12.05 pm முதல் 3.00 pm வரை மட்டும்... 68 ஆண்டுகளாக கோவையைக் கலக்கும் சர்பத் கடை



கோடை காலம் வந்துவிட்டால் தெருவுக்குத் தெரு; மூலைக்கு மூலை சர்பத் உள்ளிட்ட குளிர்பானக் கடைகள் முளைப்பதும், வெயில் முடிந்ததும் அந்தக் கடைகள் மூட்டையைக் கட்டி விடுவதையும்தான் நாம் அன்றாடம் கவனித்திருக்கிறோம். ஆனால், கோவை நகரில் படு பிஸியான டவுன்ஹால் அஞ்சு முக்கு ராஜவீதியில் ஒரு சின்ன சர்பத் கடை 68 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதுவும் எப்படி? மதியம் 12.05 மணிக்கு திறந்து சரியாக இரண்டு அல்லது மூன்று மணிநேரத்தில் சரக்கெல்லாம் தீர்ந்து கடையை மூடி விடுகிறார்கள். இந்த நேரத்தில் கூட்டம் அலைமோதுகிறது. சில சமயங்களில் மக்கள் வரிசையில் நின்று சர்பத் வாங்கிக் குடிக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாக இல்லை..?திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா எப்படி பிரபலமோ, அது போல இந்த அஞ்சுமுக்கு சர்பத் கடை கோவையில் ரொம்ப ஃபேமஸ்.

கோவையில் பிரபலப்பட்ட அஞ்சு முக்கு சாலையிலிருந்து கிழக்கு நோக்கி இறங்கும் ராஜவீதியின் வலப்புறமும் இடப்புறமும் வரிசையாய் ரப்பர் ஸ்டாம்பு, ஸ்டேஷனரி, ஜவுளி மற்றும் பாத்திரக் கடைகள் நூற்றுக்கணக்கில் நிறைந்திருக்கின்றன. மொட் டை வெயில் நேரத்தில் இந்தக் கடைகளில் ஆங்காங்கே மட்டும் மக்கள் நிழலுக்கு நிற்கிறார்கள். மற்றபடி எங்கும் எதிலும் கூட்டம் இல்லை. ஆனால், வலதுபக்கம் ஐந்தாவதாக இருக்கும் சந்து போன்ற சிறுகடையில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் கூடி நிற்கிறார்கள்.
 
சந்துக்கடையின் முகப்பில் ஒரு பெரிய பெட்டி. அதன் மீது குளிர்பானத்திற்குத் தேவையான ரோஸ்மில்க், மாங்கோ மில்க், நன்னாரி சர்பத் போடுவதற்கான எசென்ஸ் பாட்டில்கள். அந்த பாட்டில்கள் அடுக்கப்பட்டிருக்கும் பெரிய மரப்பெட்டிக்குக் கீழே ஏழு வெண் குதிரைகள் பாய்ந்து வரும் ஓவியத்துடன் ‘Since 1954’ என்பது பொடி எழுத்துக்களிலும், ‘Cauvery ICE காவேரி ஐஸ்’ என்பது ஆங்கிலத்திலும், தமிழிலும் கொட்டை எழுத்துக்களிலும் எழுதப்பட்டுள்ளன.

கடையின் சுவர்களில் ‘காவேரி ஐஸ் வேலை நேரம்: மதியம் 12.05 மணிமுதல் மாலை 03.00 மணி வரை. ஞாயிறு விடுமுறை’ என்றும்; ‘சோடா சர்பத் ரூ.20, சோடா சால்ட்: ரூ.20, ரோஸ் மில்க் ரூ.20, நன்னாரி பாட்டில் ரூ.100, ரோஸ்மில்க் பாட்டில் ரூ.100, மேங்கோ மில்க் பாட்டில் ரூ.100’ என்றும் எழுதப்பட்ட போர்டுகள்.

‘‘எனக்கு நன்னாரி மூணு. ரோஸ்மில்க் ரெண்டு!’’
‘‘எங்களுக்கு ரோஸ் மில்க் அஞ்சு!’’
‘‘மாங்கோ மில்க் பாட்டில் பத்து எனக்கு கொடுங்க... அவ
சரம்... பஸ் வந்துடும்!’’

கசகசவென்று குரல்கள். அந்தக் குரல்களுக்குரியவருக்கு ஏற்ப அந்த சந்துக் கடையில் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ஒரு பெரியவர். அவருக்குப் பின்னே ஒரு பெண் - அவர் மனைவி பாட்டில்களை எடுப்பதும், முன்னே வைப்பதும், பால்கேனில் பாலை ஊற்றி எடுத்துத் தருவதுமாக இருக்கிறார். பெரியவர் கண்ணாடி டம்ளரை எடுக்கிறார். சிகப்பு நிற எசென்ஸ் பாட்டிலின் மூடியைத் திறந்து அதிலுள்ள எசென்ஸை சரிக்கிறார். டம்ளர்களில் ஐந்தில் ஒரு பகுதி எசென்ஸ் விட்ட பிறகு பால்கேனை எடுத்து அதிலிருந்து பாலை அனைத்து டம்ளர்களிலும் விடுகிறார்.

டம்ளரில் இருந்த சிகப்பு நிற எசென்ஸ் அப்படியே ரோஸ் வண்ணமாக மாறி டம்ளரில் நிரம்புகிறது. ‘ஐஸ் வேண்டுமா? வேண்டாமா?’ என்ற கேள்வி
யுடன் ஐஸ் வேண்டும் என்றவர்களுக்கு ஐஸ்கட்டியை உடைத்து ஒரு பாலிதீன் பையில் போடுகிறார். அதற்குள் டம்ளர் ரோஸ் மில்க்கை சரிக்கிறார். அதை ஒரு கலக்குக் கலக்கி, ஸ்டிரா வைத்து கேட்டவர்களுக்கு எல்லாம் தருகிறார். இதே முறையில் நன்னாரி, மாங்கோ மில்க், சோடா சர்பத் தூள் பறக்கிறது.

சோடா சர்பத்தைப் பொறுத்தவரை அந்த சந்துக்கடைக்குள் இருக்கும் சிறிய இடத்தின் ஒரு பகுதியிலேயே கேஸ் சிலிண்டர் இருக்கிறது. அதில் இன்ஸ்டன்ட் சோடா தயாரித்து கூல் டிரிங்க்ஸில் கலக்குகிறார். அவர் ஐஸ் சர்பத் தயாரிக்கும் முறையைப் பார்த்தாலே ஒன்றுக்கு ரெண்டு சர்பத், ரெண்டு ரோஸ்மில்க் சாப்பிட வேண்டும் போல் ஆசை எழுகிறது.
ஆனால், பத்திரிகை / டிவியில் இருந்து வருபவர்களை மதியம் 2 மணிக்கு மேல் வரச் சொல்கிறார். காரணம், அவருக்கு பேசுவதற்கு நேரமில்லை. ‘‘நீங்களே பார்க்கறீங்கல்ல? இப்ப பேசற மாதிரியா இருக்கு?’’ என்கிறார்.

அந்த அளவுக்குக் கூட்டம். பத்து பேருக்கு இவர் கூல் டிரிங்க் கொடுப்பதற்குள், இருபது பேர் புதிதாக வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு சப்ளை செய்து மீள்வதற்குள் மீண்டும் பதினைந்து பேர் நிற்கிறார்கள். கடையில் பெரியவரும், அவர் மனைவியும் மட்டுமே, முதலாளிகள்.சரியாக இரண்டரை மணிக்கு சென்றபோதும் கடையில் கூட்டம். ஆனால், பாட்டில்கள் காலியாகி விட்டன. ‘‘பால் தீர்ந்துடுச்சு. இனி ஒரே ஒரு ரோஸ் மில்க்தான் இருக்கு!’’ என்கிறார்.‘‘அதை இங்கே கொடுங்க, இங்கே கொடுங்க!’’ தேங்கி நின்றவர்களிடம் குரல்கள்.

‘நான் யாருக்குன்னு கொடுப்பேன்!’’ என சிரித்துவிட்டு ஒரு இளைஞருக்கு தருகிறார். கடை வியாபாரம் முடிந்தது. சரியாக 2.35 மணி.‘‘இப்படி 2.30 மணி,  இரண்டே முக்காலுக்கே சரக்கு முடியறது இந்த மாதிரி வெயில் காலத்தில் மட்டும்தான். சாதாரண நாட்களில்  3 மணி வரை இருக்கும். அந்த நாட்களில் போடுவது மாதிரி இப்ப ரெண்டு மடங்கு எசென்ஸ் போட வேண்டியிருக்கு!’’ என்றபடியே பேச ஆரம்பித்தார்.  

‘‘என் பேரு ரமேஷ். இந்த இடத்துக்கு வந்து 22 வருஷங்கள் ஆகிப்போச்சு. அதா அந்தக் கார்னர்ல எங்க மாமனார் 1958ல் கடை போட்டு நடத்தினார். அது நல்லா போச்சு. ரொம்ப ஃபேமஸ் ஆகிடுச்சு. நான் வெளியில எலக்ட்ரிக் கடைக்கு வேலைக்குப் போயிட்டிருந்தேன். கடைசியா என் மாமனார் தன் தொழிலை எனக்கு சொல்லிக் கொடுத்தார். இந்த சர்பத் எசென்ஸ் போடறது எப்படி... ரோஸ் மில்க் தயாரிக்க என்ன செய்யணும்... இப்படி எல்லாமே நானும் கத்துக்கிட்டு இந்த கடைய நடத்த ஆரம்பிச்சேன்.

எப்பவும் ரோஸ் மில்க்கோட இந்த நாலு வகையான சர்பத் மட்டும்தான். ஒரு தடவை வந்தவங்க மறுபடி என் கடைக்கு வராம இருக்கமாட்டாங்க. அப்படி நாற்பது, அம்பது வருஷங்களா தொடர்ந்து வந்துகிட்டிருக்கிற கஸ்டமர்ஸ் உண்டு.

இந்த மூணு மணிநேரம் கஸ்டமர்ஸுக்கு வேண்டியதைக் கொடுப்பதற்கே நான் வீட்டில் அதிகாலை 4 மணியிலிருந்து உழைக்கணும். சர்க்கரை காய்ச்சி, வடிகட்டி, ஊற்றி... நிறைய வேலை. தரமான பக்குவத்தில் சர்பத், ரோஸ் மில்க் எசென்ஸ் தயாரிக்கணும். வேண்டிய அளவு பால் வாங்கி காய்ச்சி குளிர்விச்சு வைக்கணும்.

அதேபோல மூணு மணிக்கு மேல இந்தப் பொருள்களை எல்லாம் ஒழுங்குபடுத்தணும், கழுவணும், எடுக்கணும். மார்க்கெட்ல பொருட்கள் வாங்கிட்டு வரணும். காலையில நாலு மணிக்கு வேலையை ஆரம்பிச்சா முடிய ராத்திரி பதினோரு மணி ஆயிரும். அதுக்குப் பிறகுதான் நானும் என் மனைவியும் தூங்கப் போவோம்.

இதே சர்பத், ரோஸ்மில்க் போடறதுன்னா மத்தவங்க ரூ. 30, ரூ.40ன்னு வாங்குவாங்க. நான் அப்படியில்லை. இதை எங்களுக்கு சம்பளம் மட்டும் கிடைக்கிற அளவே விலை வைக்கிறேன். ஒரே தரத்தை மெயின்டெயின் பண்றேன். அதனாலதான் வந்த கஸ்டமர்கள் தொடர்ந்து வந்துட்டிருக்காங்க. அதுக்கு மேல புது கஸ்டமர்களும் பெருகிக்கிட்டே இருக்காங்க.
இப்ப எங்கிட்ட விற்கிற எசென்ஸ் பாட்டிலுக்கு (சர்பத், ரோஸ் மில்க் வீட்டில் போடுவதற்கான சர்க்கரைப் பாகு) கணக்கே இல்லை. ஒரு பாட்டில் நூறு ரூபாய். பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர்லயிருந்தெல்லாம் வந்து வாங்கிட்டுப் போறாங்க.

ஆறு மாசத்துக்கு அப்படியே வச்சிருக்கலாம். கெடவே கெடாது. இதுவரைக்கும் எந்த புகாரும் வந்ததில்லை!’’ என்றவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை கடையை நடத்திக் கொண்டிருந்தாராம். இப்போது அப்படி முடிவதில்லை. ‘‘வயசு குறைஞ்சுட்டே இருக்குல்ல சார். அதுதான் வேலை நேரத்தை இப்படி மாத்திட்டேன்!’’ என்று கிண்டலாக சொல்லி சிரிக்கிறார்.கடைக்கு வந்திருந்த கஸ்டமர்கள் சிலரிடம் பேசினோம்.

கஜலட்சுமி என்பவர் பேசும்போது, ‘‘20 வருஷமா இவர்கிட்ட சர்பத் வாங்குறேன். இவங்க மட்டும்தான் பழைய காலத்து ஸ்டைல்ல சர்பத் போடறவங்க. நல்ல டேஸ்ட்டும், சுத்தமும் இருக்கும். அதுதான் தொடர்ந்து வர்றோம். இவர்கிட்ட சர்பத் வாங்கி வாங்கியே இவங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி நாங்க ஆயிட்டோம்!’’ என்றார்.

கருப்பையா என்பவர், ‘‘எதிர்ல இருக்கற பாத்திரக்கடைல வேலை செய்யறவங்க எல்லாம் மதியம் இந்தக் கடை சர்பத் குடிக்காம இருக்க மாட்டாங்க. அங்கே கடைக்கு வர்ற கஸ்டமர்ஸுக்கும் இங்கேதான் சர்பத். ஒரு நாளைக்கு நாங்க மட்டும் நூறு சர்பத்தாவது வாங்கிடுவோம்!’’ என்றார். சர்பத் குடிக்கவே வேண்டாம். கேட்கவே ரொம்ப குளிர்ச்சியா இருக்கு இல்லை? கோயமுத்தூர்க்காரங்க சிறுவாணித் தண்ணிக்கு மட்டுமல்ல, நல்ல சர்பத்துக்கும் கொடுத்து வச்சவங்கதான்.

கா.சு.வேலாயுதன்