உயரமான குடும்பம்



‘உலகின் உயரமான குடும்பம்’ என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறது ‘டிராப்’ குடும்பம். அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாணத்தில் வசித்து வருகிறது இக்குடும்பம். அப்பா ஸ்காட், அம்மா கிரிஸ்ஸி மற்றும் மூன்று பிள்ளைகள் சாவன்னா, மோலி, ஆடம் என்று ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இக்குடும்பத்தினரின் சராசரி உயரம் 203.29 செ.மீ. அதாவது 6 அடி, 8.03 அங்குலம்!டிராப் குடும்பத்தின் இளையவரான ஆடம்தான் அதிக உயரமானவர். ஆம்; அவரது உயரம் 7 அடி 3 அங்குலம். அம்மா கிரிஸ்ஸி 6 அடி 3 அங்குல உயரத்துடன் டிராப் குடும்பத்திலேயே உயரம் குறைவானவராகத் திகழ்கிறார்.

குடும்பத்திலுள்ள அனைவரும் வெவ்வேறு விதமான விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தனர். இப்போது பிள்ளைகள் மூன்று பேரும் கைப்பந்து மற்றும் கூடைப்பந்தில் கெட்டிக்காரர்களாக இருக்கின்றனர். உயரமானவர்கள், உயரமான குடும்பம் என்று பெருமைகள் இருந்தாலும் சில சிரமங்களும் இருக்கவே செய்கின்றன. ஆம்; அவர்களின் உயர அளவுக்கு ஏற்ற ஆடைகளும், காலணிகளும் கிடைப்பது அரிதாகவே இருக்கிறதாம்.

த.சக்திவேல்