திமுக அரசின் ஓராண்டு TOP 10 சாதனைகள்!



கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி திமுக தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்தது. அப்போது கொரோனா இரண்டாம் அலை எவ்வளவு கொடூரமாக இருந்தது என்பதை நாம் எல்லோருமே அறிவோம். அந்த இக்கட்டான காலகட்டத்தில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கைகளிலிருந்து தொடங்குகிறது திமுக அரசின் ஓராண்டு சாதனைப் பட்டியல்.
ஒவ்வொரு துறையிலும் தனித்துவமான முத்திரைகளைப் பதித்து பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது இந்தத் திராவிட மாடல் அரசு. அதிலொரு பத்து சாதனைகள் மட்டும் இங்கே…  ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற அதேநாளில் ஐந்து முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில் முக்கியமானது அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் தலா 4000 ரூபாயும், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பும், பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யும் உரிமையும், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ நிகழ்ச்சியில் பெற்ற மனுக்களை கவனிக்க தனித் துறையும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணையும் அடங்கும்.

மகளிருக்கு இலவசப் பயணம்

இதில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பது திமுக அரசின் சாதனைகளில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. இந்த அறிவிப்பு, அன்றாடம் நகரப் பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணின் கண்களிலும் அத்தனை மலர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவிகள் தொடங்கி கூலி வேலைக்குச் செல்லும் சாதாரண பெண்கள் வரை அனைவரும் இந்தத் திட்டத்தைப் பாராட்டி வரவேற்றனர். இதன்மூலம், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவான ரூ.1,200 கோடியை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும் என தெரிவிக்கப்பட்டது.

இத்துடன் நிற்காமல், மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் இலவசமாகப் பயணிக்கலாம் என்கிற உத்தரவு இன்னும் பலரின் பாராட்டுகளைத் தமிழக அரசுக்குப் பெற்றுத்
தந்தது.

இல்லம் தேடிக் கல்வி

கல்வியில் திமுக அரசின் மகத்தான திட்டமாகப் பார்க்கப்படுவது இல்லம் தேடிக் கல்வி திட்டம். கொரோனா லாக்டவுனால் பள்ளிகள் செயல்படாத காரணத்தால் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி மாலை 5 மணி முதல் 7 மணி வரை பள்ளி முடிந்தபிறகு மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் தன்னார்வலர்கள் வகுப்புகள் எடுப்பார்கள். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் இத்திட்டம் இப்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மாணவிகளுக்கு 1000 ரூபாய்

அரசுப் பள்ளியில் படித்த மாணவ - மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் தொழிற்படிப்புகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடும், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்பதும், அரசுப் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்குச் செல்லும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு என இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை அரசு மாதம் 1000 ரூபாய் வழங்கும் என்பதும் எளிய பெற்றோரிடையே பெரும் ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இது திமுக அரசின் சிறந்த சாதனைகளுள் ஒன்று என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

நான் முதல்வன் திட்டம்

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இந்தத் திட்டத்தைத்  தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் முக்கிய நோக்கமே ஆண்டுக்கு பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பிலும், அறிவிலும், சிந்தனையிலும், ஆற்றலிலும், திறமையிலும் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.

அதுமட்டுமல்ல. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது.
அதாவது இதன்மூலம் அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என வழிகாட்டப்படும். இதனுடன் தமிழில் தனித்திறன் பெற சிறப்புப் பயிற்சியும், ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.

இதுதவிர மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரிகம், மக்களோடு பழகுதல் ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிரகாசமான திட்டம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

முதலீட்டில் முதலிடம்

கடந்த ஓராண்டில் இந்தியாவில் தொழில் முதலீடுகளுக்கு சிறந்த மாநிலம் என பெயரெடுத்துள்ளது தமிழ்நாடு. இதை ‘ப்ராஜெக்ட்ஸ் டுடே’ என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் இந்திய மாநிலங்களிலேயே மிக அதிகமாக, தமிழகத்தில் மட்டும் 304 திட்டங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 902 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் இவ்வளவு முதலீடு என்பதுதான் தொழிற்துறையில் திமுக அரசின் மிகப்பெரிய சாதனை எனப்படுகிறது. இதற்குக் காரணம் சிறப்பான கொள்கைகளும், பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்கும் அணுகுமுறைகளும், முடிவுகளை விரைவாக எடுப்பதுமே ஆகும் என நிறுவனங்கள் கூறியிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.  

சமீபத்தில் சட்டசபையில் நடந்த தொழிற்துறை மானியக் கோரிக்கையின்போதுகூட தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 25 முக்கிய அறிவிப்பு களை வெளியிட்டார்.
அதில் 1800 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 3000 ஏக்கர் பரப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைத்தல், தஞ்சாவூர் மற்றும் உதகமண்டலத்தில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இதனால் வருங்காலங்களில் இன்னும் பல்வேறு உயரங்களைத் தொழிற்துறை எட்டும் என கணிக்கின்றனர் நிபுணர்கள்.

விவசாயத்துக்கு தனி பட்ஜெட்

தமிழக ஆட்சி வரலாற்றில் முதன்முதலாக வேளாண்மைக்கு என ஒரு தனி பட்ஜெட் கொண்டு வந்தது இப்போதைய திமுக அரசுதான். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு ஏற்ற பட்ஜெட்டை வழங்கி பாராட்டைப் பெற்றிருக்கிறது. வேளாண் உட்கட்டமைப்பு, உற்பத்தி, விளைபொருட்களுக்கு ஏற்ற விலை என அனைத்திலும் முன்னுதாரணமாக விளங்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

இத்துடன் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதிக எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்கியதும் இதுவே முதல்முறை.

தவிர இயற்கை விவசாயத்திற்கும் சிறுதானியங்கள் உற்பத்திக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அரசாகத் திகழ்கிறது. ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் இயற்கை வேளாண்  விவசாயிகள்.

மக்களைத் தேடி மருத்துவம்

மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்குவதும், தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதுவும் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதன்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல், இயன்முறை மருத்துவ சேவைகள் செய்தல், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.அனைவருக்கும் நலவாழ்வு என்ற உயரிய இலக்கை அடைய செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசின் அற்புதமான திட்டம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

இந்து சமய அறநிலையத்துறை, முதல்வர் ஸ்டாலின் கண்காணிப்பிலும் உத்தரவின்படியும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதில் கோயில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றியது முக்கியமான ஒன்று. தவிர, 1689 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 58 அர்ச்சகர்கள் நியமித்தது, அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது என இந்தத் துறையில் பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன. குறிப்பாக, துறை சார்ந்த செயல்பாடுகள் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடும் உத்தரவால் பெரிதும் பாராட்டப்படுகிறது.

நரிக்குறவர், இருளர் மக்கள் நலன்

மாமல்லபுரத்தில் கோயில் விழாவில் சாப்பிட வந்தபோது கேள்வி எழுப்பிய நரிக்குறவர் பெண்மணி அஸ்வினி, தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என வேதனை தெரிவித்தார்.

இதனையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் சமூக மக்கள் 282 பேருக்கு 4 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் வீட்டுமனைப் பட்டா, ரேஷன் அட்டை, வாக்­கா­ளர் அடை­யாள அட்டை, சாதிச் சான்­றி­தழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குடி­நீர், மின்­சா­ரம், சாலை வச­தி­களை ஏற்­ப­டுத்தித் தரு­வ­தா­க­வும் உறுதியளித்­தார்.

அஸ்வினியின் வீட்டிற்கே சென்றது அம்மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சமூக நீதியை நிலைநாட்ட பட்டியலின, பழங்குடி மக்களின் கல்விக்கும் முன்னேற்றத்துக்கும் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றவர், அதற்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். தங்களின் குரலுக்கு செவிசாய்க்கும் அரசாக இருப்பதாக பெருமையுடன் சொல்கின்றனர் நரிக்குறவர், இருளர் இன மக்கள்.

வேலை வாய்ப்பு

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதே அரசின் இலக்கு என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு.

கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 36 பெரிய வேலைவாய்ப்பு முகாம்களும், 297 சிறிய வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 41 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், 513 பேர் மாற்றுத்திறனாளிகள்.

தொகுப்பு: பி.கே