சிலை பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

அப்படியாக மெட்ராஸ் வந்த சிலை இக்கோயிலில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டு சபரிமலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பின்னர், சபரி ஐயன் அமர்ந்த அதே இடத்தில் புதிய ஐயப்ப விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மெட்ராஸ் நகரில் அமைந்த முதல் ஐயப்பன் சன்னதி இதுவே!

இன்னும் சில கோயில்கள்...

*முத்தியால்பேட்டை பவளக்காரச் செட்டியார் தெருவிலுள்ள கிருஷ்ணசுவாமி கோயில் 230 வருடங்கள் பழமையானது. 1787ல் கட்டப்பட்ட இக்கோயிலிலும் இடங்கை, வலங்கை பெரும் பிரச்னையானது. 1790ம் வருடம் கோயில் திருவிழாவின் போது இடக்கர சாதியினர் ஏற்றியிருந்த ஐந்து வண்ணக் கலர் கொடியை இறக்கிவிட்டு வலக்கர சாதியினர் தங்கள் வெள்ளைக் கொடியை ஏற்றினர்.

இதனால், பெரிய கலவரம் மூண்டது. அரசு தலையிட்டு இருபிரிவு தலைவர்களையும் கைது செய்து கோட்டையின் உள்ளே சிறை வைத்தது. பின்னர், இனி புனித ஜார்ஜ் கோட்டையின் கொடி மட்டுமே திருவிழாக் காலங்களில் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ததுடன், நகர மேஜருக்கு அமைதியை நிலைநாட்டும்படி அறிவுறுத்தப்பட்டது.

*கொத்தவால் சாவடியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயில் கட்டப்பட்ட வருடம் சரியாகத் தெரியவில்லை. தேவஸ்தான இணையதளம் 1720ம் வருடம் என்றும், 1939ம் வருடம் வெளியான, ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூல் 1803 - 04ம் வருடம் என்றும் குறிப்பிடுகிறது.

‘‘18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆதியப்ப நாயக்கன் தெருவில் இருந்த கோமட்ல தோட்டம் அல்லது கூரகாயலா தோட்டத்தை பனியா சமூகத்தினரின் நலனுக்காகக் கொடுத்தார் அதன் உரிமையாளர்.

தோட்டத்திலிருந்து வரும் வருமானம் திருவிழாக்களுக்கும், நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. இதை 1784ம் வருடம் சுங்கு சின்ன கிருஷ்ணமா செட்டி என்பவர் நிர்வகித்தார். பின்னர், கொல்ல ராவணப்பச் செட்டி நிர்வாகத்தின்போது 1803 - 04ம் வருடம் கொத்தவால் சாவடி பகுதியில் கன்னிகா பரமேஸ்வரி கோயிலும், சில கடைகளும் கட்டப்பட்டன.

இந்தக் காரியம் பொது மக்களிடம் இருந்தும், ராவணப்பச் செட்டி அளித்த தாராளமான நன்கொடைகள் மூலமும் நடந்தது. தற்போது அறக்கட்டளை வைசிய சமூகக் குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. வரும் வருமானம் கோயிலுக்கு மட்டுமல்லாமல் வைசிய சமூக மாணவர்களின் கல்விக்கும் செலவிடப்படுகிறது...’’ என மேற்சொன்ன நூலில் குறிப்பிடுகிறார் அன்றைய மெட்ராஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர்.

*முத்தியால்பேட்ைட லிங்குச் செட்டித் தெருவிலுள்ள மல்லிகேஸ்வரர் கோயிலும் மிகவும் பழமையானதே! 17ம் நூற்றாண்டு கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்களில் இக்கோயில் பழைய மல்லிகார்ஜுனர் கோயில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வட்டமான ஆவுடையாரின் நடுவே அழகிய லிங்கம் மல்லிகேஸ்வரர் என்றும், அம்மன் மரகதாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பேராச்சி கண்ணன்  ராஜா