வெடிக்கக் காத்திருக்கும் வேலையில்லா வெடிகுண்டு!



இந்தியாவில் 15 சதவீத மாணவர்களே மேற்படிப்புக்குச் செல்வதாகவும், மாநில அளவின்படி - தமிழ்நாட்டில் 42 சதவீத மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்வதாகவும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை நடத்திய கணக்கெடுப்பு சொல்கிறது.
இது தமிழகத்துக்கு பெருமையான விஷயம் என்றாலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பலர் வேலைத்திறனுக்குத் தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி கவலை அளிப்பதாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் தரமில்லாத கல்வியே என்ற குற்றச்சாட்டும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.ரமேஷிடம் பேசினோம்.
‘‘வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலையோட்டி இருமுக்கிய பிரச்னைகள் தேசிய அரசியலில் விவாதப்பொருளாக ஆகியுள்ளன. ஒன்று, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் உற்பத்திப் பொருள்களுக்கான போதிய விலை இல்லாமை. மற்றொன்று,அதிகரித்துவரும் வேலையின்மை.

2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது வருடத்திற்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் வேலையின்மையானது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக படித்த இளைஞர்களிடையே வேலையின்மை (Graduate Unemployment) அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான Center for Monitoring Indian Economy (CMIE) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி ஜனவரி 2018ல் 5 சதவிகிதமாக இருந்த வேலையின்மையின் அளவு டிசம்பர் 2018ல் 7.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக பட்டப் படிப்பு முடித்த இளைஞர்களிடையே (Graduate Unemployment ) வேலையின்மையின் அளவு 14 சதவிகிதமாகவும், 20 - 24 வயதுடைய இளைஞர்களிடையே வேலையின்மையின் அளவு 32 சதவிகிதம் இருப்பதாகவும் அப்புள்ளிவிவரம் கூறுகிறது.

மத்திய அரசின் தரவுகள்படி இந்தியாவில் 3.6 கோடிப் பேர் உயர்கல்வி பயில்கின்றனர். இதில் பொறியியல், கலை, அறிவியல், மேலாண்மை, டிப்ளமோ படிக்கும் மாணவர்களும் அடக்கம். இதில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கே கல்லூரி நேர்முகத்தேர்வின் மூலமாக வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மற்ற படிப்புகளுக்கு வேலை உத்தரவாதம் என்பது இல்லை.

இப்போது பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குமே வேலையில்லை என்பது எதார்த்தமாகியுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2017 - 18ம் கல்வியாண்டில் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8,75,234.

இதில் 3,65,342 மாணவர்கள் மட்டுமே, அதாவது 41.74 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே, கல்லூரி வளாக நேர்முகத்தேர்வின் மூலமாக  வேலை பெற்றுள்ளனர். மீதமுள்ள 58 சதவிகிதம் மாணவர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் கல்லூரி வளாக நேர்முகத்தேர்வின் மூலமாக வேலை பெற்றவர்களின் அளவு 40 சதவிகிதத்துக்கும் குறைவாகும்.

வேலை கிடைக்காததற்கு மிக முக்கிய காரணமாகக் கூறப்படுவது மாணவர்களுக்கு போதிய திறமையின்மைஎன்பதேயாகும். 2016ம் ஆண்டில் அஸ்பைரிங் மைண்ட் என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் 94 சதவிகிதம் பொறியியல் மாணவர்கள் மென்பொருள்மேம்பாடு (Software Development) வேலைகளுக்கு தகுதியற்றவர்கள் எனக் கூறியிருந்தது.

அதே கருத்தையே டெக் மஹிந்த்ராவின் முதன்மை செயல் அதிகாரி சி.பி.குமானி சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், சந்தையின் தேவைக்கேற்றாற்போல பாடத்திட்டங்களை மாற்றாமல் இருப்பது, கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மற்றும் தகுதிவாய்ந்த பேராசிரியர்களைப் பணியமர்த்தாமல் இருப்பது போன்றவையே திறமையான மாணவர்களை உருவாக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணங்களாகும்.

இந்தியாவில் மொத்தம் 3225 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 800 கல்லூரிகளை மூடவேண்டும் என AICTE  கூறுகிறது. உண்மையில் பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போதிய கட்டமைப்பு வசதிகளோ தரமான ஆய்வகங்களோ தகுதிவாய்ந்த பேராசிரியர்களோ கிடையாது.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக தேவையைத் தாண்டி பல நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி வழங்கியது.

இக்கல்லூரிகளை ஆய்வு செய்வது கிடையாது. லாபம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட, காளான்கள்போல வளர்ந்த தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதோ மாணவர்களின் எதிர்காலம் பற்றிய அக்கறையோ சிறிதும் இல்லை.
உதாரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான (Non -Autonomous Colleges) டிசம்பர் 2017ம் ஆண்டு பருவத்தேர்வில் 5.25 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் 2.25 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். ஏறத்தாழ 57 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சியடையவில்லை.

டிசம்பர் 2017ம் ஆண்டு பருவத்தேர்வில் பங்குபெற்ற 497 பொறியியல் கல்லூரிகளில் (Non Autonomous Colleges) 115 கல்லூரிகள் மட்டுமே 50 சதவிகிதத்திற்கும் மேல் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மீதமுள்ள 382 கல்லூரிகளில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தைப்  பெற்றுள்ளது. இதில் 60 கல்லூரிகள் 10 சதவிகிதம் தேர்ச்சியும் 83 கல்லூரிகள் 10 - 20 சதவிகிதம் தேர்ச்சியையும் மட்டுமே பெற்றுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளாக இதே நிலையே தொடர்வதாக செய்திகள் கூறுகின்றன. லட்சக்கணக்கில் கல்விகட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகள் தகுதி வாய்ந்த பேராசிரியர்களையோ போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆய்வக வசதிகளையோ மாணவர்களுக்கு உருவாக்கித்
தருவதில்லை.

இவைதான் மோசமான தேர்ச்சி விகிதத்திற்கு முக்கிய காரணங்களென கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதே நிலைதான் கலை - அறிவியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் டிப்ளமோ கல்லூரிகளிலும் நிலவுகிறது. இவையனைத்தையும் மறைத்துவிட்டு மாணவர்களை திறமையில்லாதவர்கள் எனக் குறை கூறுவது எவ்விதத்தில் சரி?

வேலையில்லாமல் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் மிகச்சொற்ப சம்பளத்திற்கு கிடைத்த வேலையைச் செய்கின்றனர். இப்போது நகரங்களில் உள்ள படித்த  இளைஞர்கள் Swiggi, Uber eats போன்ற உணவு விற்பனை வேலைகளிலும் Ola, Uber-களில் கார் ஓட்டுநர்களாகவும் பணிபுரிகின்றனர். இவர்கள் குறைந்த சம்பளத்திற்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் பணிபுரிகின்றனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளால் சிறு தொழில்களில் பணிபுரிந்த ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர்.

மேலும், தற்போது பரவலாகப் பேசப்பட்டு வரும் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், பொருட்களை இணையத்தின் மூலம் இணைப்பது (Internet of Things) போன்ற நான்காவது தொழிற்புரட்சிக்கான தொழில் நுட்பங்களை உற்பத்தி மற்றும் சமூக வாழ்வின் பல்வேறு துறைகளில் அமல்படுத்தி வருவதன் மூலம் இந்தியாவில் வேலையிழப்பு என்பது அதிக அளவில் இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஆக, வேலையின்மை (Unemployment) பிரச்னை என்பது வெடிக்கக் காத்திருக்கும் ஹைட்ரஜன் குண்டாக எதார்த்தத்தில் உள்ளது.

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழல், உற்பத்தியில் தொய்வு, அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பல நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் போன்றவையே வேலையின்மைக்கு முக்கிய காரணங்களாகின்றன. மத்திய, மாநில அரசுகள் தரமான உயர்கல்வியையும் வேலைவாய்ப்பிற்கான சூழலையும் உருவாக்காமல் இந்த அணுகுண்டை செயலிழக்கச் செய்ய முடியாது என்பதே உண்மை...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் முனைவர் ரமேஷ்.

தோ.திருத்துவராஜ்