எஸ்.ஜானகியை தமிழில் அறிமுகப்படுத்தியவர்!



சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி... யார் இவர் என்று நீங்கள் யோசிக்கலாம். ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்பட்டவர். நான்கு தேசிய விருதுகள், மாநில அளவிலான  முப்பத்தி மூன்று  விருதுகள், தமிழக அரசின் கலைமாமணி, கர்நாடக அரசின் ராஜயுத்சவா உள்ளிட்ட பல்வேறு மாநில விருதுகளைப் பெற்ற பாடகி எஸ்.ஜானகியின் பெயர்தான் இது.
விருது பெற எந்த சமரசமும் செய்துகொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு மத்தியில், 55 ஆண்டுகளாகப் பாடி வரும் தனக்கு காலம் கடந்து கொடுத்த விருது வேண்டாம் என்று 2013ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த பத்மபூஷண் விருதை ஏற்க மறுத்த தைரிய லட்சுமிதான் எஸ்.ஜானகி.

அவர் குரலை ரசிக்காதவர் யார் இருக்கிறார்கள்? 1970ம் ஆண்டிலிருந்து சுமார் 20 ஆண்டுகள் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து எஸ்.ஜானகி பாடிய அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையில் தமிழில்  மாநில விருதுகளை வென்ற ஒரே பாடகி எஸ்.ஜானகி மட்டும்தான்.  

சுமார் 48 ஆயிரம் பாடல்களைப் பாடிய எஸ்.ஜானகி தமிழில் 1957ம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்தில் முதன் முதலில் பாடினார். ஆனால், அந்தப் படம் பாடல் பதிவோடு நின்று போனது. அப்படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடல்களும் வெளிவராமல் முடங்கின. இந்த நிலையில் அதே ஆண்டு தமிழ்த் திரையுலகில் பாடகியாக முதன் முதலாக எஸ்.ஜானகியை அறிமுகப்படுத்தினார் தஞ்சை மாவட்டம் வேதாந்தபுரத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரங்கசாமி பார்த்தசாரதி என்ற ஆர்.பார்த்தசாரதி.

நடிகர் டி.எஸ்.பாலையா தயாரிப்பில் 1957ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘மகதலநாட்டு மேரி’ படத்தில் பி.பி.னிவாசுடன் இணைந்து எஸ். ஜானகி பாடிய இந்தப் பாடல்
எம்.பி. சிவம் எழுதியது. எஸ்.ஜானகிக்கு முதல் டூயட் பாடலும் இதுதான்.

கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை
தன் உருமாறி  வந்து தேன் மாரி பெய்யுதே...

இந்தப் பாடல் மூலமே தமிழ்த் திரை உலகில் ஒரு பின்னணிப் பாடகியாக எஸ்.ஜானகி நுழைந்தார். அவரை  தமிழ்ப்பட உலகில் அறிமுகம் செய்து வைத்த இசையமைப்பாளர் ஆர்.பார்த்தசாரதி, மிகச்சிறந்த இசையமைப்பாளர். தமிழில் குறைந்த அளவு படங்களுக்கே அவர் இசையமைத்திருந்தாலும், மறக்க முடியாத பாடல்களை அவர் வழங்கியுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் 1934ம் ஆண்டு பிறந்த ஆர்.பார்த்தசாரதி, தந்தையின் மறைவிற்குப் பிறகு 1940ல் சென்னையில் குடியேறினார். அங்கு முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டார். பள்ளியில் படிக்கும்போதே சிறந்த பாடகராகத் திகழ்ந்தார். பி.ஏ பட்டதாரியான பார்த்தசாரதி, மா.ரா, ‘இதயம் பேசுகிறது’ மணியன், கே.பாலாஜியால் நடத்தப்பட்ட நாடக மன்றத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.

அவர் முதல் முதலாக இசையமைத்த ‘மகதலநாட்டு மேரி’ படத்தில்  ஸ்ரீராம், குமாரி தங்கம், பி.எஸ்.வீரப்பா நடித்தனர். இப்படத்தின் அனைத்து பாடல்களும்  மெல்லிசை வகையைச் சேர்ந்தவை என்பதால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. ஜிக்கியின் இளமை துள்ளும் குரலில் ‘ஏனோதான் கர்வம் நெஞ்சே உன்ஆசை...’ பாடல் தாளம் போட வைக்கும்.

பி.சுசீலா பாடிய அரிதான பாடல்களின் பட்டியலில் உள்ள ‘பறந்து செல்லும் வெண் புறாவும் விரைந்து வருகுதே...’, ‘கண்ணாடி நான் நிலைக் கண்ணாடி தான்...’, எஸ்.வி.பொன்னுச்சாமி, கே.ராணி இணைந்து பாடிய ‘கண்ணும் கண்ணும் ஒண்ணுக்கொண்ணு...’ ஆகிய பாடல்கள் குறைந்த இசைக்கருவிகளைக் கொண்டு மிகச்சிறப்பான முறையில் இசையமைக்கப்பட்டவை.

1964ம் ஆண்டு மா.ரா. இயக்கத்தில் வெளியான ‘கல்யாண மண்டபம்’ படத்திற்கு ஆர்.பார்த்தசாரதி  இசையமைத்தார். பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா பாடிய இந்த டூயட் பாடல்தான் ஆர்.பார்த்தசாரதியின்  புகழ்பெற்ற டூயட் என்றே சொல்லலாம். தெள்ளூர் தர்மராஜ் எழுதிய அந்தப் பாடல் -
பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா
புன்னகையில் செண்டமைத்து
கையில் கொடுக்கவா...

ஆனால், இந்தப் பாடலுக்கு மெல்லிசை மன்னர் இசையமைத்ததாக இசைத்தளங்களில் தவறாக தகவல் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் பி.சுசீலா பாடிய ‘பசும் புல் தரையில் பனி கொட்டும் வரையில் படுத்திருந்தேன் கொஞ்சம் நாளில்...’, எஸ்.ஜானகி பாடிய  தாலாட்டுப் பாடலான ‘என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு...’, டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய ‘ஊரில்லாமல் தேரில்லாமல் மன்னவன் ஒருவன் வந்தான்...’, ‘நான் உன்னைத் தொடலாம் நீ என்னைத் தொடலாம்...’ ஆகிய அழகிய பாடல்கள் ‘கல்யாண மண்டபம்’ படத்தின் பெயரை இன்றளவும் இசை ரசிர்கள் மனதில் நீங்கா இடம்பெறச்செய்திருக்கின்றன.

1966ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் எம்எல்ஏ, விஜயகுமாரி நடிப்பில் வெளியான படம் ‘அவன் பித்தனா?’ ப.நீலகண்டன் இயக்கிய இப்படத்தில் கவியரசர் கண்ணதாசனின் புகழ்பெற்ற தத்துவப்பாடல் இடம் பெற்றுள்ளது. டி.எம்.சௌந்தரராஜனும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய அந்தப் பாடல் -

இறைவன் இருக்கின்றானா
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான் எங்கே வாழ்கிறான்...

ஆர்.பார்த்தசாரதி என்ற மகத்தான இசையமைப்பாளனின் உழைப்பின் விளைச்சலில் விளைந்த பாடலிது.

‘கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி...’,
 ‘ஆயிரம் முத்தம் தருவேன் ஆனால் உனக்கல்ல...’,
 ‘மாப்பிள்ளை இந்த மாப்பிள்ளை...’ என அத்தனை பாடல்களும் ‘அவன் பித்தனா’ படத்தை ரசிக்க வைத்தன.

1968ம் ஆண்டு ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான படம் ‘பால்மணம்’.

நிலவுப்பெண் முகம் பார்க்க
நீலமேகம் கண்ணாடி
நீலமேகம் முகம் பார்க்க
நீரோடை கண்ணாடி
நீரோடை முகம் பார்க்க
நீயும்தான் கண்ணாடி...
என்ற டி.எம்.சௌந்தர
ராஜன், பி.சுசீலா பாடிய பாடல் மட்டுமின்றி ‘கன்னி ஒருத்தியிடம் எத்தனைக்கனி, கனிகளின் சுவையே தனித்தனி...’ என்ற பாடலும், ‘கணக்கெழுத தெரிந்த பெரியவனே கூட்டல் கழித்தல் தெரியுமா...’ என்ற டி.எம்.செளந்தரராஜனின் தத்துவப்பாடலும் ஆர்.பார்த்தசாரதியின் இசையில் உருவானவைதான்.

1970ம் ஆண்டு கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான ‘கல்யாண ஊர்வலம்’ படத்திற்கு ஆர்.பார்த்தசாரதி இசையமைத்தார்.

இப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகியின் புகழ்பெற்ற -

கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும்  கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி ...
- என்ற இனிய பாடல் இடம் பெற்றது.
ஆண்டவன் முகத்த பாக்கணும் நான்
அவனிடம் ஒண்ணே ஒண்ணு கேட்கணும்
ஏன்டா சாமி என்னை படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச

- என்ற டி.எம்.சௌந்தரராஜன் பாடிய புகழ்பெற்ற பாடலும் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது. ஆர்.பார்த்தசாரதியின் அழகிய மெட்டில் ‘எந்தன் உயிர் காதலன் கண்ணன்...’ பாடலையும், ‘ஊரெல்லாம் பாக்கு வைத்து...’ பாடலையும் பி.சுசீலா பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் மட்டுமின்றி ஒலிப்பதிவிலும் சிறந்து விளங்கியவர் என்பதால், வேதா, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலரின் படங்களுக்கு ஆர்.பார்த்தசாரதி பின்னணி இசை வழங்கியுள்ளார்.

திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் இருந்து அவர் ஒதுங்கிய பிறகு அமெரிக்காவில் குடியேறினார். ஆனாலும்,  இசை அவரை விடவில்லை. ஒலிப்பதிவுத் திறமை கொண்ட ஆர்.பார்த்தசாரதி, தனது ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் இன்க் ( Oriental Records Inc)  இசை வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் சிதார்  ரவிசங்கர், வீணை எஸ்.பாலச்சந்தர், கே.ஜே. ஜேசுதாஸ் போன்ற கலைஞர்களது இசைவடிவங்களை  ஒலிவடிவங்களாக வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் மா.ரா.வின் எழுத்தில் ‘தமிழ் உயிர் எழுத்துகள்’, ‘திருக்குறள்’ ஆகியவற்றிற்கு இசையமைத்துள்ளார். குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்த போது அவரது கவிதைகளை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உன்னிகிருஷ்ணன் குரல்களில் இசையமைத்து  வெளியிட்டுள்ளார்.  இவ்வளவு திறமை வாய்ந்த இசைக்கலைஞரான ஆர்.பார்த்தசாரதியை தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் இசைப் பிரியர்களிடம் இப்போதும் இருக்கிறது.

ப.கவிதா குமார்