இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் எத்தனை பேர்..? தரவுகளின்றித் தடுமாறும் அரசு



கொரோனாவின் பிடியில் தேசம் சிக்கி ஒன்றரை வருடங்களாகப்போகிறது. நாடு முழுதும் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையான வாழ்வியல் நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரப் பின்னடைவு நாட்டின் அனைத்துப் பிரிவினரையுமே மோசமாகப் பாதித்திருக்கிறது. இப்படியான சூழலில் இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார வல்லுனர்கள், திட்ட அமைப்பாளர்கள் யாருமே செய்யாத ஒரு வேலையை சத்தமின்றி இந்த கொரோனா பேரலைகள் செய்திருக்கின்றன.

ஆம்! இந்தியாவின் தொழிலாளர் வளம் அல்லது மானுட வளம் எத்தகையது என்பது தொடர்பான உரையாடலில் ஒரு புதிய கவனத்தை உருவாக்கியிருக்கிறது இந்த கொரோனா.
குறிப்பாக, அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பான எந்த ஆதாரபூர்வமான தகவல்களுமே நம்மிடம் இல்லை என்பதை துலக்கமாகச் சொல்லிவிட்டது கொரோனா கால முடக்கங்கள்.
கொரோனாவின் வருகைக்குப் பிறகான இந்த ஒன்றரை ஆண்டில் நம்மிடம் தொழிலாளர் சந்தை தொடர்பாக எந்தவிதமான நம்பத்தகுந்த ஆதாரங்களோ அது தொடர்பான காலப் பகுப்புகளோ புள்ளிவிவரங்களோ இல்லை. தொழில்துறையில் இந்த தொழிலாளர் சந்தை என்னவிதமான பாதிப்பை உருவாக்குகிறது என்பதற்கும் நம்மிடையே தரவுகள் இல்லை என்பதும் இத்தனை மாதங்களில் அம்பலமாகியிருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்தியாவில் அமைப்புசார் தொழிலாளர்கள் எப்போதும் கண்ணுக்குப் புலப்படக்கூடியவர்களாகவும் கணக்கில் வரக்கூடியவர்களாகவுமே இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தொழிலாளர் நிரந்தர வைப்பு நிதி (PF), மருத்துவக் காப்பீடு போன்றவற்றை வைத்திருப்பதால், அந்த நிறுவனங்களின் தகவல் திரட்டுகளிலிருந்து உண்மை நிலவரத்தை நாம் ஓரளவு கணித்துவிட முடியும்.

ஆனால், அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் அப்படி இல்லை. இன்னமும் நம் நாட்டில் எத்தனை கோடிப் பேர் இந்தப் பிரிவில் வருவார்கள் என்றுகூட யாருக்கும் தெரியாது. பேசுவதெல்லாம் குத்துமதிப்பான கணக்குதான். இத்தனைக்கும் நம் நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2008, மாநிலங்களுக்கு இடையே புலம்பெயரும் தொழிலாளர்கள் சட்டம் 1979 போன்ற சட்டங்கள் ஏட்டில் இருக்கின்றன. ஆனால், களத்தில் இவை இல்லை என்பதே உண்மை நிலவரம்.

சரி, இத்தனை ஆண்டுகளாக ஏனோ இல்லை. இந்த கொரோனா காலத்துக்குப் பிறகாவது நம்மிடம் இது சார்ந்து ஏதேனும் கணக்கெடுப்பு இருந்ததா? கடந்த  வருடம் திடீரென முதல் லாக் டவுன் அறிவித்த பிறகு, எத்தனை கோடி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தத்தம் சொந்த மாநிலத்துக்கே திரும்பினார்கள். இது குறித்தெல்லாம் நம்மிடம் சரியான புள்ளிவிவரங்கள் இருக்கின்றனவா என்றால்  இல்லை என்று உதட்டைப் பிதுக்குகிறது நிர்வாகம்.

கட்டடப் பணியாளர் சட்டம் 1996 போன்ற சட்டங்களின் கீழ் எத்தனை பணியாளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்டால் சரியான பதில் அங்கும் இல்லை.
கடந்த முதல் அலை உச்சத்தின் போது சில மாநில அரசுகள் தற்காலிக நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டன. மாநிலம் விட்டு மாநிலம் வரும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதென முடிவானது. ஆனால், எந்த அரசிடமும் இது தொடர்பான சரியான டேட்டா பேஸ் இல்லாததால் நிஜமாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான உதவி போய்ச்சேரவில்லை. இதை எல்லாம் சிறப்பு நீதிமன்றமே சுட்டிக்காட்டிய பிறகும் எங்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.

கொரோனா வந்து ஒரு வருடம் கழித்து மிகத் தாமதமாக கடந்த மார்ச் மாதம்தான் இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் எண்ணிக்கையை கணிக்க சரியான டேட்டா பேஸ் செயல்பாடுகள் வளர்த்தெடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது. ஜூன் மாதத்துக்குள் இதனை முடிக்கச் சொல்லி உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியது. ஆனால், வேலை ஆமை வேகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் இந்திய அளவில் ஐந்து பெரும் கணக்கெடுப்புகளை முடுக்கிவிட்டிருக்கிறது. அனைத்திந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு, அனைத்திந்திய சொந்த மாநிலத் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு, நிபுணர்களால் மேற்கொள்ளப்படும் அனைத்திந்திய வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு, போக்குவரத்துத் துறையினரால் மேற்கொள்ளப்படும் அனைத்திந்திய கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு சர்வேவால் தீர்மானிக்கப்படும் அனைத்திந்திய தொழிலாளர்களின் காலாண்டு நிலவரம் போன்ற கணக்கெடுப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் எத்தனை பேர் என்பதை கிட்டத்தட்ட துல்லியமாகச் சொல்லிவிட முடியும் என நம்புகிறார்கள்.
இதற்கு முன்பு இந்த புள்ளிவிவரங்களில் இதுவரையான குறைபாடுகள் மற்றும் விடுபடல்கள் தொடர்பாக அரசுக்கு ஏதும் கவனம் இருக்கிறதா என்பது ஒரு முக்கியமான கேள்வி. அதை சீராக்காமல் இதன் அடிப் படையில் புதிய சர்வே அமைந்தால் அந்தக் குறைபாடு புதிய கணக்கெடுப்பையும் பாதிக்காதா என்று கேட்கிறார்கள் புள்ளியியல் நிபுணர்கள்.

உதாரணமாக, இப்படியான அமைப்புசாரா தொழிலாளர்களும் உதிரித் தொழிலாளர்களும் நமது உலகமயமாக்க பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பிறகு சேவைத் துறைகளில்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் உள்ள மிகப்பெரிய சேவை நிறுவனங்களில்கூட இந்தப் பணியாளர்கள் பற்றி விரிவான தகவல்கள் இல்லை. ஒப்பந்தத் தொழிலாளார்கள், நேரடிப் பணியாளர்கள் போன்ற எளிய பகுப்புகளே உள்ளன.

அதேசமயம், அமைப்புசாரா தொழிலாளர்களிலேயே பலவகையான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். சிலர் தற்காலிகமாக சில வேலைகள் செய்வார்கள், சிலர் வழக்கமாக ஒரே வேலையைச் செய்வார்கள். இவர்களை ஒரு புள்ளிவிவரத்தில் கொண்டு வருவது எளிய பணியன்று. ஒயிட் காலர் ஜாப் எனப்படும் அந்தஸ்து மிக்க தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் உற்பத்தி மற்றும் சேவைத் துறை இரண்டிலுமே இருக்கிறார்கள்.

நம்மிடம் வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள் பற்றி வேண்டுமானால் டேட்டா இருக்கலாம். ஆனால், கிளர்க்குகள், ஆசிரியர்கள், தொழில்நுட்பத் தொழிலாளர்கள் பற்றி உருப்படியான டேட்டா ஏதும் இல்லை என்பதே எதார்த்தம். தொகுத்துச் சொல்வதென்றால், நம்மிடம் நம்பத்தகுந்த, கால வர்த்தமான அடிப்படையிலான, தொடர்ச்சியான நன்கு தொகுக்கப்பட்ட தொழிலாளர் சந்தை தொடர்பான தகவல்கள் உருப்படியாக எதுவுமே இல்லை என்பதே உண்மை.

நம்நாட்டின் அபரிமிதமான வளமே மனித வளம்தான். உலகில் சீனாவைத் தவிர வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத மாபெரும் வளம் அது. ஆனால், நாம் அந்த மனித வளத்தைக் கையாள்வதில் எவ்வளவு மொக்கையாக இருக்கிறோம் என்று யோசித்தால் வருத்தமாக இருக்கிறது. நம்மிடம் எத்தனை தொழிலாளர்கள் உழைப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்ற அடிப்படைத் தகவல்கூட நம் அரசுகளிடம் இல்லை.

இனியாவது இதனை ஒரு தீவிரமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகள் இந்தத் தகவல்களைத்  திரட்டி உருப்படியான திட்டங்களை வகுத்தால் சரி. ஆமாம். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.   

இளங்கோ கிருஷ்ணன்