அரண்மனை குடும்பம்-17



காலை வளைத்துக் கொண்ட நிலையில், காலில் ஒரு போடுபோட்ட அந்த நாகம் ஒரு கட்டத்தில் நழுவி விழுந்திட, சதீஷ் காலை உதறிக் கொண்டு ஓடிப்போய் சாலையோரமாகக் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்மேல் உட்கார்ந்தான்.முற்றுமாய் தோன்றிய அந்த மாலை நேர முடிவிலான இருளில் அவனைக் கடித்த கருநாகமும் எங்கோ ஓடி மறைந்து விட்டிருந்தது.
போதிமுத்து நடந்ததை உணர முடியாதவனாக சதீஷ் அருகில் வந்து “என்னாச்சு சார்... இருட்டுல எனக்கு எதுவும் தெரியல...” என்றான்.“மண்ணாங்கட்டி... இப்படியா பாம்புப் பெட்டியை நழுவ உடுவே..? அது காலை கடிச்சிடிச்சிய்யா..” என்று அலறினான் சதீஷ்.“அய்யோடா... எங்க காட்டுங்க..?” என்ற போதிமுத்து வேகமாகக் குனிந்தான்.
“வலது காலா..? இடது காலுங்களா..?”

“இடதுகால்...” என்றபடியே பேண்ட்டை மேலே தூக்கினான் சதீஷ். அப்போதே உடம்பிலும் ஒரு விறுவிறுப்பு தென்படத் தொடங்கி விட்டது. இருளில் எதுவும் தெரியாத நிலையில் போதிமுத்து தன்வசம் இருந்த தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சியை உரசி வெளிச்சத்தை ஏற்படுத்திப் பார்த்ததில், கணுக்காலில் இரு ரத்தப் பொட்டுப்புள்ளிகள் தெரிந்து அவன் விழிகளை விரியச் செய்தன.“சார்... நல்லாவே போட்ருச்சு சார்... நீங்க காரை வேகமா வளைக்கவும் பெட்டி மூட்டை சரிஞ்சி உழுந்ததுல இப்படி ஆகிப் போச்சு சார்... கொஞ்சம் இருங்க... நான் ஒரு வேர் தரேன். அதை வாய்ல கடிச்சு நல்லா மென்னு எச்சில விழுங்குங்க.

அப்படியே வேகமா அரசாங்க ஆஸ்பத்திரிக்கு போனா விஷ முறிவுக்கு அங்கதான் ஊசி இருக்கும். இந்த ஏற்காடு ஆஸ்பத்திரில அது இருக்குமான்னு தெரியாது.
பெரும்பாலும் குளிர்ப் பிரதேசங்களில் விஷப்பாம்புங்க பெருசா நடமாடாது. அதுங்க மலைக்கு கீழ்தான் அதிகம் இருக்கும். அதனால நாம இப்ப வேகமா சேலம் பெரிய ஆஸ்பத்திரிக்குப் போனா பிழைச்சுக்குவீங்க சார்...” என்று பரபரப்பாகப் பேசிக் கொண்டே, தன் பட்டாபட்டி அண்ட்ராயருக்குள் கையை விட்டு ஒரு வேர் துண்டை எடுத்து சதீஷின் வாயைத் திறக்கச் சொல்லி உள்ளே போட்டான்.

வாயில் விழுந்த நொடி ஒரு உக்ரக் கசப்பில் சதீஷ் முகம் அஷ்ட கோணலாகி தன்னையும் மறந்து தூ என்று அதை வெளியே துப்பினான் சதீஷ்.“அய்யோ சார் துப்பிட்டீங்களா..?”“அ... ஆமாய்யா... ஒரே கசப்புய்யா... முடியல என்னால..?”“அதான் சார் மருந்து... அதப்போய் துப்பிட்டீங்களே... இந்த இருட்டுல எங்கன்னு போய் அதை நான் தேடுவேன்...”
“அதோ ஏதோ ஒரு வண்டி வருது பார்... ரோட்ல நின்னு மறி.

எனக்கு வாந்தியும் மயக்கமும் வர்ற மாதிரி இருக்குது. உன்னை நான் காருக்குள்ள ஏத்திக்கிட்டு வந்ததே தப்பு... போ... போ... மறி...”சதீஷ் அலறினான். போதிமுத்துவும் தார்ச்சாலை நடுவில் நின்று வரும் வண்டியைத் தடுத்து நிறுத்தப் பார்த்தான். கிட்டே வரவும் கிறீச்சிட்டு நின்றது ஒரு கார். உள்ளே இருந்து ஒரு உருவம் இறங்கி வந்தது.

“ஏய்... யார் நீ... எதுக்கு வண்டிய மறிக்கிறே..?” என்கிற குரல் சதீஷ் காதிலும் விழுந்தது. அது கணேசனின் குரல்! பகீரென்றது. அதே அதிர்வில் மயக்கமும் முழுமையாக வந்து
அவனை ஆட் கொண்டது. போதிமுத்து கணேசனிடம் கெஞ்சத் தொடங்கினான்.“சாரே... புண்யமா போகும்... உதவி பண்ணுங்க சாரே... இங்க ஒருத்தரை பாம்பு கடிச்சிடிச்சி... தா அங்க கெடக்கார் பாருங்க...” என்று சதீஷைக் காட்டினான்.“என்னய்யா சொல்றே... இந்த நேரம் இந்த இருட்டுல இங்க எங்கய்யா வந்தீங்க..?”

“கீழஇருந்து கார்ல வந்துகிட்டிருந்தோங்க... அவசரமா ஒண்ணுக்கிருக்கணும்னு சொல்லி இறங்கினாருங்க... அப்ப பூச்சியை மிதிச்சிட்டாரு போல இருக்குங்க... அதான் கடிச்சிருச்சாட்டம் இருக்கு... பேச நேரமில்லங்க...” என்று போதிமுத்து, சதீஷ் உடல் அருகே நெருங்கினான்.

கணேசனும் சென்றான். புத்திசாலித்தனமாய் செல் டார்ச்சை அடித்துப் பார்த்தபோது வாயில் நுரை ததும்பிக் கொண்டிருந்தது.“அடடா... நுரை தட்டிருச்சே...”
“ஆமாங்க... நான் கொடுத்த வேரை துப்பாம இருந்திருந்தா நுரை தட்டியிருக்காது... தப்பு பண்ணிட்டாருங்க... கசப்பா இருக்குன்னு துப்பிட்டாரு...”
“வேரா... ஆமா... நீ யாரு..?”

“நானு... நானு... நான் ஒரு... நான் ஒரு...’’
“சரி சரி... உடம்பைத் தூக்கு... முதல்ல டாக்டர்கிட்ட தூக்கிட்டு போவோம்...”என்று கணேசன் சதீஷைத் தொட்டுத் தூக்கப் போனான்.ஆனால், போதிமுத்துவிடம் வேகம் அற்றுப்போய்விட்டிருந்தது. “இல்லீங்க... இனி பிரயோஜனமில்லீங்க... கருநாகத்தோட வெசம் வேகமா ஏறும். நுரை தட்டிட்டாலே அவ்வளவுதான்! அப்பால இங்கல்லாம் பாம்புக் கடிக்கு ஊசி இருக்காதுங்க... சேலம் பெரிய ஆஸ்பத்திரிக்குதான் கொண்டு போகணும். எப்படியும் ஒரு மணி நேரம் ஆயிடும். இப்பவே பாதி உயிர் போயிடிச்சிங்க... அவ்வளவு நேரமெல்லாம் தாங்காதுங்க...” என்றான்.

“என்னய்யா என்னவோ பாம்புங்களோடயே பொறந்து வளர்ந்தவன் மாதிரி பேசறே... கமான் க்விக்... தூக்கு... எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காரு... அவர்கிட்ட தூக்கிட்டு போவோம்...”
“இருங்க வந்துட்றேன்...” என்று உடனேயே சாலையோரமாக நின்ற காரை நோக்கி ஓடினான். கார் பின்சீட்டில் மீதம் இருந்த பாம்புக் கூடைகளைத் தொட்டுத் தூக்கியவன் அதே வேகத்தில் பக்கவாட்டில் காபி எஸ்டேட்டுக்குள் பெட்டியோடு அவற்றை வீசி எறிந்தான்.

அப்போது அடிவாரத்தில் ஜல்லி சொன்ன சகுனத் தடைகளும் நினைவுக்கு வந்தன. கூடவே சதீஷ் உடம்போடு கூட செல்வது பல கேள்விகளை பலரிடம் எழுப்பும். கொலை செய்யத்தான் வந்தோம் என்பதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் திரும்பிப் போவதுதான் புத்திசாலித்தனம் என்று போதிமுத்துவுக்குத்
தோன்றியது.

அதை வேகமாகச் செயல்படுத்தும் விதமாக அங்கிருந்தே கணேசனைப் பார்த்து கத்தத் தொடங்கினான்.“சார்... இனி அவரை என்ன பண்ணாலும் காப்பாத்த முடியாது. நான் வாரேன் சார்... உதவி பண்ணப்போய் உபத்ரவத்துலதான் முடியும். நீங்களும் போட்டுட்டு போய் உங்க வேலைய பாருங்க...” என்று தார்ச் சாலையில் திரும்பி ஓடத்தொடங்கினான்.

அப்போது ஏற்காட்டில் இருந்து ஒரு பஸ் சேலம் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. அதை கைகளை ஆட்டி மறித்தவன் அதில் ஏறிக் கொண்டான்.
ஒரு ஐம்பது மீட்டர் இடைவெளியில் பார்த்தபடி இருந்த கணேசனுக்கு திகைப்பில் சற்று நெஞ்சைக்கரித்தது. டார்ச் வெளிச்சத்தில் சதீஷை திரும்பப் பார்த்தபோது உடம்பில் நீலம் பாரிக்க ஆரம்பித்திருந்தது.கீழே கிடந்த சதீஷின் பாக்கெட்டில் இருந்த செல்போனிலும் அப்போது சிணுங்கல். கணேசன் ஒரு நெடிய தயக்கத்துக்குப்பிறகு அதை கையில் எடுத்து ஆன் செய்து காதைக் கொடுத்தான்.

“ஏய் சதீஷ்... என்னய்யா பண்றே..? அஞ்சு நிமிசத்துல வந்துடுவேன்னே... இருவது நிமிசமாச்சு... இன்னும் காணோம்...”

மறுபுறத்தில் இருந்து குலசேகரராஜாவின் குரல் ஒலித்தது. கணேசனின் முகத்தில் ஆச்சரியம். சட்டென்று செல்போன் ஸ்க்ரீனைப் பார்த்தான். அவர் எண்தான்!
“மாமா நீங்களா..?” என்றான் பதிலுக்கு வேகமாய்...

“யா... யாரு... யாரு..? சதீஷ் நீதானே பேசறே..?”
“சதீஷ் இல்ல மாமா... நான் ராஜா பேசறேன்...”
“ராஜாவா... நீயா... இ... இது சதீஷ்போன் ஆச்சே..? உன்
கைல எப்படி..?”

“அத ஏன் கேக்கறீங்க... நான் இப்ப மலைமேல ஏற்காட் என்ட்ரன்ஸ்ல இருக்கேன்... நீங்க சொல்ற அந்த சதீஷ் இப்ப கிட்டத்தட்ட செத்துட்டாரு... அவரைக் காப்பாத்த வந்த இடத்துலதான் செல்போன் ஒலிக்கவும் பேசிக்கிட்டு இருக்கேன்...”“என்னது சதீஷ் செத்துட்டானா... என்ன ராஜா சொல்றே..?”‘‘ஆமா மாமா... இவர்கூட ஒருத்தன் வந்திருக்கான்... அவன் இப்ப இல்ல... இவர் சாகப்போறார்னு தெரியவும் அப்ப பாத்து சேலம் போற பஸ் வரவும் அதை பிடிச்சி ஓடிட்டான்... நான் என்ன பண்றதுன்னு தெரியாம நின்னப்பதான் உங்ககிட்ட இருந்து போன் வந்துச்சி... பேசிக்கிட்டு இருக்கேன்...”

“என்னென்னமோ சொல்றியே ராஜா... ச... சதீஷ் எப்படி செத்தான்..?”
“முழுசா செத்துட்டதா சொல்ல முடியாது. பாம்பு கடிச்சிருக்கு! கார்ல வரும்போது யூரின் பாஸ் பண்ண இறங்கினப்ப கடிச்சிட்டதா அந்த ஓடிப்போனவன் சொன்னான்... உடம்பைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரியுது... நான்கூட வரும்போது இந்த இடத்துகிட்டதான்னு நினைக்கறேன்... ஒரு பாம்பை பார்த்தேன்... இது பாம்பு நடமாட்டமுள்ள ஏரியாதான்!
சரி நான் இப்ப என்ன பண்ணட்டும்... டாக்டர்கிட்ட போனாலும் பிரயோஜனம் இல்லங்கற மாதிரிதான் தெரியுது...”

“ஆமா... சுத்தமா பேச்சு மூச்சு இல்லையா..?”
“உடம்புல நீலம் பாரிச்சிடிச்சின்னேனே..?”

“அவன் ஏதாவது பேசினானா..?”
“பேச்சு மூச்சே இல்லாதப்ப எப்படி மாமா பேசுவான்... லூசு மாதிரி கேக்கறீங்களே..?”
“இல்ல... ஒரு க்ளாரிடிக்காகதான் கேட்டேன். நல்லவேளை...”
“நல்ல வேளையா... என்ன மாமா சொல்றீங்க... யாருக்கு
நல்லவேளை..? ஆமா யார் இவன்..?”

“அவன்... அவன் பேர் சதீஷ்! நான் சொல்ற வேலைகள செய்வான்... இப்ப கூட ஒரு வேலை சொல்லத்தான் கூப்பிட்டேன்...”
“சரி... ஆம்புலன்சுக்கு போன் பண்ணுங்க... அவங்க வந்து தூக்கிட்டு போகட்டும்... கார்லதான் வந்திருக்கான்... காரையும் யாரையாவது விட்டு எடுத்துக்கிட்டு போகச் சொல்லுங்க... அது என்ன... உங்க வேலைக்காரங்க ஒவ்வொருத்தரா இந்த ஏற்காடு மலைமேலயே சாகறாங்க... முந்தா நாள் ஒருத்தன்னா... இன்னிக்கு இவன்..?”
இருளில் நின்றபடி கணேசன் யதார்த்தமாய்க் கேட்ட கேள்வி குலசேகரராஜாவை விதிர்க்கச் செய்தது.

“ஆமாம் ராஜா... நீ சொல்லும் போதுதான் நானே யோசிக்கிறேன்... சரிசரி நீ உடனே அங்க இருந்து கிளம்பு... நான் ஆம்புலன்சுக்கு போன் பண்றேன்...”
“என்ன மாமா... நான் எதுக்கு போகணும்..? ஆம்புலன்ஸ்காரங்க எங்கேன்னு வருவாங்க..? பாடிய எங்க கொண்டு போவாங்க..? உங்க வேலைக்காரன்னு சொல்றீங்க... இப்படி ஒரு கோலத்துல பார்த்துட்டு எப்படி போக முடியும்..? அப்புறம் அந்த ஓடிப்போனானே ஒருத்தன்... அவனுக்கும் எனக்கும் என்ன வித்யாசம்..?”கணேசன் கேட்ட எந்த கேள்விக்கும் குலசேகரராஜாவிடம் ஒரு தெளிவான பதிலில்லை.

அப்போது கணேசன் மேல் கற்றையாக ஒரு வாகன வெளிச்சம் பட்டு அந்த வாகனமும் அருகில் வந்து நின்றது.அது ஒரு போலீஸ் ஜீப்! உள்ளே இருந்து கம்பீரமான காக்கி உடுப்பில் எஸ்.ஐ. சாமிக்கண்ணு இறங்கி வந்தார்!கணேசனைப் பார்த்தவர் “என்ன சார்... இங்க இருட்டுல நின்னு பேசிக்கிட்டிருக்கீங்க..?” என்றும் கேட்டார்.

அவரைப் பார்க்கவும் கணேசனுக்கும் சற்று தெம்பாக இருந்தது.“மாமா... நல்லவேளை... ஏற்காடு போலீஸ் எஸ்.ஐ.யே வந்துட்டார்... நான் அவர் கிட்ட பேசி பாடியை எடுத்துட்டு போக ஏற்பாடு பண்ணிட்றேன்... நீங்க இந்த சதீஷ் ஃபேமிலிக்கு முதல்ல தகவல் கொடுங்க... அப்புறமா எஸ்டேட் வாங்கப் போனது சம்பந்தமா நடந்ததை எல்லாம் நான் பேசறேன்... இப்ப கட் பண்ணிக்கறேன்...”என்று கட்செய்தான்

(தொடரும்)

ஞானமணி தேசிகரின் வீடும் மருத்துவ கூடமும் ஒன்றாகவே இருந்தது.முன்புறம் மருத்துவ கூடம், பின்புறம் வீடு! தேசிகருக்கு இரு உதவியாளர்கள். மடிப்பிச்சை என்று ஒருவன், வரலட்சுமி என்று ஒரு பெண்மணி!கனபாடிகள் அசோகமித்திரனுடன் அங்கே வந்தபோது ஒரு இனம்புரியாத மருந்து வாசம்! முகப்பில் பச்சை நிற வலைப் பந்தலுக்குக் கீழே ஏராளமாய் மூலிகைச் செடிகள் வளர்ந்து செழித்திருக்க அவற்றின் மேல் இதமான வெளிச்சம் விழுந்தபடி இருந்தது.

முடிந்த இடங்களில் எல்லாம் மர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆசனப்பரப்பில் காற்றோட்டமாக வயர் பின்னல் பின்னப்பட்டிருந்தது.சில கார்கள் வெளியே நின்றிருக்க அதில் வந்திருந்த நோயாளிகளுக்கு தேசிகரே நாடி பார்த்து ஜாடை பாஷையில் மடிப்பிச்சையிடம் ஏதோ கூற அவன் புரிந்துகொண்டு தைலம், சூரணம், குளிகை என்று கொண்டு வந்து கொடுத்தான். சில சமயங்களில் தேசிகர் சிலேட் ஒன்றில் எழுதிக் காண்பிப்பதும் நடந்தது.

அசோகமித்திரன் தன் வாழ்நாளில் சித்த வைத்தியம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார் - ஆனால், அவரது நகரத்து வாழ்வில் அதை உணர வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. இப்போது அதை உணர ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருப்பது போல் அவருக்குத் தோன்றியது.தேசிகர் காத்திருந்த நோயாளிகளைப் பார்த்து அவர்களுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு மெல்ல கனபாடிகளிடம் வந்தார்.

கனபாடிகள் நிறைந்த புன்னகையோடு கும்பிட்டார். பதிலுக்கு தேசிகர் அவர் கூப்பிய கைகளை தன் இரு கைகளால் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டார்.பின் அருகில் ஒரு மரநாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தபடி ‘ம்... அப்புறம்...’ என்று பார்வையாலேயே கேட்டார்.

“இவர் பேர் அசோகமித்திரன்... பெரிய ஆராய்ச்சியாளர்! குறிப்பா நம்ம சமயம், அதோட நம்பிக்கைகள் இவைகளை ஆராய்ந்து புத்தகம் எழுதப் போறார்.

அதுல விஷ ஜந்துவான பாம்புகள் எதனால வணங்கப்பட்றதுங்கறது இவர் ஆராய்ச்சியில் பிரதான ஆராய்ச்சி...” என்று அசோகமித்திரனுக்கு ஒரு இன்ட்ரோ கொடுத்த கனபாடிகள், “நாளைக்கு கிரகணமாச்சே... நம்ம சிவாலயத்துக்குதான் சர்ப்பம் ஒண்ணு வந்து வில்வார்ச்சனை பண்ணுமே... அதைப் பாக்க வந்துருக்கார்... இவரால் இந்த நொடி அதை எல்லாம் நம்பமுடியல... பார்த்துட்டா என்ன பண்ணுவார்னு தெரியாது.

ஏன்னா பாம்புகளை யாரும் பழக்க வழக்கத்துக்கு ஆட்படுத்த முடியாது. ‘பசி உணர்வு, தற்காப்புணர்வு, புணருணர்வுங்கற’ மூணுதான் அதுகிட்ட பிரதானம். மற்ற விஷயங்களுக்கான அறிவு அதுக்கு கிடையாதுங்கறதுதான் நாம் அறிஞ்ச விஷயம். அப்படி இருக்க எப்படி இந்த பாம்பு மட்டும் எல்லா தெய்வங்களோடயும் சம்பந்தப்பட்டிருக்குங்கறது இவரோட பிரதான கேள்வி.

நான் எனக்கு தெரிஞ்ச பதிலை எல்லாம் சொல்லிட்டேன். நாகப்பாம்புகள் நம்ப அனுமானத்துக்கு அப்பாற்பட்டது. சித்த புருஷர்கள், ரிஷிகள், மனுஷ சரீரம் அத்துப்போன நிலைல நாக வடிவத்துல நடமாடுவாங்கங்கறது நான் சொன்ன கருத்துல ஒரு கருத்து.

இவாள்ளாம் எல்லாத்துக்கும் ஆதாரத்தை எதிர்பார்க்கறவா... ஏன்னா இப்ப நடந்துண்டுருக்கறது விஞ்ஞான உலகம். அது ஆதாரமில்லாம எதையும் ஏற்காது. பொய் இல்லேன்னா கற்பனைன்னு சொல்லிடும். நீங்க நம்பினா நம்புங்கோ நம்பலேன்னா விட்றுங்கோன்னு கூட சொல்லிட்டேன். அதோட, அனுபவம்தான் சிறந்த ஆசான்னும் சொன்னேன். அதைக்கேட்டு அந்த அனுபவத்துக்காக நம்ம ஊருக்கு வந்திருக்கார்...” என்று அசோகமித்திரன் குறித்து ஒரு நெடிய விளக்கத்தையே கொடுத்து முடித்தார்.

தேசிகரும் அசோகமித்திரனை ஓர் ஆழமான பார்வை பார்த்தார். அசோகமித்திரனும் அவர் பார்க்கவும் கை எடுத்து கும்பிட்டு வணங்கினார். அப்போது தேசிகர் பார்வை அசோகமித்திரனின் இரு கண்களையே கூர்மையாகப் பார்த்தது.பின் அவரது கும்பிட்ட கைகளை இழுத்துப் பிடித்து விரல் நகங்களைப் பார்த்தார். அதில் இரு கட்டை விரல் நகங்களின் மேலும் வழவழப்பு இல்லாதபடி வரிவரியாய் கோடுகள்!

சில வினாடிகளுக்குப்பிறகு அருகில் இருந்த சிலேட்டை எடுத்து “மூத்திரம் கழிப்பதில் சிக்கல் இருக்கிறதா?” என்று எழுதிக் கேட்டார். அசோகமித்திரனிடம் விக்கிப்பு. ஆமோதிப்பாய் தலையசைப்பு.

 - இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி