உயிர்
எல்லா வேலைகளும் முடிந்தாயிற்று. மாலையில் பணிப்பெண்ணுக்கு ஒரு விசேடம் இருந்ததால் பிற்பகல் ஒரு மணிக்கே வந்து பாத்திரங்களைக் கழுவி, மிச்ச சொச்ச வேலைகளையும் முடித்துவிட்டாள். கொரோனா பாதிப்பினால், விஜயகுமார் ஆன்லைனில் படித்துக் கொண்டிருந்தான்.“சீக்கிரமே சாப்பிட்டிருக்கலாமில்லையா?” எரிச்சலான குரலில் கேட்டாள் மனோன்மணி. “என்னம்மா இது? பசிச்சாதானே சாப்பிட முடியும். வேலைக்காரிக்காக இப்பவே தட்டை வைக்கணும்னு பார்க்கறியே?” என்றான் அவன்.“போடா... உன்கூட பெரிய பாடு...” முணுமுணுத்தாள் மனோன்மணி.
 உள்ளபடிக்கே ஒரே பையனான விஜயகுமாரைப் பற்றி அவளுக்குக் கவலைதான்.மூத்த பெண் தில்லியில் படித்து அப்படியே அமெரிக்கா பறக்க வேண்டுமென்கிற முனைப்பிலிருக்கிறாள். அடுத்தவள் பவானி அகமதாபாத்தில் நாகரீக உடை டிசைன் சம்பந்தமான படிப்பு படிக்கிறாள். அவளுடன் படித்த ஓரிரு சினேகிதிகள் அந்த ஊர் வெப்பம் உடலுக்கு ஒத்துவரவில்லை என்று திரும்பி விட்டார்கள். நல்ல காலம், அவளுக்கு அது போல நேரவில்லை. ஈடுபாட்டுடன் படிக்கிறாள்.
மூத்தவளைப் போலில்லாமல், அவ்வப்போது குமாரைப் பற்றியும் விசாரிக்கிறாள்.“ரொம்ப கவலைப்படாதே! குமாருக்கு வளர்கிற வயசு, அப்படித்தானிருப்பான். நல்லாப் படிப்பான் பாரேன்...” என்று ஒரு முறை போனில் பேசிச் சமாதானப்படுத்தினாள்.நன்றாகப் படிக்கத்தானில்லை... பள்ளிக்கூடத்துக்குப் போனாலாவது, ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பு அன்றாடமிருக்கும். இப்போது இல்லத்திலேயே ஆன்லைன் வகுப்பு. என்ன படிக்கிறான்... எவ்வளவு மதிப்பெண்... ஆசிரியர்களின் கருத்து என்ன... ஒன்றும் தெரிவதில்லை. குமாரும் சொல்வதில்லை. கணவருக்கோ பிசினஸ், பிசினஸ் என்று நேரம் போகிறது.
“அம்மா!” என்று அழைத்தபடியே எதிரேவந்து நின்ற குமார், “கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கணும் போலிருக்கு. சைக்கிளிலேயே போயிட்டு வரேன்...” என்றான். மனோன்மணி நிமிர்ந்து நோக்கினாள். முழங்கால் வரை கால்சட்டை, பொருத்தமான டீ சர்ட். “சரி, ஜாக்கிரதையா போ. ஆமாம்... எங்கே மாஸ்க்?”“ஓ... மறந்து போச்சு...”சைக்கிளில் ஏறி விசிலடித்தபடியே விரைந்த பையனை, ஸிட் அவுட்டிலிருந்து மனோன்மணி பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
ஆறின டிகாக் ஷனில் சூடான பாலைக் கலந்து அளவான சர்க்கரை சேர்த்து காப்பியைக் குடித்தாள். துணைக்கு சில நாள் முன் வாங்கின தின்பண்டம்.
விஜயகுமார் வரக் காணோம். மனோன்மணி மெதுவாக இறங்கி வாசலில் வந்து தெருவை நோட்டமிட்டாள். அமைதியாக துப்புரவாக இருந்ததைப் பார்த்து அவளுக்குப் பெருமையாக இருந்தது.
ஏழெட்டு மாதம் முன் இப்படியா? தெரு நாய்களின் கூச்சல்கள், அசிங்கங்கள், விடலைப் பையன்களின் கல்லெறிதல்கள்... காலை நடைப்பயிற்சியில் தற்செயலாகப் பரிச்சயமான ஒரு கால்நடை டாக்டரைச் சந்தித்துப் பேசினாள். தள காரியதரிசியையும் கூட்டிப் போனாள்.
சில நாய்களுக்கு கருத்தடை ஊசியும், சிலவற்றைத் தனி இடத்திலும் வைக்க ஏற்பாடு செய்தாள். உயர்வகை நாய்களை வளர்க்கும் பெரிய மனிதர்களுக்கும் இதமாக அறிவுரை சொன்னாள்.
இவ்வளவு பொறுப்பாகச் செய்தும்... ஏனோ கணவருக்கு விருப்பமே இல்லை. “என்ன மனோ... வேண்டாததை இழுத்துப் போட்டுக் கொள்ற?”“என்ன பேசறிங்க நீங்க..? நாய்களும் மனுசங்க மாதிரிதானே... கல்லால் அடிக்கலாமா?”அப்போது கணவர் தன்னையே உற்றுப் பார்த்தது ஞாபகம் வந்தது. “ஹும்... அவர் சுபாவமே தனி” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், படிகளில் மெதுவாக ஏறி தளத்துக்கு வந்தாள். கதவைத் திறந்து நுழைந்தவுடனேயேதொலைபேசி அழைப்பு வரவேற்றது.“ஹலோ...” என்றது ஒரு பெண்குரல்மனோன்மணிக்குத் தெரிந்துவிட்டது.
“எப்படி இருக்கீங்க..? எனி இம்ப்ரூவ்மென்ட்..?”
“அதுக்குத்தான்மா கூப்பிட்டேன். நல்லா இருக்குது. விளையாடுது. அந்த எமிஸெட் நல்ல மருந்து. தாங்க்ஸ்...”“ஜாக்கிரதையா பார்த்துக்கோ...” என்று புத்திமதி சொல்லிவிட்டு போனை வைத்தாள். நீண்ட பெருமூச்சு விட்டாள். அந்த நாய் உயர்ரக வகையைச் சார்ந்தது. வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தது.
தளங்கள், தரையெல்லாம் அசிங்கமாகிவிட்டது. சரியாகப் பராமரிக்கவில்லை. மனோன்மணிதான் கவனித்து வெட்னரி மருத்துவ மையத்துக்குச் சென்று மருந்து வாங்கித் தந்து யோசனை சொல்லி...ம்ம்... எல்லா சந்தோஷங்களும் இந்தப் பிள்ளையால் கெட்டுவிடும் போலிருக்கிறதே... இத்தனைக்கும் குமாரிடம் ஒரு கெட்ட பழக்கம்... படிப்பதில் சிரத்தையில்லாமல் - எப்போதும் கண்ணாடி முன் நின்று கொண்டு அழகு பார்ப்பது, சில சமயம் கதவை மூடிக் கொண்டு...பவானி சொல்கிற மாதிரி வயசு படுத்துகிற பாடா?
யோசித்துக் கொண்டு அப்படியே தூங்கியவள்... கிணிங் கிணிங் என்று விடாது மணி ஓசை கேட்டவுடன்தான் எழுந்தாள். “வரேன்...” என்று இருந்த இடத்திலிருந்தே குரல் கொடுத்தாள். கலைந்திருந்த கேசத்தை ஒழுங்குபடுத்தினாள். திறந்தாள், திகைத்தாள்!“என்னடா விஜய்... யாரு இவங்க?” என்று பதற்றமான வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வந்தன.
போலீஸ்காரர் நிதானமாக “ஒண்ணுமில்லைங்க... ரொட்டீன் செக் அப் செய்வோம். அட்ரஸ் கேட்டோம்... பயந்து ஓடினார். அப்ப, சைக்கிளிலே இருந்து கீழே விழுந்து அடிபட்டது...” என்றார்.
மனோன்மணி பிள்ளையின் மருண்ட விழிகளையும், கால்சட்டையில் ஒட்டியிருந்த ரத்தத்தையும் கவனித்தாள். அவனிடம் கோபமாகப் பாய்ந்தாள்.
“ஒண்ணும் சொல்லாதீங்க அவரை...” என்று கூட வந்த பெண்மணி தடுத்தாள்.“நீ யாருடி?” கலவரத்தில் மரியாதை மறந்துவிட்டது.போலீஸ்காரர் பெண்மணியை அடக்கினார்.“இவங்களும் வந்து அவன்கிட்ட...” என்று தயங்கி, சமாதானமாக ஏதோ கூற முயன்றார்.“வந்துமாச்சு... போயுமாச்சு...” என்று மனோன்மணி அந்த போலீஸ்காரரிடமும், “நீ உள்ளே போய் டிரஸ்ஸை மாத்துடா...” என்று குமாரிடமும் சீறினாள்.
ஏற்கனவே அவனைப் பற்றி நிறைய கவலை. இப்போது புதிதாக இது வேறு. ஏதோ காவல்துறையினர் கேஸ் காட்ட வேண்டுமென்று, செய்திருப்பார்கள் என்று எண்ணினாள். அதனால்தானோ என்னவோ, கணவரிடம் சொல்லக்கூட மறந்துவிட்டது. கூடவே, சுழற்சங்கத்திலிருந்து ஒரு கூட்டத்தில் பேச அழைப்பு வேறு வந்ததா... மகிழ்ச்சியில் திளைத்தாள். சுற்றுப்புறச் சூழல்கள்தான் தலைப்பு.
வலைத்தளத்தில் பார்த்தாள்; தான், வசிக்கும் இடத்தில் கண்ட சம்பவங்களை நினைவு கூர்ந்தாள். கொஞ்சம் பேசி பழக்கமுண்டுதான். இருந்தாலும் கணவரிடம் யோசனை கேட்கலாமென்று தோன்றிற்று. வாட்ஸ் அப்பில் வந்த செய்தியைக் காட்டினாள்.“வாரியார் சொற்பொழிவைக் கேட்டிருக்கிறேன்.
‘வானரங்கள் செய்த சேவை, ஜடாயுவுக்கு அளித்த மரியாதை’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அதை கோட் பண்ணலாமா?”தர்மலிங்கம் மனைவியை வினோதமாக நோக்கினார். பிறகு ஏதோ சொல்ல வந்தார். மாற்றிக்கொண்டு “ரோட்டரியில் அது வேண்டாம். பொதுவாக என்விரான் பற்றியும், நாய் வளர்ப்பு பற்றியும் சொல்...” என்றார்.“ம்... சரி...” என்றாள்.
திடீரென “என்ன மனோ... போலீஸ் வந்தார்களாமே... குமார் கூட சொல்லவில்லை...” என்று கேட்டார்.“அது பெரிய விஷயமா என்ன?”அவர் ஒரு பெருமூச்சு விட்டார்.“குமார்...” என்று அழைத்தார். ஏதோ யோசித்தாற் போலிருந்தது.
“அவனை ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டிடம் காட்ட...”சொல்லி முடிப்பதற்குள், மனோன்மணி வேகமாகக் குறுக்கிட்டாள், “அவனுக்கு என்ன இப்ப? பைத்தியம்னே முடிவு செஞ்சிட்டிங்களா?”“என்ன மனோ! படிச்ச நீயே இப்படிப் பேசலாமா. விளையாடுறான், பாட்டில் இன்டரஸ்ட் இருக்கு. படிப்பில் கவனமில்லை. கான்ஸென்ட்ரேட் பண்றதுக்கு வழி கேட்கலாமே?”“மண்ணாங்கட்டி! டியூஷன் வைக்கலாம்...” என்றாள் மனோன்மணி. “சரி, ரோட்டரி கூட்டம் எப்போது..? என்னால வர முடியுமான்னு தெரியல...” என்று பேச்சை மாற்றினார்.சிரித்தாள். “அன்றைய கூட்டம் லேடீஸ் ஒன்லி...” “சரி சரி நல்லா தயார்பண்ணி பேசு...” என்று கூறி சரக்கென்று எழுந்து விட்டார் தர்மலிங்கம். மனம் ஏதோ தீவிர யோசனையில் இருப்பதை முகம் தெளிவாகக் காட்டியது. அன்று ஞாயிற்றுக்கிழமை. மனோன்மணியின் மனம் லேசாக இருந்தது.
மூன்று நாள் முன் சுழற்சங்கத்தில் நிகழ்ந்த கூட்டம், எதிர்பார்த்ததைவிட நன்றாகவே அமைந்தது. அவள் தன் அனுபவங்களை ஒருசில மேற்கோள்களுடன் சேர்த்துப் பேசியதை ரசித்தார்கள். தமிழ் அவ்வளவாகத் தெரியாத கேரளத்துக்காரர் பக்கத்து ஸீட்டுக்காரரைக் கேட்டுக் கேட்டு முகம் மலர்ந்தார்!போதாக்குறைக்கு, மாலையில் ஏதோ அதிசயமாக தர்மலிங்கம் மனோன்மணியோடு உட்கார்ந்து, கை பேசியில் வாரியார் சொற்பொழிவுகளை உன்னிப்பாகக் கேட்டது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
“வேடனோடு ஐவரானோம் என்ற இராமர், சாதாரண வானர சேனையை தன் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டாரே? தன்னந்தனியாக ராட்சசனை எதிர்த்துப் போராடிய ஜடாயுவுக்கு அந்திமக் கிரியை செய்தார்...” என்றெல்லாம் தமக்கே உரிய பாணியில் அவர் உரை ஒலித்ததைக் கேட்டு பரவசமானாள் மனோன்மணி.“பாருங்க... நானும் அதேபோலதானே நாய்களுக்கு உதவறேன்...”“கரெக்ட்...” என்றார் தர்மலிங்கம்.
எல்லாவற்றையும் மனத்துள் அசைபோட்டுக் கொண்டேயிருந்தாள். ஏதோ பாட்டுக் குரல் ஒலித்தது. எழுந்துபோய்ப் பார்த்தாள். விஜயகுமார்தான் பாடிக்கொண்டிருந்தான். பாரதியார் பாட்டை, யூ டீயூப்பில் கேட்டுக் கொண்டே.எவ்வளவு இனிமையாகப் பாடுகிறான்.
என்ன... படிப்பில் கொஞ்சம் சுமார். இதற்காகவெல்லாமா, சைக்கியாட்ரிஸ்ட்டிடம் காட்டுவார்கள்?
ஹாலில் அவன் கைபேசி ஒலித்தது. பாட்டை அணைத்துவிட்டு வெளியே வந்தான். பேசினான். “என் பழைய சினேகிதன் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கிறானாம்...” “இருடா... அப்பா வரட்டும். உன்னைப் பற்றி டிஸ்கஸ் பண்ணணும்னார்...”“இதோ வந்துடுவேன்...” என்று பதிலுக்குக் காத்திராது சென்றுவிட்டான்.
மனோன்மணி மேஜையில் சிதறிக்கிடந்த புத்தகங்களையும், செய்தித் தாள்களையும் அடுக்கிவைத்தாள். விஜயகுமார் அறையிலிருந்த மின்சார ஒயர்கள், இயர் போன் போன்றவற்றை ஒதுக்கினாள். ஏன் இவ்வளவு அவசரம் அவனுக்கு? அதுவும் நண்பனுக்காக? வாசற்கதவைச் சரியாக சாத்தாமல் போய்விட்டானோ? யோசித்தவளை “உள்ளே வர லாமா?” அழைப்பு மணி ஓசையும் கூடவே புதிய குரல்களும் கேட்டன.
மனோன்மணி திகைத்து எழுந்தாள். புதியவர்களில் ஒருத்தி - ஏற்கெனவே பார்த்தாற் போல்.“ஆமாம் மேடம். அன்னிக்கு போலீஸ்கூட வந்தவள்தான். நானும் போலீஸ்தான். ட்ரெயினிங்...”
“உங்க ஹஸ்பண்ட் எங்கே?” என்று புதியவர் கேட்டபோது பின்னாலேயே தர்மலிங்கத்தின் குரல் ஒலித்தது. அவசரமாக வந்தார். “ஸார் உட்காருங்கள்...” என்று அவர்களை இருக்கைகளில் அமர வைத்தார்.“இவர் சைக்கியாட்ரிஸ்ட். உன்னுடன் ஸாரி... நம்முடன் பேசணுமென்று வந்திருக்கிறார்கள்...” என்றவர், மற்றவரைப் பேசுமாறு கோரினார்.“என்ன... ஏன்...” மனோன்மணிக்கு தலை சுற்றியது. வார்த்தைகள் வரவில்லை. ஆனால், கேட்டுக் கொண்டேயிருந்தாள்.
விஜயகுமாருக்கு ஆணுக்கே உரிய பருவ மாறுதல் இல்லையாம். அன்றைக்கு போலீஸ் பிடித்தபோது, இந்த பெண்மணிதான் தொட்டுப் பார்த்து கண்டுபிடித்தாளாம். போலீஸ் அதிகாரி “ஏய், உன் பெயர் விஜயகுமாரா? விஜயகுமாரியா?” என்று கேட்டபோதுதான், பயந்து நடுங்கி வேகமாகச் சென்று விழுந்திருக்கிறான்.“இதை ரணசிகிச்சை மூலம் சரிப்படுத்தி விடலாமாம். ஆனால், நிறைய செலவு ஆகும். அதே சமயம் விஜயகுமாருக்கு மன உளைச்சலும், பாதிப்பும் அதிகம் எற்படும். இப்படியே விட்டுவிடுவதுதான் உசிதம்.
இந்தக் காலத்தில் இதுபோன்றவர்கள் முன்னுக்கு வருகிறார்கள். நர்த்தகி நடராஜ் ஒரு உதாரணம். வேறு ஒருவர் சமீபத்தில் ஜனாதிபதி பரிசு வாங்கியிருக்கிறார்...”அவர்கள் விடை பெற்றார்கள். போவதற்கு முன், தர்மலிங்கத்திடம் காதோடு “உங்க மனைவிக்கு தைரியம் சொல்லுங்கள்...” என்றார் டாக்டர் மெதுவாக. தர்மலிங்கம் மனைவியிடம் ‘‘எனக்கு லேசுபாசாக தெரியும்... ஆனாலும் டாக்டர் வந்து சொன்னால்தான்...’’ என்று கூறி நிறுத்தினார்.மனோன்மணிக்கு எல்லாம் புரிந்தாற்போலவும் இருந்தது. குழப்பமும் தோன்றிற்று. விஜயகுமார் அடிக்கடி கதவைச் சாத்திக்கொண்டு இருப்பது இதனால்தானோ? அதனால்தான் படிப்பில் கவனமில்லையோ? வேறொன்றும் உறுத்தியது. பிற உயிர்களிடம் நேசம் காட்ட வேண்டுமென்று, தான் கூறியபோதெல்லாம் கணவரின் பார்வை வினோதம்... இதற்குத்தானா?
“என்னங்க இது! என்னங்க...” என்று மட்டுமே திரும்பத் திரும்ப சொன்னாள். பிரமை பிடித்தவளானாள். வெளியே போயிருந்த விஜயகுமார் உள்ளே நுழைந்ததைக் கூட உணரவில்லை.
தர்மலிங்கம் மெதுவாக வந்து அவளருகில் உட்கார்ந்தார். முதுகை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தார். “யோசிச்சுப் பார் மனோ... இந்தப் பிள்ளைக்கு நாமதானே காரணம்?” ஒரு நிமிடம் தயக்கம். “சொல்லப்போனால் நீதான் காரணம்...”
அவள் இடிந்து போனாள். இரண்டு பெண்களுக்குப் பிறகு மூன்றாவதாக ஓர் ஆண் குழந்தை வேண்டுமென்று தீராத ஆசை கொண்டது ஞாபகம் வந்தது. ஓரிரு கருச்சிதைவு ஏற்பட்டு உடம்பு குலைந்தது. கேரள டாக்டரிடம் மருந்து உட்கொண்டு கிண்ணென்று உடல் மாறியது. எல்லாம் அடுக்கடுக்காக நினைவு வந்தது.ஒரு நாள் ஒய்யாரமான பார்வையுடன் அவருடன் ஹோட்டலில் தங்கியதும், பிறகு கர்ப்பமானதும், “களையாய் ஆம்பிளைக் குழந்தை பிறந்திருக்கான் பார்...” என்று நர்சம்மா சொன்னதும்... சட் சட்டென்று திரைப்படக் காட்சிகள் போல மனத்தில் வந்து வந்து போயின.
மனோன்மணி கணவரிடமிருந்து பார்வையை விலக்கினாள். எதிரே சுவரில் தெரிந்த மகனுடைய படத்தை உற்றுப் பார்த்தாள். களையான முகமுள்ள விஜயகுமார் இப்போது பயிர் நடுவில் முளைத்த வேண்டாத களையாக இருக்கலாம்தான். தங்கள் வம்சம் கயிறு போல தொடர்ச்சியாக வளருவதற்கு ஒரு தடையாகவும் இருக்கலாம்தான்.ஆனால், இவன், என் உதிரத்திலிருந்து வந்த உயிர். முகத்தை மூடிக் கொண்டு ஹோவென்று கதறினாள். தலையிலடித்துக்கொண்டு அழுதாள். கண்ணீர் முற்றிலுமாகத் தீரட்டும் என்று தர்மலிங்கம் பொறுமையாகக் காத்திருந்தார்.
விஜயகுமார் இரவு சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றான்.இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கணவன், மனைவி இரண்டு பேரும், மூன்றாம் பாலினம் பற்றி வலைத்தளத்தில் தேடித்தேடி தகவல்கள் சேகரித்த பிறகுதான் - அவர்களுக்கு தூக்கமே வந்தது.
-வாதூலன்
|