பாலா



இருபத்தைந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 171 கோடியை அள்ளிய இந்திப்படம், ‘பாலா’. ‘ஹாட் ஸ்டாரி’ல் இலவசமாகப் பார்க்கக்கிடைக்கிறது.பள்ளிப்பருவத்தில் ஒரு ஹீரோவைப் போல வலம் வந்தவன் பாலா.
குறிப்பாக அவனது ஹேர்ஸ்டைலுக்கும் மற்றவர்களைப் போல மிமிக்ரி செய்யும் திறமைக்கும் ரசிகர்கள் ஏராளம். ஆனால், 25 வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கை விழுந்துவிடுகிறது. அதனால் அவனது காதலி பாலாவைக் கைவிட்டுவிடுகிறாள். அழகு சாதனங்களை மார்க்கெட்டிங் செய்யும் வேலையைப் பார்த்துக் கொண்டே, ஸ்டேண்ட்-அப் காமெடியும் செய்கிறான்.

இந்த இரண்டு வேலைகளிலும் அவனால் சிறப்பாக ஈடுபடமுடிவதில்லை. காரணம், வழுக்கை அவனுக்கு அவமானத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் கொண்டுவந்து சேர்க்கிறது. வழுக்கையை சரிசெய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறான். எதுவும் பலனளிப்பதில்லை.

கடைசியில் விக் வைத்துக்கொள்ள, பாலாவுக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஒரு மாடல் அழகியைக் காதலித்து திருமணமும் செய்துகொள்கிறான். முதல் இரவில் பாலாவின் சிக்கல் மனைவிக்குத் தெரிய வர, பிரச்னை வெடிக்கிறது. இதிலிருந்து பாலா எப்படி மீண்டான் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள்.பாலாவாக நடிப்பில் ஆச்சர்யப்படுத்துகிறார் ஆயுஷ்மான் குரானா. படத்தின் இயக்குநர் அமர் கௌசிக்.