என்மேல வெளிச்சம் பாய்ச்சினது விஜய் அண்ணாதான்!



‘‘சினிமாவுக்கு வந்து பதினான்கு வருஷங்களாச்சு. ஆனா, ஒருசிலருக்குதான் நான் நடிகன்னே தெரியும். இந்த நிலையை மாற்றியது விஜய் அண்ணாதான்!
ஆமா. ‘பிகில்’ படத்துல அவர்கூட நடிச்சேன். அந்தப் படத்தோட ஆடியோ நிகழ்ச்சில ‘ஒரு நல்ல நண்பரை சந்திச்சேன்’னு அவர் என்னைப் பத்தி சொன்னதும் எல்லாருக்கும் தெரிஞ்ச முகமாகிட்டேன்...’’ புன்னகைக்கிறார் நடிகரும், இயற்கை ஆர்வலருமான செளந்தர ராஜா.

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க..?
வெளிநாட்ல கவுரவமான வேலை, கை நிறைய சம்பளம்னு வாழ்ந்துட்டு இருந்தேன். சினிமா ஆசை இருந்ததால வேலையை விட்டுட்டு வந்தேன். நான், விஜய்சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன்னு எல்லாரும் ஒண்ணா பயணிச்சோம். சேர்ந்து நிறைய குறும்படங்கள் எடுத்தோம். ‘சுந்தரபாண்டியன்’ படத்துல வில்லனா அறிமுகமானேன். தொடர்ந்து ‘ஜிகர்
தண்டா’, ‘தெறி’, ‘பூஜை’, ‘தர்மதுரை’, ‘தொண்டன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’னு ஏராளமான படங்கள்ல நடிச்சேன்.

‘ஜகமே தந்திரம்’?
கார்த்திக் சுப்புராஜ் நீண்ட நாள் நண்பர். அதனால அவர் கூட எளிதா வேலை செய்ய முடிஞ்சுது. ஏற்கனவே அவர் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ல  பொன்ராம் கேரக்டர் பண்ணியிருந்தேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அவர் டைரக்‌ஷன்ல லைஃப்டைம் கேரக்டர் பண்ணணும்னு ஆசை. ஒருநாள் ‘‘ஜகமே தந்திரம்’ படத்துல தனுஷுக்கு ரைட்ஹேண்ட் கேரக்டர் ஒண்ணு இருக்கு. சின்ன கேரக்டர்தான். ஆனா, நீங்கள் பண்ணினா நல்லா இருக்கும்’னு சொன்னார். உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

‘ஜகமே தந்திரம்’ படத்துக்காக 40 நாட்கள் லண்டன்ல தங்கினேன். இதுதான் சினிமாவுக்காக என்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணம். அதுவும் நான் வேலை பார்த்த கம்பெனி லண்டன்லதான் இருக்கு. அதனால என் லட்சிய பயணத்தோட வெற்றியின் ஒரு பகுதியா அந்த லண்டன் படப்பிடிப்பை கருதறேன்.
தவிர எனக்கு கல்யாணமாகி ஒரு வருஷமே அப்ப ஆகியிருந்தது. மனைவியை எங்கயும் கூட்டிட்டுப் போகலை. ஸோ, லண்டன் படப்பிடிப்புக்கு மனைவியை கூட்டிட்டுப் போய்
தேனிலவு கொண்டாடினேன்!

தனுஷ்?
அவர் கூட சேர்ந்து நடிச்சேன்னு சொல்ல மாட்டேன். பதிலா அவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்னு சொல்லுவேன். அவரோட தனித்துவமான நடிப்பை பக்கத்துல இருந்து பார்த்தேன். சில சமயம் என் காட்சிகள் ஒரு சில டேக் வாங்கும். அப்ப என்னை கூல் செஞ்சு ஃபைன் டியூன் பண்ணினது அவர்தான். விஜய் சேதுபதி, விஷால்... இவங்களைப் பத்தி சொல்லுங்க.

ரெண்டு பேருமே என் சினிமா பயணத்துல முக்கியமானவங்க. விஜய்சேதுபதி என் உயிர் நண்பன், ஆசான். சினிமாலயும், வாழ்க்கைலயும் எந்த முக்கியமான முடிவுனாலும் அவர்கிட்ட ஆலோசிக்காம எடுக்க மாட்டேன். விஷால் எனக்கு அண்ணன் மாதிரி. நடிகர் சங்க வேலைகளை மட்டுமில்ல... அவரோட ‘தேவி அறக்கட்டளை’ பணிகளையும் என்னை நம்பி கொடுப்பார். அவர் கூட சேர்ந்து நிறைய சமூக சேவைகள் செய்திருக்கேன். விஷால் கூட இணைஞ்சு ஆரம்பிச்ச ‘சோஷியல் ஆர்க்கிடெக்’ குழுவுல பிரபல மருத்துவர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், நடிகர்கள்னு பலர் இருக்காங்க. கடந்த ஏழு வருஷங்களா தொடர்ந்து சமூக சேவை செய்துட்டு வர்றோம். கஜா புயல் சமயத்துல எங்க குழு ஏராளமான நிவாரணப்பணிகளை செஞ்சது.  
விஜய்..?

‘தெறி’ படத்துலதான் அண்ணன் கூட முதல்ல இணைந்தேன். அப்ப அவரோட நெருக்கமாகலை. ‘பிகில்’தான் எங்களை இணைச்சது. ஸ்பாட்ல தன் போர்ஷன் முடிஞ்சாலும் கேரவன் போகமாட்டார். ஓரமா உட்கார்ந்து நடப்பதை கவனிப்பார். அப்ப நிறைய பேசுவோம். என் தனிப்பட்ட வாழ்க்கை, திருமணம், ஷூட் இல்லாதப்ப என்ன செய்வேன்னு எல்லாம் அக்கறையா விசாரிப்பார். அப்ப ‘படப்பிடிப்பு இல்லாதப்ப நிறைய மரங்கள் நடுவேன். எனக்கு ட்ரீ ப்ளான்டேஷன் பிடிக்கும். ஏரி, குளம் மாதிரி யான நீர்நிலைப் பகுதிகளை தூய்மை செய்வேன். இதுக்குனு தனிக் குழு வைச்சிருக்கோம்...’னு சொன்னேன். என்னை தட்டிக் கொடுத்தார்.

இதை மனசுல வைச்சுதான் ஆடியோ ஃபங்ஷன்ல என்னைப் பத்தி சொன்னார். என் காதுகளையே நம்ப முடியாம இப்ப வரை இருக்கேன். ஒரு சாதாரண நடிகனான என்னைப்பத்தி அவர் பெருமையா பேசினதை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன். நானும் ஹீரோவா ‘ஒரு கனவு போல’, கவுண்டமணி அண்ணனுடன் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா, வணிக ரீதியா இந்தப் படங்கள் சரியா போகலை. இந்த வருத்தத்தை விஜய் அண்ணாவோட பேச்சு போக்கிச்சு.

அடுத்து..?
நந்தா பெரியசாமி இயக்கத்துல கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ல நடிச்சுட்டு இருக்கேன். பக்கா சென்டிமென்ட் படம். அப்புறம் சீனுராமசாமி இயக்கும் புதிய படத்துல ஒப்பந்தமாகியிருக்கேன். இதுதவிர தெலுங்குல பிரபல காமெடி நடிகர் ஆலியுடன் ஒரு படம், மலையாளத்துல அறிமுக இயக்குநர் விஜய் இயக்கும் படம் போயிட்டிருக்கு.
உங்க அறக்கட்டளை பத்தி சொல்லுங்க..?

‘நாம  படிச்சா மட்டும் போதாது... ஊருக்கு நாலு நல்லது பண்ணணும்’னு என் தாத்தா அடிக்கடி சொல்வார். அந்த எனர்ஜிதான் ‘மண்ணுக்கும் மக்களுக்கும்’ இயக்கத்தை நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பிக்க வைச்சது.அஞ்சு வருஷங்களா பல சமூகப் பணிகள் செய்துட்டு இருக்கோம். போன வருஷம் தமிழ்நாட்ல இருக்கிற நீர்நிலைகளைச் சுத்தி மரங்களை நட்டோம். இதுவரை 25 ஆயிரம் மரங்களை நட்டிருக்கோம்.

எஸ்.ராஜா