முடி தானம் செய்த 13 வயது சிறுவன்!



சென்னை வானகரத்தைச் சேர்ந்த சத்யநாராயணன், ஸ்ரீஜா தம்பதியரின் மகன் யதுகிருஷ்ணன். எட்டாவது படிக்கும் 13 வயது சிறுவன். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இச்சிறுவன், கொரோனா லாக்டவுன் போது பார்த்த வீடியோவால் கேன்சர் நோயாளிகளுக்கு முடி தானம் செய்ய முடிவெடுத்தார். அப்போது யதுகிருஷ்ணனுக்கு வயது பத்து. இப்போது அந்த எண்ணமே அவரை பாராட்டும்படி செய்திருக்கிறது.  

‘‘ரெண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி கொரோனா வந்தப்ப நிறைய வீடியோக்கள் பார்த்தேன். அதுல ஒரு பெண் முடி இல்லாமல் இருப்பதை கவனிச்சேன். உடனே, அம்மா ஸ்ரீஜாகிட்ட ஏன் இப்படி இருக்காங்கனு கேட்டேன். அப்ப அம்மா, ‘கேன்சர் வந்ததால் கீமோதெரபி ட்ரீட்மெண்ட் எடுக்கும்போது முடி உதிர்ந்திடும்’னு சொன்னாங்க. அவங்கள பார்க்க ரொம்ப பாவமா இருந்தது. உடனே நான், ‘திரும்பவும் முடி வளர்ந்திடுமா’னு கேட்டேன். அப்ப அம்மா, ‘அதுக்கு ரொம்ப காலம் பிடிக்கும். ஆனா, விக் செய்து வைச்சுக்கலாம்’னு சொன்னாங்க.

பிறகு, ‘விக் எப்படி செய்வாங்க’னு கேட்டேன். அதுக்கு முடி தானம் கொடுக்கணும்னு சொன்னாங்க. முடி தானம் பண்றது எப்படினு நெட்ல தேடினேன். அதுல 36 செமீ நீளம் இருந்தால் முடி தானம் கொடுக்கலாம்னு இருந்தது. நம்மால் முடிஞ்ச உதவிகளைச் செய்யலாம்னு தோணுச்சு. முடி வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்...’’ எனச் சிரித்தபடி சொல்லும் யது கிருஷ்ணன், இதற்காக இரண்டு ஆண்டுகள் முடியை வளர்த்திருக்கிறார்.

‘‘இந்த முடி வளர்க்கிறதால பல பிரச்னைகளையும் சந்திச்சேன். அதுல முக்கியமா பலரும் என்னை பொண்ணுனு நினைச்சே பேசுவாங்க. அதைவிட நண்பர்கள் எல்லாம் திருநங்கைனு கிண்டல் செய்தாங்க. ஒருமுறை ஹம்பி போயிருந்தப்ப செருப்புக்கடைக்கு போனேன். அந்தக் கடைக்காரர் என்னை பொண்ணுனு நினைச்சு லேடீஸ் செருப்புகளை எடுத்துக் காட்டினார். நம் மெட்ரோ ரயில்நிலையத்துக்கு போனப்ப செக் பண்ணும்போது என்னை லேடீஸ் ஸ்கேனர்ல ஏறச்சொன்னாங்க.

இப்ப என்னுடைய சேவை பற்றி பள்ளியில் எல்லோருக்கும் தெரியும். ஆசிரியர்கள் உள்பட நண்பர்களும் நிறைய சப்போர்ட் செய்றாங்க. ஆனா, பள்ளி ரூல்படி இப்படி தலைமுடியை வளர்க்கக்கூடாது. அதனால, நான் தலைமையாசிரியரிடம் கட் பண்ணாமல் பள்ளிக்கு வரமாட்டேன்னு சொல்லி, தேர்வுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வாங்கி எழுதினேன்.
இப்ப 36 செமீ மேலயே வளர்ந்திடுச்சு. சீக்கிரம் முடி தானம் கொடுத்திட்டு பள்ளிக்குப் போவேன்...’’ என்கிறார் யதுகிருஷ்ணன்.                      
 

பேராச்சி கண்ணன்