ஒற்றை திரையரங்கை தேடும் ஒளிப்பதிவாளர்! 32 ஆயிரம் கிமீ பயணம்...ரூ.20 லட்சம் செலவு...



ஒரு காலத்தில் பத்து ஊர்களுக்கு நடுவே ஒரு திரையரங்கு இருக்கும். அதுவும் ஒரு திரையுடன். இப்போது பெருநகரங்களில் தெருவுக்கு ஒரு திரையரங்கு இருக்கின்றது. அதுவும் மூன்று, நான்கு திரைகளுடன். கட்டை நாற்காலி, மணல் திட்டில் அமர்ந்து படம் பார்த்த காலம் மாறி, மக்களும் நவீன வசதிகளை நோக்கி நகர்வதால் பழங்காலத்தில் செயல்பட்ட திரையரங்குகள் எல்லாம் இடிக்கப்பட்டுவிட்டன அல்லது திருமண மண்டபங்களாகவோ, இன்னும் வேறு கட்டடங்களாகவோ மாறிவிட்டன. ஒருசில திரையரங்குகள் மட்டும் சிதிலமடைந்து காட்சிப் பொருளாகின.
இதுபோன்ற ஒற்றைத் திரை கொண்ட சிறிய பழங்காலத்து திரையரங்குகளைத் தேடி நாடு முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும், ஒளிப்பதிவாளருமான ஹேமந்த் சதுர்வேதி.  

“ஒரு திரை கொண்ட திரையரங்கின் உள்ளே நுழையும் போது பல நினைவுகள் என்னுள் ஊசலாடின. லாபி கார்டுகள் என்று அழைக்கப்படும் சிறிய திரைப்பட சுவரொட்டிகளின் குவியலைக் காண்கிறேன். திரையரங்கு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்ததும், திரையை ஒட்டிய சுவர்களில் ராமாயணம் சித்தரிக்கப்பட்ட பெரிய சுவரோவியங்கள் கண்டு வியந்தேன். இது நவீன மல்டிபிளெக்ஸ்களில் ஒரு போதும் பிரதிபலிக்க முடியாத ஒன்று.  அந்த தருணத்தில்தான் ஒற்றைத் திரை கொண்ட திரையரங்குகளைத் தேடும் தூண்டலும், அதை புகைப்படங்களாக ஆவணப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும் தோன்றியது...” என்கிறார் 53 வயதான ஹேமந்த்.

‘மக்தீ’ (2002), ‘மக்பூல்’ (2004) உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருக்கும் ஹேமந்த், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் என பல்வேறு மாநிலங்களுக்கு தனது ஜீப்பிலேயே 32 ஆயிரம் கி.மீ பயணித்து பழைய திரையரங்குகளை புகைப்படமாக ஆவணம் செய்து வருகிறார்.  மொத்த இந்தியாவில் 11 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ஹேமந்த், இதற்காக ரூ.20 லட்சம் செலவிட்டுள்ளார்.

“கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் மல்டிபிளெக்ஸ் போலல்லாமல் ஒவ்வொரு ஒற்றைத் திரை திரையரங்குகளும் தனித்துவமானது. எனவே பாரம்பரியத்தை இழக்காமல் இருக்க, இதை ஒரு நினைவாக உருவாக்கவும், அடுத்த தலைமுறைகளுக்கு காட்சி உரையாடலின் தளமாக இது இருக்கும் என்ற நம்பிக்கையிலும் ஆவணப்படுத்தி வருகிறேன்...” என்கிறார் ஹேமந்த் சதுர்வேதி.l

அன்னம் அரசு