ரத்த மகுடம்-155



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

உதய காலத்துக்கு, அந்த காரத்தை அறுக்கும் சக்தி உண்டு. இரவின் அந்தகாரத்தை மட்டுமல்ல... உள்ளங்களின் அந்தகாரத்தையும் அகற்றும் சக்தி கொண்டதுதான் உதயம்.

உயிரினங்களுக்கு எல்லாம் அபயம் கொடுக்கும் முறையில் கதிரவன் உதயமாவதாலும், அவன் கிளம்பும்போது உயிரினங்களும் விழித்து அவன் அஸ்தமித்த பின்பு அவையும் கண் மூடுவது என்ற நியமம் இருந்து வருவதாலும் சூரியனை ‘சூரிய பகவான்’ என்று அழைக்கிறோம்.
சந்திரன் எத்தனை சந்துஷ்டியை அளித்தாலும், இரவை ரம்மியமாக அடித்தாலும், பகவான் என்ற திருநாமத்தைப் பெறவில்லை. உயிரினங்களுக்கு ஏற்படும் பயம், வியாதி முதலியவற்றுக்கு இரவு அதிக சக்தியைக் கொடுக்கிறது. உதயம் துணிவை அளிக்கிறது.இந்த கிரமம் தவிப்புக்கும் உண்டு போலிருக்கிறது.

இரவெல்லாம் பல எண்ணங்களாலும் சிவகாமியின் கொங்கை அளித்த ஆதரவாலும் தவித்த கரிகாலன், அனைத்தையும் உதறி உதயத்தில் எழுந்தான். காலைக் கடன்களை முடித்து குளித்தவன், இன்னும் ஒரு நாழிகையில் தன் தந்தையின் கூடாரத்தில் மந்திராலோசனை நடைபெறும் என மற்ற உபதளபதிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி வீரனிடம் கட்டளையிட்டான்.

சொன்னபடி அடுத்த நாழிகையில் தன் தந்தையின் கூடாரத்துக்குள் நுழைந்தான். அனைத்து உபதளபதிகளும் அவனது வரவுக்காகக் காத்திருந்தார்கள்.

நுழைந்து தன் தந்தையான சோழ மன்னரை வணங்கிவிட்டு தனக்கான இருக்கையில் அமர்ந்த கரிகாலன், ‘‘நம்முடைய படைபலம் இப்பொழுது எப்படி..?’’ என்று கேட்டான்.
‘‘ஐம்பதாயிரம் வீரர்கள் இருக்கிறார்கள். இன்னும் முப்பதாயிரம் பேர்களை நாம் பல்லவ நாட்டின் கோட்டத் தலைவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்...’’ என்று பதில் அளித்தான் ஓர் உபதளபதி.

‘‘கரிகாலா...’’ தொண்டையைக் கனைத்தார் சோழ மன்னர். ‘‘நீ எதற்காக நம் ஒற்றர் படையைச் சேர்ந்த நங்கையிடம் கச்சை ஒன்றை அளித்தாய்..?’’

கேட்ட தன் தந்தையைப் பார்த்து கரிகாலன் புன்னகைத்தான். ‘‘கச்சையில் நான் வரைந்தது போர் வியூகம். அதை நங்கை பக்குவமாக துண்டு போட்டிருக்கிறாள். ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு கோட்டத்தைச் சேர்ந்த நெசவாளர்களின் கைக்குச் சென்றுவிட்டது. தங்களிடம் அளிக்கப்பட்ட துண்டில் இருக்கும் காட்சியை அப்படியே அந்தந்த கோட்டத் தலைவரின் அங்கவஸ்திரத்தில் நெய்து அவர்கள் கொடுத்து விட்டார்கள். அங்கவஸ்திரத்தில் உள்ள காட்சிக்கு ஏற்ப தங்களுக்கான படைகளை கோட்டத் தலைவர்கள் நகர்த்தி வருவார்கள்... இதனால் சாளுக்கியர்களுக்கு எவ்வித ஐயமும் ஏற்படாது...’’‘‘நெசவாளர்கள் துணியை மட்டும்தானே நெய்வார்கள்..?’’ ஓர் உபதளபதி இடைமறித்தான்.

‘‘அவர்கள் போர் புரியவும் தகுதிவாய்ந்தவர்கள்தான். நடைபெறவிருக்கும் பல்லவ - சாளுக்கிய யுத்தம் அவர்களின் வீரத்தை உலகுக்கு பறைசாற்றும்...’’ சொன்ன கரிகாலன் தன் தந்தையை ஏறிட்டான்.‘‘நீங்கள் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் பல்லவ பேரரசுக்கு அடங்கிய சிற்றரசாகத் திகழும் சோழப் படைக்கு புதியதாக ஒரு பிரிவை உண்டாக்கியிருக்கிறேன்.

நெசவாளர்களை உள்ளடக்கிய அப்படைப் பிரிவு, ‘கைக்கோளப் படையார்’ என இனி அழைக்கப்படும். இவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வைத்து இனி சோழர்கள் ‘அகப் பரிவாரப் படை’யை அமைத்துக் கொள்ளலாம். இப்படைக்கு ‘தெரிஞ்ச கைக்கோளர் படை’ என பெயர் சூட்டியிருக்கிறேன்.

 ஒவ்வொரு சோழ மன்னரின் பெயரையும் தங்கள் படைப்பெயருக்கு முன்னால் அவர்கள் இனி சேர்த்துக் கொள்வார்கள்...’’மகனின் கூற்றை ஆமோதிக்கும் வகையில் தலையசைத்த சோழ மன்னர், ‘‘விளிந்தையில் இருந்து நாம் படையுடன் எப்பொழுது புறப்படப் போகிறோம்..?’’ என்று கேட்டார்.‘‘இன்று இரவே இங்குள்ள படை நகர வேண்டும்.

கோட்டத் தலைவர்களையும் அவர்கள் படைப்பிரிவுகளுடன் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நம்மைச் சந்திக்கச் சொல்லி செய்தி அனுப்பி விடுங்கள். சாளுக்கிய மாமன்னரான விக்கிரமாதித்தரை இன்னும் ஒருவாரத்தில் நாம் சந்தித்தால்தான் பல்லவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சற்றே தாமதமானாலும் நம் வெற்றி கேள்விக்குறியாகிவிடும்.

எனவே புரவிப் படைகளும், காலாட் படைகளும், யானைப் படைகளும் தனித்தனியாக பிரிக்கப்படட்டும். நமது படை முதலில் மேற்கே சென்று பிறகு தென்கிழக்குச் சாலையில் திரும்பட்டும். அதிக ஓய்வெடுத்துக் கொள்ளாமல் நாம் பயணம் செய்து உறையூர் எல்லையில் இருந்து ஒரு காதத்துக்கு முன்பே தங்குவோம்...’’‘‘படைத்தளத்தை அத்தனை தூரத்தில் ஏன் நாம் அமைக்க வேண்டும்..?’’‘‘அங்குதான் சாளுக்கியர்களை நாம் சந்திக்க சரியான களம் இருக்கிறது...’’ கண்களைச் சிமிட்டிய கரிகாலன், தான் சுருட்டி வைத்திருந்த மான் தோலை எடுத்து விரித்தான்.அங்கிருந்த அனைத்து உபதளபதிகளும் அந்த மான் தோலில் தீட்டப்பட்ட கோடுகளை ஆராய்ந்தார்கள்.

‘‘போர்க் களத்துக்கு செல்ல அநாவசியமாக சுற்ற வேண்டியிருக்கிறதே...’’ சோழ மன்னரின் பார்வை மான் தோலை அலசியபடி இருந்தது.‘‘ஆம் தந்தையே... அதற்கு காரணமிருக்கிறது...’’ என்ற கரிகாலன், ‘‘மொத்தம் ஐம்பதாயிரம் படை இங்கிருப்பதாக குற்றிப்பிட்டாயே... அதைக் குறித்து விளக்கமாகச் சொல்...’’ என முதலில் பதில் அளித்த உபதளபதியிடம் கேட்டான்.
‘‘யானைப்படை ஐயாயிரம், புரவிப்படை இருபத்தையாயிரம், காலாட்படை இருபதினாயிரம், ரதங்கள் இருநூறு...’’‘‘ரதங்கள் ஏன் குறைவாக இருக்கின்றன..?’’

‘‘அது சீனனின் ஏற்பாடு...’’ மகனைப் பார்த்து நகைத்தார் சோழ மன்னர். ‘‘பெருவாரியான படை வீரர்களால் ரதங்கள் இயக்கப்படப் போவதில்லை. ஒவ்வொரு ரதத்துக்கும் ஒரு சாரதி. ரதத்தின் மத்தியில் போர்ப்பொறிகளை சீனன் அமைத்திருக்கிறான். சில அம்பு பொழியும் விற்பொறிகள். சில வேல்களைப் பொழியும் மரக் கட்டைப் பொறிகள்.

இன்னும் சில பந்தங்களையும் கற்களையும் வீசக் கூடிய நீண்ட மரத் தண்டுகளாலான பண்டைக்கால இலக்கியங்களில் கண்ட இலக்கணிப் பொறிகள்... ஒவ்வொரு பொறியையும் நேரம் பார்த்து இயக்க இரண்டிரண்டு வீரர்கள் போதும் என்று சொல்லிவிட்டான்...’’‘‘இப்பொழுது சீனன் எங்கே..?’’‘‘நம் பல்லவ இளவலுடன் இருக்கிறான்...’’ என்ற சோழ மன்னர், ‘‘நம் பல்லவ மன்னர் எங்கிருக்கிறார்..?’’ என்று கேட்டார்.

அதே வினா எல்லா உபதளபதிகளின் வதனத்திலும் எதிரொலிப்பதை கரிகாலன் கண்டான். ‘‘தக்க நேரத்தில் தனது புரவியான அதிசயத்தில் அமர்ந்தபடி நம்முடன் வந்து சேருவார். உடன் மன்னரது மனதுக்கு உகந்த அரிவாரணம் யானை சகல அலங்காரங்களுடன் பல்லவர் கொடி தாங்கி வரும்...’’நிறுத்திய கரிகாலன் தன் தந்தையை ஏறிட்டான். ‘‘உங்கள் வினாவுக்கு இப்பொழுது பதில் அளிக்கிறேன் தந்தையே! இங்கிருந்து காவிரியைக் கடந்து மேற்கு மலைத் தொடர் பாதையில் செல்கிறோம்.

முட்டும் இடத்தில் தங்குகிறோம். நாம் மலைத் தொடரின் அடிவாரத்தை அடைந்த ஒரு நாளைக்குள் கோட்டத் தலைவர்களின் படைப் பிரிவுகள் தாமதிக்காமல் இந்த இடத்தில் நம்முடன் வந்து இணைய வேண்டும். அவர்களது புரவிப் படை, நமது புரவிப் படைகளுடன் இணையட்டும். காலாட்படை, காலாட் படையுடன் இணையட்டும்.

அநேகமாக கோட்டத் தலைவர்கள் யானைப் படையை அழைத்து வரமாட்டார்கள் என எண்ணுகிறேன். ஒருவேளை கொண்டு வரலாம். எனவே வேண்டாம் என செய்தி அனுப்பிவிடுங்கள்...’’‘‘ஏன் கரிகாலா..?’’‘‘பல்லவ இளவல் தேவைக்கு அதிகமாகவே யானைப் படையை சேகரித்து விட்டார்! அவை சேர நாட்டிலிருந்து தென் பாண்டி வழியாக  புறப்பட்டுவிட்டன!’’‘‘அப்படியானால் பாண்டியர்கள் நம் பக்கம் நின்று சாளுக்கியர்களை எதிர்க்கப் போகிறார்களா..?’’ சோழ மன்னர் கண்களில் ஆவல் தெறித்தது.

‘‘இல்லை தந்தையே!’’ கரிகாலனின் கருவிழிகளில் சிந்தனைகள் பூத்தன. ‘‘பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்குமான பகை உலகம் அறிந்ததாயிற்றே! பல்லவர்களை வீழ்த்துவதுதானே ஒவ்வொரு பாண்டிய மன்னரின் கனவாகவும் இருக்கிறது! தன் காலத்தில் அது மெய்ப்பட பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் முயற்சிக்கிறார்...’’
‘‘அப்படியானால்..?’’‘‘பாண்டியர்களின் படைப் பிரிவு சாளுக்கியர்களுக்கு உதவப் போகிறது... ஆனால்..?’’‘‘சொல் கரிகாலா...’’

‘‘பாண்டிய இளவல் கோச்சடையன் இரணதீரன் இப்போரில் பங்கேற்கப் போவதில்லை!’’
‘‘அப்படியா..?’’‘‘ஆம் தந்தையே! காந்தளூர் சாலையின் பேராசான் கட்டளைப்படி பாண்டியர் படை மட்டும் போரில் பங்கேற்கப் போகிறது... நம் இளவரசர் இராஜசிம்மன் கொற்கைகே சென்று கோச்சடையன் இரணதீரனிடம் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்துவிட்டார்...

ஆக, பாண்டிய நாட்டின் மிகச்சிறந்த போர் வீரனும் ராஜ தந்திரியுமான இரணதீரன் இல்லாமல் படை மட்டும்தான் சாளுக்கியர்களுடன் கைகோர்க்கப் போகிறது...’’‘‘உண்மையிலேயே இது நல்ல செய்தி...’’‘‘இன்னொரு நல்ல செய்தியும் இருக்கிறது தந்தையே! சீன நாட்டிலிருந்து ‘வானவில்’ என்று அழைக்கப்படும் ஏழு சூரர்கள் இப்பொழுது நம் பல்லவ இளவலுடன் இணைந்திருக்கிறார்கள். இந்த எழுவரும் சீனனுமாக சேர்ந்து எட்டு யந்திரப் பொறி வல்லுனர்கள் நமக்கு உதவப் போகிறார்கள்...’’ எல்லோரும் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்தார்கள்.

‘‘உபதளபதிகளே! எத்தனை சீக்கிரம் நகர்த்த வேண்டுமோ அத்தனை விரைவாக நம் படையை நகர்த்த வேண்டும். அமளிதுமளி கூடாது. விளிந்தையைக் காக்க ஐயாயிரம் வீரர்கள் போதும். விளிந்தைக்கு தற்சமயம் ஆபத்தில்லை. இங்கிருந்து காவிரிக்கரையோரம் சென்றால் உறையூர் முன்பிருக்கலாம். ஆனால், நம் திட்டம் அதுவல்ல. நாம் காவிரியைக் கடந்து மேற்கு மலைத்தொடர் அடிவாரக் காடுகளுக்குச் செல்கிறோம். இடையில் சாளுக்கியர் படை ஏதாவது இருந்தால் அதைவிட்டு ஒதுங்கிச் செல்வோம். அப்படியும் ஏதாவது படை எதிர்த்தால் அதை அழித்துவிட்டு முன்னேறுவோம்.

காவிரியின் அக்கரைச் சாலை நிலைகளைக் கவனிக்க ஒற்றர்களை உடனடியாக அனுப்புங்கள். எப்படியும் நமக்கு ஆபத்து உறையூருக்கு அருகில்தான். எந்த இடத்தில் சாளுக்கியப் படைகளை நாம் எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை பிறகு சொல்கிறேன்... அடிப்படையில் நான் சோழன்... காவிரிக்கரையும் இந்த தேகத்தில் ஓடும் நாடி நரம்புகளும் ஒன்றுதான். எனக்குத் தெரியாத பிரதேசம் சோழ தேசத்திலேயே இல்லை... எனவேதான் போருக்கான இடத்தை முடிவு செய்யும் உரிமையை பல்லவ மன்னரும் பல்லவ இளவலும் எனக்கு அளித்திருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கையை கண்டிப்பாகக் காப்பாற்றுவேன்...’’திடமான குரலில் உத்தரவிட்ட கரிகாலன், மந்திராலோசனை கூட்டம் முடிந்து விட்டதற்கு அறிகுறியாக எல்லோரையும்
வழியனுப்பினான்.

திட்டமிட்டபடி அன்றிரவு விளிந்தையில் இருந்த பல்லவப் படை புறப்பட்டது.அணிவகுத்துச் சென்ற அப்படையை குன்றின் உச்சியில் இருந்து சிவகாமி பார்த்தாள். கண்களால் அலசினாள். திருப்திக்கு அறிகுறியாக அவள் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.திரும்பி குன்றை விட்டு மடமடவென்று இறங்கியவள், புற்களை மேய்ந்து கொண்டிருந்த புரவியைத் தட்டிக்கொடுத்துவிட்டு அதன் மீது ஏறி அமர்ந்தாள்.சாளுக்கிய மன்னரின் இருப்பிடம் நோக்கி சிவகாமியின் புரவி பாய்ந்தது!‘‘கங்க மன்னர் பூவிக்கிரமன் தன் மகள் ரங்கபதாகையை பல்லவ இளவரசனுக்கு மணமுடிக்கப் போகிறானா..?’’ அதிர்ச்சியுடன் கேட்டார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.‘ஆம்...’ என தலையசைத்தான் ஒற்றன்.‘‘வாய்ப்பில்லையே... கங்க மன்னருக்கு மகளே கிடையாதே! யார் இந்த ரங்கபதாகை..?’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்