கிங் கோப்ரா சாக்லேட்!



சுவிட்சர்லாந்து சாக்லேட்டுகளையும், பிரெஞ்சு இனிப்பு வகைகளையும் சமைப்பதில் கைதேர்ந்த சமையல் கலைஞர் அமௌரி குய்சோன். விதவிதமான வடிவங்களில் சாக்லேட்டுகளையும், இனிப்பு வகைகளையும் சமைப்பதை வீடியோவாக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது இவரது வழக்கம்.
இப்படி இவர் சமைக்கும் பண்டங்கள் லட்சக்கணக்கில் விலை போகிறது. மட்டுமல்ல, இவரது கலை நேர்த்தியான சமையலை ரசிப்பதற்காகவே இன்ஸ்டாவில் 73 லட்சம் பேர் அமௌரியைப் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட சமையல் கலைஞர்களில் இவரும் ஒருவர்.

சமீபத்தில் ராஜ நாக வடிவிலான ஒரு சாக்லேட்டை சமைத்து அசத்தியிருக்கிறார் அமௌரி. இந்த சாக்லேட்டைத் தயாரிப்பதற்கு எட்டு மணி நேரம் ஆகியிருக்கிறது.

அச்சு அசல் ராஜ நாகத்தைப் போல இருக்கும் இந்த சாக்லேட்டின் செய்முறையை சினிமா டீசர் போல வீடியோவாக்கி இன்ஸ்டாவில் தட்டிவிட்டிருக்கிறார் அமௌரி. அந்த வீடியோவைப் பதிவிட்ட 16 மணி நேரத்திலேயே 45 லட்சம் பேர் பார்வையிட்டு வைரலாக்கிவிட்டனர். இந்த கிங் கோப்ரா சாக்லேட்டைத் தன்வசமாக்க எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு ரசிகர்கள் வேறு காத்திருக்கின்றனர்.

த.சக்திவேல்