பகவான்-14



பறந்து வந்த செருப்பு!

கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் ரஜனீஷ், மாணவர்களை உற்றுநோக்கத் தொடங்கினார். அவரவர் தேர்ந்தெடுத்து படிக்கும் பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்களே தவிர, மனித வாழ்வுக்கு அவசியமான பொதுவான விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்பதை உணர்ந்தார்.இதே மனோபாவம்தான் அவர்கள் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்து வெளியே செல்லும்போதும் தொடர்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்.

வகுப்பில் தத்துவம் போதித்தாலும் கூடவே அறிவியலையும் கலந்து பேசினார். இதற்காக அவர் நூலகங்களில் நிறைய நேரத்தைச் செலவழித்து ஏராளமாகப் படிக்க வேண்டியிருந்தது.எல்லா மதம் சார்ந்த தத்துவங்களையும் வாசித்து, புரிந்துகொண்டு அவற்றை மனிதவாழ்வில் எப்படி பயன்படுத்துவது என்று அறிவியல்பூர்வமாக மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.

நிறைய வாசித்து மூளையில் ஏற்றிக்கொள்ள வேண்டும். மேலும் மேலும் தகவல்களை மூளை சேகரித்துக் கொள்ள பயிற்சியாக தியானம் செய்ய வேண்டும் என்கிற எளிய ஃபார்முலாவை போதித்தார்.ரஜனீஷிடம் பாடம் படித்த மாணவர்கள், வெளியே சென்று அவரது புகழைப் பரப்பினார்கள். ஏற்கனவே மாணவப் பருவத்திலேயே கருத்தரங்கங்கள் வாயிலாக புகழ் பெற்றிருந்த ரஜனீஷுக்கு மேலும் மேலும் புகழ் சேர்ந்துகொண்டே இருந்தது.

மாணவர்களுக்கு மட்டும்தானா, எங்களுக்கெல்லாம் தியானம் சொல்லிக் கொடுக்க மாட்டீர்களா என்று அவரைக் காணுமிடமெல்லாம் மக்கள் கேட்கத் தொடங்கினார்கள்.இதைத் தொடர்ந்து 1964ல் ராஜஸ்தானில் பத்து நாட்களுக்கு பிரும்மாண்டமான தியான முகாம் ஒன்றை ரஜனீஷ் நடத்தினார்.

பொதுவாக சாமியார்கள் அவரவர் மதம் சார்ந்த தியான முறைகளைத்தான் போதிப்பார்கள். ரஜனீஷோ பல்வேறு மதங்களில் இருக்கும் தியானமுறைகளில் எவை எவை சிறந்தவையோ அவற்றைத் தேர்ந்தெடுத்து மக்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.

அவர் தன்னை குறிப்பிட்ட மதம் சார்ந்தவராக முன்வைத்துக் கொள்ளாததால், சாதி, மதம் கடந்து மக்கள் அவரை நம்பினார்கள்.மதங்கள் போதிக்கக்கூடிய மெய்யான கருத்துகளை மக்கள் உள்வாங்கிக் கொள்வதில்லை. மாறாக, மதங்களை தாங்கள் அணி சேர்வதற்கான அமைப்பாகப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

மதப்பிடிப்பு கொண்டோர் இதனால் ரஜனீஷ் மீது அதிருப்தி கொண்டனர். ஒரே மனிதன் எப்படி பகவத்கீதை, பைபிள், குரான் மற்றும் புத்தம், சமணம் சார்ந்த மதங்களின் கருத்துகளை எல்லாம் ஒரே மேடையில் சொல்லிக் கொடுக்கலாம் என்று கிளர்ந்தெழுந்தார்கள். ரஜனீஷை ‘நாத்திகன்’ என்றார்கள். அவர் பேசும் மேடைகளில் கலாட்டா செய்யவும் தொடங்கினார்கள்.ஒரு மேடையில் ரஜனீஷ் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று செருப்பு ஒன்று அவர் மீது வந்து விழுந்தது.

கூட்டம் சலசலத்தது. அதைக் கண்டுகொள்ளாமல் ரஜனீஷ் தன்னுடைய பேச்சை நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தார். எனவே மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக மக்கள் அமைதியடைந்தார்கள்.பேச்சு முடிந்ததுமே தன் மீது வீசப்பட்ட செருப்பை எடுத்து, தலைக்கு மேலாக தூக்கிக் காண்பித்தார்.

“இந்த செருப்பை வீசிய அன்பரை நினைத்து பரிதாபப்படுகிறேன். அவரால் ஒற்றை செருப்பு அணிந்துகொண்டு வீடு போய்ச் சேரமுடியாது. வெறுங்காலால் நடக்கும் துன்பத்தை அவருக்கு ஏற்படுத்தி விட்டேனே என்று மனம் வருந்துகிறேன்..!” என்றார்.

கூட்டம் ஆர்ப்பரித்தது.அன்று இரவு ரஜனீஷை ஒரு வயதானவர் சந்தித்தார். ஊரில் அவர் செல்வாக்கு மிக்க பண்டிதர். மதக்கருத்துகளை மிகவும் சிறப்பாக பிரசங்கம் செய்யக்கூடியவர்.ரஜனீஷுக்கு தன்னுடைய ஊரில் கூடிய கூட்டத்தையும், அவருடைய கருத்துகளுக்குக் கிடைத்த வரவேற்பையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மேலும் ரஜனீஷின் மதம் சார்ந்த கருத்துகள், தன்னுடைய பிழைப்பின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கக்கூடிய புரட்சிகரமான சிந்தனைகளால் நிரம்பியிருந்ததை உணர்ந்து கோபப்பட்டார். அதன் விளைவாகவே செருப்பை எறிந்து கூட்டத்தைக் கலைக்க திட்டமிட்டார்.

ஆனால், ரஜனீஷ், கூட்டம் கலைந்துவிடாமல் தொடர்ந்து பேசவே அவரது திட்டம் நிறைவேறவில்லை. கூட்டம் முடியும்வரை அவரும் முழுமையாக இருந்து ரஜனீஷின் பேச்சைக் கேட்டு, அவரது கருத்துகளில் தன்னை இழந்துவிட்டார்.இதையெல்லாம் சொல்லி அவர் ரஜனீஷிடம் மன்னிப்பும் கேட்டார்.“எல்லோரும் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது நீங்கள் விழித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி!” என்று அவரைக் கட்டியணைத்து விடைகொடுத்தார் ரஜனீஷ்.

மதம், மனிதர்களைப் பிளவு படுத்துகிறது. மதங்கள் உருவானதின் நோக்கம் நிறைவேறவில்லை.ஆனால், மக்களுக்கு ஏதோ ஒரு மதத்தைச் சார்ந்து வாழவேண்டிய நெருக்கடியை நம்முடைய சமுதாயக் கட்டமைப்பு கொண்டிருக்கிறது.

மக்களிடம் பேசத்தொடங்கிய ஆரம்ப காலக்கட்டங்களில் பொதுவாக கடவுளர்களை ரஜனீஷ் குறிப்பிடமாட்டார். அதன் காரணமாகவே அவரை கம்யூனிஸ்ட் என்றும், நாத்திகர் என்றும் கூறி அவரது கூட்டங்களுக்குச் செல்ல வேண்டாமென்று மத அபிமானிகள் தத்தம் மக்களிடம் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

உண்மையில் ரஜனீஷ் நாத்திகரோ, ஆத்திகரோ, கம்யூனிஸ்ட்டோ, கேப்பிடலிஸ்ட்டோ அல்லது வேறு எதுவுமோ கிடையாது. ஏற்கனவே ஒருமுறை குறிப்பிட்ட மாதிரி அவர் ஒரு seeker. மனித மனங்களின் ரகசியங்களை, பிரபஞ்சத்தின் உண்மைகளை கடைசிவரை தேடிக்கொண்டே இருந்தார். அவருடைய தேடலில் அவர் அறிந்தவற்றையே மக்களுக்கு எளிமையாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

தன்னை மதங்களுக்கு எதிரானவராகச் சித்தரித்து நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தவர்களைச் சமாளிக்க, தன்னுடைய பேச்சுகளில் கடவுளர்கள் மற்றும் இறைத்தூதர்களின் பெயர்களை குறிப்பிட ஆரம்பித்தார் ரஜனீஷ்.கிருஷ்ணரைப் பற்றி அவர் பேசியதை இந்துக்கள் வரவேற்றார்கள். இயேசுவைப் பற்றிப் பேசினால், தங்கள் கூட்டங்களில் வந்து உரையாற்றுமாறு கிறிஸ்துவர்கள் கேட்டுக் கொண்டார்கள். முகம்மது நபி அவர்களின் கருத்துகளை எடுத்துச் சொல்வதை  இஸ்லாமியர் ஏற்றுக்கொண்டனர்.

இம்மாதிரி சர்வமத மக்களிடமும் ரஜனீஷ் சென்று சேர்ந்தார்.அதற்கு முன்பாக ரஜனீஷின் சொந்த ஊரில் இருக்கும் கோயில்களில்கூட அவரை அனுமதிக்க மாட்டார்கள். இப்போதோ கோயில், சர்ச், மசூதி, குருத்வாரா என்று ரஜனீஷ் எங்கே சென்றாலும் முதல் மரியாதை கொடுத்து வரவேற்கப்பட்டார்.

ஆனால், ரஜனீஷ் பணிபுரிந்துகொண்டிருந்த பல்கலைக்கழகம் அவரது இந்தப்புகழை ரசிக்கவில்லை. ஒரு பேராசிரியராக கல்விசார்ந்த கருத்தரங்கங்களில் கலந்துகொள்வதை விட்டு, இப்படி ஊர் ஊராக சன்னியாசி மாதிரி மக்களிடம் போய் தியானம், வாழ்வியல் தத்துவம் என்று பேசிக்கொண்டிருப்பது சரியல்ல என்று அவரை எச்சரித்தார்கள். குறிப்பாக ரஜனீஷின் பேச்சுகளால் அவ்வப்போது ஏற்படும் சர்ச்சைகளை அவர்கள் விரும்பவில்லை.
சீக்கியர்கள் மத்தியில் ஒருமுறை ரஜனீஷ் பேசிக்கொண்டிருந்தார்.

இந்து மதத்திலிருந்து சீக்கிய மதம் தோன்ற வேண்டியதின் அவசியம், குருநானக்கின் கருத்துகள், குரு கோபிசந்த் சீக்கியர்களுக்காக உருவாக்கிய அடையாளங்கள் பற்றியெல்லாம் அவரது பேச்சு விரிவாக அமைந்திருந்தது.அவரது பேச்சைக் கேட்ட சீக்கிய மக்கள், ரஜனீஷும் சீக்கியர்தான் என்று கருதினார்கள். எனவே, “இவ்வளவு பேசும் நீங்கள் முடியை நீளமாக வளர்த்து டர்பன் கட்டிக்கொள்ளவில்லை. கையில் வளையம் அணியவில்லை. இடுப்பில் கத்தி வைத்துக் கொள்ளவில்லை!” என்றெல்லாம் சரமாரியாக குற்றம் சாட்டினார்கள்.

“நான் சீக்கியனல்ல. ஆனால், சீக்கியனாக விரைவில் மாறிவிடுவேன் என்றுதான் கருதுகிறேன்!” என்று அவர்களை சமாதானப்படுத்தினார் ரஜனீஷ்.இந்நிகழ்ச்சி உள்ளூர் செய்தித்தாள்களில் விரிவாக வந்திருந்தன. ‘ஜபல்பூர் பேராசிரியர், சீக்கியர் ஆகிறார்!’ என்றெல்லாம் தலைப்பிட்டு எழுதியிருந்தார்கள்.

போலவே ஒரு சமணக் கூட்டத்தில் சந்தன்முனி என்கிற சமணமதப் பெரியவரிடமும் அவருக்கு பிரச்னை ஏற்பட்டது.“சந்தன்முனி தனக்கு போதிக்கப்பட்டதையும், சமண மத நூல்களில் கற்றதையும் மட்டுமே மக்களிடம் சொல்கிறார். அவருக்கு ஆன்மீக அனுபவமே கிடையாது...” என்று நேருக்கு நேராகக் குற்றம் சாட்டினார் ரஜனீஷ்.

அந்தக் கூட்டத்தில் ரஜனீஷுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால், சந்தன்முனியோ ரஜனீஷின் கருத்தை ஏற்றுக் கொண்டார். ரஜனீஷின் தியானமுறைகளை, தான் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினார். சமண மதத் துறவிகளுக்கு காலம் காலமாக எவை கற்பிக்கப்படுகிறதோ, அதை மட்டுமே இயந்திரத்தனமாகக் கற்று, தான் மெய்யான ஆன்ம ஞானத்தை அடையவில்லை என்று ஒப்புக் கொண்டார்.

சந்தன்முனியின் இந்தக் கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியது. அவர் மதவிலக்கமே செய்யப்பட்டார்.எனினும் தன்னுடைய எழுபதாவது வயதில் ரஜனீஷின் தியானமுறைகளைக் கற்று, தனக்குரிய ஞானத்தைப் பெற்றார். ‘இப்போதுதான் நான் சுதந்திரமானவனாகவும், மகிழ்ச்சியானவனாகவும் மாறியிருக்கிறேன்...’ என்று பகிரங்கமாக அறிவித்தார்.இதுபோல ரஜனீஷ் செல்லுமிடமெல்லாம் ஏதாவது ‘பஞ்சாயத்து’ உருவாக்கிக்கொண்டே இருந்தார்.
அதுதான் அவர் பணிபுரிந்த பல்கலைக்கழகத்தில் புகைச்சலைக் கிளப்பியது.

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்